

திருக்குறள் தமிழ்மறை என்று கொண்டாடப்படுகிறது. உலகுக்கு தமிழ் அளித்துள்ள கொடை திருக்குறள் என்னும் அளவுக்கு உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மனித குலம் முழுமைக்குமான பொதுவான வாழ்வியலை வகுத்துக் கொடுக்கிறது திருக்குறள் என்பதால், அதை உலகப் பொதுமறை என்று கொண்டாடுகிறோம்.
தமிழ் அறியாத தமிழர்கள்கூட திருக்குறள் என்றதும் தங்களைத் தமிழர்கள் என்று பெருமையோடு சொல்லிக் கொள்வது இயல்பு. வள்ளுவப் பேராசான், "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்று எந்த தெய்வத்தையும் குறிப்பாகச் சொல்லாமலும் இறைவனைக் குறிப்பிட்டும் சொல்லிவிட்ட பான்மையை அனைவரும் போற்றுகின்றனர்.
இறைவன் இருக்கிறான் என்றுதான் திருக்குறள் தொடங்குகிறது. "மூல முதல்வன்' என்று இறைவனைக் கொண்டாடும் பாரத மரபில் சற்றும் பிசகாது திருக்குறளும் ஆதிபகவன் என்று வணங்குகிறது.
திருக்குறள் நான்மறையின் சாரம் என்று சங்கப் புலவர்கள் சொல்கிறார்கள். சங்க இலக்கியத்தை, சங்கப் புலவர்களை நமது தனித்த அடையாளம் என்று கொண்டாடுகிறோம். திருக்குறளின் பெருமைகளைத் திருவள்ளுவ மாலை இயம்புகிறது.
வெள்ளி வீதியார் தமிழ் அறிந்தோர் நன்கறிந்த சங்கப் புலவர். அவர்,
"செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே'
என்று பாடுகிறார்.
அதாவது, நால்வேதங்கள் சொல்லும் பொருளையே திருவள்ளுவரின் திருக்குறளும் சொல்கிறது என்கிறார்.
"நான் மறையின் மெய்ப் பொருளை
முப்பொருளா நான்முகத்தோன்
தான்மறைந்து வள்ளுவனாய்த்
தந்துரைத்த''
என்று உக்கிரப் பெருவழுதியார் நான்முகக் கடவுளே திருவள்ளுவராகப் பிறந்து திருக்குறள் எழுதினார் என்கிறார்.
திருவள்ளுவமாலை ஒரு தொகுப்பு நூல். திருக்குறளை நன்குணர்ந்த புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. பழைய திருக்குறள் பதிப்புகளில் திருவள்ளுவ மாலையும் சேர்த்தே அச்சிடப்பட்டிருக்கும். வள்ளுவம் போற்றுவோர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். வள்ளுவம், சாதாரண மனித அறிவுக்குள் அடங்கக் கூடியதல்ல. இரண்டடிகள் கொண்ட ஒற்றைக் குறளுக்குள் புதிது புதிதான பொருள்கள் விரிந்து கொண்டே இருப்பது அதன் தனிச் சிறப்பு. அதனை வள்ளுவப் பேராசான் எப்படி எழுதினாரோ அப்படியே புரிந்து கொள்ள முயல்வதுதான் தமிழுக்கு நாம் செய்யக்கூடிய தொண்டாக இருக்கும். நாம் நம்பும் சித்தாந்தங்களுக்குள் அதை அடைக்க முற்படுவதும் குறுக்க முயற்சிப்பதும் அறியாமையின் வெளிப்பாடாகும்.
ஈராயிரம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் ஆராய்ச்சி செய்து நூல்கள் எழுதிவிட்ட பின்னும் இன்றைக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சிக்கான இடமும் பொருளும் திருக்குறளில் இருக்கிறது.
திருக்குறள் இன்றைக்கும் நாம் பேசும் மொழியில் புரிந்து கொள்ள எளிமையாகவே இருக்கிறது என்றாலும், அதன் நுட்பங்களைப் புரிந்து கொள்ள நமக்கு இதுவரை அதிலே ஆழம் கண்ட பெருமக்களின் வழிகாட்டுதலும் வேண்டும். இலங்கை ஜெயராஜ் ஐயா குறிப்பிடுவதைப்போல நமக்குப் பொருள் விளங்கச் செய்வதற்காகவே உரையாசிரியர்கள் வழிகாட்டுகிறார்கள். அவர்களை விலக்கிவிட்டு நாம் நமது சிற்றறிவு கொண்டு திருக்குறளைப் புரிந்து கொள்வது "பார்வையற்றோர் யானையைத் தடவிக் கண்டதைப் போலவே' இருக்கும்.
"உரையாசிரியர்கள் பண்டைத் தமிழ் நூல்களுக்குச் செய்த ஒரு பெருந்தொண்டு மூலச் செம்மையாகும்' என்பார் வ.சுப.மாணிக்கம். அதாவது இடைச்செருகல்கள் ஏற்படாமல் காத்தவர்கள் உரையாசிரியர்களே. இவர்கள் தரும் விளக்கங்கள் நமது நம்பிக்கைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் புறம்பாக இருப்பதால் அவற்றை ஒதுக்கிவிட முடியாது.
திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள், தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் வள்ளுவர் நூற்கு எல்லையுரை செய்தாரிவர். இவர்களுடைய உரைகளையும் கொண்டே நாம் திருக்குறளுக்குப் பொருள் கொள்ள வேண்டும். அவர்களில் எவரும் திருக்குறளை இறைநம்பிக்கை அற்றதாகச் சொல்லவில்லை.
சமயம் கடந்த நூல் வள்ளுவம் என்று அதற்கு ஒரு புதிய வண்ணத்தைக் கொடுக்க முயற்சி செய்கிறார்கள். உண்மையில் திருமாலை, சிவனை, திருமகளை என்று இறைநம்பிக்கையை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் திருவள்ளுவர். ஏற்றத்தாழ்வற்ற பார்வை வள்ளுவருக்கு இருக்கிறது எனில், அவர் பின்பற்றிய சமயமும் அவர் பாடும் தெய்வங்களை வழிபடும்
மார்க்கமும், அந்த மக்களின் கலாசாரமும் எத்தகைய இயல்பு கொண்டது என்று புரிந்து கொள்ள வேண்டுமே அன்றி அவரை மதம் அற்றவராகச் சித்தரிக்க முடியாது.
"மடிஇலா மன்னவன் எய்தும்
அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு'. (610)
இந்தக் குறளில் அடியளந்தான் என்ற சொல் வாமன அவதாரம் கொண்டு உலகைத் தனது திருவடிகளால் அளந்த திருமாலையே சுட்டுகிறது. "எல்லா உலகையும் அளந்த இறைவன் என்று இதற்குப் பரிமேலழகர் பொருள் கூறுகிறார்.
இறைவனடி சேர்வது குறித்தும் பதிவு செய்து வைத்திருக்கிறார். பரமபதம் என்பதிலும் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது அதனால்தான், "தாமரைக் கண்ணான் உலகு' என்று பரமபதத்தைச் சொல்கிறார்.
உலகத்தைப் படைத்தவன் இறைவன் என்பதை "உலகியற்றியான்" என்று பாடும் வள்ளுவம்,
"மடிஉளான் மாமுகடி என்ப மடிஇலான்
தாள்உளான் தாமரையி னாள்' (617)
என்று "சோம்பல் இல்லாத முயற்சி உடையவனிடம் திருமகள் தங்குவாள், சோம்பல் உடையவனிடம் மூதேவி தங்குவாள்' என்று தாமரைக்கண்ணான் மனைவியையும் பாடுகிறார். இறைநம்பிக்கை இல்லாதவர்கள்கூட இந்தக் குறளுக்கு வேறு பொருள் காட்ட இயலாது.
அறம், பொருள், இன்பம் என மூன்றாகப் பகுத்து நூல் செய்த வள்ளுவப் பேராசான், மூன்று பகுப்புகளிலும் இறை நம்பிக்கையைப் பிரிக்க இயலாத வகையில் பிணைத்து வைத்துள்ளார். மூல முதல்வன் என்று தொடங்கி ஸ்ரீ ராமர் வரை திருக்குறள் பாடாத தெய்வங்கள் இல்லை.
108 முறை ஜபம் செய்வது, 108 தேங்காய் உடைப்பது என்று ஹிந்து மரபில் காணப்படும் வழக்கத்தை அப்படியே பின்பற்றி ஒவ்வொரு பகுப்புக்கும் 108 அதிகாரங்களை அமைத்துள்ளவரின் சமய நம்பிக்கையை வியக்காமல் இருக்க முடியுமா? சமய சார்பற்றவர் என்ற கருத்துக்கு இங்கே இடமில்லை. மாற்று சமயங்களைச் சாடாதவர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
இறையைப் பாடும் வள்ளுவம் சமயக் கோட்பாடுகளையும் பாடத் தவறவில்லை.
யதோ தத: க்ருஷ்ண: யத: க்ருஷ்ண: ததோ ஜய:
தர்மஏவ ஹதோ ஹந்தி தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
இவை மகாபாரதத்திலும் மனுஸ்ம்ருதியிலும் இடம்பெறும் வாசகங்கள்.
தர்மம் எங்கே இருக்கிறதோ அங்கு க்ருஷ்ணன் இருக்கிறான்.
க்ருஷ்ணன் எங்கே இருக்கிறானோ அங்கு ஜயம் இருக்கிறது. தர்மத்தை எவன் அழிக்கிறானோ அவனை தர்மம் அழிக்கிறது. தர்மத்தை எவன் காக்கிறானோ அவனை தர்மம் காப்பாற்றுகிறது. இந்தக் கருத்தை அப்படியே செங்கோன்மை அதிகாரத்தில் வைக்கிறது வள்ளுவம்.
"இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்'.
(குறள் 547)
அதாவது, நீதி வழுவாமல் ஓர் அரசன் ஆட்சி செய்தால் அவனை அந்த நீதியே காப்பாற்றும்.
ஹிந்துக்களின் நம்பிக்கையான மறுபிறப்பு, எழுபிறவி, வினைப்பயன், இறைவன் அடி சேர்தல் போன்ற கருத்துகள் அழுத்தமாக வள்ளுவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொன்மையான பாரத தேசத்தின் சமயக் கோட்பாடுகளே வள்ளுவத்திலும் எதிரொலிக்கிறது. அவருக்கு மதச்சார்பின்மை அடையாளம் அர்த்தமற்றது.
"தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்-
கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்'.
- (நல்வழி 40)
என்கிறார் ஒளவையார். அதாவது, திருவள்ளுவரை திருக்குறளை ஹிந்து சமய நூல்களோடு ஒன்றென வைத்துப் பாடுகிறார். திருக்குறள் பற்றி எடுத்துரைக்க ஒளவையைக் காட்டிலும் தகுதி உடையோர் யார் உண்டு?
திருவள்ளுவருக்குக் கோயில் சில நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. மயிலை கபாலீஸ்வரர் கோயில் திருவிழாவில் நாயன்மார் அறுபத்து மூவரோடு திருவள்ளுவரும் பவனி வருகிறார். அவர் பாடிய சமயம் அவரைக் கொண்டாடுகிறது.
தமிழ் இருக்கும் வரை திருக்குறள் இருக்கும். வள்ளுவத்தைக் கொண்டாடும் வரை நாம் இந்த மண்ணின் சமயத்தையும் கொண்டாடுகிறோம் என்பதே உண்மை.
நாளை (ஜன.16) திருவள்ளுவர் தினம்.
கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.