விடுதலையை நோக்கி

தங்களது மூன்று குழந்தைகளுடன் கொத்தடிமையாக இருந்த நாட்களையும் வேலை செய்யும் இடத்திலிருந்து
விடுதலையை நோக்கி

தங்களது மூன்று குழந்தைகளுடன் கொத்தடிமையாக இருந்த நாட்களையும் வேலை செய்யும் இடத்திலிருந்து சரியான சந்தர்ப்பத்தினை பயன்படுத்தித் தப்பித்ததையும் நினைவுபடுத்திப் பார்க்கின்றனர் ஆறுமுகமும் லட்சுமியும். அவர்களுக்கு சந்தோஷ் சதீஷ் மற்றும் சுவாதி ஆகிய மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

திருவள்ளூரில் உள்ள ஒரு விவசாய நில உரிமையாளரிடம் ஆறுமுகமும் லட்சுமியும் முன் பணமாக ரூ. 20000 வாங்கியுள்ளனர். வருடத்திற்கு ரூ. 45000 தருவதாகவும் முன் பணமாக வாங்கிய தொகையைக் கழித்துக் கொள்வதாகவும் கூறிய முதலாளி தன் மாந்தோப்பு மற்றும் கரும்புத் தோட்டத்தைப் பராமரிக்க அவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார். லட்சுமியும் ஆறுமுகமும் தங்களது மூன்று குழந்தைகளுடன் அந்த விவசாய பண்ணையிலேயே தங்கி வேலை பார்த்து வந்தனர்.

காலை விடிவதற்கு முன்பே வேலைக்குச் செல்லும் ஆறுமுகத்தைத் தொடர்ந்து வீட்டு வேலைகளை முடித்து லட்சுமியும் அவருடன் சென்று மரக்கன்றுகளை நடுவது, கலை எடுப்பது, மண் அணைப்பது போன்ற வேலைகளை எவ்வித உபகரணங்களும் இன்றி செய்து வந்துள்ளனர். மேலும் தேவைப்படும் போது அல்லது முதலாளியின் அறிவுறுத்தலின் பேரிலோ எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பூச்சிக்கொல்லி மருந்தை மரக்கன்றுகளுக்குத் தெளிப்பர்.

குழந்தைகளைச் சரியான நேரத்திற்குப் பள்ளிக்கு அனுப்ப இயலாததால் அவர்களைப் பள்ளியை விட்டு இடையிலேயே நிறுத்தும் சூழல் இருந்தது. இருந்தும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு தாமதமாக வேலைக்கு வந்தால் முதலாளி அவர்களை விட்டபாடில்லை. அதனால் அவர்களையும் வேலைக்கு அழைத்து வந்து விட்டனர் லட்சுமியும் ஆறுமுகமும். குடும்பத்தில் உள்ள அனைவரும் வேலை செய்தும் வாரம்  ரூ. 200லிருந்து 300 வரை மட்டுமே கூலியாக வழங்கியுள்ளார் முதலாளி. நாள் முழுக்க உழைத்தாலும் குழந்தைகளுக்கு ரூபாய் 10 மட்டுமே கொடுத்துள்ளார். அவர்கள் பண்ணையிலிருந்து வெளியேறவோ வேறு இடத்திற்கு சென்று கூலி வேலை செய்யவோ அனுமதிக்கப்படவில்லை.

சொந்த நிகழ்ச்சிகளுக்காக வெளியே சென்று வர அனுமதி கேட்டாலும் முதலாளி மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். ஆறுமுகத்தின் உறவினர் ஒருவர் இறந்த போது கூட அவரை இறுதி சடங்கிற்கு சென்று வர அனுமதிக்கவில்லை. நீண்ட நேர வேலை, சுகாதாரமற்ற தங்குமிடம், சரியான உணவு இல்லாமை ஆகியவற்றால் ஆறுமுகத்தின் உடல் நலம் குன்றியது. 2015 ஆம் ஆண்டின் பிற்பாதியில் ஆறுமுகத்தை அம்மை தாக்கிய போதும் அவரை வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

அதனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. ஒருபுறம் கழுத்தில் கட்டியும் மறுபுறம் தீராத வயிற்று வலியும் சேரவே அவர் படுத்த படுக்கையாகி விட்டார். லட்சுமி தன் கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொண்டே வேலையும் செய்து வந்தார். முதலாளியிடம் சென்று மருத்துவ உதவிக்கு வெளியே சென்றுவரக் கேட்டபோது கடுமையான வார்த்தைகளால் பேசியும் உடலளவிலும் துன்புறுத்தப்பட்டு உள்ளார் லட்சுமி.

ஆறுமுகத்தின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடையவே தங்களது சொந்த கிராமத்திற்கு அழைத்துச் செல்ல முதலாளியிடம் வேண்டிய போதும் 5 நாட்களில் திரும்பி வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஐந்து நாட்கள் முடிவதற்கு முன்பே முதலாளி அந்த கிராமத்திற்குச் சென்று அந்த ஊரார் முன்னிலையில் வேலைக்குத் திரும்பக் கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும் மோசமான வார்த்தைகளால் அவர்களை திட்டியுள்ளார்.

மீண்டும் வேலை செய்யப் பண்ணைக்குத் திரும்பிய ஆறுமுகத்தின் உடல்நிலை மோசமாகவே லட்சுமியின் உறவினர் ஒருவர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்து தந்தார். ஆனாலும் ஆறுமுகத்துடன் மருத்துவமனைக்குச் செல்ல லட்சுமிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தன் கணவரின் நிலையை நினைத்துக் கொண்டே தன் குழந்தைகளுடன் வேலை செய்து வந்தார் லட்சுமி.
 
உடல்நிலை சரியாகி மீண்டும் தோப்பிற்கு வேலைக்கு வந்த ஆறுமுகத்தை ஓய்வில்லாமல் வேலை வாங்கினார் அந்த முதலாளி. நிலைமை மோசமடைந்து தாங்க முடியாத அளவிற்குச் செல்லவே, அவ்விடத்தை விட்டு தன் குடும்பத்துடன் தப்பிக்கத் திட்டமிட்டார் ஆறுமுகம். சரியான சந்தர்ப்பம் கிடைத்தபோது பண்ணையிலிருந்து குடும்பத்துடன் தப்பித்து திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அவரிடம் சென்று தஞ்சம் அடைந்தனர். அவ்விடம் தங்களது நிலைமையை விளக்கிக் கூறினர். அலுவலர் அவர்களுக்கு விடுதலை சான்றிதழ்களையும் முதற்கட்ட மறுவாழ்வு தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1000 வழங்கினார்.

ஆறுமுகமும் லட்சுமியும் முதலாளி வசிக்கும் அதே கிராமத்தில் குடும்பத்துடன் வசிக்க முடிவு செய்தனர். ஆரம்பத்தில் வீட்டை விட்டு வெளியே வர அவர்கள் பயந்தாலும், தங்களது சமூகத்தின் உதவியால் சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.

தற்போது ஆறுமுகம் தன் குடும்பத்தைத் தனியே விட்டு அரக்கோணத்தில் வசித்து வரும் தன் சகோதரியின் இடத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். லட்சுமியும் தைரியமாகக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்கிறார். தங்களது வாழ்க்கை எவ்வாறு சிறப்பான ஒன்றாக மாறியது என்பதை மகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொள்கின்றனர். உள்ளூர் அதிகாரிகளிடம் பேசி குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ்களையும் வாங்கிவிட்டனர். கிராம நிர்வாக அலுவலரிடம் தங்களுக்கென சொந்தமாக நிலம் ஒதுக்கக் கோரிக்கை வைத்துள்ளனர். தங்களின் வீட்டின் அருகிலேயே குடிநீர் இணைப்பைப் பெற்ற நிலையில், தற்போது மின்சார வசதிக்காக முயன்று வருகின்றனர். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வருமானத்தைச் சேமிக்கத் தொடங்கியுள்ளனர்.

மூன்று குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கப்பட்டு நன்றாகப் படிக்கின்றனர். அவர்களுக்கென்று தனித்தனியே கனவுகள் இருக்கின்றன. ஆண் குழந்தை ஒருவன் ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்குச் சேவை செய்ய விரும்புவதாகவும், பெண் குழந்தை ஆசிரியராக ஆகி தன் சமூகத்துக்குச் சேவை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் மீண்டும் கொத்தடிமையில் சிக்க மாட்டோம் என்பதில் உறுதியுடன் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com