உலகப் புகழ்ப்பெற்ற ஓவியர் சால்வதார் டாலியின் மீசை உயிர்த்தெழுந்ததின் ரகசியம் என்ன?

2007-ஆம் வருடம் பிரபல ஓவியர் சால்வதார் டாலியின் வாரிசு நான் என உரிமை கோரி
உலகப் புகழ்ப்பெற்ற ஓவியர் சால்வதார் டாலியின் மீசை உயிர்த்தெழுந்ததின் ரகசியம் என்ன?

2007-ஆம் வருடம் பிரபல ஓவியர் சால்வதார் டாலியின் வாரிசு நான் என உரிமை கோரி மரியா பிலார் ஆபேல் மார்ட்டினெஸ் என்ற பெண்மணி வழக்கு ஒன்றினைத் ஸ்பெயின் நீதிமன்றத்தில் தொடுத்தார்.  இழுபறியாக இருந்து வரும் அவ்வழக்கில் திடீர் திருப்பமாக வழக்குக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத சுவாரஸ்யமான ஒரு விஷயம் ஸ்பெயின் மக்களின் கவனத்தைப் பெற்றது. அது என்ன?

சர்ரியலிச வகைமை ஓவியம் வரைவதில் புகழ்பெற்றவரான சல்வதார் டொமிங்கோ பிலிப்பெ ஜசிண்டோ டொமெனிக் (சுருக்கமாக சால்வதார் டாலி) 1989 ஆம் ஆண்டு இறந்தார். அவருடைய உடல் எம்பார்ம் (நறுமணம் ஊட்டி பதப்படுத்தப்படுவது) செய்யப்பட்டு, உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தனது காலத்தில் ஒப்புமைப்படுத்த முடியாத கலைஞராகத் திகழ்ந்த டாலி இறந்து கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அவருடைய புகழின் ஒரு அங்கமாக விளங்கிய மீசை இன்றும் ’கலை’யாமல் அப்படியே இருந்ததைப் பார்த்த அனைவரும் பெரும் வியப்படைந்துள்ளனர். 

இந்த வாரிசு வழக்கை விசாரிக்கும் ஸ்பானிஷ் நீதிபதியின் ஆணையின்படி, சால்வதார் டாலியின் உடலை, மரபணு சோதனைக்காக தடவியல் நிபுணர்கள் தோண்டி எடுத்துள்ளனர். நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, ஓவியர் டாலியின் பற்கள், எலும்புகள் மற்றும் நகங்களிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. அப்போது அவர் முகத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர் தடவியல் நிபுணர்கள். அழியாப் புகழ் பெற்ற டாலியின் மீசை அவரது முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அன்று பார்த்தது போல அப்படியே இருந்தது. சல்வதார் டாலி, தனது மீசையை மேல்நோக்கிச் செங்குத்தாக நிற்கும்படியாக வைத்துக் கொண்ட விதம் மிகவும் வித்தியாசமானது (டாலியின் மீசையை அடிப்படையாக வைத்தே 'இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி' திரைப்படத்தில் வடிவேலுவின் மீசை வடிவமைக்கப்பட்டது நினைவிருக்கலாம்). 

டாலியின் உடலை பதப்படுத்திய நார்சிஸ் பர்டாலெட் தனித்துவமான அம்மீசையைப் பற்றிக் கூறுகையில், ‘டாலியின் மீசை இன்றும் அப்படியே தான் இருக்கிறது. அவருக்குப் பிடித்த வகையில் கடிகார முள்ளின் பத்து பத்து மணித்திலாய வடிவத்தில் டாலி தன் மீசையை வைத்திருப்பார். இன்றளவும் அந்த மீசை கோலம் மாறாமால் அப்படியே இருப்பது அதிசயம்தான். அவரது முடியும் அப்படியே தான் உள்ளது. ஆனால் டாலியின் உடலைப் பொருத்தவரையில் பதப்படுத்திய 'மம்மி'யைப் போலத்தான் இருந்தது. வெகுகாலம் கழித்து அவரது முடியும் மீசையும் உள்ளபடி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.’என்றார். டாலி இறந்து இத்தனை வருடங்கள் கடந்த பின், அவரது மீசை தன் திசையை மாற்றிக் கொள்ளாமல் அதே எழிலுடன் இருந்ததைப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தார் பர்டாலெட்.

சல்வதார் டாலியின் வாழ்க்கை மற்றும் ஓவியங்களை வைத்து வடிவமைக்கப்பட்ட அருங்காட்சியகம் வடகிழக்கு ஸ்பெயினில் உள்ளது. அங்குள்ள நிலவறையில்தான் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது. மேற்சொன்ன வழக்கிற்கு தீர்வு காண்பதற்காக ஓவியரின் உடலை தோண்டி எடுக்க வேண்டும் என கடந்த மாதம் மேட்ரிட் நீதிபதி உத்தரவிட்டார். உலகப் புகழ்ப்பெற்ற ஓவியரான டாலியின் உடலை மீண்டும் பார்க்க அருங்காட்சியகத்தின் வெளியே மக்கள் திரளாகக் கூடியிருந்தனர். தடவியல் நிபுணர்களுக்கு பாதுகாப்பு அளித்த காவல்துறையினர், மக்களை அருங்காட்சியக கட்டடத்திற்குள் அனுமதித்தனர்.

டாலியின் உடலை தோண்டி எடுப்பது குறித்து போதிய முன் அறிவிப்பு வழங்கப்படவில்லை என உள்ளூர் அதிகாரிகளும், டாலியின் பெயர் கொண்ட அறக்கட்டளையினரும் ஆட்சேபணை தெரிவித்ததையும் மீறி இந்த மரபணு மாதிரி சேகரிக்கும் சோதனை நடைபெற்றுள்ளது.

வழக்கு தொடுத்த மரியா அபேலின் தரப்பில் தனது தாய்க்கும் ஓவியர் டாலிக்கும் தொடர்பு இருந்தது, 1956-ஆம் ஆண்டு தாம் பிறந்ததாகத் தெரிவித்துள்ளார். டாலிதான் அவருடைய உண்மையான தந்தை என தன் தாயும், பாட்டியும் கூறியிருக்கின்றனர் என்றார் மரியா. அவர் தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஜோசிய நிகழ்ச்சி (டாரட் அட்டை எனும் ஒரு வகை அதிர்ஷ்ட ஜோசியம்) வழங்கி வருகிறார்.

டாலியின் மனைவி காலா 1982-ஆம் ஆண்டு காலமானார். ஓவியர் டாலிக்கு வாரிசுகள் யாரும் இல்லை என்ற நிலையில், அவரின் எஸ்டேட்டை நிர்வகித்து வரும் டாலி அறக்கட்டளை இந்த வழக்குக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. டாலியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இயான் கிப்சன் கூறுகையில், `ஓவியர் டாலி ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்து, அதன் மூலம் அவர்களுக்கு குழந்தை பிறந்தது என்பது சாத்தியம் இல்லை காரணம் டாலியே ஒரு சமயம் 'நான் ஆண்மையற்றவன். நீங்கள் சிறந்த ஓவியராக இருக்க வேண்டுமானால், ஆண்மையற்றவராக இருக்க வேண்டும்’ என்று பெருமையாக தன்னிடம் தெரிவித்திருந்தார் என்றார் கிப்சன்.
 
மரபணு பரிசோதனை முடிவு இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதத்தில் வெளியிடப்படும் நிலையில் இந்த வாரிசுரிமை வழக்கு ஸ்பெயின் மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.  மரியா அபேல் டாலியின் மகள் என்று நிரூபணம் ஆகிவிட்டால் டாலியின் எஸ்டேட்டில் 25 சதவிகிதம் அவருக்குச் சொந்தமாகிவிடும். ஆனால் முடிவு என்னவாக இருந்தாலும் சரி மரியா அபேலின் மீது மான நஷ்ட வழக்கு தொடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர் எஸ்டேட்டை நிர்வகித்து வரும் அறக்கட்டளை அதிகாரிகள். டாலியின் புகழுக்கு இழுக்கு செய்யும்விதமாக நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானது, இதற்கான நஷ்ட ஈட்டினைத் திரும்பப் பெறுவோம் என்றும் கூறியுள்ளனர்.

வாழும் காலத்திலேயே சர்ரியலிசத்தின் முதன்மை கலைஞனாக வாழ்ந்து, அதே புகழுடன் மடிந்த சால்வதார் டாலி எனும் கலைஞன் அதே மீசையுடன் மீள் பிரவேசம் செய்தது ஒரு சர்ரியஸில காட்சியைப் போலவே இருந்தது என வியந்தோகின்றனர் அவரது இன்றைய ரசிகர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com