சாலைகளில் கலையும் கனவுகள்

சாலை விதிகள் என்பவை வெறும் காகிதச் சட்டங்கள் அல்ல; அவை நம் உயிரைக் காக்கும் கவசங்கள்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
3 min read

ஒரு காணொலி என்னை உள்ளுக்குள் உலுக்கியது. மாநகரப் பேருந்து ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால், அந்தப் பேருந்தின் இரும்புக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு ஐந்து சிறார்கள் தொங்கியபடியே பயணம் செய்து கொண்டிருந்தனர். ஒருகாலத்தில் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு செல்வதே உயிரைப் பணயம் வைப்பதாகக் கருதப்பட்டது.

ஆனால், இன்று அந்த எல்லையையும் தாண்டிவிட்டோம். "ரீல்ஸ்' என்ற பெயரில் பேருந்தின் பின்னால் தொங்கிக்கொண்டு சாகசம் செய்கிறார்கள். இது சாகசமல்ல; உயிரோடு விளையாடும் விபரீதம். அந்தச் சிறுவர்களின் கை ஒரு விநாடி நழுவினால் என்ன ஆகும்? அவர்கள் பின்னால் வரும் வாகனங்களின் சக்கரத்தில் சிக்கி, அந்த விநாடியிலேயே உயிரை இழக்க வேண்டியிருக்கும்.

நம் நாட்டில் மோட்டார் வாகனச் சட்டங்கள் பலமுறை திருத்தப்பட்டு அபராதங்களும் தண்டனைகளும் அதிகரிக்கப்பட்டுவிட்டன. ஆனால், இவ்வளவு கடுமையான சட்டங்கள் இருந்தும் விபத்துகள் ஏன் குறையவில்லை? சட்டங்கள் காகிதத்தில் மட்டும் இருந்தால் போதாது; அவை களத்தில் பாரபட்சமின்றி அமல்படுத்தப்பட வேண்டும். அதே சமயம், சட்டத்தால் மட்டுமே விபத்துகளை 100% தடுத்துவிட முடியாது.

ஒவ்வொரு மனிதனும் தன் உயிரின் மீதும், சக மனிதர்களின் உயிரின் மீதும் மதிப்புகொண்டு, சாலை விதிகளைத் தன் கடமையாகக் கருதிப் பின்பற்றினால் மட்டுமே விபத்தைத் தடுக்க முடியும். ஒரு வாகனத்தை இயக்கும்போது நாம் வெறும் இயந்திரத்தை மட்டும் இயக்கவில்லை; பல உயிர்களின் எதிர்காலத்தைச் சுமந்து செல்கிறோம் என்ற பொறுப்புணர்வு ஒவ்வொரு ஓட்டுநருக்கும் அவசியம். அவசரம், அதிவேகம், அஜாக்கிரதை ஆகிய மூன்றும் விபத்துகளுக்குக் காரணமாகின்றன. ஓர் ஓட்டுநர் செய்யும் ஒரு விநாடித் தவறு, ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையே அழித்துவிடும்.

கொடூரமான விபத்துகளுக்கு வாகன ஓட்டிகளின் உடல் மற்றும் மன ஒருமைப்பாடு இல்லாததே முக்கியக் காரணமாகிறது. ஓட்டுநர் வாகனத்தை இயக்கும்போது அவரது கண், காது, கை, கால் என அனைத்து உறுப்புகளும் ஒருங்கே செயல்பட வேண்டும். அதில் ஒரு உறுப்பு திசைமாறினாலும் விபத்து நிச்சயம்.

இன்றைய நவீன உலகில் கைப்பேசி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், வாகனம் ஓட்டும்போது அது எமனாக மாறுகிறது. கைப்பேசியில் பேசிக்கொண்டோ, குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டோ வாகனம் ஓட்டுபவர்கள் தங்களையும் அறியாமல் மரணத்தின் விளிம்புக்குச் செல்கிறார்கள்.

ஆய்வுகளின்படி, வாகனம் ஓட்டும்போது கைப்பேசியில் பேசினால் நம் மூளையின் செயல்திறன் 37% குறைகிறது. ஒரு கையில் கைப்பேசியை வைத்துக்கொண்டு, மற்றொரு கையால் வாகனத்தைக் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமற்றது. அவசரமான நேரத்தில் வாகனத்தைத் திருப்பவோ அல்லது நிறுத்தவோ முடியாமல் போகும்போது விபத்து நிகழ்கிறது.

கைப்பேசி அழைப்புகளைப் போலவே, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதும், பாதுகாப்பு விதிகளைத் தவிர்ப்பதும் மரணத்துக்கு அழைப்பு விடுக்கும் செயல்களாகும். மது, மூளையின் வேகத்தைக் குறைத்து, முடிவெடுக்கும் திறனைப் பாதிக்கிறது. மேலும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதைத் தவிர்க்கிறார்கள்.

தலைக்கவசம் என்பது காவல் துறையிடமிருந்து தப்பிக்க அல்ல, நம் தலையைக் காக்கவே என்பதை உணர வேண்டும். குறிப்பாக, இரவு நேரப் பயணங்களில் வேகம் விவேகமல்ல என்ற உண்மையை மறக்கக் கூடாது.

வெற்றுச் சாலைகளைப் பார்த்தவுடன் வேகத்தை அதிகரிப்பது பலரின் வழக்கமாக உள்ளது. இரவு நேரங்களில் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்துவதில் மக்கள் மிகுந்த அஜாக்கிரதையுடன் இருக்கிறார்கள். எதிரே வரும் வாகன ஓட்டியின் கண்களை நேரடியாகத் தாக்கும் இந்த ஒளி, அவரைச் சில விநாடிகளுக்குக் பார்வையற்றதாகிவிடும். 60 கி.மீ. வேகத்தில் செல்லும் ஒரு வாகனம், அந்த மூன்று விநாடிகளில் 50 மீட்டர் தொலைவைக் கடந்து விடும். அந்த சில விநாடிகள் சாலையே தெரியாமல் போவது மரணத்துக்கு அழைப்பு விடுப்பதற்குச் சமம்.

இரவு நேர விபத்துகளைத் தவிர்க்க ஒளியின் பயன்பாட்டில் நாம் காட்டும் கவனம் மிக முக்கியமானது. தெரு விளக்குகள் உள்ள இடங்களில் "ஹை பீம்' விளக்குகள் தேவையில்லை. மழை பெய்யும்போது இந்த விளக்குகளைப் பயன்படுத்தினால், ஒளி நீர்த் திவலைகளில் பட்டுத் தெறித்து ஓட்டுநரின் பார்வையை இன்னும் மறைக்கும். இந்தியாவில் நிகழும் இரவு நேரவிபத்துகளில் சுமார் 15% இந்தத் தவறான விளக்குப் பயன்பாட்டால் மட்டுமே நிகழ்கின்றன.

அதேபோன்று, வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகத் திறன் கொண்ட விளக்குகளைப் பொருத்துவதும் சட்டப்படி குற்றமாகும். இத்தகைய நுணுக்கமான சாலைப் பாதுகாப்பு முறைகளை நாம் முறையாகப் பின்பற்றுகிறோமா என்று சிந்திக்கும்போது, உலகளாவிய தரத்திலான சாலைக் கட்டமைப்புகள் நம் நினைவுக்கு வருகின்றன.

நான் பிரிட்டனில் இருந்தபோது அங்கிருந்த சாலைக் கட்டமைப்பைக் கவனித்தேன். அதன் பரப்பளவு ஏறக்குறைய நமது தமிழ்நாடு அளவுதான்.

அங்கே சாலைகள் அவற்றின் முக்கியத்துவம் மற்றும் தரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் இவை எழுத்துகள் மற்றும் நிறங்கள் மூலம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. "மோட்டார்வேஸ்', "எம்' சாலைகள் என்பது அதிவேகச் சாலைகள். இவை நகரங்களை இணைக்கும் நீண்ட தொலைவுப் பயணங்களுக்கானவை. வேக வரம்பு மணிக்கு 70 மைல்கள். இதில் கார், கனரக வாகனங்களுக்கு மட்டுமேஅனுமதி உண்டு; பாதசாரிகள் நடக்கக் கூடாது, ஆட்டோக்கள் கிடையாது.

"ஏ' சாலைகள் என்பது நகரங்களுக்கு இடையேயான முக்கியப் போக்குவரத்துச் சாலைகள். வேக வரம்பு சூழலுக்கு ஏற்ப மணிக்கு 30 முதல் 70 மைல்கள் வரை மாறும். "பி' சாலைகள், "ஏ' சாலைகளை விடக் குறைந்த போக்குவரத்து கொண்டவை; இவை உள்ளூர் பகுதிகளை இணைக்கின்றன.

அங்கே "எம்' சாலைகள் முதலில் அமைக்கப்பட்டு, அதன் பிறகே கட்டடங்கள் திட்டமிடப்படுகின்றன. ஆகவே, சாலை ஓரங்களில் எந்த ஒரு கடையோ, வணிக வளாகமோ அல்லது வீடோ இல்லை. நாம் போகும்போது வாகனத்தை நம் விருப்பப்படி ஓரமாக நிறுத்த முடியாது. 20 மைல்களுக்கு ஓரிடத்தில் ஒரு "சேவை' சாலை பிரியும். அங்கு சென்றால் உணவகம், ஓய்வறை எல்லாம் இருக்கும். அங்கு ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் பிரதான சாலையில் இணைந்து கொள்ளலாம்.

நம்மூர் போல குறுக்கே ஆடு, மாடுகள் வர வாய்ப்பே இல்லை. எனவே, அனுமதிக்கப்பட்ட வேகத்தில் எளிதாகச் செல்ல முடியும். பிரிட்டனில் உள்ள சுற்றுச் சந்திப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அங்கே ஒரு சந்திப்புக்குள் நுழையும் போது எப்போதும் வலதுபுறத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

பிரிட்டனில் என்னைக் கவர்ந்த இன்னொரு வசதி "பார்க் அண்ட் ரைடு'. நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, நகரின் வெளிப்புறத்தில் பெரிய வாகன நிறுத்தங்கள் உள்ளன. நமது காரை அங்கு நிறுத்திவிட்டு, பேருந்து மூலம் நகருக்குள் செல்லலாம். இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உகந்தது.

லண்டன் போன்ற இடங்களில் மக்கள் மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்துகிறார்கள். அதிக மழைப்பொழிவு இருப்பதால் சாலைகளில் நீர் தேங்காதவாறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாகன ஓட்டுநர்கள் விதிகளை மிகவும் கவனமுடன் கடைப்பிடிக்கிறார்கள்; "ஒலிப்பானை' இயக்குவதே கிடையாது. இத்தகைய சர்வதேச தரத்திலான ஒழுக்கத்தை நாம் ஏன் கடைப்பிடிக்கக் கூடாது?.

நம் நாட்டிலும் இப்போது சாலைக் கட்டமைப்புகள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்பட்டு வருகின்றன. ஆறு வழிச் சாலைகள், வெளிவட்டப் பாதைகள் என வசதிகள் பெருகியுள்ளன. ஆனால், மக்கள் மனநிலை மாற வேண்டும். இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு தனிப் பாதைகளை அமைத்து, அந்தப் பாதையிலேயே அவை செல்ல வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்தினால் விபத்துகள் கணிசமாகக் குறையும்.

"சாலை விதிகள்' என்பவை வெறும் காகிதச் சட்டங்கள் அல்ல; அவை நம் உயிரைக் காக்கும் கவசங்கள். வேகம் தரும் தற்காலிக மகிழ்ச்சியைவிட, விவேகம் தரும் நிலையான வாழ்வே சிறந்தது. நம் வாழ்க்கையின் பயணங்கள் எல்லாம் சாலைகளின் திருப்பங்களில் முடிந்துவிடக் கூடாது. சாலையில் நிகழும் ஒவ்வொரு விபத்தும் ஒரு குடும்பத்தின் கனவைச் சிதைக்கிறது.

நாம் வீட்டை விட்டுப் புறப்படும்போது, நம் வருகைக்காக ஓர் உறவு வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம் பயணம் மரணத்தை நோக்கியதாக இல்லாமல், மகிழ்ச்சி நிறைந்த இல்லத்தை நோக்கியதாக இருக்க வேண்டும். "விபத்தில்லா உலகம்' என்பது அரசின் கையில் இல்லை, அது வாகனத்தைச் செலுத்தும் நம்கைகளில்தான் இருக்கிறது. நிதானமாகச் செல்வோம், விதிகளுக்கு மதிப்பளிப்போம், உயிர்களைக் காப்போம்!

கட்டுரையாளர்:

பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com