பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்னணிகளிலிருந்து வரும் பள்ளி மாணவர்களிடையே சமத்துவம், ஒழுக்கம் ஆகிய உணர்வுகளை வளர்க்கும் நோக்கத்துடன், ஆங்கிலேயர் ஆட்சியின் போது பள்ளிச் சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பள்ளிச் சீருடை அணியும் வழக்கம் 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் அரசு, தனியார் பள்ளிகளில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
கிராம, நகர்ப்புறங்களில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதால், பள்ளிச் சீருடைகளின் விற்பனை ஒரு லாபகரமான தொழிலாக உருமாறியுள்ளது. உலக அளவில் பள்ளிச் சீருடைச் சந்தையானது ஆடைத் தொழில் துறையின் ஒரு குறிப்பிடத்தக்க பிரிவாக வளர்ந்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் சுமார் ரூ. 1.76 லட்சம் கோடியாக இருந்த இந்த சந்தையின் மதிப்பு, ஆண்டுக்குச் சராசரியாக 5.8% வளர்ச்சியடைந்து, 2034-ஆம் ஆண்டுக்குள் ரூ. 3.07 லட்சம் கோடியாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சந்தை அளவையும் அதன் வேகமான வளர்ச்சியையும் தெளிவாக வெளிப்படுத்தும் சீருடை உற்பத்தி புள்ளிவிவரங்கள், இந்த வளர்ச்சி "எடுத்துக்கொள்}உருவாக்கு-அப்புறப்படுத்து' என்ற நேரியல் பொருளாதார (லீனியர் எகனாமி) முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது. இந்த நேரியல் பொருளாதார மாதிரியில், சீருடை உற்பத்திக்காக மூலப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு, சீருடைகள் தயாரிக்கப்படுகின்றன.
ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பயன்படுத்தப்பட்ட சீருடைகள் கழிவுகளாக வீசப்படுகின்றன. கழிவுகளாக மாறி, குப்பைக் கிடங்குகளில் குவியும் பள்ளிச் சீருடைகள், இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கின்றன.
இந்தியாவில் பள்ளி செல்லும் 24.6 கோடி குழந்தைகளில் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரே ஒரு பயன்படுத்த முடியாத பள்ளிச் சட்டையை மட்டும் கழித்தால், அந்தக் கழிவுகளின் மொத்த எடை 31,980 டன்களாக இருக்கும். பள்ளிச் சீருடைகளுக்குச் சிறந்த தேர்வாகக் கருதப்படும், நீடித்து உழைக்கக்கூடிய பொருளாகிய பாலியஸ்டர் ஒரு கிலோ உற்பத்தி செய்ய, 62 லிட்டர் தண்ணீர், 153 கிலோ பெட்ரோலியம், 217 மெகா ஜூல் ஆற்றல் தேவைப்படுகிறது. மேலும், இதன் உற்பத்திச் செயல்முறையின்போது 21 கிலோ கார்பன் டை ஆக்ûஸடு வளிமண்டலத்தில் வெளியிடப்படுகிறது.
நிறம், வடிவமைப்பு அல்லது பள்ளிச் சின்னங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இந்தியாவில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் ஒவ்வோர் ஆண்டும் புதிய சீருடைகளை வாங்குவதை கட்டாயமாக்குகின்றன. இந்த நடைமுறை பெற்றோர் மீது ஒரு நிதிச் சுமையைச் சுமத்துவதோடு, சுற்றுச்சூழல் சீரழிவுக்கும் வழிவகுக்கிறது.
மின்னணுவியல், ஆடைத் தொழில்களில் முக்கியத்துவம் பெற்றுவரும் வட்டப் பொருளாதாரம் (சர்குலர் எகனாமி), மறுசுழற்சி ஆகிய கோட்பாடுகள், பள்ளிச் சீருடைத் துறையிலும் பின்பற்றப்பட வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், வளங்களைச் சிக்கனமாக பயன்படுத்தவும் உதவும். பள்ளிச் சீருடைகளை வீணாகத் தூக்கி எறிவதற்குப் பதிலாக, அவற்றை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும். இது மறுபயன்பாட்டை சாத்தியமாக்கி, ஆடைகளின் ஆயுள்காலத்தை நீட்டித்து, கழிவுகளைக் குறைக்கும்.
ஆப்பிரிக்காவில் சட்டைகள், பாவாடைகள், கால்சட்டைகள், முத்திரையுடன் கூடிய மேல் சட்டைகள் (பிளேசர்), விளையாட்டுச் சீருடைகள் போன்றவற்றில் விரிவாக்கத்துக்கு போதுமான இடவசதியை உறுதி செய்ய "குழந்தையுடன் வளரும் சீருடை' என்ற கொள்கை அடிப்படையில் எஸ்.எச்.இ. (ஸ்டைல் ஹெர் எம்பவர்டு) என்ற புதுமை திட்டத்தின் கீழ் சீருடைகள் தயாரிக்கப்படுகின்றன.
பிரிட்டனில் பயன்படுத்தப்பட்ட நல்ல நிலையில் உள்ள சீருடைகள் சேகரிக்கப்பட்டு ஃப்ரீ லவ்டு யூனிபார்ம்ஸ் போன்ற சீருடை வங்கிகள் மூலம் தேவைப்படும் மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. உயர் தரத்துடன் நீடித்து உழைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு, தங்களால் பயன்படுத்தப்பட்ட சீருடைகளை மூத்த மாணவர்கள் இளைய மாணவர்களுக்குக் வழங்கும் மரபு ஜப்பானியப் பள்ளிகள் சிலவற்றில் இன்றும் பின்பற்றப்படுகின்றன.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான ஆடைகளை சுதந்திரமாக, மலிவான விலையில் வாங்க உதவும் வகையில், சில அமெரிக்கப் பள்ளிகள் கட்டாயச் சீருடை விதிமுறைகளுக்கு மாற்றாக, நிறத்தை அடிப்படையாகக் கொண்ட ஆடை விதிமுறைகளை கொண்டுள்ளன. உலகில் மிகச் சிறந்த கல்வி வழங்கும் பின்லாந்து நாட்டு பள்ளி மாணவர்கள் சீருடைகளை அணிவதில்லை.
சுற்றுச்சூழல், நிலைத்தன்மை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவரும் நிலையில், பள்ளிச் சீருடைகளை மீண்டும் பயன்படுத்தும் நடைமுறையை ஊக்குவிக்க தற்போதைய பள்ளி சார்ந்த தனித்துவமான சீருடை வடிவமைப்புகளை மறுசீரமைப்பது அவசியமாகும். அனைத்துப் பள்ளிகளும் ஒரே சீருடை முறையை ஏற்றுக்கொண்டால், வெவ்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் சீருடைகளைத் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு மீண்டும் பயன்படுத்த இயலும். பள்ளியின் அடையாளத்தைப் பேணும் பொருட்டு, அப்பள்ளியின் பொறித்த கழுத்துப்பட்டைகள் அல்லது அடையாள அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பள்ளிச் சீருடைகளை மறுசுழற்சி செய்வது தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமே என்றாலும், நுகர்வுக்குப் பிந்தைய ஆடைக் கழிவுகளைப் பதப்படுத்தி மறுசுழற்சி செய்வதற்கான போதிய கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் குறைவாகவே உள்ளன. தற்போதைய நிலையில், ஆடைக் கழிவுகள் திருப்பூர், பானிபட் ஆகிய நகரங்களில் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. கல்விப் பொருள்கள் வாங்குவதையும் விற்பதையும் எளிதாக்கும் "கிட்கிட்' போன்ற சமூகத் தளங்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு பெற்றோர் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
சீருடைக் கழிவுகளைக் குறைக்கவும், மறுபயன்பாட்டை ஊக்குவிக்கவும் மத்திய, மாநில அரசுகள், தனியார் பள்ளிகளுடன் இணைந்து நிறம், வடிவமைப்புகளுக்கான தரக் கொள்கைகளை வகுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நம்பிக்கை ஏற்படுத்தும் செயல்பாடுகள்
பேல்பூரி - 03-05-2026

கட்சி மாறிய 7 ஆம் ஆத்மி எம்.பி.க்களின் பதவியை ரத்து செய்யுங்கள்: மாநிலங்களவைத் தலைவரிடம் சஞ்சய் சிங் எம்.பி. மனு!
போரில்லா உலகம் - பேரன்பு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


