ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்!

நம்முடைய தாய்மொழி மிகவும் முக்கியம், அதில்தான் நாம் எண்ணுகிறோம், பேசுகிறோம்,
ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்!

நம்முடைய தாய்மொழிதான் உலகிலேயே சிறந்தது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதில்தான் நாம் எண்ணுகிறோம், பேசுகிறோம், எழுதுகிறோம். ஆனால்  நம்மைச் சுற்றியுள்ள உலகம் சுருங்கிக் கொண்டே வருகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து நீங்கிய பின்பும் அந்த மொழி இன்னும் நம்மை ஆட்சி செய்து வருகிறது. என்னதான் நமக்கு அந்நிய மொழியானாலும், அந்த மொழியைப் பேச இனியும் நாம் தயங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தேவைக்காகவும், பிழைப்புவாதத்திற்காகவும் ஆங்கிலம் கற்காமல் உண்மையில் இன்னொரு மொழியறிவை வளர்த்துக் கொள்ள அதனை கற்றுக் கொள்ளுங்கள். ஒன்றை நேசித்து அதை நமதாக்கிக் கொண்டால்தான் அதன் மீது பிடிப்பு வரும். 

ஆங்கிலத்தின் சிறப்பு அதன் அழகான உச்சரிப்பு முறை, இலக்கியம், செறிவான மொழிநடை போன்றவை. அதனைத் தெரிந்து கொள்ள அந்த மொழியைக் கற்பதில் தவறில்லை. ஒவ்வொரு மொழியும் ஒரு உலகம். அதன் கதவுகளைத் தட்ட சிறிதளவேனும் அதை நாம் கற்றிருக்க வேண்டும். எளிதில் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ள அடிப்படையாக இந்த ஐந்து விஷயங்கள் உங்களுக்குப் பயன்படக்கூடும்.

படிக்கத் தொடங்குங்கள்

ஆங்கிலம் என்பது புலியோ கரடியோ அல்ல. பேசவும் எழுதவும் பயப்படுவதற்கு. அது சாதாரணமான இன்னொரு மொழி. இத்தனைக்கும் தமிழை விட மிகவும் எளிமையானது. 26 எழுத்துக்கள் மட்டுமே உள்ள ஒரு மொழியைக் கற்பதில் நமக்கு முக்கியமான தேவை ஆர்வம் மற்றும் விடாமுயற்சி மட்டுமே.

இந்த அணுகுமுறையை நினைவில் வைத்துக் கொண்டு முதல்படியாக ஆங்கிலப் புத்தகங்களை படிக்கத் தொடங்குங்கள். அய்யோ, நமக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லையே என்று வருத்தப்பட வேண்டாம்.  

முதலில் காமிக்ஸ் படிக்க ஆரம்பிக்கலாம். கார்ட்டூன், செல்ஃபோன் கேம்ஸ் இவைகளில் உள்ள ஆங்கிலம் எளிமையாகவும் அதே சமயம் வேகமாகவும் கற்றுக் கொள்ள உதவும். தினமும் ஆங்கில செய்தித்தாளைப் படிக்கத் தொடங்குங்கள். தினசரி படிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை பத்திரிகை அல்லது இணையதளம் என ஏதாவது ஒருவகையில் தினமும் சிறிது நேரம் கட்டாயம் ஆங்கிலத்தில் படித்துவிடுங்கள். முழுவதும் புரிகிறதோ இல்லையோ முதலில் அதன் வார்த்தைகளை, சொற் பிரயோகங்களை படித்துப் பழகுங்கள்.  

புதுப் புது வார்த்தைகளை கற்றுக் கொள்வதற்கும் இந்தப் பழக்கம் உதவும். அதன்பின் குறுநாவல், வாழ்க்கை வரலாறு, பத்திரிகைகள் என்று படிப்படியாக ஆங்கிலத்தை உங்கள் தினசரி வாழ்க்கைக்குள் கொண்டு வாருங்கள். சின்ன சின்ன வாக்கியங்களை எழுதவும் பேசவும் ஆரம்பித்து விடுங்கள். 

பேசுங்கள்...கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளுங்கள்

ஆங்கிலம் பேச விரும்புவர்களின் முதல் பிரச்னை தயக்கம். காரணம் தவறாக ஏதும் பேசி மற்றவர்கள் கேலி செய்துவிடுவார்களோ என்ற அச்சம். நீங்கள் பேச முடிவெடுத்தவுடன் மேடை ஏறிப் பேசப் போவதில்லையே. உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் நீங்கள் கூற விரும்பும் விஷயங்களை ஆங்கிலத்தில் சொல்லத் தொடங்குங்கள். தமிழில் தோன்றும் எண்ணவோட்டத்தை அங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பேசும்போது கால அவகாசம் தேவைதான். எனவே ஆங்கிலத்தில் சிந்தித்து ஆங்கிலத்தில் பேச முடியும் ஒரு நாள் வரும் வரையில், நீங்கள் நிதானமாகவே பேசலாம்.

ஒரு மொழியை எந்த அளவுக்கு நாம் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு அது நமக்கு வசப்படும். உங்கள் நண்பர்கள் அல்லது உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் எதாவது ஒரு தலைப்பில் மனம் திறந்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். நீங்கள் சமீபத்தில் தெரிந்து கொண்ட வார்த்தைகளை அதில் சேர்த்து பேசுங்கள். யூ ட்யூபில் ஆங்கில உரைகளைக் கேளுங்கள். ஹாலிவுட் திரைப்படங்களை சப் டைட்டில் இல்லாமல் பார்க்கத் தொடங்கினால் உச்சரிக்கும் முறையை கற்றுக் கொள்ளலாம்.

தவறுகள் செய்வதும் நல்லதுதான்

ஆங்கிலத்தில் ஓரளவு உரையாட இப்போது உங்களால் முடிகிறது என்ற நிலையில் ஏதாவது பேசும் போது இலக்கணப் பிழை அல்லது வார்த்தை பிரயோகத்தில் பிரச்னை ஏற்படலாம். அதற்காக மனம் உடைந்து, ச்சே இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று பின்வாங்காதீர்கள். இவ்வளவு தூரம் வந்துவிட்டுச் சட்டென்று நிறுத்திவிடாதீர்கள். தப்பாக பேச பேசத் தான் சரியாகப் பேச வரும்.

நீங்கள் தப்பாக பேசியதை உங்கள் நண்பர் திருத்தும்போது அதை மனத்தில் ஏற்றுக் கொண்டு மீண்டும் சரியாக பேசிப் பாருங்கள். மாறாக நமக்குச் சொல்லிக் கொடுப்பவர்களை, அவன் என்ன ஷேக்ஸ்பியரின் பக்கத்து வீடா, ரொம்ப அலட்டிக்கறானே, வேகமா பேசறான்னு திமிர் என்றெல்லாம் மனத்துக்குள் திட்டாமல் அவர்கள் கூறும் விஷயங்களை கவனித்து கடைபிடிக்கவேண்டும். உண்மையான அக்கறையுடன் தவறுகளை நீங்கள் திருத்திக் கொள்ளத் தொடங்கினால், அதன்பின் ஒரு போதும் நீங்கள் அந்த குறிப்பிட்ட வார்த்தையில் தவறு செய்ய மாட்டீர்கள். 

தன்னம்பிக்கையுடன் பேசுங்கள்

வாழ்க்கை என்பது வாழ்வதற்காகத்தான். அவநம்பிக்கையுடன் எந்த விஷயத்தை அணுகினாலும் அதில் வெற்றி கிடைக்காது. என்னால் முடியும், எனக்கு இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை, இதென்ன பெரிய கம்பசூத்திரமா என்ற மனப்பான்மையில் மனத்தை இலகுவாக வைத்திருந்து ஆங்கிலம் கற்கத் தொடங்குங்கள். இதற்கு நீங்கள் எந்த வழிமுறையைப் பின்பற்றப் போகிறீர்கள் என்பதைவிட எப்படி அதை செயலாக்கம் பெற வைக்கப் போகிறீர்கள் என்பதில் தான் உங்கள் உறுதியும் நிலைப்பாடும் உள்ளது.

ஆங்கில மொழியை நீங்கள் கற்றுக் கொள்ள விரும்பும் போது ஒடுங்கிப் போகாமல் அதை உரக்கப் பேசுங்கள். வாய்க்குள் முணுமுணுப்பது, தயக்கத்துடன் பின் வாங்குவது என்பதெல்லாம் தேவையே இல்லை. உங்கள் பிள்ளைகளின் ஆங்கிலப் பாடங்களை அவர்களுடன் படிக்கத் தொடங்குங்கள். இதில் எல்லாம் ஈகோ காட்டக் கூடாது. தகப்பன்சாமிகளாக நம் பிள்ளைகள் இருப்பதில் நமக்கு பெருமைதானே! அவர்களின் பள்ளிக்குச் செல்லும் போது ஆசிரியர்களுடன் ஆங்கிலத்தில் தன்னம்பிக்கையுடன் உரையாடத் தொடங்குங்கள். வெளியுலகில் பேச ஆரம்பித்தவுடன்தான் நமக்கே நம் மீது அதிக நம்பிக்கை ஏற்படும். 

பயிற்சி செய்யுங்கள்

ஒரு வாக்கியத்தை நீங்களே உருவாக்க பயிற்சி செய்யுங்கள். அதற்கு அடிப்படை நிறைய வார்த்தைகளை தெரிந்து கொள்வதுடன், சரளமாக அதைப் பேச்சிலும் பயன்படுத்துவதுதான். செய்தி வாசிப்பாளராக உங்களை கற்பனை செய்து கொண்டு, தினமும் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கச் செய்தியை கண்ணாடி முன்னால்  நின்று வாசிக்கத் தொடங்குங்கள். முதலில் இது அசெளரியமாகவும் சுய எள்ளலை உங்களுக்கே தோற்றுவிக்கலாம். ஆனால் எந்த ஒரு முயற்சியும் பயிற்சியால் மட்டுமே கைகூடும்.

கண்ணாடியின் முன் செய்யும் இந்தப் பயிற்சி உங்கள் தவறுகளை உங்களுக்குச் சுட்டிக் காட்டும். நாளாவட்டத்தில் உங்கள் உச்சரிப்பும் சொற்களை தகுந்த இடத்தில் பயன்படுத்தும் உத்தியும் வளரும்.

முயற்சி திருவினையாக்கும் என்பது நம் தமிழில் உள்ள அழகிய பழமொழி. இதையே ஆங்கிலத்தில் Practice makes a man perfect என்பார்கள். இப்படி ஒவ்வொரு மொழியிலும் உள்ள அதிசயங்களை, மொழி நுட்பங்களை ஆராய்ந்து தேடத் தொடங்கினால் ஆங்கிலம் மட்டுமல்ல நாம் விரும்பும் மொழி எதுவாக இருந்தாலும அதை இன்றே கற்கத் தொடங்கி விடுவோம். உண்மைதானே?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com