தேவை பொறுப்புணர்வு!
சுற்றுச்சூழலைச் சின்னாபின்னமாக்கும் பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை விட்டொழித்தால்தான் என்ன?

பிரதிப் படம்
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நேபாளம் மற்றும் வட மாநிலங்கள்; மாசடைந்த காற்றால் மூச்சுத் திணறும் தில்லி; மழை நீரில் மிதக்கும் சென்னை; நிலச்சரிவில் புதையுண்டு தவிக்கும் நீலகிரி மற்றும் வயநாடு- இவையெல்லாம் ஆண்டுதோறும் தவறாமல் நடக்கும் நிகழ்வுகள்!
இவற்றுக்கெல்லாம் காரணம் சுற்றுச்சூழல் மிக வேகமாகச் சிதைந்து வருவதுதான் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். இருந்தும், அரசும் சரி- மக்களும் சரி, இது குறித்து கவலைப்படுவதாகவோ, தீர்வு காண முயற்சிப்பதாகவோ தெரியவில்லை. இதுதானா நமது பொறுப்புணர்வு?
நம் நாட்டின் உற்பத்தித் திறன் எதில் அதிகம் என்று பார்த்தால், குப்பை உற்பத்தியில்தான் என்பது கண்கூடாகத் தெரிகிறது!. பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் கலாசாரம், விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கும் சில சடங்கு சம்பிரதாயங்கள்- இவையே குப்பை மிக அதிகமாக உருவாவதற்கான காரணங்கள்.
உணவு, ஆடைகள், விளையாட்டுப் பொருள்கள், அணிகலன்கள் போன்றவற்றை வாங்கும்போது, தேவை இருக்கிறதா?, இல்லையா? என்று யாரும் சிந்திப்பதில்லை; வாங்கித் தள்ளுகிறார்கள். அவற்றின் பயன் முடிந்ததும், அவற்றை எப்படி ஒழிப்பது என்று தெரியாமல் குப்பையில் வீசுகிறார்கள்.
வீட்டில் சமைத்து உண்ணும் பழக்கம் குறைந்து உணவகங்களுக்கு சென்று அல்லது அங்கிருந்து வாங்கிச் சாப்பிடும் பழக்கம் வெகுவாக அதிகரித்திருக்கிறது. தெருவுக்கு நான்கு உணவகங்கள் உள்ளன. அவை காய்கறிக் கழிவுகளையும் மீதமாகும் உணவையும் அப்படியே குப்பையில் வீசுகின்றன. வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களுக்குப் பெரும்பாலும் நெகிழி டப்பாக்களிலும் நெகிழிப் பைகளிலும்தான் உணவுப் பதார்த்தங்களைக் கட்டிக் கொடுக்கின்றன.
வாங்கிச் செல்பவர்களும் சாப்பிட்டுவிட்டு மிச்சமானவற்றை ஒரு நெகிழிப்பையில் போட்டுக் கட்டிக் குப்பைத் தொட்டியில் அல்லது சாலையோரத்தில் அல்லது சாக்கடையில் வீசி எறிந்துவிட்டால் வேலை முடிந்தது! நெகிழித் தடையெல்லாம் வெறும் பேச்சளவில்தான்!
வீடுகள், உணவகங்கள், அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், சாலையோரக் கடைகள் எல்லாவற்றிலும் இதே பொறுப்பின்மையைத்தான் காண்கிறோம். விழாக் காலங்களில் கேட்கவே வேண்டாம்.
அண்மையில் விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை ஆகிய விழாக்கள் முடிந்து தெரு முனைகளில் குவிந்திருந்த வாழை மரங்களும், கரும்புகளும், பூமாலைகளும் மழை நீரில் நனைந்து அழுகி நாற்றமெடுத்துக் கிடந்தன.
கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பொறுப்புணர்வை என்னவென்று சொல்வது? மேற்சொன்ன எல்லாவிதக் குப்பைகளையும் மனசாட்சியே இல்லாமல் குளம்-குட்டைகளில் கொட்டுகிறார்கள்.
மாநகராட்சிகளும் நகராட்சி, ஊராட்சிகளும் குப்பைகளைக் குளங்களிலும் ஆறுகளிலும் பயன்பாடற்று இருக்கும் கிணறுகளிலும் கொட்டுகின்றன. வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்ட இடங்களிலெல்லாம் குப்பை மலைகள் அடித்துக் கொண்டுவரப்பட்டு வீடுகளை மூடி உயிர்ச்சேதம் உண்டாக்கியது குறித்து பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் பார்த்தும் நம்மை மாற்றிக் கொள்ளவில்லையே!
ஆறுகளும் குளங்களும் கழிவுநீர்க் குட்டைகளாகிக் கொண்டிருக்கின்றன. வீடுகள், தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் ஆகியவற்றின் கழிவுநீர், நீர்நிலைகளில்தான் விடப்படுகிறது. விநாயக சதுர்த்தி முடிந்த பின்னர் எத்தனை சிலைகள் குளங்களில் கரைக்கப்பட்டன? இருந்த கொஞ்ச தண்ணீரும் வீணாகிவிட்டதே. இப்படி நீர்நிலைகளை அழித்தால் நாளை நம் குழந்தைகள் குடிக்கத் தண்ணீருக்கு என்ன செய்வார்கள்.
தீபாவளியின்போது, காசைக் கரியாக்கி, காதைச் செவிடாக்கி, காற்றை மாசாக்கி, சுற்றுச்சூழலைச் சின்னாபின்னமாக்கும் பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை விட்டொழித்தால்தான் என்ன?
அறிவிக்கப்படாத மின்வெட்டு என்று அங்கலாய்க்கிறோம். விழாக் காலங்களில் வீடுகளிலும் கடைகளிலும் வழிபாட்டு இடங்களிலும் சரம் சரமாய்ச் சரவிளக்குகளைத் தொங்கவிடுவதையும், ஒலிபெருக்கிகளை அலற விடுவதையும் நிறுத்தினால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். இப்படி அதிகமான மின்சாரப் பயன்பாடு இருப்பதால்தான், அதிக எண்ணிக்கையில் அனல் மின் நிலையங்களும், நீர் மின் நிலையங்களும் தேவைப்படுகின்றன; அவற்றை உருவாக்க நிலக்கரியும் கனிமங்களும் ஏராளமாக வெட்டியெடுக்கப்படுகின்றன; காடுகள் அழிக்கப்படுகின்றன; இவற்றின் விளைவுதான் அதிக வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும், பூகம்பமும்!
கட்டுப்பாடற்ற சுற்றுலாவால் சுற்றுச்சூழல் சிதைந்து போனதைப் பற்றியோ, சிதைந்து கொண்டிருப்பதைப் பற்றியோ அரசுகளுக்கும் மக்களுக்கும் எந்தக் கவலையுமில்லை. பர்லியாற்றில் ஒரு பேருந்து கவிழ்ந்து ஓர் உயிர் பலியான பிறகுதான், நீலகிரி மாவட்ட நிர்வாகம் சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் பொதுப் போக்குவரத்தையும் தடை செய்திருக்கிறது.
நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வாகன எண்ணிக்கைக் கட்டுப்பாடு மற்றும் சில குறிப்பிட்ட நெகிழிப் பொருள்களைக் கொண்டு செல்லத் தடை ஆகியவற்றை ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. சுற்றுலா காலத்தில் உதகைக்கு ஒரு நாளைக்கு 6,000 வாகனங்கள் செல்லலாம் என்று வரையறுத்துள்ளது; இதுவே மிக அதிகம்.
மலைப் பிரதேசங்கள் மிக மெல்லிய சூழலை உடையவை. இத்தனை வாகனங்ககளின் புகையும் இத்தனை மக்களின் நடமாட்டமும் அந்த மெல்லிய சூழலுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து வசதிக்கென மலைப் பாறைகள் செங்குத்தாக வெட்டப்பட்டு மரங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு, சாலைகள் அகலப்படுத்தப்படுகின்றன. வாகனங்களை நிறுத்துவதற்கும் உணவகங்கள் மற்றும் கழிப்பறைகள் கட்டுவதற்கும் மரங்கள் வெட்டப்பட்டு, மேடுகள் சமமாக்கப்படுகின்றன.
அரசே இப்படி சுற்றுச்சூழலைச் சிதைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மக்கள் சும்மா இருப்பார்களா? சட்டவிரோத விடுதிகள் புற்றீசல்கள்போல முளைத்துக் கழிவுகளைப் பள்ளங்களில் கொட்டியும் கழிவு நீரை நீரோடைகளில் திறந்து விட்டும் அட்டகாசம் செய்கின்றன. இத்தனை கட்டுமானங்களும் ஒரே நாளில் நடந்து விடுவதில்லை. அதிகாரிகளும் மக்களும் பார்த்துக் கொண்டிருக்க நாள்பட நாள்படத்தான் நடக்கின்றன. அதிகாரிகளுக்கும் விடுதி உரிமையாளர்களுக்கும் இவற்றால் நல்ல வருமானமும், மக்களுக்கு அளவில்லாத உல்லாசமும் கிடைக்கின்றன. அதனால் வாளாவிருக்கிறார்கள்.
காடுகளுக்குள் இருக்கும் கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. மதம் சார்ந்த விஷயம் என்பதால் வனத் துறையும் காவல் துறையும் கட்டுப்பாடுகள் விதிக்கத் தயங்குகின்றன. அப்படியே வனத் துறை சில கட்டுப்பாடுகளை அறிவித்தாலும், மக்கள் அவற்றுக்கெல்லாம் அடங்குவதில்லை. முன்பு சில குறிப்பிட்ட தினங்களுக்கு மட்டும் சென்று வழிபட்டு வந்தவர்கள், இப்போது ஆண்டின் எல்லா நாள்களும் உள்ளே செல்லத் தொடங்கி இருக்கிறார்கள்; எண்ணிக்கையோ லட்சத்தை எட்டிவிட்டது. காட்டுக்குள் விலங்குகளைப் பலி கொடுத்து அவற்றைச் சமைத்துச் சாப்பிட்டு, நீர்நிலைகளை மாசுபடுத்தி, உல்லாசமாக இருந்துவிட்டு வருகிறார்கள்; காடுகளும் விலங்குகளும் தாங்குமா?
சுற்றுச்சூழல் போராளிகள் எத்தனை வழக்குகள்தான் போடுவது? நீதிமன்றத் தீர்ப்புகளுமேகூடப் பல சமயங்களில் 'மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது' என்ற நோக்கில் மக்களுக்குச் சாதகமாகவே இருக்கின்றன. அப்படியே கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அரசு நிர்வாகம் அத்தீர்ப்புகளை நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம் காட்டுகின்றன.
சுற்றுச்சூழல் வேகமாக அழிந்து, இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நமது பொறுப்பு என்ன?
பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் கலாசாரத்தை ஒதுக்க வேண்டும். சுற்றுலா செல்வதையும் பொது இடங்களில் கேளிக்கை, வழிபாடு போன்ற காரணங்களுக்காகப் பெருமளவில் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். அந்த நேரத்தைக் குடும்பத்தினருடன் வீட்டில் செலவிட்டால் சுற்றுச்சூழலும் மேம்படும், மனநலமும் மேம்படும். சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பட்டாசு வெடிப்பது, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது, கடவுள் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது, வனங்களுக்குள் சென்று வழிபடுவது போன்ற சம்பிரதாயங்களை அறவே விட்டுவிட வேண்டும். பெரும்பாலான மக்கள் கல்வியறிவு பெற்றுள்ள நிலையில், விலங்குகளைப் பலியிடுவது அநாகரிகம், அநியாயம் என்பதை உணர்ந்து அந்த வழக்கத்தைக் கைவிட வேண்டும். குப்பையைத் தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் கொடுத்தால் சுற்றுப்புறமும் தூய்மையாகும்; பொது சுகாதாரமும் மேம்படும். இவை பொதுமக்களின் பொறுப்பாகும்.
அனைத்துத் துறை அரசு ஊழியர்களுக்கும் சுற்றுச்சூழல் குறித்த சட்டங்கள், விதிமீறல்கள் அவற்றுக்கெதிரான நடவடிக்கைகள் குறித்துப் பயிற்சியளிக்க வேண்டும். சுற்றுலா, வளர்ச்சி ஆகியவை சுற்றுச்சூழலுக்கு எதிராகத்தான் இருக்கும்; இது தவிர்க்க முடியாதது. இதை உணர்ந்து அரசு, சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமையளித்துப் பல கடும் கட்டுப்பாடுகளுடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இப்போதைய உடனடித் தேவை நம்மிடம் பொறுப்புணர்வு; அதையும் தாண்டிக் கடமையுணர்வு. நம் பொறுப்பின்மையால் கஷ்டப்படப் போவது நாம் மட்டுமல்ல, நமக்கு அடுத்துவரும் தலைமுறையினரும்தான் என்பதை உணர்ந்து, நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதே அறிவுடைமையாகும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

