Enable Javscript for better performance
David Santhakumar meets real mother after 40 yrs | 40 ஆண்டுகள் கழித்து பெற்ற தாயை சந்திக்கும் மகன்!- Dinamani

சுடச்சுட

  

  40 ஆண்டுகள் கழித்து பெற்ற தாயை சந்திக்கும் மகன்! நெகிழ்ச்சியான உண்மை சம்பவம்!

  By வனராஜன்  |   Published on : 05th November 2019 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sk3


  சென்னையில் காணாமல் போன சிறுவன் சுபாஷ் 20 ஆண்டுகள் கழித்து தாயை சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியடைச் செய்தது. இதே போன்று 40 ஆண்டு காலத்திற்குப் பிறகு மகன்  நீண்ட பாசப்போராட்டம் நிகழ்த்தி தனது அம்மாவை கண்டுபிடித்துள்ளார் அடுத்த மாதம்  அவரை நேரில் சந்திப்பார். 

  டென்மார்க்கை சேர்ந்தவர் டேவிட் சாந்தகுமார். அங்குள்ள வங்கி ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் டென்மார்க்கில் வசிக்கிறார். தன்னுடைய உண்மையான அம்மாவை பல ஆண்டு காலம் அலைந்து தான் கண்டுபிடித்திருக்கிறார் என்பதே  இந்தப் பாசப்போராட்டத்தின் கதை;  யார் இந்த டேவிட் சாந்தகுமார்? தஞ்சை பகுதியிலுள்ள அம்மாபேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி- தனலெட்சுமி தம்பதியினர். வறுமையின் காரணமாக 1979 -ஆம் ஆண்டு தங்களுடைய மகனை டென்மார்க்கில் உள்ள தம்பதிகளுக்குத் தத்து கொடுத்துவிடுகிறார்கள்.

  தத்தெடுத்த தம்பதிகள் அந்த சிறுவனுக்கு டேவிட் சாந்தகுமார் என்று பெயரிட்டு வளர்த்து நல்ல நிலைக்கு ஆளாக்கினர்.  டென்மார்க்கிலுள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஒருவருக்கும் டேவிட்டிற்கும் திருமணம் நடைபெற்றது.  ஒரு நாள் வளர்ப்பு மகனிடம் தாங்கள் வளர்ப்பு பெற்றோர் தான். உன்னுடைய பெற்றோர் தஞ்சையில் இருக்கிறார்கள் என்ற உண்மையைச் சொல்ல தவறவில்லை. வளர்ப்பு பெற்றோர் மற்றும் மனைவியின் அனுமதி பெற்று தன்னுடைய பெற்றோரை காண ஆறு ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்தார் டேவிட். 

  ஆண்டுதோறும் விடுமுறை நாட்களில் தமிழகம் வந்து தன்னுடைய தாயை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார். ஆனால், அவையனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. இறுதியாக சென்னை பல்லாவரத்தில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலமாகத் தத்துக் கொடுத்து இருப்பது தெரியவந்தது. 

  தத்து கொடுத்தவர்களின் முகவரியை கண்டறிந்து தஞ்சாவூர் அம்மாபேட்டை சென்றார். அங்கேயும் தன்னுடைய தாயை கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றமே அடைந்தார். இதனையடுத்து சட்ட உதவியை நாடினார். அப்போது தான் இன்னொரு உண்மை தெரியவந்தது. டேவிட் சாந்தகுமாருக்கு மூத்த சகோதரர் ஒருவர் இருப்பது தெரியவந்தது. அவரும் டென்மார்க்கில் வசிக்கும் வேறொரு தம்பதியினருக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளார் என்ற விவரமும் தெரியவந்தது. 

  அம்மாவைத்தான் கண்டுபிடிக்க முடியவில்லை எனவே அண்ணனையாவது கண்டுபிடிப்பேன் என டென்மார்க்கில் அலைந்தார். ஆனால்,  தனது தொப்புள் கொடி உறவுகளை அவ்வளவு எளிதில் டேவிட்டால் நெருங்க முடியவில்லை. தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட சிறுவயது புகைப்படத்தைச் சென்னையிலுள்ள நண்பர்களிடம் கொடுத்து தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கினார். அவரின் பல ஆண்டுக் காலப் பாசப்போராட்டத்திற்குத் தற்போது விடை கிடைத்திருக்கிறது. 

  தனது தாயார் இளைய மகனுடன் மணலியில் வசிப்பது தெரியவந்தது. அவர்களுடைய தொலைபேசி எண்ணை வாங்கி வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசினார் டேவிட் சாந்தகுமார். தனக்குத் தெரிந்த தமிழ் வார்த்தைகளில் அம்மாவிடம் நலம் விசாரித்தார். தெரிந்தே வறுமையின் காரணமாக மகன்களைத் தத்து கொடுத்ததால் அவர்களின் நினைப்பு உள்ளூர வாட்டினாலும்,  அதை வெளியே சொல்லாமல் இருந்து வந்தார் தனலெட்சுமி. 

  ஆனால், தான் தத்து கொடுத்த மகனே தன்னைத் தேடி வருவான் என அவர் கனவிலும் நினைக்கவில்லை. ஆனாலும் அந்த ஆச்சரியம் நடந்தது.  தன்னைத் தேடி கண்டுபிடித்த மகனை நினைத்து நெகிழ்ச்சி அடைந்தார் தனலெட்சுமி. 

  அடுத்த மாதம் இறுதியில் டென்மார்க்கில் இருந்து மனைவி இரு குழந்தைகளுடன் வந்து தனது நிஜப் பெற்றோரை நேரில் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பிற்கான நாட்களை எண்ணிக்கொண்டு தூங்காத இரவுகளோடும், கனவுகளோடும் கழித்து வருகிறார் பாசப்பிள்ளையான டேவிட் சாந்தகுமார். 

  TAGS
  Adoption
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai