சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் ஏன் வேண்டாம்? ஒரு ஆய்வு

இந்தச் சாலை மறக்காமல் மலைகளைத் தொட்டுக்கொண்டு ஓடுவதில் இருக்கும் மர்மமென்ன? இது விரைவான பயணத்துக்கான சாலையல்ல.
சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் ஏன் வேண்டாம்? ஒரு ஆய்வு

சேலம் எட்டு வழிச் சாலை ஏன் வேண்டும் என்பது குறித்த சில தகவல்களோடு மருத்துவர் அருணாசலம் எழுதிய கட்டுரை இங்கு பதிவிடப்பட்டிருந்தது.

அந்தக் கட்டுரைக்கு, பதில் அளிக்கும் வகையில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஆய்வுப் பிரிவு அனுப்பியுள்ள கட்டுரை இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

இனி கட்டுரையைப் பார்ப்போம், 

தினமணி இணையதளத்தில், எட்டு வழிச்சாலைக்கு ஆதரவாக ஒரு கட்டுரை வெளியானது. சென்னை - சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டம் ஏன் வேண்டும்? ஓர் அலசல்  அந்த கட்டுரைக்கான பதிலே இந்த சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் ஏன் வேண்டாம் - ஓர் ஆய்வுக் கட்டுரை.

எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஆய்வுப் பிரிவின் சார்பில் இத்திட்டத்தின் பாதக அம்சங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

சீனா சாலைகளால்தான் முன்னேறியதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. சீனா சாலைகளினாலா முன்னேறியது? முதலில் சீனா தனது நாட்டில் விவசாய உற்பத்தியில் தன்னிறைவை எட்டியது. அதற்காக அவர்கள் நடத்திய விவசாயப் புரட்சியில் அனைத்து சலுகைகளையும், மானியங்களையும் விவசாயிகளுக்கு அளித்து உணவு உற்பத்தியின் உச்சத்தையே தொட்டார்கள். இதைப் போலத்தான் மற்ற முன்னேறிய நாடுகளும். அவை சாலைகளால் முன்னேறவில்லை. மாறாக, விவசாயத்தை முதலில் முன்னேற்றி - அழித்தல்ல -  அந்த விவசாய உற்பத்திப் பொருட்களைக் கொண்டுசெல்ல மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகளை ஏற்படுத்திக்கொண்டார்கள். உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடையாமல் சாலை வசதிகளை மட்டும் ஏற்படுத்திக்கொள்வதென்பது காசநோய்க்காரனுக்கு கோட்டு சூட்டு போடுவதுபோல. 

சிங்கப்பூரின் கதை தனி. அங்கு உணவு உற்பத்தி ஒப்பீட்டளவில் குறைவு. அதனால் அங்கு உணவு இறக்குமதிக்காக சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. சென்னைத் துறைமுகத்திலிருந்து ஶ்ரீபெரும்புதூரில் அமைய வேண்டிய தொழிற்சாலைகள் ஆந்திராவுக்குச் சென்றதால், மிகக் குறுகிய காலத்தில் அங்கு ஏராளமான  தொழிற்சாலைகள் அங்கு அமைக்கப்பட்டதாம். அப்படியென்றால், ஆந்திராவில் தொழில்வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதா? அதையும் இங்கு பார்த்துவிடலாம். 2017-ல் தமிழகத்தின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.15.96 லட்சம் கோடி.  (இந்திய அளவில் இரண்டாமிடம்). ஆந்திராவிலோ ரூ.14.96 லட்சம் கோடி (ஏழாவது இடம்). தமிழகத்தின் தொழில்துறையின் வளர்ச்சி 34%. ஆந்திராவிலோ தொழிற்சாலை வளர்ச்சி 22%. உங்கள் சாலைகள் எந்த வளர்ச்சியையும் கொண்டுவரவில்லை என்பது இப்போது தெரிகிறதா?  

தமிழகத்தின் விளைநிலங்களில் 5 லட்சம் ஹெக்டேர்கள் குறைந்துவிட்டதாகவும், அதனால் 11-வது ஐந்தாண்டுத் திட்டம் (2007-12) முடிவு செய்திருந்த 2 சதவீத வளர்ச்சியை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகள் எட்டமுடியாமல் வெறும் 0.69 சதவீத வளர்ச்சியையே எட்டியதாகவும், திட்டக் கமிஷன் 2011-ல் அளித்த அறிக்கையில் கூறியது. இந்தச் சூழலில், ஏற்கெனவே இருக்கும் மூன்று சாலைகளை அகலப்படுத்தாமல், விளைநிலங்களை விழுங்கித்தான் இந்த எட்டு வழிச்சாலையைப் போடுவேன் என்று அரசு அடம்பிடிப்பது யார் நன்மைக்கென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 

இந்தச் சாலை ஓர் ஊதாரித்தனம். பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலங்களை அழித்து, வாழ்வாதாரங்களை ஒழித்து, நீர்நிலைகளைச் சூறையாடி, மலைகளைக் குடைந்து, மேய்ச்சல் நிலங்களைத் தார்ரோடாக்கி, மரங்களை அழித்து, காட்டு விலங்குகளின் வாழ்விடங்களை, வழித்தடங்களைக் காணாமல் ஆக்கி, இயற்கையின் சமன்நிலையை ஒழித்துக்கட்டும் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மட்டுமன்றி அவற்றைச் சுற்றியுள்ள மாவட்ட மக்களும் பயன்பெறுவர் என்று சிலர் எப்படிச் சொல்கிறார்கள் என்பது அப்பாவி விவசாயிகளுக்குப் புரியவில்லை. 

இந்த வளர்ச்சி யாருக்கானது? அனைத்து மக்களுக்குமா? அல்லது குறிப்பிட்ட சிலருக்கா என்ற கேள்வியை வாசகர்களிடமே விட்டுவிடலாம். 

நாட்டு வளர்ச்சிக்காக விவசாயிகள் தியாகங்கள் செய்ய வேண்டும் என்கிறார்கள். குறைந்தபட்ச ஆதார விலையை அனைத்து விளைபொருள்களுக்கும் அரசு நியமித்தாலும், அது வெறும் ஏட்டளவில்தான் இருக்கிறது. தனது விளைச்சல்களை அரசு நியமித்த குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாக விற்று தினமும் தாம் போட்ட முதலையே விவசாயிகள் இந்த நாட்டு மக்களுக்காகத் தியாகம் செய்வதோடு, கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்து தங்களது இன்னுயிரையும் தியாகம் செய்வது இந்த அரசுகளுக்குப் பத்தாதா? 

சர்தார் சரோவர் அணைத் திட்டத்தால் அடைந்ததைவிட இழந்தது அதிகம் என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்த நாட்டுக்காக என்று அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தெருக்களில் அநாதைகளாகத் திரிகிறார்கள். சரி இந்த அணைத் திட்டத்தால் பெருவாரியான மக்களாவது பயன்பட்டிருக்கிறார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை. அணையால் இழந்தது அதிகமா? அல்லது பெற்றது அதிகமா? என்று பார்த்தால், இந்திய மக்கள் இழந்ததுதான் அதிகம். 

வழங்கப்படும் இழப்பீடு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் என்று சொல்பவர்களுக்கெல்லாம் கேள்வியொன்றை கேட்க விரும்புகிறோம். உதாரணமாக, தென்னை ஒன்றுக்கு முதலமைச்சர் ரூ. 40000, சேலம் ஆட்சியர் ரூ.50000, திருவண்ணாமலை ஆட்சியர் ரூ.60000, கிருஷ்ணகிரி ஆட்சியர் ரூ.28000-மும் தருவதாக அறிவித்துள்ளார்கள். தென்னை மரத்துக்கே இழப்பீடு பற்றி ஒத்த கருத்தில்லாமல் ஆளுக்கொரு விலையாக அறிவிக்கும் இந்த ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், இழப்பீடு பற்றி உண்மையாக இருக்கிறார்கள் என்று சொன்னால் சிரிப்புதான் வருகிறது. 

இந்த எட்டு வழிச்சாலை விளைநிலங்களுக்குக் குறுக்காக ஓடுவதால் விளைநிலங்களும், கிராமங்களும் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. இரண்டாகப் பிரிக்கப்படும் நிலங்களுக்கு ஒற்றைக் கிணற்றிலிருந்து எட்டு வழிச்சாலையைத் தாண்டி பாசனத்துக்கு தண்ணீர் எப்படி கொண்டுசெல்ல முடியும்? கட்டுமானத்துக்கான சிமெண்ட் போன்ற கலவைப் பொருள்களால் அக்கம் பக்கத்தில் இருக்கும் நிலங்களில் சில ஆண்டுகளுக்கு விவசாயம் செய்யமுடியாதே, அதை அரசு கணக்கில் எடுத்ததா? 

மலைகளைக் குடைவதால் ஏற்படும் இயற்கை சமநிலை மாற்றம், கிழக்குத் தொடர்ச்சி மலைக்கு ஊடாக ஓடும் சாலையால் ஏற்படும் பாதிப்புகள், விலங்குகள் இடப்பெயர்ச்சி போன்றவை விவசாயத்தின் பேரழிவுக்கான அபாயமணி இல்லையா? ஏற்கெனவே தவழ்ந்துகொண்டிருக்கும் உணவு உற்பத்தி இன்னும் சரிவைச் சந்திக்காதா? இதெல்லாம்கூட பரவாயில்லை. வெறும் 9% சதவீத மக்கள்தான் எதிர்க்கிறார்கள் என்று கூசாமல் பொய்யுரைக்கிறார் நமது முதல்வர்.  அப்படியெனில், காவல் துறை உதவி இல்லாமல் ஒரு கிராமத்திலாவது நிலத்தை அரசுப் பரிவாரங்கள் கையகப்படுத்தியிருக்கிறார்களா? 

இந்தத் திட்டம் பெருவாரியான மக்களுக்கானதல்ல; மாறாக ஒரு சிலர் பயன்பெறுவதற்கானது என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியும். இருக்கும் சாலைகளை விரிவுபடுத்துவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை? ஏன் இந்த எட்டு வழிச்சாலையின் மீது இவ்வளவு ஆர்வம்? இந்த ‘பசுமைச்சாலை’ ஏதோ தன்னந்தனியாகப் போவதுபோல் படம் காட்டுகிறார்கள். ஆனால், இந்தச் சாலை ஏற்கெனவே இருக்கும் சாலைகளின் மீது குறுக்கும் நெடுக்குமாகப் பலமுறை ஓடுகிறது. அப்படி ஓடுகையில், ஏற்கெனவே இருக்கும் சாலைகளை விரிவுபடுத்துவதில் தீங்கென்ன? அதுமட்டுமல்லாமல், இந்தச் சாலை மறக்காமல் மலைகளைத் தொட்டுக்கொண்டு ஓடுவதில் இருக்கும் மர்மமென்ன? இது விரைவான பயணத்துக்கான சாலையல்ல. மாறாக, தமிழக விவசாயத்தின் முதுகெலும்பை முறிக்கும்; தமிழகத்தின் தனிநபர் வருமானத்தை அழிக்கும்; விவசாய உற்பத்தியை பாதாள குழிக்குள் தள்ளும் மரணப் பாதை. 

தமிழகத்துக்கு எதிரான இந்த மரணப்பாதைக்கு விவசாயிகள் துணை நிற்கமாட்டார்கள். ஏனெனில், இது எங்கள் மண்; எங்களின் சொந்த மண்.  

- ஆய்வுப் பிரிவு, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com