வைகோ அவர்களே! ஏழு பேர் விடுதலைக்கு சிக்கலை ஏற்படுத்தாதீர்கள்!!

மூன்று நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் மாளிகை முன்பு ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி தடையை மீறி போராட்டம் நடந்தது.
வைகோ அவர்களே! ஏழு பேர் விடுதலைக்கு சிக்கலை ஏற்படுத்தாதீர்கள்!!

மூன்று நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் மாளிகை முன்பு ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி தடையை மீறி போராட்டம் நடந்தது. இதை முன்னின்று நடத்தியவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. இந்த போராட்டத்தின் போது 687 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

‘உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பின் காரணமாக, ஏழு பேரை விடுதலை செய்ய, ஒப்புக்கு ஒரு தீர்மானம் போட்டதைத் தவிர அவர்களை விடுதலை செய்வதற்கான எந்த முயற்சியிலும் அதிமுக அரசு ஈடுபடவில்லை. ஏழு பேரையும் விடுதலை செய்யும்வரை எங்களுடைய போராட்டம் தொடரும். திமுக மற்றும் ஆதரவு கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இந்தப் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும்', என்று பேசினார் வைகோ.

அவர்களை விடுதலை செய்யாமல் ஆளுநர் அடம்பிடிக்கிறார். எனவே எங்களுடைய அடுத்தக்கட்ட போராட்டம் ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும். ஆளுநர் மாளிகையை காலிசெய்ய வேண்டும் என்பதாக இருக்கும் என்று திருமாவளவன் பேசியிருக்கிறார்.

‘கவர்னர் தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டார். அதனால் அந்தப் பதவியில் தொடர்வதற்கான தார்மீக உரிமையை அவர் இழந்துவிட்டார்', என்று பேசியிருக்கிறார் கி. வீரமணி.

தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக்கதையை தெரிந்து கொள்வோம்.

ஒரு மான் தன் குட்டியுடன் காட்டில் மேய்ந்து கொண்டிருந்தது. அங்குவந்த ஒரு சிங்கம் மானை துரத்தியது. மான் ஓடி மறைந்தது. குட்டி மாட்டிக்கொண்டது. குட்டியை தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றது சிங்கம். குட்டியுடன் பேசியது.

‘மான் குட்டியே எனக்கு பசிக்கிறது! உன்னை சாப்பிடப்போகிறேன்', என்றது.

‘எனக்கும் பசிக்கிறது. அதனால் நீ என்னை முதலில் சாப்பிடு. பிறகு நான் உன்னை சாப்பிடுகிறேன்', என்றது குட்டி அப்பாவியாக.

மான் குட்டியின் அப்பாவித்தனத்தைப் பார்த்து சிரித்தது சிங்கம். மீண்டும் குட்டி பேசியது.

‘சிங்கமே! எனக்கு பசித்தாலும் சரி, என் அம்மாவுக்கு பசித்தாலும் சரி நாங்கள் இருவரும் புற்களை மட்டுமே சாப்பிடுவோம். ஆனால், நீ என்னை சாப்பிடுவேன் என்கிறாயே? புற்களைவிட நான் அவ்வளவு சுவையாக இருப்பேனா?' என்றது குட்டி.

‘நீ என்னை சாப்பிடும் போது அந்த சுவை உனக்குப் புரியும்', என்றது சிங்கம்.

குட்டியின் வெகுளித்தனமான பேச்சு சிங்கத்திற்கு பிடித்துப்போனது. குட்டியை சாப்பிடக்கூடாது என்று முடிவெடுத்தது.

சிங்கத்திடம் தப்பித்த தாய் மான், காட்டில் வசிக்கும் மற்ற மிருகங்களிடம் முறையிட்டது. அங்கு அமர்ந்திருந்த சாதுவிடமும் முறையிட்டது. ‘சிங்கத்திடமிருந்து தன் குட்டியை காப்பாற்றித் தரும்படி கேட்டது'. அதைக் கேட்ட மற்ற மிருகங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து சிங்கத்தின் இருப்பிடம் வந்தன. சாதுவும் உடன் வந்தார். சிங்கம் அவர்களை அமைதியாக பார்த்தது. முதலில் கூட்டத்திலிருந்த ஒரு புலி பேசியது.

‘சிங்கமே! நீ செய்தது சரியில்லை. குட்டியை உடனடியாக விட்டுவிடு. இல்லையென்றால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்', என்று எச்சரித்தது புலி. அடுத்து ஒரு நரி பேசியது.

‘சிங்கமே! குட்டியை உடனே விட்டுவிடு. இல்லையென்றால் உன்னை கொன்றுவிடுவேன்', என்று மிரட்டியது நரி. அடுத்து ஒரு ஓநாய் மிரட்டியது. அடுத்து மர உச்சியில் இருந்த குரங்கு மிரட்டியது. அடுத்து ஒரு கழுதை தைரியமாக சிங்கத்தின் முன் நின்று மிரட்டியது. ஆனால், தாய் மான் மட்டும் கண்ணீரோடு அமைதியாக இருந்தது.

அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தது சிங்கம். அப்போது சாது பேசினார்.

‘தன் மீது சிங்கம் பலத்தை பிரயோகிக்காது என்று புலி நினைத்துக் கொண்டிருக்கிறது. அந்த நினைப்புதான் அதற்கு பலம். கழுதை, நரி ஆகியவற்றை கொல்வதை சிங்கம் கேவலமாக நினைக்கிறது. காரணம் அருவருப்பு. ஆகையால், அவைகளுக்கு அருவருப்பே பலம். மரத்தின் மேல் சிங்கத்தால் ஏறமுடியாது என்ற தைரியமே குரங்கின் பலம். ஆனால், இவர்கள் யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் சிங்கத்திற்கு இல்லை. அதுமட்டுமல்ல, மான்குட்டிக்காக இவர்கள் யாரும் சிங்கத்தை தனிப்பட்ட முறையில் பகைத்துக் கொள்ள மாட்டார்கள். கூட்டமாக இருப்பதால் மட்டுமே பலர் சிங்கத்திற்கு எதிராக பேசுகிறார்கள். இவர்கள் யாராலும் சிங்கத்தை கட்டுப்படுத்த முடியாது. மற்றொரு முக்கியமான உண்மை என்ன தெரியுமா? குட்டிமான் ஒருவேளை புலியிடமோ, நரியிடமோ, ஓநாயிடமோ மாட்டிக்கொண்டிருந்தால், இவ்வளவு நேரம் உயிரோடு இருந்திருக்காது. பரிதாபத்திற்கும், நியாயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சிங்கத்திடம் தங்களிடம் இல்லாத பலத்தை இந்த மிருகங்கள் காட்டுகின்றன. இவர்கள் இப்படி பேசும்போதுதான், ‘ஏன் இந்த மான்குட்டியை கொல்லக்கூடாது', என்று சிங்கம் நினைக்கும். அப்படியில்லாமல், ஒருவேளை குட்டியை சிங்கம் விடுவிக்கிறது என்றால், அதற்கு அதன் தாயின் அமைதியும், குட்டியின் வெகுளித்தனமுமே காரணமாக இருக்குமே தவிர இந்த வெற்றுக் கூச்சல்கள் காரணமாக இருக்க முடியாது. இந்தக் கூச்சல்கள் பாதிக்கப்பட்ட குட்டிக்கு எதிராகத்தான் அமையும். அப்படி எதிராக அமைந்தால், தாய்மானைத் தவிர இவர்கள் யாருக்கும் பாதிப்பல்லை', என்று சொல்லிவிட்டு அமைதியானர் சாது.

கூடிய கூட்டம் கலையத் தொடங்கியது. ‘குட்டி விடுவிக்கப்படுமா?' என்பது தெரியவில்லை. குட்டியின் விடுதலைக்காக தாய் மானோடு சேர்ந்து நாமும் காத்திருப்போம்.

இந்தக் கதையில் வரும் குட்டியின் நிலைதான் சிறையில் இருக்கும் ஏழு பேர் நிலையும். தற்போது கவர்னர் மாளிகையின் முன் போராட்டம் நடத்துபவரின் குரலுக்கும் மத்தியை ஆண்ட கட்சிகள் எப்போதுமே செவிசாய்த்ததில்லை என்பது கடந்த காலங்களில் நாம் பார்த்த உண்மை. ஏழு பேர் விடுதலைக்கு முக்கிய காரணம் அதிமுகதான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஜெயலலிதா இல்லாவிட்டால் விடுதலை கவர்னர் அலுவலகம் வரை வந்திருக்குமா என்பது சந்தேகமே. இதை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பலமுறை சொல்லியிருக்கிறார். இந்த விஷயம் தமிழகத்தில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.

தமிழகத்தில் தங்கள் ஆட்சி நடந்தபோது திமுகவால் என்ன செய்ய முடிந்தது? மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியின் மந்திரிசபையில் இருந்த போது என்ன செய்ய முடிந்தது? அப்போது வைகோ போன்றவர்கள் எதிர்கட்சியின் வரிசையில் நின்று ஏழு பேர் விடுதலைக்காக முழக்கமிட்டார்கள். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மீண்டும் எதிர்கட்சியின் வரிசையில் நின்று முழக்கமிடுகிறார்கள். எந்த ஆட்சி நடந்தாலும், எதிரணியில் நின்று முழக்கமிடுவது என்பது எந்த மாதிரியான அரசியல் என்பது புரியவில்லை. வைகோ, கம்யூனிஸ்டுகள் போன்றவர்கள் முதலில் ஒரு கட்சியை ஆதரிக்கின்றனர். அவர்கள் ஆட்சியில் அமர்கிறார்கள். உடனடியாக எதிர்கட்சியோடு இணைந்து போராடுகிறார்கள். இத்தகைய அணுகுமுறைகளால் எந்த நேரமும் தமிழ்நாடு போராட்டக்களமாகவே இருக்கிறது.

மக்களின் செல்வாக்கும், ஆளுகின்றவர்களின் செல்வாக்கும் இல்லாத ஒருவரது போராட்டம் எப்படி வெற்றிபெறும்? இவர்களின் போராட்டம் யாரை கட்டுப்படுத்தும்?

மத்திய அரசை திட்டிதிட்டி தங்களது சொந்த அரசியலை வளர்க்கும் மோசமான அரசியல் கலாச்சாரம் தமிழகத்தில் நிரந்தரமாக தங்கிவிட்டது. அதற்கு காரணம் இவர்கள்தான். இத்தகைய அணுகுமுறைகள் தனிப்பட்ட அரசியல்வாதிகளின் வளத்தை மட்டுமே வளர்க்கும். இதை கண்கூடாகவும் பார்க்கிறோம். மக்கள் செல்வாக்கும் இல்லை. பணவரவும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆனால், வளத்தோடு வலம்வரும் அரசியல்வாதிகள் இதை நமக்கு உணர்த்துகிறார்கள். வீர முழக்கங்களையும், அடுக்குமொழி வசனங்களையும் நம்பியே பலர் அரசியல் களத்தில் நாட்களை நகர்த்தி வருகிறார்கள், அவர்களுக்கு வேண்டுமானால் இத்தகைய போராட்டங்கள் ஆதாயங்களை கொடுக்கலாம். பாதிக்கபட்ட ஏழு பேர்களின் நிலையை என்னாகும்?

ஒரு உண்மையை இந்த நேரத்தில் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். கி. வீரமணி போன்றவர்கள் நாத்திகர்கள். ஆத்திக சிந்தனைகளையும், இந்துக்களையும் தொடர்ந்து அசிங்கப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகையால், திரு. கி. வீரமணி, சுப. வீர. பாண்டியன் ஆகியோர் ஏதாவது ஒரு விஷயத்தில் ஒரு முடிவெடுத்தால், அதை கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் ஆத்திக கூட்டங்கள் தமிழகத்தில் தற்போது பெருமளவில் அதிகரித்துள்ளது. இதை சமூக வளைத்தளங்களில் பார்க்க முடிகிறது. இந்தப் பட்டியலில் வைகோவும் இணைந்துள்ளார். இவர்கள் ஏழு பேர் விடுதலைக்கு ஆதரவாக பேசுவது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஏழு பேரை விடுதலை செய்யக்கூடாது என்று ஒரு பிரசாரம் வளைத்தலங்களில் வருவதை பார்க்க முடிகிறது.

கடந்த காலத்தை கொஞ்சம் உற்று நோக்கினால், 7 பேர் விடுதலையைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் எல்லாம் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருந்தன. ஆனால், தற்போது, வைகோவும், நாத்திகர்களும் விடுதலையை வலியுறுத்தி போராட்டம் செய்வது ஏழு பேரின் விடுதலைக்கு எதிராக ஒரு சிந்தனையை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது கவர்னர். அவர் நம்ம ஊர்காரர் இல்லை. தனது பதவிக்காலம் முடிந்ததும் சொந்த மாநிலத்துக்கு திரும்பிவிடுவார். தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. அவருக்கு எதிராக ‘கெட் அவுட் கவர்னர்', ‘கவர்னர் மாளிகையை காலி செய்', என்று ஏகவசனத்தில் பேசினால், அது ஏழு பேர் விடுதலையை கண்டிப்பாக பாதிக்கும். 180000 இலங்கை தமிழர்களை கொன்று குவித்தது மத்திய காங்கிரஸ் அரசு, அதற்கு துணை நின்றது திமுக என்று முழங்கியவர் இன்று அதே கூட்டணியில் நின்று கொண்டு தற்போது ஆளுகின்ற கட்சிக்கு எதிராக முழங்குகிறார். இதற்கு முன் இவர் என்ன சாதித்தார்? தற்போது என்ன சாதிக்கப்போகிறார்?

உங்கள் உருட்டல் மிரட்டலுக்கு பயப்படும் அவசியம் கவர்னருக்கு கிடையாது. நீங்கள் எழுப்பும் ஒவ்வொரு கூச்சலும் விடுதலைக்காக காத்திருக்கும் அந்த ஏழு பேருக்கும் சிக்கலை ஏற்படுத்தும். ஆகையால், இந்த பிரச்னையில் அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்றால், தயவு செய்து அமைதியாக இருங்கள். உங்கள் சுயநல அரசியல் லாபத்திற்காக அந்த ஏழு பேர் வாழ்க்கையில் தீர்க்க முடியாத சிக்கலை ஏற்படுத்தாதீர்கள். அந்த ஏழு பேரின் விடுதலைக்கு உடனடித் தேவை அனுதாபமும், பெருந்தன்மையுமே தவிர உங்கள் போராட்டங்கள் அல்ல.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com