Enable Javscript for better performance
ஹாங்காங்கின் தன்னாட்சி உரிமை: ஹாங்காங் மக்களும், சீன அரசும் என்ன செய்ய வேண்டும்?- Dinamani

சுடச்சுட

  

  ஹாங்காங்கின் தன்னாட்சி உரிமை: ஹாங்காங் மக்களும், சீன அரசும் என்ன செய்ய வேண்டும்?

  By ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங்  |   Published on : 14th August 2019 10:53 AM  |   அ+அ அ-   |    |  

  protest_hong


  ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைதானவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதால் தொடங்கிய மக்கள் போராட்டம்,  அச்சட்டத்திருத்தம் கைவிடப்பட்டதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி அறிவித்தப் பின்னும் தொடர்கிறது. நான் 1993 ஆம் ஆண்டிலிருந்து ஹாங்காங்கில் வசிக்கிறேன். பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங் 1997 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி சீனாவின் சிறப்பு நிர்வாக மண்டலமாக இணைக்கப்பட்டது. ஹாங்காங் தனி நாடு அல்ல. எனினும் உலக நாடுகளுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும், ஒப்பந்தங்களையும் தனித்து மேற்கொள்ளும்.  உலக விளையாட்டுப் போட்டிகளில் ஹாங்காங் விளையாட்டு வீரர்கள் அணி தனித்து பங்கேற்கும். ஹாங்காங்கிற்கு என தனிக் கொடி உண்டு. இக்கொடி ஹாங்காங் தலைமைச் செயலகத்தில் சீனக்கொடியுடன் இணைந்து பறக்கும்.  

  இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஹாங்காங் மக்களும், சீன அரசும் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன்.  முதலில் சீன அரசு என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.  சீனா பலரும் நினைப்பது போல ஒரு முழுமையான கம்யூனிச நாடு அல்ல. அந்நாட்டில் படிப்படியாக சீர்திருத்தம் ஏற்பட்டு அதனால் தொழில் வளர்ச்சியில் உலகின் முன்னணி நாடாக விளங்குகிறது.  சீன அதிபராக இருந்த டெங்சியோ பிங் அவர்களின் 'பூனை கருப்பாய் இருந்தால் என்ன? சிவப்பாய் இருந்தால் என்ன? அது எலியைப் பிடித்தால் சரி' என்ற மேற்கோளை நாம் மறக்க முடியாது. மனித உரிமைகளில் மட்டும் சீனா இன்னும் பிடிவாதமாக இருக்கிறது.  கூகில் தேடுபொறியை சீனா தடை செய்த போதும், சீன மக்களில் கணிசமானவர்கள் உலக நிகழ்வுகளை வேறு சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்து வருகின்றனர்.  சீனா மத சுதந்திரத்துக்கும் எதிராக உள்ளது.  உய்குர் முஸ்லிம்கள் உள்நாட்டில் கைதிகளைப் போன்று நடத்தப்படுகின்றனர்.  சீனா முழுவதும் பள்ளிவாசல்களில் உள்ள மேற்கூரை அகற்றப்பட்டுள்ளது. பள்ளிவாசல்களின் வெளித்தோற்றம் சீனப் பண்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்றும் அரபுப் பண்பாட்டை காட்டுவதாய் இருக்கக் கூடாது என்றும் சீன அரசு முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.  கிறித்துவர்களும் சீன அரசால் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.  

  சீன அரசு எப்படி பொருளாதாரச் சீர்திருத்தங்களை செயல்படுத்தி உலக நாடுகளுடன் போட்டியிடுகிறதோ, அப்படி தன் குடிமக்களுக்கு மனித உரிமைகளை வழங்க முன்வர வேண்டும். சீனா ஒரு கட்சி சர்வாதிகாரத்திலிருந்து தனி நபர் சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது.  கம்யூனிஸ்டுகளின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற தத்துவத்தை ஆய்வு செய்த நவீன கால கம்யூனிஸ்டுகள் அதனை கைவிட்டுள்ளனர். சீன கம்யூனிஸ்டு கட்சியும் பல கட்சி அரசியலையும், முழுமையான ஜனநாயகத்தையும், சீனாவில் படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் ஹாங்காங் மக்களும், தைவான் மக்களும் சீனாவுடன் முழுமையாக இணைவர். இவையெல்லாம் உடனடியாக நிகழக் கூடியதல்ல என்றாலும் பத்தாண்டுகளில் நிகழக் கூடும். சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட சீர்திருத்தம் அந்நாட்டை பல நாடுகளாக்கி விட்டது. சீனாவில் ஜனநாயகம் மலர்ந்தால் ஒன்றுபட்ட சீனா உருவாகலாம்.  

  இனி ஹாங்காங் போராட்டக்காரர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.  ஹாங்காங் போராட்டக்காரர்கள் தனி நாடு கோரிக்கையை எழுப்புகிறார்கள். அது ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை.  ஆனால் ஹாங்காங் சீனாவிடம் கையளிக்கப்பட்ட போது உருவாக்கப்பட்ட அடிப்படைச் சட்டத்தின் படி ஹாங்காங்கின் தனித்தன்மையைக் காக்க அவர்கள் போராடுவது நியாயமானதே.  அவர்கள் கோரிக்கைகளில் தனி நாடு கோரிக்கையைத் தவிர மற்ற அனைத்தையும் சீனா ஏற்றுக் கொள்ளலாம். ஹாங்காங் போராட்டக்காரர்கள் ஹாங்காங்கில் நிலவும் ஏற்றத் தாழ்வான பொருளாதாரமே முதன்மையான சிக்கல் என்பதை அறியாமல் சீனத் தலையீடே முதன்மையான சிக்கல் என்று நினைப்பது நமக்கு வியப்பாக உள்ளது. ஹாங்காங்கின் வருவாயை சீன மைய அரசு எடுத்துக் கொள்வதில்லை.  ஹாங்காங்கில் கட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ள மாஃபியாக்களால் பெரும்பான்மையான மக்களுக்கு சொந்த வீடு வாங்கும் எண்ணம் கனவாகவே உள்ளது. வாடகை வீட்டில் வசிப்பவர்களும் தங்கள் வருவாயில் பெரும்பகுதியை வாடகைக்கே தரவேண்டியுள்ளது.  அதுவும் ஒரு குடும்பத்தில் இருவருக்கு குறையாமல் வருவாய் ஈட்டினால் மட்டுமே இயலும். இதனால் பலர் திருமணமே புரிவதில்லை. திருமணம் புரிந்தவர்களும் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை. சிங்கப்பூர் அரசு இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வு கண்டுள்ளது.  ஹாங்காங் அரசு வீட்டு வாரியம் வாயிலாக சலுகை விலையில் அடுக்கு மாடி குடியிருப்பு விற்பனை செய்கிறது. வாடகை குடியிருப்பும் அளிக்கிறது. எனினும் காத்திருப்போர் பட்டியலில் இருப்போர் 7 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.  

  ஹாங்காங் அரசு தனியார் வீட்டு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்.  பொது மருத்துவத்தை மேம்படுத்த வேண்டும். 4 புதிய மருத்துவமனைகளை கட்ட வேண்டும்.  ஆயிரக்கணக்கான மருத்துவர்களையும், செவிலியர்களையும் பணியமர்த்த வேண்டும். மருத்துவத் தகுதித் தேர்வை நீக்க வேண்டும்.  இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் இருந்து மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும். முதியோர் நலனுக்கான திட்டங்களை மேம்படுத்த வேண்டும். கல்வி உதவித் தொகைகளை அதிகரிக்க வேண்டும்.  வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களை வகுக்க வேண்டும்.   மக்கள் நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்தி ஹாங்காங்கில் ஜனநாயக முறையில் சோஷலிசத்தை செயல்படுத்த வேண்டும். அப்பொழுது ஹாங்காங் போராட்டக்காரர்கள் தனி நாடு கோரிக்கையை கைவிடுவர். ஹாங்காங்கில் அமைதி திரும்பும்.

  N Abdul Rahman
  Email: nabdulrahman@yahoo.com
  Gem Stone Busines / நகைக்கற்கள் வணிகம்
  படிப்பு இளங்கலை பொருளியல் 
  சென்னை புதுக்கல்லூரி 1993 ஆம் ஆண்டு

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai