கைதிகளின் டைரி: தூக்கு தண்டனை பெற்றவர்களின் கண்ணீர் நிறைந்த மறுபக்கம்!

மனம் திருந்த வாய்ப்பே இல்லை, இவர்கள் வாழவே தகுதியில்லை என்பதை நிரூபிக்கும் குற்றங்களுக்காக வழங்கப்படுவதே தூக்கு தண்டனை. 
கைதிகளின் டைரி: தூக்கு தண்டனை பெற்றவர்களின் கண்ணீர் நிறைந்த மறுபக்கம்!

மனம் திருந்த வாய்ப்பே இல்லை, இவர்கள் வாழவே தகுதியில்லை என்பதை நிரூபிக்கும் குற்றங்களுக்காக வழங்கப்படுவதே தூக்கு தண்டனை. 

ஆனால், மற்ற எந்த தண்டனையை விடவும், தூக்கு தண்டனைதான் பல குற்றவாளிகளுக்கு மன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்த கட்டுரையின் இறுதியில் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தத்தா கைதாகும் போது அவருக்கு வயது 20. கைது நடவடிக்கை, விசாரணை முடிந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றத்துக்காக காத்திருக்கும் தத்தாவுக்கு தற்போது வயது 32.

தூக்கு தண்டனை பெற்று சிறையில் காலம் தள்ளுவது என்பது மிகக் கொடுமையான விஷயமாகும். ஆனால், அதே சமயம், அந்த சொற்ப(?) நாட்களை அதாவது தங்களது வாழ்வின் மிச்சத்தை சிறப்பாக வாழவே ஒவ்வொரு கைதியும் விரும்புவார். தத்தாவும் தான் குழந்தையாக இருந்த போது மிகவும் விரும்பிய ஒன்றைத்தான் செய்து வருகிறார். அதுதான் பள்ளிக்குச் செல்வது.

தூக்கு தண்டனை பெற்ற மிகக் குறைந்த வயது நபரான தத்தா, முழுக்க முழுக்க பள்ளிப் படிப்பில் தனது கவனத்தை செலுத்துகிறார். தினமும் காலையில் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலையில் தனது சிறை அறைக்குத் திரும்புவார். சிறைக் கைதியாக இருக்கும் போது தான் அதிகமான விஷயங்களைக் கற்றுக் கொண்டதாக பெருமையோடு கூறுகிறார். தில்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தின் அடிப்படையில் தத்தா தற்போது ஹிந்தியில் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டார். தனது பெயரை தான் எழுத முடியும் என்பதே அவருக்கு அதிக நிறைவைத் தருகிறது. தற்போது அவர் 5ம் வகுப்புப் பயின்று வருகிறார்.

தத்தாவைப் போலவே ஹர்கிஷனும் பலாத்காரக் கொலைக்காக கைதாகி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர். அவர் 31 வயதாக இருக்கும் போது சிறைச்சாலையிலேயே தற்கொலைக்கு முயன்றார். தற்போது தனது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுக்க முன்வந்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், நான் வாழும் நாள் வரை கடுமையாக உழைக்க விரும்புகிறேன். என்னைப் பற்றி நினைக்கும் போது என் குடும்பத்தாருக்கு நான் செய்த நல்ல விஷயங்கள் மட்டுமே நினைவுக்கு வர வேண்டும் என்கிறார்.

தச்சுத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஹர்கிஷண், சிறைக் கூடமே தனக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக இருந்ததாகவும், தனது சொத்தே தனக்குக் கிடைத்திருக்கும் அறிவுதான் என்கிறார்.

மிகவும் பிரபலமான தூக்கு தண்டனைக் கைதியாக இருந்த டெட் பண்டி, மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு ஒரு நாள் முன்னதாக தனது குற்றங்கள் அனைத்தையும் ஒப்புக் கொண்டு மரண தண்டனையை எதிர்கொண்டார். பெரும்பாலான மரண தண்டனைக் கைதிகள் இப்படித்தான் செய்வார்கள். 

இன்னும் சிலர் தத்தா மற்றும் ஹர்கிஷனைப் போலவே தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டு, புதிய வாழ்க்கையை ஆர்வத்தோடு வாழவும் செய்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் இவர்கள் தங்களது மிச்ச காலத்தையாவது மனம் திருந்தி வாழ நினைப்பது வரவேற்கத்தக்கதே. 

இது பற்றி கருத்துக் கூறுகையில், எத்தனையோ தண்டனைகள் இருந்தாலும் தூக்கு தண்டனைதான் பலருக்கும் மனமாற்றத்தை ஏற்படுத்துவதாக வழக்குரைஞர்கள் கூறுகிறார்கள்.

இதில், கைதிகளுக்கு எதிராக நடந்த சில அத்துமீறல் பற்றிய புள்ளிவிவரங்கள் இதோ..
80% கைதிகள் காவல்துறை காவலில் துன்புறுத்தப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

258 கைதிகளில் 166 பேர் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.

92 பேரில் 72 பேர் காவல்துறையினரின் துன்புறுத்தல் காரணமாகவே குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும், 191 பேரில் 185 பேருக்கு வழக்குரைஞர் வைக்கும் வழி இல்லாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தூக்கு தண்டனை பெற்ற மொத்தக் குற்றவாளிகளில் 23% பேர் பள்ளிக்குச் செல்லாதவர்கள், 61% பேர் பள்ளிப் படிப்பை முடிக்காதவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com