வட இந்தியாவின் கொடூர கொள்ளையரின் வேட்டைக் காடாகும் தமிழகம்: உள்துறை என்ன செய்யப் போகிறது?

தமிழகத்தில் 1990-ம் ஆண்டுகளில் தொடர்ந்து நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால் ஆளும் அரசு அதிர்ச்சிக்குள்ளானது.
நகைக்கடையின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான முகமூடி அணிந்த மா்மநபா்களின் உருவம்.
நகைக்கடையின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான முகமூடி அணிந்த மா்மநபா்களின் உருவம்.

தமிழகத்தில் 1990-ம் ஆண்டுகளில் தொடர்ந்து நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால் ஆளும் அரசு அதிர்ச்சிக்குள்ளானது. இதன் பின்னணியில் இருந்த வட நாட்டு கொள்ளையர்கள், ஐபிஎஸ் அதிகாரியான ஜாங்கிட் மூலம் பிடிக்கப்பட்டனர். இதனால், தமிழர்களுக்கு முதல்முறையாக ‘பாவரியா’ எனும் நாடோடி சமூகம் அறிமுகமானது. தற்போது ‘தீரன்’ திரைப்படத்தால் பாவரியா சமூகத்தினர் பற்றி அறியும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் இன்றும் தங்கள் தொழிலை தொடர்ந்து வரும் இந்த சமூகத்தினர் அங்குள்ள காவல் துறைக்கு சவாலாக உள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் ஆச்சரியமானவை.

பாவரியா பழங்குடியினர்
இந்தியாவின் பழங்குடிகளில் ஒன்றாக பாவரியா சமூகத்தினர் வேட்டையாடுவதில் சிறந்தவர்கள். பாவரியா என்ற சொல்லுக்கு சுருக்கு கயிறு செய்பவர்கள் என ஓர் அர்த்தம் உண்டு. இந்த கயிறுகளின் மூலம் ஆரம்ப காலங்களில் வேட்டையாடியதால் அவர்கள் பாவரியா என்று அழைக்கப்பட்டனர். பழங்காலத்தில் ராஜஸ்தானில் அதிகமாக வசித்த இவர்களை, அப்பகுதியை ஆண்ட ராஜபுதன அரசர்களும் பயன்படுத்திக் கொண்டதாக ஒரு கூற்று உள்ளது. கோட்டையில் ஏறுவது, கயிற்றில் நடப்பது போன்ற பல நுட்பமான திறன்களால் அரசர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளனர். இவர்களில் சிலர் தங்கள் திறமையை திருடுவதற்கும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்தப் பழக்கம் ஆங்கிலேயர் ஆட்சியில் அதிகமானது.

காதில் துளையிட்ட ஆங்கிலேயர்
அப்போது பாவரியாவை போல் நம் நாட்டில் 300-க்கும் மேற்பட்ட சமூகத்தினர் வழிப்பறி, திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட வரலாறு உண்டு. இவர்களில் சுமார் 200 சமூகங்களை அடையாளம் கண்ட ஆங்கிலேயர்கள் ‘கிரிமினல் பழங்குடிகள் சட்டம் 1871’ என்ற சட்டத்தை அமலாக்கி அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். இந்த கொள்ளை சமூகம் 1857 மீரட் கலவரத்திற்கு பிறகு நிகழ்ந்த போரில் ஆங்கிலேயரை எதிர்த்ததால் அந்த கோபம் அவர்களுக்கு இருந்தது. இந்த சட்டத்தின்படி, கொள்ளையில் சிக்குவோரை சமூகத்தில் அடையாளம் காணும் பொருட்டு ஆங்கிலேய காவல்துறையினர், காதில் துளையிட்டு விடுவார்கள். சுதந்திரத்திற்கு பிறகு பிரதமர் ஜவஹர்லால் நேரு அந்த சட்டத்தை ரத்து செய்து, ‘குற்றம் செய்யும் வழக்கமுள்ளோர் தடுப்பு சட்டம் 1953’ என புதிதாக கொண்டு வந்தார். இதற்கிடையில் பெரும்பாலான சமூகங்கள் திருந்திவிட, பாவரியா, சாந்தி, கஞ்சிரா, பேடியா உள்ளிட்ட சிலர் மட்டும் தங்கள் கொள்ளை தொழிலை தொடர்கின்றனர். இவர்களில் இயற்கையிலேயே குரூர குணம் கொண்ட பாவரியாக்கள், மிகவும் கொடூர கொள்ளை கும்பலாக உருவெடுத்துள்ளனர்.

நாட்டை அதிரச் செய்த சம்பவம்
வட மாநில காவல்துறைக்கு சவாலாக உள்ள இவர்களைப் பற்றி அங்குள்ள மக்களுக்கும் நன்கு தெரியும். எனினும், உ.பி.யின் புலந்த்ஷெஹர் மாவட்ட நெடுஞ்சாலையில் பாவரியா கும்பல் செய்த ஒரு கொடூர வழிப்பறி முதன்முறையாக வட இந்தியாவை உலுக்கியது. கடந்த ஆண்டு ஜூலை 29-ல் நடைபெற்ற சம்பவத்தில் காரை வழிமறித்து கொள்ளை அடித்ததுடன் அதிலிருந்த தாய், மகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்தனர். நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் பாவரியா கும்பல் கைது செய்யப்பட்டாலும் மேற்கு உ.பி. நெடுஞ்சாலைகளில் இரவுநேரப் பயணங்களுக்கு மக்கள் இன்றும் யோசிக்கின்றனர்.

இரக்கம் காட்டாதவர்கள்
‘பாவரியா என்பது ஒரு பழங்குடியின் பெயர். இதில் பல சமூகங்கள் உள்ளன. இவர்கள் செய்யும் குற்றங்களின் தனித்துவத்தை வைத்து அவர்களை நாம் அடையாளம் காணவேண்டி இருக்கும். நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு கீழ் ஏதாவது ஒரு இரும்பை வீசி, சத்தம் வரவழைப்பார்கள். வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தில் ஏதோ கோளாறு என நிறுத்தினால், அவர்களை தங்கள் வேட்டைக்கு பலியாக்குவார்கள். இன்னொரு பழக்கமும் பாவரியா கும்பலிடம் இருந்தது. திருடிய பின் அதை செய்தது தாங்கள் தான் என எங்களுக்கு சவால் விடும் வகையில் வீட்டின் மத்தியில் மலம் கழித்து விட்டுச் செல்வார்கள். கொள்ளையை எதிர்க்கும் நபரை கொலை செய்வது, வெறும் ஜட்டி-பனியன் அணிந்து திருடுவது, சிக்காமல் இருக்க உடலில் எண்ணெய் தேய்த்துக்கொள்வது போன்ற பல்வேறு அடையாளம் மற்றும் யுக்திகளை இவர்கள் கையாள்வது உண்டு. தற்போது இவர்களுடன் வேறு சில கிரிமினல்களும் சேர்ந்து விட்டனர். இதனால், தொடக்கத்தில் வெறும் பச்சை கம்புகளால் வீட்டினரை அடித்துவிட்டு கொள்ளையடித்தவர்கள் தற்போது கள்ளத்துப்பாக்கி தூக்கும் அளவுக்கு சென்று விட்டனர். நடந்து வந்தவர்கள் இப்போது வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்திவிட்டு கொள்ளைக்கு பிறகு தப்பிச் செல்கின்றனர். சிறு குழந்தைகள், வயதானவர்கள் என யாரிடமும் இரக்கம் காட்டுவது இல்லை. 

கொள்ளைக்கு பிறகு பலாத்காரம்
கொள்ளைக்கு பிறகு பாலியல் பலாத்காரம் செய்வதும் பவாரியாக்களின் வழக்கமாகிவிட்டது. இதனால் பாதிக்கப்படும் பெண்கள் பெரும்பாலும் புகார் தர முன்வருவதில்லை. எனவே இப்பழக்கம் அவர்களிடம் ஒட்டிக்கொண்டது. மேலும் கொள்ளையடிக்கச் சென்ற இடத்தில், படுகாயம் அடையும் அளவுக்கு தாக்குவது, கொலை செய்வது போன்ற தங்கள் தனித்தன்மையை நிலைநாட்டாமல் வருவது அவர்களிடையே தவறாகக் கருதப்படுகிறது. தங்கள் சமுதாயப் பெண்களை ஆண்கள் கிண்டல் செய்வது, போதையில் கலாட்டா செய்வது போன்றவற்றை குற்றமாகக் கருதுகின்றனர். இதற்கு தங்கள் பஞ்சாயத்தை கூட்டி இவர்களுக்கு தண்டனை அளிப்பார்கள். மரத்தில் கட்டி பிரம்படி, சாட்டையடி கொடுப்பது, கழுதை சவாரி செய்ய வைப்பது போன்ற தண்டனை தருவார்கள். பஞ்சாயத்து முடிவை எதிர்த்து கேட்டால் அபராதம் செலுத்த வேண்டி வரும். இது தொடர்பாக புகார்கள் அந்த சமூகத்தை விட்டு வெளியே வருவதில்லை.

கூட்டம், கூட்டமாக வசிக்கும் பாவரியாக்கள் இடம் மாறிக்கொண்டே இருப்பார்கள். எனினும் இவர்கள் ஒரு இடத்துக்கு மீண்டும் வர பல ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் ராஜஸ்தான், உ.பி. மற்றும் பஞ்சாபில் அதிகம் வசிக்கின்றனர். குஜராத், டெல்லி, ம.பி., உத்தராகண்ட் மற்றும் ஹரியாணாவிலும் பாவரியாக்கள் உள்ளனர். ஆனால் இவர்கள் ஒரே பெயரில் அல்லாமல் பாப்ரி, பவுரியா, பவாரி, பாட்டி, நாரிபட் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். ராஜஸ்தானில் அழ்வர், தோல்பூர், பரத்பூர் ஆகிய மாவட்டங்களில் வசிக்கின்றனர். உ.பி.யில் இவர்கள் மீரட், அலிகர், பாந்தா, ஆக்ரா, மெயின்புரி, முசாபர்நகர் ஆகிய மாவட்டங்களில் வசிக்கின்றனர். பாவரியாக்களில் மனம் திருந்தி விவசாயம் செய்து பிழைப்பவர்களும் உள்ளனர். பஞ்சாபில் ‘பவுரியா’ என்று அழைக்கப்படும் இவர்கள் பெரோஸ்பூர், பட்டிண்டா, லூதியானா, சங்ரூர் ஆகிய மாவட்டங்களில் வசிக்கின்றனர். பஞ்சாபில் இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக உள்ளனர்.

கொள்ளைக்கு முன் காளி பூஜை
“கொள்ளைக்கு முன் தங்கள் குலதெய்வமான காளிக்கு ஆடு பலி கொடுத்து பூஜை செய்யும் பழக்கம் பாவரியாக்கள் சிலரிடம் உள்ளது. முன்னதாக அந்த ஆடு குலதெய்வத்தை நோக்கிச் சென்றால் கொள்ளையடிப்பார்கள். எதிர்புறம் சென்றால் அதை அபசகுணமாகக் கருதி அன்றைய தினம் கொள்ளையை கைவிடுவார்கள்.

பாவரியாக்கள் பிடிபடும்போது கொள்ளையடித்த நகைகள் மீட்கும் வாய்ப்பு அதிகம். ஏனெனில், திருடிய நகைகளை உடனடியாக விற்காமல் தங்கள் சமூக தலைவரிடம் அளித்து நிலத்துக்கு அடியில் ஒளித்து வைக்கின்றனர். அவர்களே இரும்புக் கொல்லராவும் இருப்பதால் பிறகு சமயம் பார்த்து நகைகளை உருக்கி விற்று பிரித்துக் கொள்கின்றனர். இடையில் தங்கள் தேவைக்கு அவற்றை அடகு வைப்பதும் உண்டு.

பாவரியாக்களில் ஒரு வகையினர், பகலில் குளிர் ஆடைகள், கத்தி, அரிவாள் மற்றும் ரொட்டி சுடுவதற்கான இரும்பு பொருட்களை விற்பனை செய்வார்கள். அப்போது வீடுகளை நோட்டம்விட்டு இரவில் கொள்ளையடிப்பார்கள். பெரும்பாலும் ஊருக்கு வெளியே அல்லது ஒதுக்குப்புறமான வீடுகளே தேர்வு செய்வார்கள். பெரும்பாலும் கைப்பேசி உட்பட நவீன சாதனங்களை இவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். இதனால் கொள்ளைக்கு பிறகு இவர்களைப் பிடிப்பது காவல் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது.

எல்லையில் கூடாரம் அமைப்பர்
பாவரியா உ.பி.யில் பெரும் தொல்லையாக இருந்தாலும் அப்போது அவர்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தனர். இதனால் அவர்கள் தென் மாநிலங்கள் சென்று தங்கள் கைவரிசையை காட்டி வந்தனர். இரவில் அவர்கள் வீட்டிக்குச் சென்று ஆண்கள் அங்கு இருப்பதை உறுதி செய்தல், ஆண்களை காவல்நிலையம் வந்து இரவில் உறங்கச் சொல்லுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் கையாளப்பட்டன. இந்த நாடோடி கும்பல் ஊருக்கு ஒதுக்குப்புறம் ஒரு கூடாரம் அமைத்து வித்தைகள் காட்டவும், லேகியங்கள் விற்கவும் வருவது உண்டு. இவர்களில் சிலர் பலசமயம் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இதனால், காவல்துறை அதிகாரிகள் அவர்களைத் தங்கள் எல்லையில் கூடாரம் அமைக்க விடாமல் துரத்தி விடுவது வழக்கம். ஆனால், மனித உரிமைமீறல் மீதான விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்படத் தொடங்கியவுடன் அவ்வாறு செய்ய முடிவதில்லை.

கொலை செய்வதுதான் திருமணத்துக்கு தகுதி
இந்த சமூகத்தின் இளைஞர்களால் தான் கொள்ளைகளின் போது கொலை நடக்கிறது. ஏனெனில், இவர்கள் திருமணத் தகுதி அவர்கள் செய்யும் கொலை மற்றும் கொள்ளையை பொறுத்து அமையும் பழக்கம் அந்த சமூகத்தில் உள்ளது. எங்கு சென்றாலும் நடைபயணம் அல்லது பேருந்து மற்றும் ரயில் என பொதுமக்கள் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவார்கள். சிலசமயம் மாறுவேடங்களிலும் செல்வதால் அவர்களை பிடிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். குளிர்காலம் மற்றும் அமாவாசை இருளைத் தங்களுக்கு உகந்த நேரமாக கருதுகின்றனர். தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களுக்கு முன்பாகவும் இவர்கள் கொள்ளையில் ஈடுபடுவது உண்டு. பஞ்சாபில் பாவரியாக்கள் கொள்ளையடிப்பது குறைவு. இங்குள்ள சீக்கியர்கள் இரவின் சிறிய ஓசைக்கும் எழுந்து வந்து தங்களிடம் உள்ள கத்தி, வாள் போன்றவற்றால் தாக்கி விடுவார்கள் என்ற அச்சமே இதற்கு காரணம்.

பிஹாரின் வங்கிக் கொள்ளையர்கள்
வட மாநிலங்களில் பல ஆண்டுகளாக பாவரியா கும்பல் அடிக்கும் கொள்ளைகளில் பெரும்பாலானவை அவ்வப்போது பிடிக்கப்பட்டு விடுகின்றன. தமிழகத்தில் இவர்கள் சவாலாகக் கருதப்படுவது போல் வட மாநிலங்களில் தமிழகத்தில் இருந்து வந்து கொள்ளையடிக்கும் குறிப்பிட்ட கும்பல் சவாலாக கருதப்படுகிறது. இவர்கள் வட இந்தியாவின் பல மாநிலங்களில் அடிக்கும் கொள்ளையில் பிடிபட்டாலும் அவர்களிடம் அப்பொருட்களை மீட்க முடிவதில்லை என மாநில காவல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அதேசமயம் தமிழகத்திற்கு அவ்வப்போது வரும் வட மாநிலக் கொள்ளையர்கள் ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விடுகின்றனர்.

இவர்களில் 2012-ம் ஆண்டில் சென்னையை கலக்கிய பிஹாரின் வங்கிக் கொள்ளையர்கள் 5 பேர் காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். பிஹாரின் நாளந்தா மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் அம்மாநிலத்தில் தயாரிக்கப்படும் கள்ளத் துப்பாக்கிகளின் பலனை அடைய விரும்பினர். சென்னையில் அவர்களுக்கு உதவியாக ஏற்கெனவே பிழைக்க வேண்டி தங்கியிருந்த பிஹார்வாசிகள் சிலரின் உதவி கிடைத்தது. சென்னை வங்கிகளில் தொடர்ந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த இவர்களை பிடிக்க தமிழகத்தில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையால் கொள்ளையர்கள் ஐவரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் பிஹாரை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. இவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தமிழக போலீஸாருக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டது. உடல்களை பெற உறவினர்கள் முன்வரவில்ல. இதனால் வங்கிக் கொள்ளையில் தாங்களும் சிக்குவோம் என உறவினர்கள் அஞ்சியதே இதற்கு காரணம் ஆகும். இந்த என்கவுன்ட்டருக்கு பிறகு பிஹார் கிரிமினல்கள் சென்னையில் கொள்ளையடிப்பது குறைந்தது. எனினும் மேற்கு உ.பி. கொள்ளையர்கள் தமிழக காவல்துறைக்கு அடுத்த சவாலாகினர்.

உ.பி. கொள்ளையர்கள்
பிஹாரிகளை போல் தமிழகத்தின் வங்கி மற்றும் நகைக்கடைகளில் இரும்புக் கதவுகளை வெட்டி எடுத்து கொள்ளையடிப்பதில் உ.பி. கொள்ளைக் கும்பல் திறமை படைத்தது. இவர்கள் மேற்கு உ.பி.யின் பரேலி மற்றும் பதான்யு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கடந்த 2015, ஜனவரி 23-ல் கிருஷ்ணகிரியின் ராமாபுரத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி குந்தாரப்பள்ளி கிளையில் லாக்கரில் இருந்து சுமார் ரூ.12 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ஒரு தொகையும் திருடப்பட்டது. கைப்பேசி உரையாடல் கண்காணிப்பு மூலம் முதல் கைதாக, பரேலி அருகிலுள்ள பதாயு மாவட்டத்தை சேர்ந்த 49 வயது முகம்மது ஷானவாஸ் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் கிடைத்த தகவலின்படி, 27 வயதான அப்ரார் உசைன், பரேலியில் கைது செய்யப்பட்டார். மற்றவர்களை தேடி பரேலியில் முகாமிட்ட தமிழக போலீஸார் பெரும்பாலான குற்றவாளிகளை பிடித்தனர்.

இதற்கு முந்தைய ஆண்டு, தூத்துக்குடி நகைக்கடை ஒன்றில் இரும்புக் கதவை வெட்டி 8 கிலோ தங்கம் மற்றும் ரூ.2.5 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதிலும் பரேலி மற்றும் அலிகர் கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர். இரும்பு லாக்கரை கேஸ் கட்டரால் கேக் போல் வெட்டி திறமையாக திருடும் கொள்ளை கும்பலுக்கு மேற்கு உ.பி. பெயர் போனது. இவர்களில் சிலர், பதான்யுவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களை அக்கிராமம் சென்று பிடிக்க உ.பி. காவல்துறை தயங்கும் நிலை இருந்தது. காவல்துறையினர் வரும்போது, அக்கிராமத்து பெண்கள் தங்கள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நிற்பதே இதற்கு காரணமாக இருந்தது. தமிழகத்தில் நடந்த பல கொள்ளை சம்பவங்களின் விசாரணைக்காக தமிழக போலீஸார் மேற்கு உ.பி.க்கு அடிக்கடி வருவது வழக்கமாக உள்ளது.

சம்பல் கொள்ளையர்கள்
வட மாநிலத்தில் கொள்ளை என்றதும் பலரது நினைவில் வருவது சம்பல் கொள்ளையர்கள்தான். ராஜஸ்தான், ம.பி. மற்றும் உ.பி.யில் பரவியுள்ள சம்பல் பள்ளத்தாக்கை சேர்ந்தவர்கள். இவர்கள் பிரபலம் அடைய காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் பூலான்தேவி. இவர் உட்பட சம்பல் கொள்ளையர்கள் அனைவருமே அப்பகுதியின் உயர் சமூகத்தினரை எதிர்த்து ஆயுதம் ஏந்தியவர்கள். உயர் சமூகத்தினரிடம் கொள்ளை அடிப்பதும், ஆட்கடத்தல் செய்து பணம் பறிப்பதும் அவர்கள் தொழிலாக இருந்தது. சரணடைந்த பூலான்தேவி, அரசியல் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட முதல் கொள்ளைக்காரியாக ஆனார். உ.பி. மீர்ஜாபூர் தொகுதியின் சமாஜ்வாதி கட்சி எம்.பி.யான இவர் கடந்த 2001-ல் டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுமார் 10 ஆண்டுகள் வரை சம்பல் கொள்ளையர்கள் தான் அப்பகுதி வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்களாக இருந்தனர். சம்பல் கொள்ளையர்களில் முக்கியமானவரான ததுவா, தனது 10 கூட்டாளிகளுடன் உ.பி. காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். ததுவாவிடம் இருந்து சுமார் 50 நவீன ரக துப்பாக்கிகள், 500-க்கும் மேற்பட்ட ‘மேகசின்’கள் மற்றும் ஏராளமான கையெறிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. ததுவாவை பிடிக்க மட்டும் உ.பி. அரசு சுமார் ரூ.64 கோடி வரை செலவு செய்ததாக செய்திகள் வெளியாகின. சம்பல் கொள்ளையர்களில் பலர் சரணடைந்து தண்டனைக்கு பிறகு பொதுமக்களில் ஒருவராகவும் வாழ்ந்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் சம்பல் கொள்ளையர் எண்ணிக்கை தற்போது வெகுவாகக் குறைந்து விட்டாலும், சிலர் இன்னும் பிடிபடாமல் சம்பல் பள்ளத்தாக்கின் திகிலை தூக்கிப் பிடித்து வருகின்றனர்.

லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடை கொள்ளை சம்பவம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடை 2-ம் தேதி அதிகாலை) கடையின் பின்பக்க சுவரில் பெரிய ஓட்டைப் போட்டு கொள்ளையடித்த அபிஜூடு மற்றும் சமீர் ஷேக் உள்ளிட்ட நான்கு பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். போலீஸாரின் விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் குறித்து தகவல்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

காவல்துறை ஹெல்மெட் போடாத பொதுமக்களை பார்ப்பதை பெரும் வேலையாக செய்வதை விட்டு வடமாநில கொள்லையர்கள் ஊடுறுவலைத் தடுக்காவிட்டால் பெரும் விலை கொடுக்க வேண்டிவரும். உள்துறையும், டிஜிபியும் எல்லையோர மற்றும் சாலை கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com