சென்னை விரைவில் அல்ல வெகு விரைவில் வறண்டு போகும்: ஆரூடம் அல்ல உண்மை!

கடந்த 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது ஒரு கையில் சில துணிமணிகளோடு, மற்றொரு கையில் 4 வயதுக் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்ற அந்த கனம் மனதில் இருந்த அதே கவலை இன்றும் மனம் முழுக்க நிரம்பியுள்ளது.
சென்னை விரைவில் அல்ல வெகு விரைவில் வறண்டு போகும்: ஆரூடம் அல்ல உண்மை!

கடந்த 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது ஒரு கையில் சில துணிமணிகளோடு, மற்றொரு கையில் 4 வயதுக் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்ற அந்த கனம் மனதில் இருந்த அதே கவலை இன்றும் மனம் முழுக்க நிரம்பியுள்ளது.

என்ன வித்தியாசம், அன்று எங்கு பார்த்தாலும் வெள்ளம், இன்று எங்குத் தேடியும் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. ஆனால் நிலைமை ஒன்றுதான் என்று தனது உள்ளார்ந்த அனுபவத்தைக் கூறுகிறார் மருத்துவர் எஸ். கல்பனா. ஆர்.ஏ. புரம் பகுதியைச் சேர்ந்தவர்.

சென்னையில் உள்ள அனைத்துக் குழாய்களும் வெகு வரைவில் வறண்டு போகப் போகிறது. கல்பனாவைப் போன்று மருத்துவக் குடும்பத்தில் இருந்து வந்தவராக இருந்தாலும், ஆர்.ஏ. புரம் குடிசைப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் எல்லோருக்கும் இனி ஒரு பொதுப் பிரச்னை குடிநீர்தான்.

இன்னும் சென்னையின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைக் கூட தாண்டவில்லை. ஆனால் அதற்குள் ஆர்.ஏ.புரம் பகுதியில் மிக மோசமான குடிநீர் பஞ்சம் வந்துவிட்டது. இது கடந்த 10 ஆண்டுகளில் பார்த்திராத ஒரு பிரச்னை. தற்போது இப்பகுதிக்கு 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது.

140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017ம் ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்ட போது கூட தினமும் தண்ணீர் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த ஜனவரி முதல் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. அதுவும் குறைந்த வேகத்தில் வருவதால் ஒரு பக்கெட் தண்ணீர் நிரப்ப பல மணி நேரம் ஆகிறது என்கிறார் ஒரு பெண்மணி கண்ணீரோடு.

பல ஆயிரம் செலவு செய்து மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைத்தும் பயனில்லாமல் போய்விட்டது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையே இல்லையே என்று கலங்கும் ரங்கராஜன், இதே மைலாப்பூரில் பாருங்கள், குடிநீர் பஞ்சமே இருக்காது, அங்கிருக்கும் கோயில் குளங்களில் தண்ணீர் சேமிக்கப்படுவதன் மூலம் நிலத்தடி நீரும் வற்றவில்லை. ஆனால் எங்கள் பகுதியில் பக்கிங்காம் கால்வாய் திட்டம் சரியாக பராமரிக்கப்படாதததால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார்.

பணக்காரர்களுக்கும் சரி ஏழைகளுக்கும் சரி, நிலத்தடி நீர் கைவிரித்துவிட்டாலும், பணக்காரர்கள் அதிக பணம் செலவிட்டு நீரை வாங்குவார்கள். ஏழைகளின் நிலை.. அரசை நம்பித்தானே இருக்கிறோம் என்கிறார்கள் சில குடிசைப் பகுதி மக்கள்.

சென்னை மாநகர் ஆண்டு தோறும் சந்திக்கும் பிரச்னைதான் குடிநீர் பஞ்சம் என்பது. ஆனால் இதனை சமாளிக்க இதுவரை நிரந்தரத் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. அவ்வப்போது கிணறுகளில் இருந்து நீரை எடுத்து வந்து தற்காலித் தீர்வைக் காண்பதை விட்டுவிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறார் குடிநீர் நிபுணர் எல். சுப்ரமணியன்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு நீர்நிலைகளையும் ஒவ்வொருத் துறை பராமரிக்கிறது. அதாவது சென்னையைப் பொறுத்தவரை குளங்களை மாநகராட்சியும், ஏரிகளை பொதுப் பணித் துறையும் நிர்வகிக்கின்றன.

ஆனால், நீர்நிலைகளை பராமரிப்பதில் இன்னும் பல துறைகள் ஈடுபட வேண்டும். அப்போதுதான் உரிய பலன் கிடைக்கும். ஒரு ஏரியில் தண்ணீர் நிரம்பியிருக்கும் போது அதனை தூர்வார அதற்கு ஏற்ற கருவி பயன்படுத்தப்படும். அந்த இயந்திரம் தண்ணீரில் மிதந்தபடி சென்று தூர்வாரும் பணியை மேற்கொள்ளும். ஆனால் பொதுப் பணித் துறையினர் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்த வழியில்லை. இந்த இயந்திரத்தை வாங்க வேண்டும் என்றால் ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை செலவாகும். ஆனால்தான் ஏரிகள் வறண்ட பிறகு ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு தூர்வாறப்படுகிறது. 

பொதுவாகவே நீர்நிலை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள், ஏரிகளை தூர்வாருவதில்  அதிக அக்கறை செலுத்துவதில்லை. இதுபோன்ற பணிகளை செய்து வரும் தன்னலமற்ற அமைப்பின் நிர்வாகி சுப்ரமணி கூறுகையில், சென்னையில் மட்டும் சுமார் மூன்று ஆயிரம் நீர்நிலைகள் உள்ளன. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 90 சதவீத நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் உள்ளன. பல கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டாலும், அதன் மூலம் ஒரு சில ஏரிகள் மட்டுமே பயன்பெறுகின்றன.

கடந்த ஆண்டு போரூர் ஏரியை தூர்வார ரூ.200 கோடியும், சேத்துப்பட்டு ஏரியை தூர்வார ரூ.42 கோடியும் கண்டிகையில் உள்ள ஏரிகளைத் தூர்வார ரூ.200 கோடியும் ஒதுக்கப்பட்டது என்றும் சுப்ரமணி தெரிவித்துள்ளார்.

சென்னை மெட்ரோ குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வாரிய அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதாகவும், தற்போது 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறைதான் ஆர்.ஏ.புரம் பகுதிக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்கள்.

இந்த ஆண்டு பருவ மழை 54 சதவீதம் பற்றாக்குறையுடன் முடிந்துள்ளது. எனவே 2017ம் ஆண்டு கோடைக்காலம் எப்படி இருந்ததோ அதே நிலைதான் மீண்டும் ஏற்படும். ஒவ்வொரு நாளும் சென்னைக்கு 850 மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. தற்போது பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்தும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்தும், விவசாயக் கிணறுகளில் இருந்தும் குடிநீர் எடுக்கப்பட்டு 650 மில்லியன் லிட்டர் நீர் விநியோகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com