மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை - தீர்வை முன்வைக்கிறது தொழில்நுட்ப வல்லுநர் குழு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து வந்தாலும், சமீபகாலமாக அது உத்வேகம் எடுத்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை - தீர்வை முன்வைக்கிறது தொழில்நுட்ப வல்லுநர் குழு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து வந்தாலும், சமீபகாலமாக அது உத்வேகம் எடுத்துள்ளது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் வாக்காளார்கள் நாம் வாக்களித்த வேட்பாளருக்குத்தான் வாக்கு போய் சேர்ந்ததா என்பதில் ஐயம் இருக்கக்கூடாது. அதை உறுதி செய்வது தேர்தல் ஆணையத்தின் கடமையுமாகும்.

தேர்தல் ஆணையம் இது குறித்து விளக்கம் அளித்து வருகிறது. நம்பகத்தன்மையை ஏற்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு முக்கிய நிலை, ஒரு வாக்காளர் தனது வாக்கைப் பதிவு  செய்தவுடன் அவர் வாக்களித்த வேட்பாளரின் சின்னம் வாக்கு எந்திரத்தோடு இணைக்கப்பட்டுள்ள VVPAT சாதனத்தில் உள்ள சீட்டில் பிரிண்ட் செய்யப்பட்டு, கண்ணாடி இடைவெளி வழியே வாக்களித்தவர் பார்த்து உறுதி செய்தி கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரிண்ட் ஆன சீட்டு துண்டிக்கப்பட்டு உள்ளே உள்ள பெட்டியில் விழும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி மட்டுமே இந்த பெட்டியை கையாள முடியும். மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது, இந்த பெட்டியில் உள்ள சீட்டுகளையும், வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் பதிவான வாக்குளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் தவறு நடக்க வாய்ப்பில்லை என்கிற விளக்கத்தை தேர்தல் ஆணையம் அளிக்கிறது. வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள மென்பொருளால், ஒரு வாக்காளர் பதிவு செய்த சின்னத்தை சீட்டில் பிரிண்ட்  செய்துவிட்டு, வாக்கு எந்திரத்தில் உள்ள தகவலில் வேறு ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு பதியும்படி செய்ய முடியும் என்கிற ஐயப்பாடு இதன் மூலம் நீங்கும் என நம்புகிறது.

ஆனால் இதுவும் முழுமையான தீர்வாக அமையாது. 

வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள மென்பொருளால், ஒரு வாக்காளர் பதிவு செய்த சின்னத்தை சீட்டில் பிரிண்ட்  செய்துவிட்டு, வாக்கு எந்திரத்தில் உள்ள தகவலில் வேறு ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு பதியும்படி செய்ய முடியும் என்பது இருக்கும்போது, அதே மென்பொருளால், வாக்குப் பதிவு முடிந்தவுடன், வாக்குப்பதிவு எந்திரத்தில் எவ்விதமாக இறுதியில் வாக்குகள் பதிவாயிருக்கிறதோ, அதன் அடிப்படையில் இன்னொருமுறை பிரிண்ட் செய்து VVPAT பெட்டியில் ஏற்கனவே இருக்கும் சீட்டுகளை நீக்கிவிட்டு, இப்போது பிரிண்ட் ஆன சீட்டுகளை நிரப்பிவிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதை சில நிமிடங்களிலேயே செய்து விட முடியும். இன்னொன்று, முன் மாதிரி இல்லாமல், பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதால், ஆரம்ப கட்டத்தில் தேர்தல்  நடந்த வாக்கு எந்திரங்கள் பலநாட்களாக பாதுகாப்பில் வைக்கப்படும் நிலை உள்ளது. இந்த இடைவெளி, மக்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அரசு நினைத்தால் எதையும் செய்ய முடியும் என மக்கள் நம்புவதால், இந்த சந்தேகம் வருவது இயல்பு.

இந்த ஐயங்களை போக்கி, மக்கள் நம்பிக்கையுடன் வாக்களிக்க செய்வதற்கு முன்வைக்கப்படும் தீர்வு: 

ஒரு வாக்காளர் வாக்களித்தவுடன் VVPAT-ல் பிரின்ட் செய்யப்பட்ட சீட்டின் நகல் (அவர் வாக்களித்த சின்னம், பூத் எண், வாக்கு எந்திர எண் மற்றும் அவர் பதிவு செய்த வரிசை எண் போன்ற தகவல்கள் அடங்கியது) வாக்காளருக்கு வழங்கப்படுமேயானால், அது வாக்காளர்கள் மத்தியில் இருக்கும் அனைத்து சந்தேகங்களையும் தீர்க்கும்விதமாக அமையும். மேலும், இந்த அணுகுமுறை வாக்குக்குப் பணம் கொடுக்கும் / வாங்கும் நிலைமை தவிர்க்கவும் துணைபுரியும்.

செயல்படும் விதம்

தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், பெரும்பாலும் தோல்வியுற்ற வாக்காளர்களிடம் வரும் இயல்பான சந்தேகம் ஏதோ தவறு நடந்திருக்கிறது. அதிலும், குறிப்பாக அவர்கள் அதிகம் வாக்குகள் பெறுவோம் என்று எதிர்பார்த்த சில ஏரியாக்களில் அல்லது பூத்களில் குறைவான வாக்குகளை பெற்றிருப்பார்களேயானால் சந்தேகம் வலுக்கும். 

இந்நிலையில், ஒரு தொகுதியில் 100 வாக்குச்சாவடிகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். வேட்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட சதவிகத்தின் அடிப்படையில் (உதாரணத்திற்கு மொத்த வாக்கு எந்திரங்களின் எண்ணிக்கையில்   ஐந்து சதவிகிதம்) , அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாக்கு எந்திரங்களை பரிசீலனைக்கு உட்படுத்தும் வாய்ப்பை வழங்குதல். இன்னும் நம்பகத்தன்மை வேண்டும் என்றால், தேர்தல் நடத்தும் அதிகாரியும் தன் பங்கிற்கு, குலுக்கல் முறையில் சில வாக்கு எந்திரங்களை தேர்ந்தெடுக்கலாம்.

நடுநிலையான வாக்காளர்களை விட, கட்சி சார்ந்த வாக்காளர்கள், குறிப்பாக தோற்ற கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு வேகம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்கு எந்திரங்கள் இருந்த வாக்குச்சாவடிகளைச்  சேர்ந்த, விருப்பப்பட்ட வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்தபோது வாக்கு எந்திரம் தந்த சீட்டுகளில் உள்ள வரிசை எண்ணையும், வாக்கு எந்திரம் பதிவுசெய்து வைத்திருக்கும் வரிசை எண்ணிற்கான வாக்கினையும் ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் வாக்கு எந்திரத்தின் செயல்பாட்டை சரிசெய்து பார்த்து விடலாம். நடுநிலை வாக்காளர்கள் விரும்பினாலும் பங்கு பெறலாம்.  

உதாரணத்திற்கு  ஒரு வாக்காளருக்கு வாக்கு எந்திரம் வழங்கிய சீட்டில் வரிசை எண் 56 , சின்னம் சுத்தியல் என்று வைத்துக்கொள்வோம். வாக்கு எந்திரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வாக்குகளின் வரிசையில் 56 -ல் சுத்தியல் சின்னம் இருக்க வேண்டும். மாறி இருக்குமேயானால், எந்திரம் தவறானது என்பது நிரூபணமாகும்.

பலன்கள்

1. வாக்குப்பதிவு எந்திரத்தில் தனது வாக்கு, தான் வாக்களித்த வேட்பாளருக்குத்தான் பதிவாயிருக்கிறதா என்பதை சரிபார்க்கும் ஆதாரம் தன்னிடம் இருக்கிறது என்கிற நம்பிக்கை. 

2. வாக்களிப்பதற்கு வேட்பாளர்கள் தேர்தலுக்கு பணம் வழங்குகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இன்று மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஒரு வாக்காளருக்கு  இரண்டு, மூன்று வேட்பாளர்கள் கூட பணம் தரும் நிலை இருக்கிறது. ஏன் எனில், தற்போதைய முறையில் அவர் யாருக்கு வாக்களிக்கிறார் என்பதை வேட்பாளர்கள் கண்டுகொள்ள முடியாது.  ஒரு வாக்காளர் தனக்குத்தான் வாக்களிக்கப்போகின்றாரா, அல்லது பணம் கொடுக்காத ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கப்போகின்றாரா என்று அறிய முடியாத நிலையிலும்  வாக்காளர் வாக்களிக்கும் முன் அவரை கவர முயற்சிக்கிறார்கள்.  

3. இப்போது நாம் முன்வைக்கும் முறை அமலுக்கு வந்தால், வாக்களிப்பதற்கு முன் பணம் கொடுப்பது குறையும் அல்லது தவிர்க்கப்படும். வாக்களித்துவிட்டு, சீட்டைக்காட்டி பணம் வாங்கிக்கொள்ளலாம் என்கிற அணுகுமுறைக்கு இட்டுச்செல்லும்.  வாக்குப்பதிவு முடிந்தவுடன், வேட்பாளர்களின் தங்கள் அனுமானப்படி வெற்றி பெறுவோமா இல்லையா என்பது பற்றிய ஒருநிலைப்பாட்டிற்கு வருவார்கள். அதன் பின், பணம் கொடுப்போமா  வேண்டாமா,  என்கிற முடிவில் மாற்றம் வர நிறைய வாய்ப்பு  இருக்கிறது.
 
4.      வீட்டிற்கு வந்து பணம் கொடுப்பதால், எத்தனை வேட்பாளர்கள் வந்து பணம் கொடுத்தாலும் நடுநிலை வாக்காளர்கள் கூட வாங்கிக்கொள்ளும் சூழ்நிலை உள்ளது. ஆனால், தேர்தல் முடிந்தவுடன், தானே அவர்களிடம் சென்று,  ஒப்புகைச் சீட்டைக்காட்டி பணம் வாங்கிக் கொள்வதில் தயக்கம் காட்டுவார்கள். மேலும், தான் இவருக்குத்தான் வாக்களித்தேன் என்பது வெளியில் தெரியும் வாய்ப்பு இருப்பதால் மற்ற வாக்காளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்கிற பயமும் வரலாம்.
 
5. மொத்தத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது மற்றும் வாங்குவது என்கிற மனப்பான்மையில் தடுமாற்றம் வருவதற்கு இந்த அணுகுமுறை துணைபுரியும், விரைவில் இந்த பழக்கம் நீங்குவதற்கு வழிவகுக்கும்.

6. இந்த அணுகு முறையில் வேட்பாளர்கள், யாருக்கு வாக்களித்தாய் எனக் காண்பிக்கக்கோரி வாக்காளரை மிரட்ட வாய்ப்புண்டு என்கிற வாதம் வரலாம். அது தேவையற்றது. இப்போதும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பலர் வாக்களித்தவுடன், ஊடகங்களுக்கு தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை கூறுகின்றார்கள். அப்படியே மிரட்டினாலும், எத்தனை பேரை மிரட்ட முடியம்? நாட்டில் சட்ட ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்படும்  நிலையில் பிரச்னை எழாது.

இது எளிமையான அணுகுமுறை. இந்திய ஜனநாயகத்தின் மேல் மக்களுக்கு உள்ள நம்பிக்கையை மேலும் வளர்க்கும், தேவையற்ற சந்தேகங்களை, ஐயப்பாடுகளை, விவாதங்களை தவிர்க்கும். 

தேர்தல் ஆணையம் இந்த அணுகுமுறையை ஏற்று, விரைவில் அமுல்படுத்துவதற்கு வேண்டுகின்றோம்.

Rm. திருச்செல்வம்
Mission IT-Rural
செல்பேசி எண் : 98403 74266

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com