ஒலிப் பார்வை-பகுதி 2

 நடிகர் விக்ரம் நடித்து, 2012ம் ஆண்டு வெளிவந்த 'தாண்டவம்' திரைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்களென்று நினைக்கிறேன்.
ஒலிப் பார்வை-பகுதி 2

நடிகர் விக்ரம் நடித்து, 2012ம் ஆண்டு வெளிவந்த 'தாண்டவம்' திரைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்களென்று நினைக்கிறேன். இயக்குனர் A.L.விஜய் அவர்களால் இயக்கப்பட்டு, வெளிவந்த நல்லதொரு திரைப்படம் அது. 'எத்தனையோ படங்களைப் போல, தாண்டவமும் ஒரு ஆக்‌ஷன் வகைத் திரைப்படம்தான்' என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் அந்தப்படத்தில் மையப்படுத்தப்பட்டுச் சொல்லப்பட்ட முக்கியமான தகவலை, படத்தின் ஆக்‌ஷன் அம்சங்கள் காணாமல் செய்துவிட்டன. உண்மையைச் சொல்லப் போனால், அந்தத் தகவலை அறிமுகப்படுத்தியதற்கு இயக்குனர் விஜய்க்கும், அதில் நடித்த விக்ரமுக்கும் ஒரு 'சல்யூட்'  நாம் அடித்திருக்க வேண்டும். ஆனால், நாம் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. பத்தோடு, இந்த ஒன்றையும் சேர்த்துச் சுலபமாக மறந்துவிட்டோம். உலகத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட சாராருக்குப் பெரிய உதவியாக, புதியதொரு வாழ்வளிக்கும் தகவல் அந்தப் படத்தில் சொல்லப்பட்டது. ஆனால், அந்தப் படத்தின் வெவ்வேறு விதமான விமர்சனங்களில் நம் கவனங்களைச் செலுத்திவிட்டு, அந்தத் தகவலை மறந்தே போனோம்.

தாண்டவம் படத்தில் நாயகனான விக்ரம் பார்வையற்றவராக நடித்திருப்பார். ஆனால், வழமையான பார்வையற்றவர்கள் போல இல்லாமல், ஒரு தனித்திறமை இருப்பதாக விக்ரமின் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். அது வௌவால்களுக்கும், டால்பின்களுக்கும் இருக்கிறது என்று நான் மேலே மேலே சொல்லிய 'எக்கோ லொகேசன்' என்னும், எதிரொலியால் இடமறியும் திறமைதான். தன் நாக்கைப் பற்களுக்குப் பின்னால் கொண்டுசென்று, சொடுக்குப் போடுவதுபோன்று அசைப்பதன் மூலம், 'டிக்' என்னும் ஒலியை அடுத்தடுத்து எழுப்பி, அந்த ஒலி முன்னால் இருக்கும் பொருட்களில் பட்டுத் தெறித்து வரும்போது, அதைக் காதுகளினால் உள்வாங்குவதால் எதிரே இருக்கும் பொருட்கள் என்னவென்று ஊகிப்பார். அந்தத் திறமை மூலம், ஒரு கதாநாயகனுக்குத் தேவையான அனைத்து ஆக்‌ஷன் சாதனைகளுடன் விக்ரம் படத்தில் நடித்திருப்பார். ஒற்றைக் கையினால் ரயிலைக் கூடத் தள்ளிவிடக்கூடிய கதாநாயகர்களின் படங்களை நாம் பார்த்துப் பழகிவிட்டதால், இந்தப் படத்தின் காட்சிகளையும் அப்படியானதொரு புனைவு நிலையாகக் கணித்திருப்போம். இரண்டு கண்களும் தெரியாத ஒருவர், தன்னைச் சுற்றியிருப்பவர்களுடன் இப்படிச் சண்டைபோட முடியுமா? இது சாத்தியமா? என்று நாம் யதார்த்தமாகச் சிந்திக்கவேயில்லை. அவற்றையும் ஒரு பொழுதுபோக்காகவே எண்ணிவிட்டோம். ஆனால், தாண்டவம் படத்தில் வரும் விக்ரம் போல, நிஜமான நாயகர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பார்வையற்றவர்களாலும், சாதாரண மனிதர்கள் போல அனைத்தையும் செய்ய முடியும் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விக்ரம் போலச் சண்டையிட்டுச் சாகசம் செய்வதில்லை. அதைவிடப் பெரிய சாதனைகளையெல்லாம் செய்கிறார்கள். இரண்டு கண்களும் தெரியாத நிலையில், இரு சக்கரவண்டியை ஓட்டுகிறார்கள். மலையேறுகிறார்கள். முடிந்தளவு அனைத்து விளையாட்டுகளிலும் பங்கு பெறுகிறார்கள். பாஸ்கெட்பால், ஃபுட்பால் கூட விளையாடுகிறார்கள். அப்படிச் சாதனை செய்தவர்களில் முதன்மையானவன்தான் நான் மேலே சொன்ன பென் அண்டர்வூட். இவர்களின் சாதனைகளுக்கு அடிப்படையாக இருப்பது 'எக்கோ லொக்கேஷன்' என்பதுதான். பார்வையற்ற சாதனையாளர்கள் அத்தோடு நிறுத்தி விடவில்லை. தாங்கள் கற்றுக் கொண்டதை உலகில் இருக்கும் அனைத்துப் பார்வையற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். அதற்கென்றே ஒரு அமைப்பையும் உருவாக்கிச் செயல்படுகிறார்கள். 'கண்கள் தெரியாத நிலையில் இந்த அழகான பூமிக்கு நாம் அந்நியமாகிவிட்டோமா?' என்று நினைக்கக் கூடிய பார்வையற்றவர்களுக்குப் புதியதொரு பாதையைக் காட்டி, உற்சாகத்தை கொடுத்திருக்கிறார்கள்.

'World Access for the Blind' என்ற அமைப்பை உருவாக்கி, அதற்குப் பொறுப்பாக இருப்பவர்தான் 'டானியேல் கிஷ்' (Daniel Kish). இவரும் அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர்தான். இவரும் தனது ஒரு வயதிலேயே விழித்திரைப் புற்றுநோயால் இரண்டு கண்களின் பார்வையையும் இழந்தவர். ஆறு வயதாக இருந்தபோது, சாதாரணமான மாணவர்களுடனே பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார். உடன் படிக்கும் நண்பர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் இவரால் அவர்களுடன் சேர்ந்து விளையாட முடியவில்லை என்ற ஆதங்கம் அவரைக் காயப்படுத்தியது. அவர்களுடன் சேர்ந்து எப்படி விளையாடலாம் என்று மைதானத்தில் தனிமையாக இருந்து சிந்தித்தபோதுதான், இவருக்கு நாக்கின் மூலம் ஏற்படுத்தும் சத்தத்தினால் எதிரேயிருக்கும் பொருட்களைக் கண்டுபிடிக்கும் திறமை உருவாகியது. இதையே படிப்படியாக வளர்த்துக்கொண்டார். இன்றைய நிலையில் இவர்தான் உலகின் முதல்தர 'எக்கோ லொகேஷன்' முறையினால் இயங்கும் மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் 'எக்கோ லொகேஷன்' முறையினால் இயங்கிக் கொண்டிருப்பதால், இவரை 'வௌவால் மனிதன்' (Batman) என்றும் அழைக்கிறார்கள். 'பேட்மான்' என்னும் திரைப்படத்தில் நாம் பார்க்கும் வௌவால் மனிதனை விட, நிஜத்தில் வாழும் உண்மையான 'பேட்மான்' இவராகத்தான் இருப்பார். நாக்கின் மூலம் தொடர்ச்சியாக ஏற்படுத்தும் இந்த எக்கோ லொகேசன் எதிரொலியை 'ஃபிளாஷ் சோனார்' (Flash Sonar) என்று இவர் அழைக்கிறார். விட்டுவிட்டு எரியும் ஃபிளாஷ் ஒளியைப் போல, விட்டுவிட்டு உருவாக்கும் ஒலியை, 'ஃபிளாஷ் சோனார்' என்று இப்போது அழைக்கிறார்கள். இந்தப் 'ஃபிளாஷ் சோனார்' மூலம் தனக்கு முன்னால் இருக்கும் எந்தப் பொருளையும், அது எதுவென்று இவரால் கண்டுபிடிக்க முடியும். 'World Access for the Blind' அமைப்பின் மூலம் உலகம் முழுவதுமிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண் பார்வையற்றவர்களுக்கு, 'ஃபிளாஷ் சோனார்' முறையைச் சொல்லிக் கொடுத்து, அவர்களுக்குப் புதியதோர் உலகத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். உலகமெங்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து அவரிடம் மாணவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். பென் அண்டவூட்டின் கடைசிக் காலங்களில், டானியேல் கிஷ் அவனைச் சந்தித்திருக்கிறார். பென்னின் திறமைகளைக் கண்டு வியந்து பாராட்டியுமிருக்கிறார். ஃபிளாஷ் சோனாரில் இவர்கள் இருவருமே இமயங்கள் போல விளங்கியவர்கள். 

இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் பொருட்களை எப்படிப் பார்க்கிறீர்களென்று அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் பார்க்கும் பொருட்களிலிருந்து வரும் ஒளி, கண்களிலிருக்கும் வில்லைகளினூடாகச் சென்று, விழித்திரையில் (Retina) படுகிறது. விழித்திரையில் படும் ஒளியலைகள், சமிக்ஞைகளாக்கப்பட்டு பார்வை நரம்புகளினூடாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. நாம் பார்ப்பதைப் தெரிந்துகொள்வதற்கென ஒரு விசேசமான பகுதி மூளையில் இருக்கிறது. அதுவே நாம் எதைப் பார்க்கிறோம் என்பதை நமக்குப் புரிய வைக்கிறது. அந்தப் பகுதியை 'விஷுவல் கார்டெக்ஸ்' (Visual Cortex) என்பார்கள். பார்வை நரம்புகளினால் சமிக்ஞைகளாக்கப்பட்டுக் கொண்டு வரப்படும் செய்திகளை, விஷுவல் கார்டெக்ஸ் மீண்டும் படமாக மாற்றி, நாம் எதைப் பார்க்கிறோம் என்பதைப் அறிந்து கொள்வதற்கு உதவுகிறது. சரியாகப் புரிந்து கொள்ளுங்கள், படம் விஷுவல் கார்டெக்ஸுக்கு நேரடியாகச் செல்வதில்லை. செல்வதெல்லாம் சமிக்ஞைகள் (Signals) மட்டும்தான். இப்போது கண் பார்வையற்றவர்களை யோசித்துப் பாருங்கள். அவர்களின் உலகமே காட்சிகளற்ற இருண்ட உலகமல்லவா? கண்களினூடாக எந்தச் சமிக்ஞைகளும், செய்திகளும் அவர்களின் மூளைக்குச் செல்வதில்லை. ஆனாலும், விஷுவல் கார்டெக்ஸ் என்னும் பகுதி அவர்களின் மூளையில் இருந்து கொண்டிருக்கும். இப்போதுதான், டானியேல் கிஷ் போன்றவர்கள் ஒரு தந்திரம் செய்கிறார்கள். விழி வழியே விஷுவல் கார்டெக்ஸுக்குச் செல்ல முடியாத செய்திகளை, செவி வழியாகச் செல்வதற்கான உத்திகளை உருவாக்குகிறார்கள். செவி வழியே செல்வதைக் கிரகிப்பதற்கு மூளையைப் பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள். விழி வழியாக வரும் ஒளி அலைகளுக்குப் பதிலாக, செவி வழியாக வரும் ஒலி அலைகளை 'விஷுவல் கார்டெக்ஸ் எடுத்துக் கொள்கிறது. அப்படி வரும் செய்திகளை விஷுவல் கார்டெக்ஸ் உருவங்களின் படங்களாக அவர்களுக்கு அறிவிக்கிறது. இதனால், அவர்களும் ஒலியைக் கேட்பதன் மூலம் உருவங்களைப் பார்ப்பது போல உணர்ந்து கொள்கிறார்கள். நாம் பார்க்கும் உருவங்கள் போல அச்சு அசலாக அப்படியே அவர்களுக்குக் காட்சிகள்  இல்லாவிட்டாலும், அவர்கள் அதுவரை கேட்டுணர்ந்த ஏதோவொரு பிம்பமாக அவை காட்சியளிக்கும். பார்வையுள்ள சாதாரண மனிதனால், அவர்கள் எப்படி ஒரு பொருளைப்  பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. பிறந்து ஒரு வயதான நிலையில் இரண்டு கண்களின் பார்வையையும் இழந்த டானியேல் கிஷ் போன்றவர்கள், வாழ்நாளில் எந்தப் பொருட்களையும் கண்களால் பார்த்திருக்கவே மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒவ்வொரு பொருட்களையும் எப்படிப் பார்த்துப் புரிந்து கொள்கின்றனர் என்பது விந்தையான ஒன்றுதான்.

டானியேல் கிஷ் பார்வையற்றவர்களுக்கான அமைப்பை உருவாக்கி நடத்திக் கொண்டிருப்பவர் என்பதோடு அவரின் தமிழர்களுடனான தொடர்பு முடிந்துவிடவில்லை. 'தாண்டவம்' படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் டானியேல் கிஷ் நடித்துமிருக்கிறார். அந்தப் பாத்திரத்தில் அவர், 'டானியேல் கிஷ்' ஆகவே வருகிறார், 'எக்கோ லொகேஷன்' பற்றி நடிகர் நாசருக்கு எடுத்துச் சொல்லி உதவும் பாத்திரம் அது. 'தாண்டவம்' படத்தை இயக்கிய விஜய், நடிகர் விக்ரமின் பாத்திரத்தை டானியேல் கிஷ்ஷின் சாயலிலேயே உருவாக்கியிருந்தார். இதை நடிகர் விக்ரம் தன் பேட்டிகளில் சொன்னதோடு, டானியேல் கிஷ்ஷுக்கே அந்தப் படத்தைச் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் 'தாண்டவம்' திரைப்படம் வெளிவந்த சமயத்தில் டைம் ஆஃப் இந்தியாவுக்கு நடிகர் விக்ரம் கொடுத்த பேட்டியை நாம் நன்கு கவனத்தில் எடுக்க வேண்டும். "இந்தியாவில்  இருக்கும் பார்வையற்றவர்களுக்கு இந்தப் படம் மூலம் ஒரு புதிய பாதையின் கதவுகள் திறக்கும்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் நடிகர் விக்ரம் அந்தப் பேட்டியில் சொல்லியிருந்தார். ஆனால், படம் வந்து மூன்று வருடங்களுக்கு மேலாக ஆகிய நிலையிலும், தமிழ்நாட்டிலுள்ள பார்வையற்றவர்களுக்கு இதுபோன்றதொரு வசதியைச் செய்துதர எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றே நான் கருதுகிறேன். அப்படி எடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், எடுத்தவர்களுக்கு என் வாழ்த்துகளும், பாராட்டுகளும். கூடவே நன்றிகளும்.

இதுவரை அப்படியொரு முயற்சி எடுக்கப்படாத பட்சத்தில், வசதியுள்ள சமூகசேவை எண்ணமுள்ள அமைப்புகளோ, பணமுள்ளவர்களோ, இந்த 'எக்கோ லொகேசன்' என்னும் 'செவிவழி பார்க்கும் முறையை' நம்மவர்களும் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அப்ப்படிச் செய்தால் அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்களாவார்கள். டானியேல் கிஷ் நடத்தும் அமைப்பைத் தேடிச் சென்று இதைக் கற்றுக்கொண்டு வருவதற்கு அதிகப் பண வசதி தேவைப்படும். அதனால், வருடத்தில் ஓரிரு தடவைகள் டானியேல் கிஷ் போன்றவர்களை அழைத்து, சில வாரங்கள் பயிற்சிப் பட்டறைகள் அமைத்து, எக்கோ லொக்கேஷனைக் கற்றுக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். அப்படிச் சிலர் அதை இங்கு கற்றுக் கொண்டுவிட்டால், பின்னர் அவர்களே மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பவர்களாக மாறவும் முடியும். இதையொரு சமூகத் தொண்டாகச் செய்வதற்குத் தடையாக இருப்பது பொருளாதாரம் மட்டும்தான். அந்தப் பொருளாதாரத்தை நிவர்த்தி செய்து உதவி செய்ய யாராவது முன்வருவார்களா?

பின்குறிப்பு:

ஒரு பொருளை நாம் பார்க்க வேண்டுமென்றால், சூரிய ஒளி அல்லது மின்விளக்குப் போன்ற ஒளி கொடுக்கும் ஆதாரங்களிலிருந்து வெளிவரும் ஒளியலைகள் அந்தப் பொருளில் பட்டுத் தெறித்துப் பின்னர் நம் கண்களினூடாக விழித்திரையை அடைய வேண்டும். இந்த நிகழ்வை நாம் நிச்சயம் புரிந்திருக்கின்றோம். இதைச் சரியாகப் பார்த்தோமானால், சூரிய ஒளியானது (அல்லது மின்விளக்கு) அந்தப் பொருளில் மட்டுமல்ல, அதைத் தாண்டிய வேறு இடங்களிலும் படுகிறது. ஆனால், அந்தப் பொருளின் மேற்பரப்பிலிருந்து விளிம்புவரை படும் ஒளியானது தெறித்த நிலையில் நம் கண்களுக்கு வருகிறது. அப்படித் தெறித்து வரும் ஒளியின் அளவுகளுக்கேற்ப மாறுபட்ட ஒளிச்செறிவுகளால் அந்தப் பொருளின் விம்பம் விழித்திரைக்கு வருகிறது.

ஒளியலைகள் எப்படித் தொழிற்படுகின்றனவோ, அதே வகையில்தான் ஒலியலையகளும் தொழிற்படுகின்றதன. உதாரணமாக, ஒரு சதுர வடிவமான சிறிய தகடொன்றை முகத்துக்கு நேரே கையில் பிடித்தபடி நின்று நாக்கினால் ‘டிக்’ என்று சத்தம் வருவதுபோலச் செய்யுங்கள். உங்கள் கவனம் சிதையாமல் இருப்பதற்கு கண்களை இறுக மூடியபடி, ஒரு அமைதியான யாருமேயில்லாத பூட்டிய அறையில் இதைச் செய்யுங்கள். தொடர்ச்சியாக ‘டிக்’ என்னும் ஒலியை நீங்கள் உருவாக்கும் போது, ஒரு நிலையில் அதன் எதிரொலியை, உங்கள் காது உள்வாங்குவதை நீங்கள் அவதானிக்கக் கூடியதாக இருக்கும். இப்போது படிப்படியாக அந்தத் தகட்டை மேல் நோக்கி மெல்ல நகர்த்திக் கொண்டு, தொடர்ச்சியாக ‘டிக்’ என ஒலியெழுப்புங்கள். அந்தத் தகட்டின் கீழ் விளிம்பு உங்கள் வாயிற்கு நேராக வரும்போது, உங்கள் ஒலி தகட்டில் பட்டுத் தெறிக்காமல் விளிம்பைத் தாண்டிச் செல்வதை நீங்கள் உணர்வீர்கள். இப்போது அந்த விளிம்பு எங்கே இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிய வரும். அதுபோல, மீண்டும் மெல்ல மெல்ல தகட்டைக் கீழே நகர்த்துங்கள். அப்போதும் மேல் விளிம்பு வரும் போது, எதிரொலி இல்லாமல் போவதை உணர்வீர்கள். இது போல இடம் வலம் ஆகியவற்றில் செய்யும் போது, அந்தப் பொருள் ஒரு சதுர வடிவமானது என்றும், அதன் பருமன் எவ்வளவு என்பதையும், கண்களை மூடிய நிலையிலேயே உங்களால் கண்டுபிடிக்கக் கூடியதாக இருக்கும்.

பொருளில் பட்டுத் தெறிக்கும் ஒளியலைகள் எப்படி விளிம்பு வரை பட்டு நம் கண்களுக்கு வருகிறதோ அதுபோல, ஒலியலைகளும் விளிம்புகளில் தெறித்துக் காதை அடையும். விளிம்பு தாண்டிச் செல்லும் ஒளியும் ஒலியும் அந்தப் பொருளின் வடிவத்தை நமக்கு உணர்த்துகின்றன. எனவே நாம் கண்களால் பார்த்து ஒரு பொருளைக் கண்டுபிடித்தால், அதைக் காதுகளால் கேட்டும் கண்டுபிடிக்கலாம். ஒளியை மின்விளக்கு கொடுப்பது போல, ஒலியை நம் நாக்கு கொடுக்கிறது. இதற்கு தேவையானதெல்லாம், அதிகப் பயிற்சியும், முழுமையான கவனமும்தான். பார்வையுள்ளவர்களின் கவனத்தைப் புறச் சூழலில் நடப்பவை குழப்பிவிட, ஒன்றில் கவனம் செலுத்துவது கடினமாகிறது. ஆனால், பார்வையற்றவர்களுக்கு அந்தப் புறச் சூழல் மயக்கம் இல்லாததால், கவனச் செறிவு இலகுவாக அமைந்து விடுகிறது.

இதைச் சரியாக நாம் புரிந்து கொண்டுவிட்டால், தமிழ்நாட்டிலும், டானியேல் கிஷ்களும், ‘பென் அண்டர்வூட்களும் உருவாவதில் எந்தச் சிரமமும் இருக்கப் போவதில்லை. இவர்கள் இருவருக்கும் யாரும் இப்படி ஒலியெழுப்பிக் காதால் பார்க்கலாம் என்று சொல்லிக் கொடுத்ததுமில்லை, பயிற்சியளித்ததுமில்லை. இருவருமே ஏகலைவர்களாகத் தாங்களாகக் கற்றுக்கொண்டு இந்த நிலைக்கு வளர்ந்தவர்கள்தான்.

ஏகலைவன் சரித்திரமே நம்மிடமிருந்து உருவானதுதான். எனவே, “முயன்றால் நம்மாலும் முடியும் நண்பர்களே!”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com