மறந்துவிட்டீர்களா?

சமீபத்தில் மருத்துவர் அதுல் கவாண்டே எழுதி வெளிவந்த  Being Mortal என்ற புத்தகத்தை
மறந்துவிட்டீர்களா?

சமீபத்தில் மருத்துவர் அதுல் கவாண்டே எழுதி வெளிவந்த  Being Mortal என்ற புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்திருந்தேன். இந்த நூல், கர்ணன் மகாபாரதத்தில் சொன்ன ஒரு வாக்கியத்தோடு தொடங்குகிறது.

      I see it now
      This world is swiftly passing.

இந்த வார்த்தைகளைப் படித்த பின்பு என் மனம் புத்தகத்தில் லயிக்கவில்லை. அந்த வார்த்தைகளையே சுற்றியது.  நான் இப்பொழுது காண்கிறேன் இந்த உலகம் வேகமாக நகர்வதை. காலம் நகர்வது கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் ஒரு தருணத்தில் எல்லா நினைவுகளும் கூடிவிடுகின்றன..
 
கம்புயூட்டர் டிங் என்று ஒலி எழுப்பியது. மின்னஞ்சல் ஒன்று வந்து கிடந்தது. அக்டோபர் 21 வெங்கட் சாமிநாதன் காலமாகிவிட்டார். புத்தகத்தை மூடி வைத்து விட்டு. மனைவியிடம் செய்தியை சொன்னேன். என் மனைவி பெருமதிப்பு வைத்திருக்கும் எழுத்தாளர் அவர். அன்று ஒன்றுமே செய்யத் தோன்றவில்லை. அவர் நினைவாகவே இருந்தது.
 
கம்புயூட்டரில் தேடிப்பார்த்தேன். அவருடனான கடைசி கடிதப் போக்குவரத்து 2012ம் ஆண்டுடன் நின்றுவிட்டது. அந்த வருடம்தான் அவர் சென்னையை விட்டு மகனுடன் தங்க பெங்களூர் புறப்பட்டார் என்று நினைக்கிறேன். தன்னுடைய புதிய தொலைபேசி எண்களைத் தந்திருந்தார். அக்டோபர் 2, 2015 அன்று, மூன்று வருடங்கள் கழித்து, அவரிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. இதே மாதிரியான மின்னஞ்சலை வேறு நண்பர்களுக்கும் அனுப்பியிருந்தார் என்று பின்னர் அறிந்தேன். வழக்கமாக அவருடைய மின்னஞ்சலில் ஒரு முறைப்பாடு இருக்கும். இதிலே இரண்டு முறைப்பாடுகள் இருந்தன. 'திருமாவளவன் ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என்று செய்தி வந்திருக்கிறது. அவருடைய உடல் நிலை பற்றி ஒருவரும் எனக்கு எழுதவில்லை. ரொறொன்ரோ நண்பர்களை தொடர்பு கொள்வதிலும் சிரமமிருக்கிறது. யாராவது அவரைப்பற்றிய செய்தியை சொல்லுங்கள்.’ இரண்டாவது முறைப்பாடு ஜிமெயிலைப் பற்றியது.  'அவர்கள் செயல்முறையை மாற்றிவிட்டார்கள். எப்படி தேடுவது என்று தெரியவில்லை’. இப்படி எழுதியிருந்தார்.
 
நான் அப்பொழுது பொஸ்டனில் இருந்தேன். என் மனைவியின் அறுவை சிகிச்சை அக்டோபர் 2 அன்றுதான் நடந்தது. அதனால் உடனேயே பதில் போடமுடியவில்லை. ரொறொன்ரோ நண்பர்களைத் தொடர்புகொண்ட பின்னர் வெ.சாவுக்கு இப்படி எழுதினேன். ‘திருமாவளவனின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. பிழைப்பார் என்ற நம்பிக்கை இல்லை என அவர் பக்கத்திலிருக்கும் நண்பர்கள் சொல்கிறார்கள்.’ சில நாட்களில் திருமாவளவன் இறந்துபோனார். வெ.சா அந்தச் செய்தியை எப்படி எடுத்துக்கொண்டார் என்று தெரியவில்லை.  

வெ.சாவுடனான முதல் தொடர்பு எப்படி கிடைத்ததென்று இப்பொழுது யோசித்து பார்க்கிறேன். 'அக்கிரகாரத்தில் கழுதை’ என்ற திரைப்படப் பிரதி நூலைப் படித்தபோது எனக்கு கிடைத்த ஏற்பட்ட வியப்புக்கு அளவே இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள். புத்தகத்தின் நேர்த்தி. இரண்டாவது வெ.சாவின் நேர்மை. ஒருவருமே செய்யாத ஒரு காரியத்தை அவர் செய்திருந்தார்.

அந்தப் புத்தகம் வெளிவர முன்னர் அவருடன் நல்ல உறவு இல்லாத, கருத்து மோதல்களை பெரிதாக்கும் எழுத்தாள நண்பர்களைத் தேடிச் சென்று அவர்களிடம் நூலின் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து அவர்கள் அபிப்பிராயங்களை எழுதி நேரே பதிப்பாளருக்கு அனுப்பச் சொல்லி வெ.சா கேட்டுக்கொண்டிருந்தார். அந்த நண்பர்கள் தங்கள் கடிதங்களில் என்ன எழுதியிருப்பார்கள் என்பது வெ.சாவுக்கு தெரியாது. புத்தகம் வெளி வந்த பின்னரே அவரும் வாசகர்களோடு  அதைப் படித்து அறிந்து கொண்டார்.  அதிலே சிலகடிதங்கள் புத்தகத்தில் உள்ள குறைகளை பெரிதாக்கி விமர்சித்திருந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தன் சொந்தப் புத்தகத்தில் இத்தனை மோசமான விமர்சனங்களை சேர்த்திருக்கிறாரே இந்த மனிதர் என்று நினைத்தேன்.

பாதகமாக வந்த கடிதங்களை அவர்வெளியிடவேண்டிய அவசியமே இல்லை; ஆனாலும் வெ .சா துணிச்சலுடன் இணைத்திருந்தார். அவருடைய அந்த நேர்மை எனக்குப் பிடித்தது. அந்தப் புத்தகத்தை படித்த பின்னர் அவருக்கு முதல் கடிதம் எழுதினேன். அப்படித்தான் எங்கள் தொடர்பு ஏற்பட்டது என நினைக்கிறேன்.
 
இரண்டு பெரிய தமிழ் எழுத்தாளர்கள் கம்ப்யூட்டரில் எழுதத் தொடங்கியது. 2002, 2003 அளவில்தான். ஒன்று சுந்தர ராமசாமி, அடுத்தது வெங்கட் சாமிநாதன். இருவரும் ஆரம்பத்தில் மின்னஞ்சல்கள் எழுதி தங்கள் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொண்டது என்னுடன்தான். கலிஃபோர்னியாவில் சு.ரா தங்கியிருந்தபோது அவர் வீட்டுக்கு நான் மடிக்கணினியுடன் சென்று கம்ப்யூட்டரின் ஆச்சரியங்களை அவருக்கு காட்டினேன். சு.ரா சீக்கிரத்தில் மின்னஞ்சல் எழுதவும் கம்புயூட்டரில் கட்டுரைகள் படைக்கவும் ஆரம்பித்தார். வெ.சா பிரயாசைக்காரர். அதில் வேகமாக முன்னேறினார். நான் வெ.சாவுக்கு எழுதுவேன் சு.ரா எத்தனை அருமையாக கடிதங்கள் எழுதுகிறார் என்று. அதே சமயம் சு.ராவுக்கு வெ.சாவின் முன்னேற்றத்தை புகழ்ந்து தள்ளுவேன். இருவருக்குள்ளும் ஒரு ரகஸ்யப் போட்டி நடந்தது.
 
2003ம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதுவுக்கு வெ.சா தேர்வுசெய்யப்பட்டார். அந்த தகவலை நான் தொலைபேசியில் அவருக்கு தெரிவித்தபோது அவர் நம்பவே இல்லை. அது உண்மைதானா என்று திரும்பத் திரும்ப கேட்டு உறுதி செய்தார். 'இலக்கியக்காரருக்கு விருது கொடுப்பது வழக்கம். ஆனால் ஒருவருமே விமர்சகருக்கு விருது கொடுப்பதில்லையே’ என்றார். நான் ’உண்மைதான். எழுத்தாளர்களுக்கு சிலை வைத்திருக்கிறார்கள். விமர்சகருக்கு உலகத்தில் எந்த நாட்டிலும் சிலை கிடையாது. ஆனால் நாங்கள் அதை மாற்றுகிறோம்’ என்றேன். அவர் விடவில்லை. ‘என்னிலும் சிறந்த எழுத்தாளர்கள் உள்ளார்களே. என்னை ஏன் தெரிவுசெய்தீர்கள்?’என்றார்.

கனடா வந்தபோது ஒருமுறை ஸ்காபரோ வீடு ஒன்றின் வாசல்படியில் தடுக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்துவிட்டார். நாங்கள் பதறியபடி அவரை தூக்க ஓடினோம். சில மாதங்களுக்கு முன்னர்தான் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை நடந்திருந்தது. தானாகவே அவசரமாக எழும்பி உடையை தட்டிவிட்டு சொன்னார், ‘அடுத்த வருடமாவது காலில் இரும்பு பொருத்தாத எழுத்தாளரைக் கண்டுபிடித்து அவருக்கு விருது கொடுங்கள்.’
 
கனடா பயணத்திற்கான ஆயத்தங்கள் சம்பந்தமாக நீண்ட நீண்ட மின்னஞ்சல்கள் பரிமாறிக்கொண்டோம். அவருடைய ஒவ்வொரு கடிதமும் முறைப்பாடுடன்தான் ஆரம்பிக்கும். கடவுச்சீட்டு, விசா, விமான டிக்கட், மருத்துவக் காப்புறுதி என் ஒவ்வொன்றாகக் கடக்கவேண்டும். அவர் எழுப்பும் பல கேள்விகளுக்கு நான் பதில் எழுதியபடியே இருந்தேன். ஒருமுறை எரிச்சலில் இப்படி எழுதினார். ‘நீங்கள் ஒரே தடவையாக எல்லா விவரங்களையும் தருவது கிடையாது. ஒவ்வொன்றாகத் தருகிறீர்கள்.’ முழு விவரங்களையும் உடனேயே கொடுத்திருந்தால் அவர் தலை சுற்றியிருக்கும். 'ஐயா, விருது வேண்டாம். நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்’ என்று எழுதியிருப்பார்.
 
அவரை வரவேற்க விமான நிலையத்துக்கு நானும், பேராசிரியர் செல்வா கனகநாயகமும், செல்வமும், செழியனும் சென்றிருந்தோம். வரவேற்பு கூடத்தில் ஒவ்வொருவராக ஆட்கள் வெளியே வர அவர்கள் முகங்களை ஆராய்ந்துகொண்டு நின்றோம். எங்களில் ஒருவருக்கும் அவரை நேரில் தெரியாது. படத்தில் கண்டது தான். பெரிய தள்ளுவண்டியில் இரண்டு சூட்கேசுகளை அடுக்கி தள்ளியபடியே வெளியே வந்தார். மலர்கொத்து கொடுத்து வரவேற்றோம். குடிவரவில் ஏதாவது பிரச்சினையா என்று கேட்டபோது 'ரொறொன்ரோ பல்கலைக்கழகம் அனுப்பிய கடிதத்தை நீட்டினேன். அவர்கள் அதைத் திறந்து பார்க்கக்கூட இல்லை. வருக வருக என்று வரவேற்றார்கள்’என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com