இப்போது எனக்கு விருப்பமான வாழ்க்கையை வாழப் பிடித்திருக்கிறது

இளம் பெண்ணான சங்கீதாவும் அவரது பெற்றோரும் ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வாழ்ந்து வந்தனர்.
இப்போது எனக்கு விருப்பமான வாழ்க்கையை வாழப் பிடித்திருக்கிறது

இளம் பெண்ணான சங்கீதாவும் அவரது பெற்றோரும் ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வாழ்ந்து வந்தனர். எப்போதும் அவரது பெற்றோர் வேலை, குடி, சண்டை என இருந்ததால் அவளுக்கு வாழ்க்கையின் மீது விரக்தி ஏற்பட்டது. மேலும் வேலை இல்லாத சமயத்தில் அவரது தந்தையும் தாயும் குடி போதையிலேயே இருந்ததால் சங்கீதா தன் பாதுகாப்பிற்காகவும், சுய மரியாதைக்காகவும், அமைதியான வாழ்க்கை வாழ இது தகுந்த இடமில்லை என எனப் புரிந்து கொண்டார்.

பெற்றோருடன் வாழப் பிடிக்காமல் சங்கீதா வேறு ஒரு கிராமத்தில் வாழும் தனது உறவினர்களின் வீட்டிற்குச் சென்று விட்டார். அங்கு மரம் வெட்டும் குழுவின் முதலாளி ஒருவர் வந்து மரம் வெட்டுவதற்காக கூலி ஆட்களை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். அவளது உறவினர்களுடன் சேர்ந்து சங்கீதாவும் அந்த வேலைக்குச் சென்றிருக்கிறார். மரம் வெட்டும் குழுவில் வேலை செய்யும் பொழுது தன் கணவர் முனியப்பனை காதலித்துத் திருமணமும் செய்து கொண்டார்.

பலருக்கும் போலவே வாழ்க்கை அவர்களுக்கு இன்பமாய் அமையவில்லை. அவர்களின் பங்குக்கும் வாழ்க்கையில் பல இன்னல்களை அன்றாடம் அனுபவித்தனர். அதிகாலையிலிருந்து இரவு வரை மரங்களை அறுத்து கட்டுகளாகக் கட்டி சாலையருகே தூக்கிச் சென்று மர வியாபாரிகளின் வாகனங்களில் ஏற்றும் வரை ஓயாமல் உழைக்க வேண்டியிருந்தது. சங்கீதாவிற்கு தெரிந்ததெல்லாம் தன் கணவர் முதலாளியிடம் வாங்கிய முன்பணத்திற்காக வேலை செய்வதாகவே நினைத்தார். தனக்கு வழங்க வேண்டிய கூலியை பற்றியும் அவர் என்றுமே கேட்டதில்லை.

முதலாளியும் முனியப்பன் வாங்கிய முன்பணத்திற்கு அவர்களின் கூலியை கழித்துக் கொள்வதாக அடிக்கடி கூறினாலும் கடன் தீர்ந்தபாடில்லை. மளிகைப் பொருட்கள் காய்கறி போன்ற அடிப்படை செலவுகளுக்குக் கூட அவர்களிடம் பணம் இல்லை. முதலாளிக்குத் தெரியாமல் விட்டுபோன சில மரக் கட்டைகளை அங்குள்ள கிராமத்தினருக்கு பணத்திற்கு விற்று அதில் அரிசி காய்கறி போன்ற பொருட்களை வாங்கி காலத்தை கழித்து வந்துள்ளனர்.

கொத்தடிமையிலிருந்து மீட்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னால் சங்கீதா தனது மூத்த மகனை வயிற்றில் சுமந்திருந்தாள். ஒருபுறம் அவர் மகிழ்ச்சியடைந்தாலும் காலையிலிருந்து மாலைவரை இடைவெளி இல்லாத வேலை அவரை சோர்வடையச் செய்தது. தாய்மை அடைந்ததின் மகிழ்ச்சியை கொண்டாட முடியாமல் எப்போதும் துயர் சூழ்ந்ததாகவே இருந்தது. அவரது வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் அவருக்கு மகிழ்ச்சி, சரியான ஓய்வு, அடிப்படை தேவையான மருத்துவ உதவி, நல்ல உணவு ஆகியவை எல்லாம் வெறும் கானல் நீராகவே இருந்தது. அவரால் எழுந்து நடக்க உட்கார முடியாத நிலையிலும் எவ்வித கருணையும் இன்றி வேலை வேலை என முதலாளியால் துரத்தப்பட்டிருக்கிறார்.

பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின் 2012-ம் ஆண்டில் அவர்கள் அரசாங்கத்தால் கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்டனர். அவர்கள் வாழ்க்கையில் முதன் முறையாக அன்றுதான் வயிறு நிறைய மதிய உணவு உண்டு மகிழ்ந்தனர். மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு விடுதலை சான்றிதழ்களையும் முதற்கட்ட மறுவாழ்வு தொகையையும் அளித்து அவர்களை சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது. அந்தப் பணத்தை வைத்துச் சொந்தமாக கத்தி, மண்வெட்டி கடப்பாறை போன்ற மரம் வெட்ட பயன்படும் பொருட்களை அவர்கள் வாங்கிக் கொண்டனர்.

தற்போது அன்றாட கூலிகளாக செங்கல் சூளைகளுக்குத் தேவையான மரங்களை வெட்டி வாரம் ஒருமுறை டன் ஒன்றுக்கு  1300 முதல் 1500 வரை சம்பாதிக்கின்றனர். சங்கீதாவும் அருகிலிருக்கும் ஒருவரது வீட்டில் அன்றாடம் வீட்டு வேலை செய்து மாதம் 700 ரூபாய் பெறுகிறார். அதில் 500-600 வரை குடும்ப செலவு போக மாதம் 100/ 200 ரூபாயை ஒவ்வொரு மாதமும் வங்கியில் சேமிக்கிறார். மேலும் மகளிர் சுய உதவிக் குழுவில் இணைந்து மாதம் 2000 ரூபாயையும் சேமித்து வருகிறார்.

சங்கீதாவின் கனவெல்லாம் டைல்ஸ் தரை போட்ட ஒரு கான்கிரீட் வீட்டை கட்ட வேண்டும் என்பதாகவே இருக்கிறது. அதில் சமையல் அறையும் கழிப்பறையும் இருக்க வேண்டும் என்கிறார். மரம் வெட்டச் சென்ற பல இடங்களில் தற்காலிக குடிசை போட்டு தங்கியதை வேதனையோடு நினைவு கூர்கிறார். வெட்ட வெளிகளில் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பார்த்து படுத்துக் கொண்டே தங்களுக்கென பாதுகாப்பான ஒரு வீடு கட்டி அதில் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க ஏங்கி இருக்கிறார்.

சங்கீதா தன் குழந்தைகள் நன்றாகப் படித்து ஒரு மருத்துவராகவோ, மாவட்ட ஆட்சியராகவோ அல்லது ஒரு கிராம நிர்வாக அலுவலராகவோ வர வேண்டும் என விரும்புகிறார். தன் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலமும் நல்ல பெயரும் கிடைக்கவே அவருக்கு ஆசை. பணத்தின் மீது அல்ல. பல குழந்தைகள் பள்ளியிலிருந்து இடையில் நின்றுவிடும் நிலையில் தன் மூத்த இரு குழந்தைகளையும் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் படிப்பை முடிக்க விடுதியில் சேர்த்துள்ளார்.

சங்கீதா அரசின் உதவிகளை நாடிச் செல்லும் போது சில அதிகாரிகள் மட்டும் அவரை  கண்ணியமாக நடத்தவில்லை என்றும் கோரிக்கைகள் மீது சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறுகிறார். ஆனாலும் அவர் அரசு வழங்கும் அனைத்து உதவிகளையும் பெறும் வரை நம்பிக்கையை கைவிடுவதில்லை. தன்னைப் போன்று துன்பப்படுபவர்களுக்கு உதவ தன் குழந்தைகளும் அரசுப் பணிக்கு வர வேண்டும் என விரும்புகிறார்.

தன் குழந்தைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் சரியாக திட்டமிட்டு வருங்கால சந்ததியினர் தன்னைப் போன்று கொத்தடிமைக்கு இரையாகாமல் இருக்க உறுதியும் அர்ப்பணிப்பும் சாதுர்யமிக்க ஒரு தாயை பார்க்கும் போது ஊக்கமும் உற்சாகமும் அதிகரிக்கிறது.

   - கிறிஸ்டி சுவாமிக்கன்

       - கிறிஸ்டி சுவாமிக்கன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com