சில்மிஷத்திற்கும், சீண்டல்களுக்குமா சிறார்கள்; போக்ஸோ மட்டும் போதுமா?

கடந்த 2017-இல் ஆஸ்திரேலியாவில் கத்தோலிக்க திருச்சபை பாதிரியார்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 4,445 குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டது.
போக்ஸோ மட்டும் போதுமா?
போக்ஸோ மட்டும் போதுமா?

கடந்த 2017-இல் ஆஸ்திரேலியாவில் கத்தோலிக்க திருச்சபை பாதிரியார்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 4,445 குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டது. விடுதிகள், காப்பகங்கள் மட்டுமின்றி இல்லங்களில் பாலியல் துன்பங்களுக்கு ஆளாகும் குழந்தைகள் ஏராளம்…

கிறுகிறுக்க வைக்கும் புள்ளிவிபரம்!
உலக மக்கள் தொகையில், ஐந்தில் ஒரு குழந்தை இந்தியக் குழந்தையாக இருக்கிறது. இந்திய மக்கள் தொகையிலோ, மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளாக உள்ளனர். இந்தியாவில் 50 சதவீத குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள். குறிப்பாக, பெண் குழந்தைகளில் 82 சதவீதம் பேர், சொந்த குடும்ப உறுப்பினர்களாலேயே பாதிக்கப்பட்டிருக்கின்றனர். புகாரோ, வழக்கோ, வெளியுலகுக்குத் தெரிவதெல்லாம் 30 சதவீதம்தான். 70 சதவீத குழந்தைகள், பயத்தின் காரணமாக, தங்களிடம் அத்துமீறியவர்கள் குறித்து பெற்றோரிடமோ, குடும்ப உறுப்பினர்களிடமோ கூறுவதில்லை. குழந்தைகளை பாலியல் கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற 10 சதவீத ஆண்கள் நம்மிடையேதான் உலவுகின்றனர். 

அட, பெண்களிலும் 4 சதவீதம் பேர் உண்டு. பெண் குழந்தைகளின் பாதிப்புகூட, அவ்வப்போது வெளியில் தெரிந்துவிடுகிறது. ஆண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சுத்தமாக வெளிவருவதில்லை. இதுபோன்ற புள்ளிவிபரங்கள் கிறுகிறுக்க வைக்கின்றன. 

மொத்தம் 31 மாநிலங்களில் குழந்தைகளுக்கு எதிரான 1.6 லட்சம் குற்ற வழக்குகள்  தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இந்த ஆண்டில் மட்டும் 12,609 பாலியல் பலாத்கார வழக்குகள் போக்சோவின் கீழ் பதிவாகியுள்ளன. இதில் 6,222 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2,397 வழக்குகள் 2 மாதங்களுக்கு முன்பாக புகார் அளிக்கப்பட்டதால் விசாரணையில் உள்ளன.

உலகளாவிய இருண்ட சந்தை!
சிறுமிகளுடன் உறவு கொண்டால் எய்ட்ஸ் குணமாகிவிடும் என்று வதந்தி பரவிய காலமும் உண்டு. அந்த வதந்திக்கு இப்போது உயிர் இல்லை. அதே நேரத்தில், இளைஞரோ, முதியவரோ,  ஆண்மை குறைபாடு உள்ள பெரும்பாலானோரின் தேடல் குழந்தைகளாகவே இருக்கிறது. ஆண்மகன் என்று தன்னைக் காட்டிக்கொள்வதற்கும், பாலியல் விஷயத்தில் திருப்தி அடைவதற்கும், குழந்தைகளையே நாடுகின்றனர். இன்னொரு கொடுமையும் நடக்கிறது. குழந்தை பாலியல் சுற்றுலா (The child sex tourism industry) என்பது ஒரு தொழிலாக, சுற்றுலா பயணிகளுக்காக, சட்ட மீறலாக இந்தியாவிலும் நடத்தப்படுகிறது. கண்ணுக்குத் தெரியாமல் இயங்கிவரும் இத்தொழிலானது, உலகளாவிய ஒரு இருண்ட சந்தையாகும். 

இந்தியாவில்,  கர்நாடகா, ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்து புலம் பெயர்ந்த பெண்கள், தங்களின் குழந்தைகளை, இத்தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர். கோவா சிவப்பு விளக்கு பகுதிகளில், வெளிநாட்டினருக்காக இத்தொழிலை சத்தமில்லாமல் நடத்தி வருகின்றனர்.

'தவறான தொடுதல்’ விழிப்புணர்வு
குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் அரசு பள்ளிகள் உட்பட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகின்றனர். இதில் தவறான தொடுதல், பாலியல் அத்துமீறல் தொடர்பாக விளக்கமளித்து வருகின்றனர். 16 வயதிற்கு மேற்பட்ட மாணவிகள் சிலர் தவறான தொடுதல், பாலியல் அத்துமீறல் தெரியாத நிலையில் இருப்பது பள்ளிகளில் நடந்த ஆய்வில் தெரியவந்தது. ஆய்வின்போது மாணவிகள் சிலர் தவறான தொடுதல் தொடர்பாக சிலர் மீது புகார் அளித்தனர். இதை தொடர்ந்து வழக்குப்பதிவானது. நகர் பகுதிகளை காட்டிலும் கிராம பகுதியில் இளம் சிறார் மீதான பாலியல் அத்துமீறல் புகார் அதிகமாகி வருகிறது. இளம் சிறார்களை பெற்றோர்கள் உன்னிப்பாக கவனித்து வளர்க்க வேண்டும். தவறான தொடுதல் தொடர்பாக கற்றுத் தர வேண்டும் என குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் தெரிவித்தனர்.

போக்ஸோ சட்டம் கூறுவது என்ன? 
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தின்கீழ் (Prevention of children from sexual offences act 2012) இந்த சட்டம் 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. 

போக்ஸோ சட்டம் பிரிவு 3 மற்றும் 4ன் படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது குற்றம்: இதற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டணையாகவும் உள்ளது. கூடவே அபராதமும் விதிக்கப்படும்.

போக்ஸோ சட்டம் பிரிவு 5 மற்றும் 6 ந் படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

போக்ஸோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8ன் படி குழந்தைகளை அவர்களின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது, அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொடவைப்பது குற்றம். அதாவது பாலியல் சீண்டல்கள் செய்வது. குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் விதிக்கப்படும்.

போக்ஸோ சட்டம் பிரிவு 9 மற்றும் 10ன் படி குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தவர்கள் குழந்தையின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்பட்சம் 5 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக 7 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் விதிக்கப்படும்.

போக்ஸோ சட்டப் பிரிவு 11 மற்றும் 12ன் படி குழந்தைகளை பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, செல்பேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது குற்றம். குற்றவாளிக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.

போக்ஸோ சட்டப் பிரிவு 13 மற்றும் 14ன் படி குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை எடுப்பது, விற்பது, தயாரிப்பது, மற்றவருக்கு கொடுப்பது, குற்றம். இது இணைய தளம், கணிணி என எந்த தொழில்நுட்ப ரீதியில் இருந்தாலும் குற்றமே. இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

போக்ஸோ சட்டப் பிரிவு 18ன் படி குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே, குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படும் பிரிவுகளிலேயே தண்டனை வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மறைத்தாலும் பிரிவு 21 படி குற்றம். இதற்கு 6 மாத சிறை தண்டனை இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

இதில் அதிகபட்சம் ஆயுள் தண்டனை என்ற ஷரத்தில் மாற்றம் கொண்டு வந்து மரண தண்டனை என்ற சட்டத்திருந்ததை அவசரச்சட்டமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வயது வரம்பும் 18 ல் இருந்து 16 மற்றும் 12 என வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

குற்ற விசாரணை 
குழந்தையின் எதிர்கால நலன் கருதி வழக்கு விசாரணை ரகசியமாக நடத்தப்படும். குற்றம் தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்த பிறகு தான் விசாரிக்க வேண்டும் என்பதில்லை, புகார் வந்த உடனேயே காவல்துறையினர் விசாரணையை தொடங்கலாம். பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டிற்கே சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரை வைத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் கண்டிப்பாக விசாரிக்கக் கூடாது.  காவல்நிலைய எல்லைப் பிரச்னையை காரணம் காட்டி வழக்கு விசாரணையை அதிகாரிகள் தட்டிக்கழிக்கவும் கூடாது. இந்த விதிகளை காவல்துறை அதிகாரிகள் மீறினால் அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்வதற்கு  போக்சோ சட்டம் வழிவகை செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டும் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவேண்டும்.  

மாற்ற முயற்சிக்காத மனநலக் குறைபாடு!
எந்தச் சட்டத்திருத்தம் வந்தாலும், அடிப்படையில் சில விஷயங்களைச் சரிசெய்யாமல், இதுபோன்ற வழக்குகளுக்கு நியாயமான, உடனடி தீர்வைக் காணமுடியாது. பாலியல் வன்முறை என்பது, ஒரு சமுதாய பிரச்னை, எனவே, குற்றம் புரிந்த சிலருக்கு மரண தண்டனை வழங்குவதால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது.

வலிமையற்ற குழந்தைகளிடம், தங்களின் இச்சையைத் தீர்த்துக்கொள்ள நினைக்கும் மனநிலையை பீடோபிலியா (Pedophilia) என்கிறார்கள். பீடோபைல் (Paedophile) என்பது ஒருவகை மனநலக் குறைபாடு ஆகும். குறைந்தபட்சம் 16 வயதில்தான், ஒருவரை பீடோபிலியாகவாக அடையாளம் காண முடியும். இவர், அப்போது தன்னைக் காட்டிலும் 5 வயது குறைந்த குழந்தையின் மீது பாலியல் ஈர்ப்பு உடையவராக இருப்பார். 16 வயதில் தொடங்கி, முதுமை வரையிலும் பீடோபிலியாவாக வாழ்பவர்கள் அனேகம் பேர்.  இது ஒரு தவறான பாலியல் விருப்பமாகவே கருதப்படுகிறது. ஒரேயடியாக இதை மனநோய் என்று கூறிவிட முடியாது. பீடோபிலியாக்களின் தோற்றம் அச்சமூட்டுவதாக இருக்காது. மிக நட்பாக குழந்தைகளிடம் பழகுவார்கள்; எளிதாக வசீகரித்துவிடுவார்கள். இவர்களில் பலரும், தங்களின் குறைபாட்டை உணர்ந்து,  உளவியல் மருத்துவர்களை அணுகாமல், பாசத்தை வெளிப்படுத்தும் குழந்தைகளை, தங்களின் பாலியல் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த மனநல குறைபாட்டுக்கு வயது வரம்பில்லை. படிப்போ, பாரம்பரியமோ, பதவியோ, மதமோ, இனமோ எதுவும் இல்லை. குழந்தைகள் பாலியல் சுரண்டலில், உறவினர்கள், குடும்ப நண்பர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி வாகன ஓட்டுநர்கள், மதகுருமார்கள் என பலரும் வரிசைகட்டி நிற்கின்றனர். விடுமுறை நாட்களில் நடக்கும் குரூப் ஸ்டடி, ட்யூஷன் செல்லும் இடங்கள், போலி சாமியார்களின் ஆசிரமங்கள் இங்கெல்லாம், பாலியல் அத்துமீறலுக்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன. 

வலைத்தளங்களில் வக்கிரத் தாண்டவம்!
Child என்னும் தலைப்பில், பாலியல் நோக்கத்தோடு குழந்தைகளை ஈடுபடுத்தும் வெப்சைட்டுக்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், வெவ்வேறு பெயர்களில், இணையங்களில் இவை மலிந்து கிடக்கின்றன. குடும்ப உறவுகள் அனைவருமே தவறாக நடப்பதாக சித்தரித்து வக்கிரத் தாண்டவம் ஆடும் வெப்சைட்டுக்களும் நிறைய உள்ளன. தொடர்ந்து இதைப் பார்ப்பவர்களின் மனம், சுயகட்டுப்பாடு என்பதே இல்லாமல் தறிகெட்டுத்தான் அலையும். வலைத்தளங்களில் கெட்டதை மட்டுமே தேடுவோர், கெட்டுக் குட்டிச்சுவராகி விடுவதைத் தடுக்க முடியாது.

குழந்தை ஆபாசப்படம் (child porn) என்றால் என்ன?
குழந்தைகள் சம்பந்தப்பட்ட எந்தவொரு பாலியல் செயல்பாட்டையும் 'குழந்தை ஆபாசப்படம்' (child porn)  என்று சொல்லலாம். குழந்தையுடன் நேரடியாக பாலியல் உறவு கொள்வது, தனது பாலியல் இச்சையை பூர்த்தி செய்துக் கொள்ளும் வகையில் குழந்தைகளை இயங்கச் சொல்வது, குழந்தைகளை பாலியல் உணர்வுடன் அசாதாரணமாக அணுகுவது, பாலியல் உணர்வுகளை தூண்டுவதுபோல் குழந்தைகளிடம் பேசுவது போன்றவற்றை பாலியல் வன்முறை என்று சொல்லலாம்.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு வகைகளிலும் பாலியல் வன்முறை நடக்கிறது. பாலியல் வன்முறைகளை காணொளியாகவோ, புகைப்படமாகவோ பதிவு செய்வது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இருந்தாலும் அதுவும் குற்றமே. குழந்தை ஆபாச காட்சிகளை தயாரிப்பது, பராமரிப்பது, பகிர்வது, விற்பனை செய்வது, பார்ப்பது, வாங்குதல், பதிவேற்றுவது, பதிவிறக்கம் செய்வது ஆகியவை சட்டவிரோதமான குற்றங்கள்.

குழந்தையுடன் பாலியல் ரீதியான நேரடியான செயலில் ஈடுபடுவதாக படங்களிலோ, காணொளிகளிலோ காட்டப்படுவது தான் பாலியல் வன்முறை என்பதில்லை.  அதேபோல் ஒரு குழந்தை அதை விரும்புகிறதா, அதை கேட்கிறதா என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஆடையில்லாமல் குழந்தைகள் காட்டப்படுவதும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையின் ஒரு வடிவமே.  அதிலும் குறிப்பாக குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகள் தெரிவது கண்டனத்துக்கு உரியது.

தொலையும் சிறுமிகள் போவதெங்கே?
"இந்தியாவில் ஆறு நிமிடங்களில் ஒரு குழந்தை காணாமல் போகின்றன. ஆண்டொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் மாயமாகின்றன" என்ற பகீர் தகவலை வெளியிட்டுள்ளது 'குழந்தைகளை காப்பாற்றுங்கள்' என்ற அரசு சாரா அமைப்பின் வலைதளம். இதில் இருந்து முற்றிலும் வேறுபட்ட புள்ளிவிவரங்களை கூறும் அரசு, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் காணாமல் போகும் செய்தியை மறுக்கிறது.

தொலைந்து போகும் குழந்தைகளின் நிலை என்ன? இதை யாராலும் அறுதியிட்டு கூறமுடியாது. ஆனால் அதிகரித்து வரும் குழந்தைகள் தொடர்பான பாலியல் காட்சிகள் தொடர்பான வியாபாரத்தை பார்க்கும்போது, குழந்தைகள் கடத்தல்களையும், பாலியல் தொழிலையும் தொடர்புபடுத்துவது கடினமானது இல்லை. இருந்தபோதிலும் இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு குழந்தையையும் கட்டாயப்படுத்துவது சுலபமானது இல்லை.

இணையதளத்தில் அதிக நேரத்தை செலவழிக்கும் இந்த தலைமுறை, சிறு வயதிலேயே காமக் கொடூரர்கள் விரிக்கும் ஆசை வலையில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பது கவலையேற்படுத்துகிறது.

2017 பிப்ரவரி ஆறாம் தேதியன்று யுனிசெஃப் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஆன்லைன் குழந்தை பாலியல் தொழில் இந்தியாவில் எந்த அளவில் விரவியிருக்கிறது என்று கணக்கெடுப்பது இயலாத காரியம். ஏனெனில் இது தொடர்பாக இந்தியாவில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இது பற்றிய விவாதங்களே தற்போதுதான் தொடங்கியிருக்கிறது.

சீனாவின் அதிபராக ஷி ஜின்பிங் அதிகாரத்திற்கு வந்த புதிதில் இணையதள ஆபாசத்தை இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்தினார். உலகில் இன்று 90% சென்சார் உள்ள நாடு சீனா. நாமும் அவர்களை பின்பற்றலாமே ..!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com