ஃபிட்ஜட் ஸ்பின்னர் - விற்பனையில் சாதனை படைக்கும் இது பெரியவர்களுக்கான பொம்மை!

உலகம் முழுவதிலும் சிறியவர், பெரியவர் எனப் பலரது கவனத்தை ஈர்த்த இந்த ஃபிட்ஜட் ஸ்பின்னர் விளையாட்டு பொருளைப் போன்ற வடிவத்தில் இருந்தாலும் உன்மையில் இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஒரு கருவி ஆகும். 
ஃபிட்ஜட் ஸ்பின்னர் - விற்பனையில் சாதனை படைக்கும் இது பெரியவர்களுக்கான பொம்மை!

உலகம் முழுவதிலும் சிறியவர், பெரியவர் எனப் பலரது கவனத்தை ஈர்த்த இந்த ஃபிட்ஜட் ஸ்பின்னர் விளையாட்டு பொருளைப் போன்ற வடிவத்தில் இருந்தாலும் உன்மையில் இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஒரு கருவி ஆகும். 

கடந்த சில மாதங்களாக கை விரல்களின் மத்தியில் அடங்கிவிடும் இந்தச் சிறிய பொம்மையை இந்தியா முழுவதிலும் பலரும் விரும்பி வாங்கிச் செல்வதாக, இதை விற்கும் கடை உரிமையாளர்கள் கூறுகிறார்கள். ஆன்லைன் விற்பனை வலைத்தளங்களிலும் அதிகம் வாங்கப்படுபவை பட்டியலில் இந்த ஃபிட்ஜட் ஸ்பின்னர் முன்னிலை வகிக்கின்றது. 

அப்படி என்னதான் உள்ளது இதில்? ஏன் பலர் இதற்கு அடிமையாகி இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன? 

முக்கோண அமைப்பில் மூன்று முனைகளைக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ள இந்தச் சிறிய கருவியை நமது கட்டைவிரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் இடையே வைத்துச் சுழற்ற வேண்டும். மின் விசிறியில் உள்ளது போல் இதில் இருக்கும் மூன்று றெக்கை போன்ற அமைப்பு இதை வேகமாகச் சுழல செய்கிறது. சுழற்சி ஏற்படும்போது அதிலிருந்து ஒரு மெல்லிய சத்தம் வருவதோடு சில ஸ்பின்னர்களில் வண்ண வண்ண மின் ஒளிகளும் அது சுழலும்போது மட்டும் எரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒலி, ஒளி மற்றும் சுழலும் விசை மனதிற்கு ஒரு இனிமையான உணர்வைத் தருவதாக இதைப் பயன்படுத்துவோர் கூறுகிறார்கள்.

ஆச்சரியம் என்னவென்றால் கோடி கணக்கான மக்களைத் தன்வசப்படுத்தி உள்ள இது சிறியவர்களை விடப் பெரியவர்களையே அதிகம் கவர்ந்துள்ளது. நம்மில் பலர் பதட்டமாக இருக்கும் பொழுதோ, யோசிக்கும் பொழுதோ, எதையாவது கூர்ந்து கவனிக்கும் பொழுதோ பேனாவின் மூடியைத் திறந்து திறந்து மூடுவது, காலை ஆட்டுவது, விரல்களில் நட்டு உடைப்பது போன்ற பல விஷயங்களை மேற்கொள்வோம். அதைப் போன்றதே இந்தக் கருவியை நமது விரல்களுக்கு இடையில் வைத்துச் சுழற்றுவதும். இது ஒரு விஷயத்தில் நம்மை நன்கு கவனம் செலுத்த அனுமதிப்பதோடு, நிதானமாக எதையும் யோசிக்கவும் ஒரு உந்துதலாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன் பயனை பற்றி உளவியலாளர்கள் கூறுகையில் இந்தக் கருவி முக்கியமாகக் கவனிப்பதில் பற்றாக்குறை உள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். கவலை மற்றும் மன இறுக்கம் அல்லது மன அழுத்தம் ஆகியவற்றால் அவதிப்படும் மக்கள் இதனால் பெரிதும் பயனடையலாம் என்றும் கூறப்படுகிறது. 

1993-ல் இருந்தே விற்பனையில் இருக்கும் இந்தக் கருவி, சமீப காலத்தில் பல பிரபலங்கள் இதனுடன் விளையாடுவதைப் பதிவு செய்து முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து இதன் மேல் பலருக்கும் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது என்றே கூறலாம். தொடர்ச்சியாக விற்பனையில் சாதனை படைத்துவரும் இதற்குப் பலர் அடிமையாகிவிட்டார்கள் என்பதே கவலைக்குரிய ஒன்று. அறிவியல் முன்னேற்றத்தால் ஏற்படும் பல மாற்றங்களும் மனிதர்களை அதன் மேல் மோகம் ஏற்பட்டு அடிமையாக்கித்தான் விடுகிறது. ‘பிரகாசமாக எரியும் விளக்கின் ஒளியில் விட்டில் பூச்சிகள் விழுந்து இறந்து போனால் அது விளக்கின் குற்றமல்ல, விட்டில் பூச்சியின் அறியாமை’ என்று கூறுவது போலத் தனது புலன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் ஒரு விஷயத்திற்கு அடிமையாகித் தானாகவே அழிவைத் தேடிக்கொள்வதும் அறியாமையே. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com