Enable Javscript for better performance
Bengaluru woman teaches bharatha natiyam- Dinamani

சுடச்சுட

  

  பரதக் கலையை வளர்க்கும் பெங்களூருவாழ் தமிழ் பெண்

  By மணிகண்டன் தியாகராஜன்  |   Published on : 25th July 2019 06:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  1

   


  பரதநாட்டியம் நடனங்களில் மிகவும் தொன்மை வாய்ந்தது. தமிழகத்தின் பூர்விகச் சொத்து. இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பரதநாட்டியம் பிரபலமானது. இன்று யோகாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது பாரம்பரிய நடனக் கலைகளுக்கும் கொடுக்கலாம். அதிலும் குறிப்பாக பரதநாட்டியம் என்பது உடலையும், மனதையும் நேர்படுத்தும் கலை. பாவம், ராகம், தாளம் ஆகியவற்றை குறிப்பதே பரதம்.

  பரதநாட்டியம் 2000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. பிரம்மன் பரத முனிக்கு பரதத்தை பயிற்றுவித்ததாகவும் கதைகள் உள்ளன. சிலப்பதிகாரத்திலும் பரதக் கலை குறித்து குறிப்புகள் உள்ளன. கர்நாடகத்தில் உள்ள படாமி குகைகளில் நடராஜரின் பரத நாட்டிய வடிவம் உள்ளது.

  படாமி குகைகள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும். நம் தமிழகத்தில் பரத நாட்டியக் கலையை பிரதிபலிக்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

  பொறியியல் படித்து நல்ல சம்பளத்தில் கிடைத்த வேலையையும் பரதநாட்டியத்தின் மீது இருந்த ஈடுபட்டால் விட்டுவிட்டு தற்போது பரதக் கலையை பயிற்றுவித்து வருகிறார் பெங்களூரைச் சேர்ந்த தமிழ் பெண் உமா மகேஸ்வரி. அவரிடம் உரையாடியதிலிருந்து: 'பிறந்து வளர்ந்தது பெங்களூரில்தான். அப்பா, அம்மா தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 6 வயதாக இருக்கும்போதே பரத நாட்டிய கலையை பயிலத் தொடங்கிவிட்டேன். எனது முதல் குரு, பத்மினி ரவி. இவர் கர்நாடகத்தில் புகழ்பெற்ற முன்னணி பரதநாட்டியக் கலைஞர். இவரிடம் பரதம் கற்றுக்கொண்ட தம்பதியர், ரசிகா ஃபவுண்டேஷன் என்ற நடன பயிற்சி பள்ளியைத் தொடங்கினர்.

  அங்கு என்னை எனது குரு பத்மினி ரவி அனுப்பி வைத்தார். அங்குதான் இளம் வயதிலிருந்து நடனம் கற்றுக் கொண்டேன். ஆண்டுதோறும் நடக்கும் பரத நாட்டிய போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றிருக்கிறேன். வேறு மாநிலங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்திருக்கிறேன். பரதத்தை முழுமையாகக் கற்றுக் கொண்டது அங்குதான். பின்னர் பஜனைப் பாடல்களும் கற்றுக் கொண்டேன். இசையும், நடனமும் என் வாழ்க்கையின் ஓர் அங்கமானது.

  பள்ளி, கல்லூரியில் படித்த காலத்தில் பல போட்டிகளில் பங்கேற்று பரதநாட்டியத்தில் பரிசுகளைப் பெற்றுள்ளேன்.  பணிபுரிந்த நிறுவனத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பரதம் ஆடியிருக்கிறேன். பின்னர், திருமணம் நடைபெற்றது. கணவர் ஸ்ரீநாத், இங்கிலாந்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.

  திருமணத்துக்கு பிறகு, எனது வேலையை விட்டுவிட்டு, அவருடன் இங்கிலாந்து சென்றேன். அங்கு  திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு இருக்கிறது.  அங்கு பாரத் ஹிந்து சமாஜ் என்ற அமைப்பில் என்னை தன்னார்வலராக இணைத்துக் கொண்டேன்.

  பூஜைகள், பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டேன். அந்த அமைப்பில் குஜராத், பஞ்சாப் என பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் உறுப்பினராக இருந்ததால், அவர்களிடம் இருந்து அந்த மாநிலங்களின் பாரம்பரிய நடனத்தையும் கற்றுக் கொண்டேன். தர்பா, பாங்கரா ஆகிய நடனங்களையும் கற்றுக் கொண்டேன்.

  இங்கிலாந்தில் இருக்கும்போது, சில நிகழ்ச்சிகளுக்கும் நடன இயக்குநராக இருந்தேன். அங்கிருந்துதான் பரதம் பயிற்றுவிப்பாளராக ஆனேன். இங்கிலாந்தில் தீபாவளி, பொங்கல் ஆகியவை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அப்போது நடைபெறும் நிகழ்ச்சிகளில் எனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறேன்.  அதன்பிறகு, பெங்களூரு திரும்பினோம்.

  தற்போது பரதம் பயிற்றுவிப்பதை முழு நேர பணியாக செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு குழந்தை பிறந்தபோது சகோதரி கீர்த்தனா பெரும் உதவியாக இருந்தார். அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளிலும், பள்ளிகளிலும், நடனப் பயிற்சி பள்ளிகளிலும் நடனம் பயிற்றுவிக்கிறேன்.  என்னிடம் நடனம் கற்றுக் கொண்ட குழந்தைகள் பல போட்டிகளில் கலந்துகொண்டு விருதுகளை வென்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி.

  3 வயது முதல் 45 வயது வரையிலானவர்கள் என்னிடம் பரதம் கற்றுக் கொள்கிறார்கள். ஜாதி, மதம், மொழி, பாலினம் எதுவும் பரதக் கலையை கற்றுக் கொள்வதற்கு தடையாக இருக்கக் கூடாது என்று கருதுகிறேன். பரத நாட்டியம் மிகச் சிறந்த உடற்பயிற்சியும் ஆகும்.உடற்பயிற்சி கூடங்களுக்குச் செல்வதைக் காட்டிலும் நடனப் பயிற்சி செய்வது சிறந்தது என்பது எனது கருத்து.

  எனது பெற்றோரால்தான் பரதம் மட்டுமல்ல நீச்சல், பாடல் உள்ளிட்டவற்றையும் கற்றுக் கொள்ள முடிந்தது. இளம் வயதிலேயே என்னை மிகவும் அவர்கள் ஊக்கப்படுத்தினர். திருமணத்துக்குப் பிறகு கணவரின் பெற்றோர்களும் உற்சாகம் அளித்தனர். கலையில் ஆர்வமுள்ள குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். அதே நேரம் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால் வற்புறுத்தவும் கூடாது என்று கூறிய உமா மகேஸ்வரியிடம் கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகளும் பரதம் கற்று வருகிறார்கள்.

  உங்கள் கலைப் பணி தொடர வாழ்த்துகள்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai