Enable Javscript for better performance
கடலோரக் கிராமத்தின் கதை சொல்லி உருவான கதை ..!- Dinamani

சுடச்சுட

  

  கடலோரக் கிராமத்தின் கதை சொல்லி உருவான கதை ..!

  By பிஸ்மி பரிணாமன்  |   Published on : 12th May 2019 12:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  THOPPIL_MUHAMMATHU_MEERAAN_1

   

  தமிழ் மொழிக்கு  பங்களிப்பினை  அண்மைக்காலமாக  செய்து வந்த இஸ்லாமியர்களில்  முக்கியமானவர்கள் மணவை முஸ்தபா, கவிக்கோ அப்துல் ரகுமான். இந்த இருவரும் இந்த உலகை விட்டு  விடை பெற்றுக் கொண்ட போது அடுத்த ஆளுமையாக  நின்றவர்  தோப்பில் முகம்மது மீரான். அறிவியல் தமிழுக்கு  அடையாளமாக மணவை இருந்தார்.  உரைநடை, வசன கவிதை, பாரம்பரிய கவிதைக்கு ஒரு மைல் கல்லாக   கவிக்கோ.   தன்னோடு வாழ்ந்த தனது மதத்தைச் சேர்ந்தவர்களின்  நான்கு  பரிமாணங்களையும்  வட்டார  சொல்லாடலில்  அப்பட்டமாக  வார்த்தவர்  தோப்பில் முகம்மது மீரான்.  எதிர்ப்புகளில் வளர்ந்த  தோப்பிலின்  இழப்பு  தமிழ் மற்றும் இஸ்லாமிய இலக்கியத்திற்கு  ஒரு பேரிழப்பாகும்.

  'ஒரு கடலோர கிராமத்தின் கதை‘, 'சாய்வு நாற்காலி' 'அஞ்சுவண்ணம் தெரு',  போன்ற படைப்புகள்    தோப்பிலின்  விசுவரூபம் காட்டும் காலக் கண்ணாடிகள்.

  அரைநூற்றாண்டிற்கு முன்பு தெற்குத் திருவாங்கூரின் எல்லை முடிவில் அமைந்திருந்தது. தேங்காய்ப்பட்டினம். கடலோர கிராமம்.  முகம்மது மீரானின் குழந்தைப் பருவம்  தேங்காய்ப்பட்டினம்  மடியில்  கடந்தது. முதலில் மலையாளத்தை கற்றவர்  பிறகு தமிழையும் கற்றார்.

  தோப்பிலுக்கு வார்த்தை ஜாலங்களில்  நம்பிக்கையில்லை. அதீத  கற்பனையும் பிடிக்காது. தன்னைச் சுற்றி  நடந்தவைகளை  தமிழும் கொஞ்சம் மலையாளமும் கலந்த  மொழியில்  நேர்த்தியாக எழுதி  தனக்கென்று ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கியவர். "இத்தனை எளிமையாக எழுதியிருக்காரே... நாமும்  எழுதலாம் போலயே.." என்று நினைக்க வைக்கும்   மண்ணின் வாசனையை வெளிப்படுத்தும்  மொழிநடை தோப்பிலுக்குச் சொந்தமாக இருந்தது.

  அந்தக் காலத்தில் பிறந்த நாள்  என்பது  குத்து மதிப்பாகதான் இருக்கும்.  பள்ளியில் சேரும் போது ஆசிரியர்  எழுதும் தேதிதான் பிறந்த நாளாக பின்னர் மாறும். தோப்பில் கதையும் அப்படித்தான். அவர் பிறந்தது  1944 செப்டம்பர் 26ஆம் நாள். "அது சரியாகணும்னு இல்லை.." என்று தோப்பில் சொல்வார். 

   

  எழுத்தாளனாக பரிணமித்தது  குறித்து  தோப்பில்  அன்று சொன்னது:

   " வாப்பா (தந்தை) பெயர்  அப்துல் காதர்.  கருவாட்டை (உப்பிட்டு உலர்த்திய மீன்) இலங்கைக்கு ஏற்றுமதி செய்து வந்தார். சுறாமீனின் சிறகுகளுக்குச்  சிங்கப்பூரில் நல்ல மார்க்கெட். வாப்பா  அவற்றை  வாங்கிச் சிங்கப்பூருக்கு அனுப்பி வந்தார். இந்த வணிகம் காரணமாக, தேங்காய்ப்பட்டினத்தில் மிகவும் செழுமையான குடும்பமாக எங்கள் குடும்பம் இருந்தது,  அம்மா பெயர் ஃபாத்திமா. நாகர்கோவிலைத் தாண்டித்தான் தேங்காய்ப்பட்டினம் என்ற ஊர். அதை அடுத்து திருவனந்தபுரம் வந்துவிடும்.  நாங்கள் மொத்தம் 14 குழந்தைகள். வாப்பாவின்  முதல் திருமணத்தில் குழந்தைகள் பிறக்கவில்லை. அதனால்  இரண்டாம் திருமணம் கட்டாயமாகியது.  என்னை பள்ளியில் யார் சேர்த்தார்கள்... எந்த வயதில் சேர்த்தார்கள்.." என்று எனக்கு நினைவில்லை.

  கல்விக்கு முக்கியத்துவம் இல்லாத நாட்கள் அவை. பள்ளிக்கு தினமும் போக வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. எங்கள் இஷ்டம்தான்.  அப்பாவோ அம்மாவோ எங்களைப் பள்ளிக்கு அனுப்ப எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட வயதானதும் ஆசிரியர்கள் வந்து குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி அழைத்துக் கொண்டு போவார்கள். பள்ளியிலிருந்து  பசங்க  வீட்டிற்கு ஓடி  வந்தாலும் ஆசிரியர்கள் விடமாட்டார்கள். வந்து மறுபடியும் அழைத்துச் செல்வார்கள், அப்படி ஒருகாலம். இந்த சூழ்நிலையில்தான்   என் மூத்த சகோதரர் ஹசன்கான் படித்து  கல்லூரியில் ஆங்கிலப்  பேராசிரியராக ஆனார். 

  நான் கல்வி கற்ற பள்ளியின்   மேலாளர் அம்சி நாராயணப் பிள்ளை. தேங்காய்ப்பட்டினத்தில் வாழ்ந்து வந்த முஸ்லீம் குழந்தைகளைப் படிக்க வைத்து நல்ல நிலைமைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற ஆர்வம் அந்தப் பள்ளி ஆசிரியர்களுக்கு இருந்தது. ஆனால் மாணவர்கள் கொஞ்சம்கூட அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை - பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டும் என்ற அக்கறையோ விருப்பமோ அந்த மாணவர்களிடம் காணப்படவில்லை. மாணவர்களை ஒன்றாம் வகுப்பில் சேர்த்துவிட்டால் அங்கிருந்து உடனே வீட்டிற்கு ஓடிவந்துவிடுவார்கள். ஆனால் எனக்கு அம்சி பள்ளிக்கூடத்திற்குப் போக மிகவும் உற்சாகமாக இருந்தது. காரணம் அங்கு மாணவிகளும் படிக்க வந்ததும் ஒரு காரணம்.  பள்ளியில் கொண்டாடப்படும் விழாக்கள்  இன்னொரு காரணம்.  பள்ளி நாட்கள்தான் நாடகம், விளையாட்டில் ஈடுபாடு  ஏற்படுத்தியது.  நானும் அண்ணனும் படிக்கப் போவது  கொஞ்ச காலத்திற்கு வீட்டிற்குத் தெரியாமல்   இருந்தது. பள்ளி  நாடகத்தில் என்னுடைய மூத்த சகோதரன்  பெண் வேடம் போட்டு நடித்தார். அப்போதுதான் எங்கள் குட்டு வெளிப்பட்டது.  அண்ணன் நடித்தது  எங்கள் ஊரில் பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.   வாப்பா மிகவும்  கோபித்துக் கொண்டார்.  நாடகத்தில் நடித்ததின் பேரில் வாப்பா  சகோதரனிடம் இரண்டு மூன்று வருடம் பேசிக் கொள்ளவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

  படிப்பறிவற்ற வாப்பா  ஒரு குறுகிய வட்டத்தில் வாழ்ந்து வந்தார். ஆகையால் எங்கள் வீட்டில் குழந்தைகள் படிப்பதை அவர்  விரும்பவில்லை. 'படிச்சிட்டு நீ என்ன செய்யப்போற? பேசாம நீ எங்கூட வியாபாரம் செய்ய வந்துடுண்ணு' சொல்வார். வாப்பாவுக்கு  இஸ்லாமிய மதபோதனைகளையும், வியாபாரத்தையும் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை. அதே சமயம்,  கணக்கில் மிகவும் கில்லாடியாக இருந்தார்.

  அந்தக் காலகட்டங்களில்  எங்கள் ஊரில் நடக்கும்  சமயச் சொற்பொழிகளில்  "தலையில் முடி வளர்க்கும் இஸ்லாமியர்கள் பகலிலும் இரவிலும் பாவம் செய்பவர்களாக இருப்பார்கள் ஆங்கிலம் படிக்கக்  கூடாது.." என்று பேசுவார்கள். அந்த சொற்பொழிவுகளைக் கேட்டு வரும் வாப்பா வீட்டுக்கு வந்ததும்  அவர் கேட்டதை  எங்களிடம் கண்டிஷனா  சொல்வார். 

  என் சொந்த முயற்சியில்தான் உயர்கல்வி பயிலப் போனேன். அதைக்கூட என் தந்தை செய்யவில்லை.. 'ஃபர்ஸ்ட்  ஃபார்ம்'   (ஆறாம் வகுப்பு) சேர்ந்தபோது  பள்ளிக் கட்டணம் ஒன்னே கால் ரூபாய். அப்பா தரலை. பெரியம்மாதான்  (வாப்பாவின்  முதல் மனைவி)  அந்தப் பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தாங்க. பெரியம்மாவும்  எங்கம்மாவும், ஒரே வீட்லதான் தங்கியிருந்தாங்க.  அப்பவும் 'பள்ளிக்கூடத்துக்கு  போக வேண்டாம்'  என்று சொன்னார். பள்ளியில்  ஆசிரியர்கள் சொல்லித் தருகிற கதைகள்  மனதில் பசுமையாகப் பதிந்து கொண்டது.

  கல்வி அறிவு இல்லாவிட்டாலும் வாப்பா சரளமாகக் கதை சொல்லித் தருவார். நாங்கள் தூங்கப்போவதற்கு முன் எல்லாரையும் அழைத்து வைத்துக் கதை சொல்வதுதான் அவருடைய வழக்கம். 'நபிகளின் கதைகள்'... நாட்டு நடப்புகள்  குறித்து,  கிராமத்தின் மற்ற  குடும்பத்தைச் சார்ந்தவர்களுடைய வாழ்க்கை  போன்றவைகளையெல்லாம் கதையாக  அபிநயம் பிடித்து  ஏற்ற இறக்கத்துடன் சொல்வார். 'ஆராட்டு' என்ற  எங்கள் வட்டார உற்சவத்தை நாங்கள் பார்த்ததில்லை என்று  சொன்னால் போதும், 'கவலைப்படாதீங்க..' என்று சொல்லி அந்த நிகழ்ச்சியை அப்படியே அழகாக நடித்துக் காட்டுவார். குடும்பத்தில் எல்லா உறுப்பினர்களுமே அச்சமயத்தில் அதை சுவாரஸ்யமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். அனைவருக்குமே அது ரசிக்கும்படியாக இருக்கும். 

  என் தந்தை சொல்லித் தந்த கதைகள்தாம் என்னுடைய 'கடலோர கிராமத்தின் கதை'யாக   வந்தது. அல்லாமல் நானாக அதில் எதையும் சேர்க்கவில்லை.  என்னைப் படிக்க வேண்டாம் என்று வாப்பா சொல்லி வந்தாலும், ஒருவிதத்தில்  என்னை  எழுத்தாளனாக  மாற்றியதில் அவருக்கு பெரும் பங்குண்டு. பத்தாம் வகுப்பில் (SSLC) இரண்டு முறை தோல்வியடைந்துவிட்டேன். அப்போதெல்லாம் மூன்றாவது முறை தோல்வியடைந்துவிட்டால் பிறகு தொடர்ந்து படிக்க முடியாது. கடவுள் புண்ணியத்தில் மூன்றாவது முறை ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்ச்சி பெற்றேன். அதோடு எனக்குக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை உருவானது.

  நாகர்கோயிலில் அப்பாவிற்கு ஒரு கடை இருந்தது. அந்தக் கடையைப் பார்த்துக்கொள்ள என் மூத்த சகோதரியும் அவங்க கணவரும் அங்கு தங்கியிருந்தார்கள். அந்தச் சூழ்நிலை எனக்குச் சாதகமாக இருந்தது. கேரளா, திருச்சூரைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்ரீதரமேனன் ஐயா அப்போது அந்தக் கல்லூரியில் முதல்வராக இருந்தார். கல்லூரியில் படிக்க இடம்  காலி இல்லை  என்று  எனக்குப் பள்ளியில் சேர்த்துக்கொள்ள அனுமதியை மறுத்துவிட்டார்கள். என்னோடு படித்த ஒரு  மாணவன் கள்ளிக்கோட்டையில் ஃபரூக் கல்லூரியில் போய்ச் சேர்ந்து கொண்டான். அது எனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அந்த வருத்தம் தாங்காமல் அழுதுகொண்டே என் நிலைமையை எடுத்துக் கூறினேன்.

  எனக்கு மதிப்பெண் குறைவானதால் கல்லூரியில் இடம் கிடைப்பது  சிரமமாக இருந்தது. 'கூடுதலாக  எட்டு இடங்களை சேர்க்க  பல்கலைக்கழகத்தில் இருந்து அனுமதி  வர வேண்டும்.. அப்படி  வரும் போது அதிலொரு இடத்தை உனக்குத் தருகிறேன்' என்று உறுதியளித்தார். அப்படி ஒரு இடம் கிடைத்ததால்தான் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடிந்தது.

  எங்கள் கிராமத்தில் துவக்கப் பள்ளி இல்லாமல் போயிருந்தால் ஆரம்பக் கல்விகூட எனக்குக் கிடைக்காமல் போயிருக்கும். ‘அம்சி’ பள்ளி இல்லாமல் போயிருந்தால் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்க முடியாமல் போயிருக்கும். நாகர்கோயில் கடை இல்லாமல் போயிருந்தால் கல்லூரி கல்விக்குச் சேர்ந்து படிக்க முடியாமல் போயிருக்கும்.

  கல்லூரியில் படிக்கின்ற காலங்களில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நான் எடுத்துக் கொண்ட பாடம் பொருளாதாரம்  இரண்டாம் ஆண்டில் மொழியியல் எழுதித் தேர்ச்சி பெற்றுவிட்டேன். மூன்றாம் ஆண்டில் தான் Subject-ல் எழுத வேண்டும். ஆனால் இரண்டாம் ஆண்டு முடிந்ததும் வாப்பா  இறந்துவிட்டார். அதோடு வியாபாரமும் நின்று போனது. பிறகு சொத்தில் இருந்து கிடைத்த சொச்ச வருமானத்தில்தான் வாழ்ந்து வந்தோம். பணம் சம்பாதிக்க வேறு வழியில்லை.

  வாப்பா  இறக்கும்பொழுது நாங்க எல்லாரும் சிறுபிள்ளைகள். வீட்டில் பொருளாதாரப் பிரச்சனை வேற. இதற்கிடையில் என் மூன்றாம் ஆண்டுத் தேர்வு எழுதக் கல்லூரியில் அறுபது ரூபாய் பணம் கட்டவேண்டும். அன்றைய அறுபது ரூபாய் இன்றைய ஆறாயிரம் ரூபாய்க்குச் சமம். யாரிடமும் பணமில்லை. என்ன செய்வதென்று புரியவில்லை. தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் போய் கேட்டுப் பார்த்தேன். எங்கும் கிடைக்கவில்லை.

  அப்படி ஒருநாள் என் சொந்தக்காரரைப் போய் சந்தித்து விபரத்தைச் சொன்னேன். அவர் எனக்குச் சித்தப்பா முறை வேண்டும். ஆனால் கல்வியின் மீது அவருக்கிருந்த அலட்சியத்தாலும், வெறுப்பின் காரணத்தாலும் பணம் தர மறுத்துவிட்டார். அதன்பிறகு அந்தத் தேர்வு எழுதவே இல்லை. அந்த ஏக்கம் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்ட பிறகு கூடக் கல்வி மீது எனக்கு ஒரு விரக்தியை ஏற்படுத்தியது. அதன் பிறகு சில காலம் சும்மா இருந்தேன். பின் மிளகு வியாபாரம் செய்தேன். சில பிரச்சனைகள் காரணமாக  . எங்களோடு கொஞ்சம் விலகியிருந்த என் மூத்த சகோதரரோடு சேர்ந்து தேங்காய் எண்ணெய் வியாபாரம் செய்தேன். ஒன்றும்  செய்யாமல்  இருந்திருந்தால் வீணாக    சீட்டாட்டக் கும்பலில் போய் மாட்டிக்கொண்டிருந்திருப்பேன்.  அப்போதே எனக்குச் சமூக சம்பிரதாயத்தைப் பற்றி எழுத வேண்டுமென்று எண்ணம் இருந்தது.

  எதுக்காகவோ பள்ளி நிர்வாகிகள் கமிட்டியினரை அண்ணன் திட்டியிருக்கிறார். அதனால் அண்ணனை அவமானப்படுத்திப் பார்க்கப் பள்ளி நிர்வாகிகள்  ஊர்க்காரர்களைக்  கொண்டு . எங்களை  ஊரைவிட்டுத் தள்ளி வச்சிட்டாங்க. நெருங்கிய சொந்தக்காரர்கள்கூட எங்ககூட பேசல. அப்போது நான் மெட்ராஸ்ல ஒரு எண்ணெய்க் கடையில் சம்பளக்காரனாக வேலை பார்த்து வந்தேன். ஆனால் அங்கு என்னால் மனநிறைவோடு இருக்க முடியவில்லை. காரணம் எங்க குடும்பத்தை ஊர்ல தள்ளி வச்சுட்டதாலயும், அவங்க அவமானப்பட்டதாலயும், என் மனது மிகவும் வேதனைக்குள்ளானது. எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் ஜமாத்து ஊர்த் தலைவரின் வீடு. அந்த ஊரிலுள்ள இஸ்லாம் மக்கள் அனைவருமே ஜமாத்தில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். அதனால் அனைவருமே எங்களைக் குறை சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அப்ப எங்களுக்கிருந்த ஒரே ஒரு பலம் கம்யூனிஸ்ட்காரர்களுடைய ஆதரவு மட்டுமே. அவர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள்.அப்பொழுது நான் ஒரு கதை எழுதினேன். அது தேங்காய்ப் பட்டினம் முழுவதும் விற்பனையாயினது; ஜமாத்து விசுவாசிகளுக்கு அது கோபத்தை ஏற்படுத்தியது. 

  எனக்கு யாரும் பெண் தர முன் வரவில்லை. தப்பித் தவறி  யாராவது பெண் தர முன்வந்தால். கிராமத்தில் உள்ள என் சமுதாய மக்கள். எதையாவது  சொல்லித்   தடுத்தார்கள். எனக்கு முப்பது, வயதாகியிருந்தது. போன இடங்களிலெல்லாம் எங்கள் குற்றங்களையும், குறைகளையும் சொல்லி எதிர்த்தார்கள். கடைசியில் ஜமாத்து இஸ்லாமியருடைய எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அதனை உதறிவிட்டு ஒருவர் தைரியமாகப் பெண் தர முன் வந்தார். என்தி ருமணம் பக்கத்திலுள்ள ‘எனயம்’ என்றொரு கிராமத்தில்தான் நடந்தது. அவள் பெயர் ஜலீலா (மனைவி) கொஞ்சம் படித்திருந்தாள். அன்றைய சூழ்நிலையில்  பெண்களுக்கு  குறிப்பாக இஸ்லாமிய  பெண்களுக்கு கல்வி என்பது பெரிய விஷயம்.

  வாப்பா சொன்ன  கடலோரக் கிராமத்தின் கதையைத்தான் நான் எழுதி நாவலாக்கினேன். பாராட்டுக்கள் கிடைத்ததும் வாப்பா  சொன்ன ஏனைய  கதைகளைத் தமிழில்  வெளியிட்டேன். அந்த நாவல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலெல்லாம், மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. மூன்றாவதாகக் கூனன் தோப்பு என்ற நாவல்.  1965-வாக்கில்  எழுதியதை 1993 - ஆம் ஆண்டில் வெளியிட்டேன்.  அப்போது அந்த நாவலை யாரும் வெளியிட முன்வரவில்லை.

  இனக்கலவரம் இல்லாத காலத்தில் மீனவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் எப்போதும் ஏற்படுகின்ற ‘தொழில்’ மோதல் பற்றிய கதை அது. இனக்கலவரத்துக்குப் பிள்ளையார் சுழிபோட்டு விடக்கூடாது என்று கருதி அந்தக் கதையை யாரும் பிரசுரமாக்க முன் வரவில்லை.

  'கூனன் தோப்பு', 'துறைமுகம்', 'சாய்வு நாற்காலி' போன்ற கதைகளை நானே  வெளியிட்டேன். கடலோரக் கிராமத்தின் கதை காரணமாக  முஸ்லீம் சமுதாயத்திற்குள் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று கருதி  பதிப்பாளர்கள் பலர்  என்னுடைய படைப்புகளை வாங்க மறுத்துவிட்டனர். கடலோரக் கிராமத்தின் கதை வெளி வந்த சமயத்தில் எனது சமுதாயத்தில்  பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

  நான் எழுதுவது எல்லோருக்குமே எதிர்ப்பாகத்தான் இருந்தது. அவன் எழுதுவது சரியான விஷயம்தான் என்று சொல்ல யாரும் முன் வரவில்லை.  அப்போதும் சமுதாயத்தில் நன்றாகப் படித்தவர்களும் இருந்தார்கள். அவர்களுக்குப் பின்தங்கிப்போன அந்தச் சமுதாயத்தைப் பற்றிப் புரிந்ததனாலோ என்னவோ அப்படியான ஒரு மாற்றம் தேவை என்ற அபிப்பிராயம் அவர்களுக்கிருந்தது. ஆனால் அவர்களை எல்லாம் எனக்கு நேரடியாகப் பழக்கம் இல்லை. அதனாலோ என்னவோ யாரும் எனக்கு உதவவில்லை.

  M.A. அப்துல் வஹாப் சாயிப் என்பவர் ஒரு பெரிய சிந்தனைவாதியாக இருந்தார். ‘திருக்  குரானை ’  தமிழில்  மொழி பெயர்ப்புச் செய்திருந்தார். அதுமட்டுமல்ல; நல்ல பேச்சாளரும் கூட அவர் என் எழுத்தைப் பாராட்டினார். அவர் போகும் இடங்களில் எல்லாம் என்னைப் பாராட்டிப் பேசிவந்தார். அவர்தான் என்னைத் தமிழில் எழுத ஊக்கப்படுத்தினார். அதுமட்டுமல்ல: என் கதைகள் முதன் முதலில் தமிழில் அச்சடித்து வெளியிட உதவியதும் அவரே. என் வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம் அப்துல் வஹாப் சாயிப்.  அவர் எங்க கிராமத்துக்காரர் அல்ல. கல்வி அறிவு இல்லாதவர்களும், கலை உணர்வில்லாதவர்களும் என்னை எதிர்த்தார்கள். முஸ்லீம் பேராசிரியர்கள்கூட என்னைப் பற்றி அவதூறு சொல்லிப் பரப்புவதில் விருப்பம் காட்டினார்கள்..

  எழுத்து வாழ்க்கையை உருவாக்குவதில் எழுத்தாளனின் சுற்றுவட்டார  சூழல்களுக்கு பங்குண்டு. ஓ.வி.விஜயன் ‘கசாக்கின் இதிகாசம்’ எழுதும்போது கசாக்கின் கிராமமும், அந்த வட்டார வழக்கு மொழியும், கலாச்சாரமும் அந்த நாவலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எங்கள் கிராமத்தில் ஐந்து விதமான முறையில் தமிழ் பேசக்கூடிய சமுதாயங்கள் வாழ்ந்து வந்தனர். மீனவர்கள் பேசுகின்ற தமிழ் அல்ல முஸ்லீம்கள் பேசுவது. நாடார்களுடைய தமிழ் அல்ல நாயர்மாருடைய தமிழ்; அதே போல் பறையர்கள், புலையர்கள் போன்றவர்களுடைய தமிழும் வித்தியாசமாகத்தான் இருந்தது. கடலோரக் கிராமத்தின் கதையை நான் முதலில் மலையாளத்தில் தான் எழுதினேன். பிறகு அது ஏனோ சரியாக அமையவில்லை. அந்த முயற்சியைக் கைவிட்டுத் தமிழில் எழுதினேன்.

  வைக்கம் முகம்மது பஷீரின் படைப்புகளை முழுமையாக வாசித்துள்ளேன். முஸ்லீம் சமூகத்தின் வாழ்க்கையைக் குறித்து அவர் எழுதியதைக் கண்டு நாமும் ஏன் அப்படி எழுதக்கூடாது என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. தேங்காய்ப்பட்டினமும் அந்த ஊர் முஸ்லீமின் மொழியும் பஷீருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அப்போது தமிழில் பஷீரை அதிகம் யாரும் வாசித்திருக்க வாய்ப்புமில்லை. தமிழில் நான் அதிகம் வாசித்தது சுந்தரராமசாமியின் புத்தகங்களும், கி. ராஜநாராயணனின் புத்தகங்களும்தான். நாட்டுப்புறக் கலைகள் குறித்த அவருடைய புத்தகம் என் கவனத்தை ஈர்த்தது. நம்முடைய மொழியில் எழுத வேண்டும். அது என் கிராமத்து மொழியில் எழுத வேண்டும் என்ற சிந்தனை மட்டும்தான். வாசிப்பு மூலம் எனக்குள் ஏற்படுத்திய ஒரு தாக்கம். எங்க ஊர் மனிதர்களுடைய வாழ்க்கையைச் சொல்ல இங்கு யாருமில்லை என்று எனக்குத் தோன்றியது அல்லாமல் இலக்கியத்தின் அகராதிகள் கற்றுக்கொண்ட ஒரு எழுத்தாளன் அல்ல நான்."

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai