நான் ஆசைப்படுவதெல்லாம் என் குழந்தைகள் படிக்க வேண்டும் என்றுதான்! கஸ்தூரியின் கண்ணீர் கதை!

‘நான் இப்போது விடுதலை அடைந்து விட்டேன். நான் ஆசைப்படுவதெல்லாம் என் குழந்தைகள் படிக்க வேண்டும் என்றுதான்.
நான் ஆசைப்படுவதெல்லாம் என் குழந்தைகள் படிக்க வேண்டும் என்றுதான்! கஸ்தூரியின் கண்ணீர் கதை!

‘நான் இப்போது விடுதலை அடைந்து விட்டேன். நான் ஆசைப்படுவதெல்லாம் என் குழந்தைகள் படிக்க வேண்டும் என்றுதான். எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அதனால, என்னோட உரிமைகள் என்ன என்று எனக்குத் தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்தேன். என்னை மாதிரி இல்லாமல் என் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், படித்தால்தான்   என்னைப் போல் அவர்கள் ஏமாற மாட்டார்கள். கொத்தடிமை முறையில் போய் விழ மாட்டார்கள். அவர்களின் வாழ்க்கைக்காக இன்னொருவரின் தயவை எதிர்பார்க்க மாட்டார்கள். ஒருமுறை அவர்கள் படிக்க கற்றுக் கொண்டால், அவர்களுக்கு என்றென்றும் விடுதலைதான்.’ 

கஸ்தூரி என்ற ஒரு தாயின் இதயபூர்வமான குரல் இது. அவர் மூன்று குழந்தைகளின் தாய். ஒரு செங்கல் சூளையிலிருந்து கஸ்தூரி தனது குடும்பத்தோடு 2008 மார்ச் மாதம் மீட்கப்பட்டார். ஒரு எளிய குடும்பத் தலைவி அவர். முகத்தில் எப்போதும் புன்னகையோடு மலர்ந்திருப்பார். ‘முதலாளியின்’ ஏவல்களைக் கேட்கிற, கொத்தடிமை முறையில் மாட்டிக் கொண்டவர் அவர். அந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தனக்கான முடிவுகளை சுதந்திரமாக தானே எடுக்கும் திறன் கொண்டவராக மாறியிருக்கிறார். 

தான் மீட்கப்பட்டதிலிருந்து வாழ்க்கை எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதைப் பற்றி பேசினார். கொத்தடிமையிலிருந்து தான் மீட்கப்பட்டதில் மகிழ்ச்சியடையும் அதே நேரத்தில், கொத்தடிமையிலிருந்த தன் வாழ்வு பற்றிய கடந்த கால நினைவுகளை அடிக்கடி நினைவுகூர்ந்தார்.

கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்ட புதிதில், அவர்களிடம் பொதுவாக இத்தகைய மனநிலை இருக்கும். விடுதலை தருகிற கொண்டாட்டம் ஒரு புறம் இருக்கும். அது இருந்தாலும் அவர்களின் மனதில் ஒரு நிழலாக பின்னணியில் பழைய கொத்தடிமை நிலையின் நினைவுகள் நீடிக்கும். இப்படிப்பட்ட சூழலில் அவர்களின் விடுதலையை யதார்த்தமான உண்மையாக மாற்றுவது என்பது பெரிய பணி. பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுக்கான  ஊழியரும் அதையே நோக்கமாக கொண்டு முயற்சி செய்தால்தான் அந்த பணியை சிறப்பாக செய்ய முடியும்.  

கஸ்தூரியும் அவரது குடும்பமும் அவரது மகளின் திருமணத்துக்காக ரூபாய் 95 ஆயிரத்தைக் கடனாக வாங்கினார்கள். அதற்கான முன்பணத்தைக் கட்டுவதற்காக அவரது கணவர் வெங்கடேசும் மகன்களும் கணியம்பாடியில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்யப் போனார்கள். அவர்கள் வாங்கிய கடனுக்கான  அடமானமாக அவர்கள் தங்களது நிலத்தின் பட்டாவை செங்கல் சூளை உரிமையாளரிடம் அடகு வைத்தனர்.

முதல் இரண்டு மாதங்களுக்கு ஒன்றும் பிரச்னையில்லை. உரிமையாளர் அவர்களை மதிப்பும் மரியாதையும் கொடுத்து நடத்தினார். அவர்களுக்கான கூலியையும் கொடுத்தார். கல்யாணம் பண்ணிக் கொடுத்த பெண் தாய்மை அடைந்ததால் அவளுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்ய ஐந்தாயிரம் ரூபாய் கேட்டபோதுதான் தங்களின் தர்மசங்கடமான சூழ்நிலையை அவர்கள் புரிந்து கொண்டனர். தங்களின் முதல் பேரக் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்ணைக் காண சொந்த ஊருக்குப் போக வேண்டும் என்று கேட்டபோது அவர் அனுப்ப முடியாது என்று சொல்லி விட்டார்.  

பொதுவான பாரம்பரிய வழக்கப்படி, பெண்கள் தாய் வீட்டில்தான் தங்களின் முதல் பிரசவத்துக்கு வருவார்கள். தாய்மையின் கடைசி மாதங்களின் சிரமத்தை தாங்கிக்கொள்ள அவர்கள் பெற்றோருடன் இருப்பார்கள்.

இந்த மாதிரியான நேரங்களில் வயிற்றில் குழந்தையைச் சுமக்கும் மகள்களுக்கு அம்மாமார்கள் அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை சமைத்துத் தருவார்கள். கஸ்தூரிக்கு மனம் உடைந்து போனது. அவரது மகளது சந்தோஷமான காலகட்டத்தில்  அவரால் தேவையானதை செய்து தரமுடியவில்லை.

தன்னந்தனியாக கஸ்தூரி தனது மகளைக் கூட்டிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு பிரசவம் பார்க்கப் போனார். அவரது கணவரையும் மகன்களையும் வேலை பார்க்கும் இடத்திலிருந்து அனுப்ப அதன் உரிமையாளர் மறுத்து விட்டார்.

கையில் பணம் இல்லாததால் தன்னிடம் இருந்த கடைசி நகையையும் அடகு வைத்தார் கஸ்தூரி. வேலை செய்யும் இடத்தில் என்ன ஆச்சு என்பதை அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

குழந்தை பிறந்த பிறகு அம்மா, அப்பாவோடு இருப்பதற்காக வந்த பெண்ணையும் கஸ்தூரியால் நன்கு பார்த்து கொள்ள முடியவில்லை. அவளது மகள் புதிதாக பிறந்த கைக்குழந்தையோடு ஒன்பதாவது நாளிலேயே மாமியார் வீட்டுக்குப் போய்விட்டார்.

‘எனது மனசே உடைந்து போனது. இது என்னோட ஒரே பெண்ணு. அவளுக்கு முதல் பிரசவம். என்னோட முதல் பேரக் குழந்தை. அவர்களுக்கு நல்லா வாய்க்கு ருசியாக என்னால பொங்கிப் போட முடியல. அதுக்குப் பதிலா அவங்கள அனுப்பி வைக்கிற மாதிரி ஆயிருச்சே’  என்கிறார் கஸ்தூரி.

அடுத்தடுத்து வந்த நாள்கள் மேலும் மேலும் மோசம்தான். வெங்கடேஷ்க்கு உடம்பு சரியில்லாமல் போனது. அவரை மருத்துவம் பார்த்துக் கொள்ள உரிமையாளர் மறுத்து விட்டார். உடம்பு ரொம்ப மோசமாகப் போன பிறகுதான் அவரால் சொந்த ஊருக்குப் போக முடிந்தது. அவரது மாமியாரின் உதவியோடு அவர் உடம்பைத் தேற்றிக் கொண்டார். அவரது உடம்பு சரியாவதற்கு முன்பாகவே உரிமையாளர் ஆட்களை அனுப்பி விட்டார். உடனடியாக வந்து வேலையில் சேர வேண்டும் என்று அவசரப்படுத்தினார்.

பள்ளிக்குப் போய்  படிக்க அவரது குழந்தைகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இன்றைக்கும் கூட அவரது குழந்தைகளின் படிப்பு சில வருடங்கள் வீணாகிப் போய் விட்டது. மூத்த பையன் திரும்பவும் பள்ளிக்குப் போக மாட்டேன்னு சொல்லிட்டான். அவனது எதிர்காலம் என்னாகும்னு தெரியல.

உறவுக்கார  பெண்ணின் சாவு, மாமியாருக்கு ஏற்பட்ட பெரிய விபத்து என்பது உள்ளிட்ட பல முக்கியமான தருணங்களில் கஸ்தூரியோ அவரது குடும்பமோ பங்கேற்க முடியவில்லை. கணவரின் உடல்நிலை  மரணப் படுக்கை வரை போய் மீண்ட நேரத்திலும் அவரால் உடன் இருக்க முடியவில்லை. அந்த வேலைச் சூழலிலிருந்து  வெளியேறி விட வேண்டும் என்று கஸ்தூரி ஏங்கினார். ஆனால், உரிமையாளரின் செல்வாக்கும் அவரது கோபமும் கஸ்தூரியை எதுவும் செய்ய முடியாமல் முடக்கிப் போட்டது.

அவர்களின்  பிரச்னைகள்  2018 மார்ச் மாதத்தில்  மாவட்ட ஆட்சியரகத்தின் காதுகளுக்கு எட்டின. லட்சுமி, வெங்கடேஷ், சக்திவேல் ஆகியோர் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு விடுதலைப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

வெங்கடேஷூம் கஸ்தூரியும் தற்போது தினக் கூலி தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களது இளைய மகன் பள்ளிக்குப் போகிறான். கஸ்தூரியும் கூடை முடைவதற்கு கற்றுக் கொள்கிறார்.

அவரது மாமியார் மரணப் படுக்கையில் இருந்த போது கடைசி நாள்களில் அவரைக் கவனித்துக் கொள்ள முடிந்ததில் கஸ்தூரிக்கு சந்தோஷம். கவனிக்கப்படாத அவரது காயங்களை அவர் ஆற்றினார்.

அவரை மரியாதையான முறையில் அடக்கம் செய்தனர். அவர்களுக்கு கிடைத்த ஆசிர்வாதமாக அதை உணர்ந்தனர்.

கொத்தடிமை முறையில் மாட்டிக் கொண்டது தனது மூத்த மகனை அவனது ஆயுளுக்கும் பாதித்திருப்பது கஸ்தூரிக்கு கவலையாக இருக்கிறது. படிப்பு மீது அவருக்கு பெரிய மரியாதை இருக்கிறது. ஒருவரின் வாழ்க்கையையே அது மாற்றிவிடும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். அவரது மகன்களை தைரியமானவர்களாக வளர்ப்பதுதான் இப்போதைக்கு அவரது ஒரே கனவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com