களைகட்டாத கிராமங்கள்; ஆர்வம் காட்டாத அரசியல் கட்சிகள் - தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா?

உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்துள்ள வழக்கு, தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வியை எழுப்ப
களைகட்டாத கிராமங்கள்; ஆர்வம் காட்டாத அரசியல் கட்சிகள் - தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா?

உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்துள்ள வழக்கு, தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 

மக்களாட்சி முறையை சிறப்பாக அரங்கேற்றும் ஜனநாயக நாடுகளில் ஒன்று இந்தியா. வலிமைமிக்க நம் நாட்டின் நிர்வாகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன. உள்ளாட்சி அமைப்புகள் மக்களாட்சியின் ஆணிவேர்களாக பார்க்கப்படுகின்றன. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக  நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது வெட்கப்படவேண்டியதே. மாநிலத் தேர்தல் ஆணையமும் இந்த விஷயத்தில் சற்று பின்வாங்கியது என்றுதான் கூற வேண்டும்.  

2016ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு பின்னர், அதுவும் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளுக்குப் பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன்படி, தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும், தேர்தல் அறிவிக்கை வெளியாகும் டிசம்பர் 6ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் 2020, ஜனவரி 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், நிர்வாகக் காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில்தான், வார்டு மறுவறையரை பணிகள் முழுவதுமாக முடிவடைந்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது ஏன்? என்றும் திமுக கேள்வி எழுப்பியுள்ளது. இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாதது ஒன்றும் புதிதல்ல; முன்னதாக எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, (1977 -87) 10 ஆண்டுகள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதையடுத்து, 1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு அடுத்த 5 ஆண்டுகள் அரசு அதிகாரிகளின் ஆட்சியே நடைபெற்றது. இதற்கு காரணமாக இருந்தது திமுக தொடர்ந்த வழக்குதான். 'தாழ்த்தப்பட்டோர் ஒருவர்கூட இல்லாத ஒரு வார்டை தாழ்த்தப்பட்டோர் தொகுதி' என்று அரசு அறிவித்துள்ளதாகக் கூறி, திமுக வழக்கு தொடர்ந்து அதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோன்று 2011ம் ஆண்டும், உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்தது. ஆனால், நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதால் தேர்தல் நடைபெற்றது. சமீப காலமாக, உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் போது, எதிர்க்கட்சிகள் அதை எதிர்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக திமுக இதுவரை மூன்று முறை(2019ம் சேர்த்து) உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. 

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் மறு வரையறை செய்யப்பட்ட பிறகு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தற்போது திமுகவின் கோரிக்கையாக இருந்தாலும், பழைய மாவட்டங்களின் அடிப்படையிலேயே தேர்தல் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சித் தேர்தலை மிகவும் முறையாக நேர்மையாக நடத்த வேண்டும் என்று திமுக தரப்பில் ஆளுநரிடம் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு, வார்டு மறுவரையறை உள்ளிட்ட காரணங்களை வைத்து திமுக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது. அதே நேரத்தில், உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. எனவே, தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? என்பது தற்போது உச்ச நீதிமன்றத்தின் முடிவிலே இருக்கிறது. 

அதேபோன்று உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு, கிராமங்களில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வழக்கமாக தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள், வாக்கு சேகரிப்பு பணிகள் உள்ளிட்டவை தொடங்கிவிடும். ஆனால், ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது மற்றும் திமுகவின் வழக்கு உள்ளிட்ட காரணங்களால் மக்களே ஒருவித சந்தேகத்தில் இருப்பதாக பேசப்படுகிறது.

எனினும், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். அதேபோன்று, வார்டு மறுவரையறை பணிகளுக்காக அரசுக்கு மேலும் அவகாசம் கொடுக்கவும் வாய்ப்புள்ளது.

என்ன நடக்கிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com