மழைநீர் சேமிப்பின் மகத்துவம்
மழைநீர் சேமிப்பின் அவசியம் பற்றிய நடுப்பக்கக் கட்டுரை.....

தமிழ்நாட்டில் நிகழாண்டு பெய்த தென்மேற்குப் பருவமழை மழையின் அளவு, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இயல்பைவிட 20 % குறைவாகப் பதிவாகியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி, எல் நினோ தாக்கத்தால் நாடு முழுவதும் பெய்த தென்மேற்குப் பருவமழை 13 % குறைவாகவே பதிவாகியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் பெய்த சராசரி மழையின் அளவைவிட குறைவாக உள்ளது என மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாள்தோறும் அதிகரித்துவரும் மக்களின் குடிநீர்த் தேவை, தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கான தண்ணீர், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் தண்ணீரின் கொள்ளளவு குறைதல், மழைநீர் சேமிப்பில் ஆர்வமின்மை, கடும் வெப்பத்தால் தண்ணீர் ஆவியாதல் போன்ற பல்வேறு காரணங்களால் சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகளில் நீரின் கொள்ளளவு பெருமளவு குறைந்து வருகிறது.
சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், வீராணம், சோழவரம், தேர்வாய் கண்டிகை ஆகிய 6 நீர் தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 13. 21 டிஎம்சி ஆகும். ஆனால், தற்போது இந்த ஏரிகளில் உள்ள நீரின் கொள்ளளவு 5 டிஎம்சி மட்டுமே. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த ஏரிகளில் 9.1 டிஎம்சி தண்ணீர் இருந்தது.
தென்மேற்குப் பருவமழை குறைவாக பெய்ததன் விளைவாக, தமிழகம் முழுவதும் தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 224.343 டிஎம்சி ஆகும். ஆனால், தற்போது இந்த அணைகளில் உள்ள நீரின் அளவு 74.412 டிஎம்சி மட்டுமே; 63 அணைகளில் அவற்றின் மொத்த கொள்ளளவில் 25 சதவீதத்துக்கும் குறைவாக தண்ணீர் உள்ளது; 17 அணைகளில் அவற்றின் மொத்த கொள்ளளவில் 26 சதவீத முதல் 50 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது.
வடகிழக்குப் பருவமழை தாமதமாகத் தொடங்கினாலோ, போதிய அளவு மழை பெய்யாது போனாலோ தமிழகத்தில் விவசாயத்துக்கும், தொழிற்சாலைகளுக்கும் தேவையான தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்படுவதுடன் மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்கள் முதற்கொண்டு குக்கிராமங்கள் வரை குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு தற்போது குறைந்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் காவிரி நீர்வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளுக்கு, குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவிரி நீர் முழுமையாகச் சென்றடையாத நிலை உருவாகி, சம்பா நெல் சாகுபடி பெரும் பின்னடைவைச் சந்திக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் சில பகுதிகளில் குடிநீர் பஞ்சம் காரணமாக மக்கள் குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் செய்யும் நிலையில், வேறு சில பகுதிகளில் குடிநீர் கொண்டு செல்லும் குழாய்களில் ஏற்படும் உடைப்பு மற்றும் கசிவு காரணமாக குறிப்பிட்ட அளவு குடிநீர் வீணாகும் செய்தியை ஊடகங்களில் அவ்வப்போது காண முடிகிறது.
தமிழ்நாட்டில் விவசாயப் பயன்பாட்டுக்காக பல லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் மக்கள், தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவைக்காக நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படுகிறது. இதன் விளைவாக அரியலூர், திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. கிராமப்புற சாலைகளும் தெருக்களும் சிமென்ட் கொண்டு அமைக்கப்படுவதால் மழைநீர் நிலத்தில் இறங்குவது பெரும் சவாலாக உள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு பெரும் தடை உருவாகிறது. வீடுகள், வணிக வளாகங்கள், அரசு கட்டடங்களில் மழைநீர் சேமிப்பை தீவிரமாக கடைப்பிடித்தால் அன்றி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது சாத்தியமல்ல.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கிராமங்களில் பொதுக் கிணறுகளே கிராம மக்களின் தண்ணீர் தேவையை நிறைவு செய்பவையாக இருந்தன. கிராமப்புற மக்களின் தண்ணீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கான ஊர் பொதுக் கிணறுகள் கைவிடப்பட்டன. இவற்றில் பெரும்பாலான கிணறுகள் தற்போது தூர்ந்து போயுள்ளதுடன், குப்பை கொட்டும் தொட்டிகளாக மாறி விட்டன. மழைக்காலத்தில் சிறந்த மழை நீர் சேமிப்புக் கிணறுகளாக விளங்கக்கூடிய இவற்றை தூர்வாரி பயன்படுத்த வேண்டியது அவசியம்.
மத்திய ஜல் சக்தி துறையின் அறிக்கையின்படி, நாட்டிலேயே அதிக அளவில் நீர்நிலைகள் எண்ணிக்கையைப் பெருக்கி மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த கணக்கெடுப்பின்போது 1,08,957'ஆக இருந்த நீர்நிலைகளின் எண்ணிக்கை, இந்த முறை 1,10,228'ஆக அதிகரித்துள்ளது; இந்த வளர்ச்சி 3.1% மட்டுமே.
மழைநீர் சேமிப்பில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக ஜெர்மனி திகழ்கிறது. வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் மழை நீருக்கு ஏற்ப அந்நாட்டில் வரி விதிக்கப்படுகிறது. மழை நீரை கழிவு நீரோடையில் கலக்க விடும் கட்டடங்களின் உரிமையாளருக்கு "மழைநீர் வரி' விதிக்கப்படுகிறது. மேலும், முறையான மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு கொண்ட கட்டங்களுக்கான வரியில் பெரும் பகுதி தள்ளுபடி செய்யப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான வீடுகள் கட்டப்படும்போது மழைநீர் சேமிப்பு தொட்டிகளும் கட்டும் பழக்கம் உள்ளது. சிங்கப்பூரின் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பில் மழைநீர் சேமிக்கப்படுகிறது.
வடகிழக்குப் பருவமழையின் பலனை முழுமையாக அடையும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் கால்வாய்களை தூர்வாரி தயார் நிலையில் வைப்பது அவசியம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

