மருந்துகளின் ஜெனரிக் பெயரும் பிராண்ட் நேமும்: விரிவான விளக்கம்

மத்திய அரசின் புதிய அதிரடி நடவடிக்கையால் நோயாளிகளுக்கு இனி எந்த நிறுவனத்தின் மருந்து கொடுக்க வேண்டும் என்ற முடிவு மருத்துவரிடம் இருந்து மருந்துக் கடைக்காரருக்கு கைமாற்றப்பட்டுள்ளது.
மருந்துகளின் ஜெனரிக் பெயரும் பிராண்ட் நேமும்: விரிவான விளக்கம்

மத்திய அரசின் புதிய அதிரடி நடவடிக்கையால் நோயாளிகளுக்கு இனி எந்த நிறுவனத்தின் மருந்து கொடுக்க வேண்டும் என்ற முடிவு மருத்துவரிடம் இருந்து மருந்துக் கடைக்காரருக்கு கைமாற்றப்பட்டுள்ளது.

ஆம், இந்தியாவில் இனி நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்துகளின் ஜெனரிக் பெயர்களை மட்டுமே மருத்துவர்கள் எழுத வேண்டும் என்று மத்திய அரசும், மத்திய மருத்துவக் கவுன்சிலும் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் மெடிக்கல் ரெப்பரசன்டேட்டிவ்ஸ் இனி, மருத்துவர்களைப் பார்க்க அல்ல.. மருந்துக் கடைக்காரர்களைப் பார்க்க காத்திருக்கும் நிலை ஏற்படலாம்.

இந்த அதிரடி அறிவிப்பால், ஒரே ஜெனரிக் மருந்துகளால் உருவாக்கப்படும் விலை அதிகமுள்ள மாத்திரைகளை, மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதற்கான வாய்ப்பு குறைக்கப்பட்டு, ஏழை, எளிய நோயாளிகள் பயனடைவார்கள் என்று மத்திய அரசு கருதுகிறது.

இது சரியான முடிவுதானா? இது எந்த வகையில் பலனளிக்கும் என்பது குறித்த பொதுவான சந்தேகங்களுக்கான விளக்கத்தை கேள்வி பதில் வடிவில், கிரிக்கெட் வர்ணனையாளரும், அரசியல் விமரிசகருமான சுமந்த் சி ராமன் தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

அதில் முக்கியமான சில கேள்விகள் இங்கே...

1. ஜெனரிக் மருந்து என்றால் என்ன?
பதில் : ஒவ்வொரு மாத்திரையும் பல்வேறு மருந்துகளின் கலவையாக இருக்கும். அந்த மருந்துகள் தான் நோயை குணப்படுத்த செயலாற்றுகின்றன. ஒரு மாத்திரையில் கலந்திருக்கும் மருந்துகள்தான் ஜெனரிக் மருந்துகள் எனப்படுகின்றன. ஆனால், மருந்துகளை தயாரிக்கும் நிறுவனம், ஒவ்வொரு மாத்திரைக்கும் ஒரு பிராண்ட் நேமை வைத்து, ஜெனரிக் மருந்துகள் அடங்கிய அந்த மாத்திரையை பிராண்ட் பெயரைக் கொண்டுதான் விளம்பரப்படுத்துகின்றன. சில நிறுவனங்கள், ஜெனரிக் பெயர்களையே மாத்திரைக்கு வைக்கின்றன.

உதாரணத்துக்கு : பாராசிடமால் என்பது ஜெனரிக் பெயர். இந்த பாராசிடமால் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு குரோசின், மெடாசின், பெபானில் என்று பிராண்ட் பெயர்கள் வைக்கப்பட்டு, அந்த பெயர்களே விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால், பாராசிடமால் என்றும் சில நிறுவனங்கள் மாத்திரைகளுக்கு பெயர் வைக்கின்றன.

2. ஜெனரிக் மருந்துகளை விட, பிராண்ட் நேம் வைத்திருக்கும் மாத்திரைகள் விலை அதிகமா?
பதில்: ஆமாம். ஜெனரிக் மருந்துகளின் விலைகளை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு விலை அதிகம் வைத்து பிராண்ட் மாத்திரைகள் விற்கப்படுகின்றன. இதற்கு, ஒரு ஜெனரிக் மருந்து ஒரு நோயை குணப்படுத்தும் என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க ஒவ்வொரு நிறுவனமும் பல கோடி ரூபாய்களை செலவிடுகின்றன. அதனால், ஒவ்வொரு மாத்திரைக்கும் ஆன செலவை, அதன் பேடன்ட் காலத்துக்குள் வசூலித்து விட வேண்டும். ஒரு மாத்திரையின் பேடன்ட் காலம் முடிந்துவிட்டால், அந்த மாத்திரையை எந்த மருந்து நிறுவனமும் தயாரித்துக் கொள்ளலாம். வேறு மருந்து நிறுவனங்கள், இதே மாத்திரையைத் தயாரிக்கும் போது கண்டுபிடிப்புச் செலவை சேர்க்க முடியாது. எனவே, மிகவும் குறைந்த விலையில் இந்த மருந்துகளை தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வரும். அதே சமயம், பேடன்ட் காலம் முடிந்த பிறகு, மருந்தை கண்டுபிடித்த நிறுவனத்தின் மருந்தும் சற்று விலை குறைந்து (பெரிய அளவில் குறைக்கப்படாது) விற்பனைக்கு வரும்.

3. ஒரு மருந்தை எழுதிக் கொடுக்க மருந்து நிறுவனங்களிடம் இருந்து மருத்துவருக்கு ஏதேனும் நன்கொடை அளிக்கப்படுமா?
பதில்: இந்தியாவைப் பொறுத்தவரை இதனை மறுக்கவே முடியாது. பெரும்பாலான மருத்துவர்கள், மருந்து நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு வகையிலான நன்கொடைகளை பெறுகின்றனர். ஒரு சிலர் இந்த நடைமுறையைப் பின்பற்றித்தான் மருந்து எழுதுகிறார்கள் என்பதை சொல்வது கூட தவறுதான். ஆனால், எல்லா மருத்துவர்களுமே அதுபோல மருந்து நிறுவனங்களின் நன்கொடைக்காக மட்டுமே மருந்துகளை எழுதுவதில்லை. தன்னிடம் வரும் நோயாளிகளின் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே மருந்து கொடுக்கிறார்கள்.

4. எப்போதுமே பெரிய நிறுவனங்களின் மருந்துகளை மட்டும் மருத்துவர்கள் எழுதக் காரணம்?
பதில் : ஒரு நிறுவனத்தின் மீதான நம்பிக்கையே இதற்குக் காரணம். சில விதங்களில், ஒரு நிறுவனத்தின் மாத்திரைகளை மருத்துவர்கள் அதிகம் நம்புகிறார்கள். மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் போலி மருந்துகளைப் பயன்படுத்த மாட்டார்கள் என்றும், தரம் குறைவான மருந்துகளை தயாரிக்க மாட்டார்கள் என்றும் நம்புவதும் இதற்குக் காரணம்.

5. எந்த நிறுவனத்தின் மருந்து நோயாளிக்குக் கிடைக்க வேண்டும் என்பதை இனி யார் முடிவு செய்வார்கள்?
பதில்: இனி, மருந்துக் கடைக்காரர் தான், ஒரு நோயாளிக்கு எந்த நிறுவனத்தின் மருந்து வழங்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்வார். ஒரு மருந்துக் கடையில் ஒரே ஜெனரிக் மருந்துகளைக் கொண்ட 5 நிறுவன மருந்துகள் இருந்தால், நோயாளி ஒருவர் கொண்டு வரும் மருந்து சீட்டைப் பார்த்து அதில், எந்த மருந்தை அவருக்குக் கொடுப்பது என்பதை மருந்துக்கடைக்காரர் தான் முடிவு செய்வார். எந்த அடிப்படையில் அந்த மருந்தை ஒரு மருந்துக்கடைக்காரர் தேர்வு செய்வார் என்பதை யாராவது யூகிக்க முடியுமா? அதாவது எந்த நிறுவனத்தின் மருந்து என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தற்போது மருத்துவரிடம் இருந்து மருந்துக் கடைக்காரரிடம் கைமாறுகிறது.

6. ஒரு மாத்திரையில் ஏராளமான மருந்துகள் கலந்திருக்கும். இனி மருத்துவர்கள் அதில் உள்ள அனைத்து மருந்துகளின் பெயரையும் எழுத வேண்டுமா?
பதில்: ஆம், இது அடுத்த பிரச்னை. நியூரோபின் 40 என்ற மாத்திரையை உதாரணமாக எடுத்துக் கொண்டால், அதில் 6 ஜெனரிக் மருந்துகள் கலந்திருக்கின்றன. இனி, இந்த ஒரு மாத்திரையை மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும் என்றால், 6 மருந்துகளின் பெயரை அவர் எழுத வேண்டும்.

7. இதற்கு ஒரு நல்ல தீர்வையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, மருத்துவர் தான் பரிந்துரைக்கும் ஜெனரிக் பெயர்களுடன், பிராண்ட் பெயரையும் குறிப்பிடலாம். நோயாளி, மருந்துக் கடையில் அதனை குறிப்பிட்டு, ஒரு வேளை அந்த மருந்து அவரால் வாங்க இயலாததாக இருந்தால், வேறு பிராண்ட்டில் இருக்கும் குறைந்த விலை மருந்தை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

விளக்கத்துக்கான காரணம்..

ஏழைகளுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்கும் வகையில் 'ஜெனரிக்' மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பெரு நிறுவனங்களால் 'பிராண்ட்' பெயர்களில் தயாரிக்கப்படும் மருந்துகளைவிட பல மடங்கு குறைவான விலையில், ஆனால் அதற்கு இணையான தரத்தில் 'ஜெனரிக்' மருந்துகள் (அடிப்படை மூலக்கூறு மருந்துகள்) கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நோயாளிகள் குறைந்த விலையில் தரமான மருந்துகளைப் பெற முடியும்.

ரூ.400 கோடியில் மருத்துவமனை: குஜராத் மாநிலம் சூரத்தில் தொண்டு அமைப்பு சார்பில் ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்ட 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வு மையத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்த மோடி இது குறித்துப் பேசியதாவது:

சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் அரசு புதிய சுகாதாரக் கொள்கையைக் கொண்டு வந்து மருந்துகள், இதய நோயாளிகளுக்குப் பொருத்தப்படும் 'ஸ்டென்ட்' சாதனம் ஆகியவற்றின் விலையைக் குறைத்து நிர்ணயித்தது. இதனால், மருந்துகளைத் தயாரிக்கும் பெருநிறுவனங்கள் சில எங்கள் அரசு மீது கோபம் கொண்டுள்ளன.

மக்கள் உருவாக்க வேண்டும்: நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழும் மக்கள், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். இந்த நாடு அரசர்களாலும், தலைவர்களாலும் உருவாக்கப்பட்டதல்ல, முழுவதும் மக்களால் உருவாக்கப்பட்டது. கிராமங்களில் கோசாலைகள் அரசால் உருவாக்கப்படவில்லை, மக்களால் உருவாக்கப்பட்டன. நூலகங்கள் பலவும் மக்களால் இணைந்து உருவாக்கப்பட்டவை. அதேபோல கிராமப்பகுதிகளில் மக்களே இணைந்து மருத்துவமனைகளை உருவாக்கி அவற்றை நடத்திவர வேண்டும்.

ஜெனரிக் மருந்துகள்: ஏழை எளிய மக்களுக்கு புரியாத வகையில் மருத்துவர்கள் மருந்துகளை எழுதிக் கொடுக்கின்றனர். மக்கள் தனியார் மருந்தகங்களுக்குச் சென்று அந்த மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.

இனி மருந்துவர்கள் 'ஜெனரிக்' மருந்துகளைத்தான் பரிந்துரைக்க வேண்டும் என்று விரைவில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரும். 'ஜெனரிக்' மருந்துகள்தான் ஏழை மக்கள் வாங்கும் வகையில் குறைவான விலையில் கிடைக்கின்றன.

மருந்துகளின் விலை: நமது நாட்டில் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் மருத்துவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளன. ஆனால், மருந்துகளின் விலை அதிகமாக உள்ளது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால், அவரது குடும்பத்தின் நிதிநிலை மோசமாக பாதிக்கப்படுகிறது. அவர்களால் வீடு வாங்க முடிவதில்லை. பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க கஷ்டப்படுகிறார்கள்.

புதிய சுகாதாரக் கொள்கை: குறைவான செலவில் அனைவருக்கும் மருத்துவ வசதி அளிக்க வேண்டியது இந்த அரசின் பொறுப்பு. சமீபத்தில் நாங்கள் புதிய சுகாதாரக் கொள்கையை அறிவித்தோம். இதற்கு முன்பு அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சியில்தான் சுகாதாரக் கொள்கை கொண்டு வரப்பட்டது. அதற்கு இடையில் எந்த மத்திய அரசும் மக்களின் சுகாதாரம், மருத்துவ விஷயத்தில் அக்கறை செலுத்தவில்லை.

என் மீது பலருக்கு கோபம்: முன்பு நான் குஜராத் முதல்வராக இருந்தபோது எடுத்த முடிவுகளால் பலரது கோபத்துக்கு ஆளானேன். இப்போது, தில்லிக்கு சென்ற (பிரதமரான) பிறகு மக்கள் நலனுக்கான எனது பணிகளால் சிலருக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.

மிக அதிக லாபமாக ரூ.1200-க்கு விற்கப்பட்டு வந்த ஊசி மருந்து விலையை, மக்கள் நலன் கருதி ரூ.700ஆக குறைத்து நிர்ணயித்தோம். இதனால் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசின் மீது கோபத்தில் உள்ளன. இதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் 'ஸ்டென்ட்' சாதனத்தின் விலையையும் குறைத்துள்ளோம். இது, அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு தரமான மருத்துவ வசதி, நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

வருமுன் காப்போம்: பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள மருந்தகங்களில் மக்கள் குறைந்த விலையில் 'ஜெனரிக்' மருந்துகளை வாங்க முடியும். நோய்களைத் தடுக்க மக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நோய் வருமுன் காப்பது மிகவும் முக்கியமானது. எனவேதான் தூய்மை இந்தியா போன்ற திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. யோகப் பயிற்சிகளை முறையாகச் செய்வதன் மூலமும் பல்வேறு நோய்களில் இருந்த நம்மைக் காத்துக் கொள்ள முடியும் என்றார் மோடி.

வைர மையம் திறப்பு: சூரத் நகைக்கடையில் வைரத்தை பட்டை தீட்டும் மையத்தையும் மோடி தொடக்கி வைத்தார். அப்போது, 'இந்தியாவில் தங்க நகை தயாரிப்பு, வைர ஏற்றுமதித் தொழிலில் சூரத் முன்னிலை வகிக்கிறது. இங்கு வடிவமைக்கப்படும் நகைகள் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ளன. இது நமது நகைத் தொழிலாளர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி' என்று மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com