பாடுபட்டு அந்த சாதனையை நிகழ்த்தினோம்! கருந்துளை அதிசயம் (விடியோ)

விண்வெளியில் இருப்பதாகக் கூறப்படும் 'கருந்துளை' குறித்து, பத்திரிகை, ஊடகங்களில் தலைப்பு செய்தியாக ஆகியிருந்தது.
பாடுபட்டு அந்த சாதனையை நிகழ்த்தினோம்! கருந்துளை அதிசயம் (விடியோ)

விண்வெளியில் இருப்பதாகக் கூறப்படும் 'கருந்துளை' குறித்து, பத்திரிகை, ஊடகங்களில் தலைப்பு செய்தியாக ஆகியிருந்தது. காரணம், கருந்துளையின் முதலாவது புகைப்படம் ஏப்ரல் 10 அன்று வெளியானதுதான். கருந்துளை இப்படித்தான் இருக்கும் என்று உலக மக்களுக்கு காட்ட இந்தப் படம் உருவாக்கப்பட்டது.

இந்த படத்தினை உருவாக்குவதில் பயன்படுத்தப்பட்ட யுக்தியான அல்கோரிதத்தை உருவாக்கம் செய்ய பலரும் பங்களிப்பு செய்துள்ளார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் இருபத்தொன்பது வயதான கேட்டி பெளமேன். சர்வதேச அளவில் கேட்டிக்கு பாராட்டு மழைதான். விண்வெளி விஞ்ஞானத்தில் ஒரு திருப்புமுனை திறந்து வைத்திருக்கும் இந்த அரிய புகைப்படத்தை எடுக்கும் 'கணினி செயல் நிரலி'யை உருவாக்குவதற்கு உருவாக்கப்பட்ட குழுவுக்குத் தலைமை தாங்கியது முனைவர் கேட்டி பெளமேன்.

கருந்துளையை நமது கண்களால் சந்திரனைப் பார்ப்பது போல நேரடியாக பார்த்துவிட முடியாது. கருந்துளை பூமியை விட மூன்று மில்லியன் மடங்கு அளவு பெரிதாகும். நாம் வாழும் பூமியிலிருந்து சுமார் 500 மில்லியன் டிரில்லியன் கிலோ மீட்டர் தொலை

தூரத்திலுள்ள 'தூசு மற்றும் வாயு'வின் ஒளிவட்டத்தை அப்பட்டமாக காட்டுகின்ற கருந்துளையின் படம் இரண்டு வாரத்திற்கு முன்பு வெளியானது. அறிவியல் உலகைப் புரட்டிப் போட்ட இந்த அதிசயப் படம் உலக மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. 'கருந்துளையைப் படம் பிடிப்பது மனிதனால் இயலாத செயல்' என்று சொல்லப்பட்டு வந்தது நாங்கள் பாடுபட்டு அந்த சாதனையினை நிகழ்த்தியுள்ளோம்' என்கிறார் முனைவர் கேட்டி பெளமேன்.

கேட்டி பெளமேன் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிலையத்தின் தயாரிப்பு. அங்கு பட்ட மாணவியாக பயிலும் போதே பெளமேன் கருந்துளையினை படம் பிடிக்க "அல்கோரித' யுக்தியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிலையத்தின் "கணினி அறிவியல்' பிரிவைச் சேர்ந்த குழுவினர், "செயற்கை நுண்ணறிவு ஆய்வகம்', "ஹார்வேடு-ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையம்', மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய விண்வெளி கண்காணிப்பு நிலையம் இவற்றுடன் இணைந்து இந்த விண்வெளி அறிவியல் திட்டத்தை பெளமேன் தொடங்கினார். மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த கூட்டு முயற்சி தொடர்ந்து இப்போது தான் வெற்றி பெற்றுள்ளது.

முனைவர் கேட்டி பெளமேன் வடிவமைத்த அல்கோரித யுக்தி வழி, ஒன்றோடொன்று தொடர்பு ஏற்படுத்தப்பட்ட 'இவண்ட் ஹாரிசன் தொலைநோக்கி' யைப் பயன்படுத்தி "கருந்துளை'யினை படம் பிடித்துள்ளனர். இந்த அதிசயப் படம் ஊடகங்களில் வெளிவந்ததும், சமூக வலைத்தளங்களில் கருந்துளையுடன் இணைத்து முனைவர் கேட்டி பெளமேன் பேசப்பட்டார். எழுதப்பட்டார்.

அல்கோரிதம் எனப்படுவது எடுத்துக் கொள்ளும் ஆய்வுக்கு தீர்வு காண பயன்படுகின்ற ஒரு செயல்முறை அல்லது விதிகளின் தொகுப்பு என்று கூறலாம்.

'இந்த மகத்தான வெற்றிக்கு முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் ஒருமனத்துடன் ஒரே நோக்கத்துடன் பணிபுரிந்ததுதான் காரணம்' என்கிறார் கலிஃபோர்னிய தொழில்நுட்ப நிலையத்தின் கணக்கீடு மற்றும் கணிதவியல் துணை பேராசிரியாக வேலை செய்து வரும் டாக்டர் கேட்டி பெளமேன்.

உலகின் பல நாடுகளின் பல பாகங்களிலிருந்து செயல்படும் எட்டு ரேடியோ தொலை நோக்கிகளைப் பயன்படுத்தி இந்த புகைப்படத்தை உருவாக்குவதில் 200-க்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் பணி புரிந்துள்ளனர். முனைவர் கேட்டி பெளமேனுடன் இணைந்து பல விஞ்ஞானிகள் உருவாக்கிய கணினி நிரலி தொடர்கள், தொலைநோக்கி தரவுகளை உருமாற்றி கருந்துளை புகைப்படமாக உருவாக்கம் செய்துள்ளன.
 - சுதந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com