வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் மோடி! ஏன் தெரியுமா?

பிரதமரானது முதல் இதுவரை 85-க்கும் அதிகமான வெளிநாட்டு அரசுமுறைப் பயணங்களை மேற்கொண்டு பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் மோடி! ஏன் தெரியுமா?

நரேந்திர மோடி 2014ல் பிரதமரானது முதல், உலக நாடுகளுடன் நட்புறவை பேணுவதில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறார். பிரதமரானது முதல் இதுவரை 85-க்கும் அதிகமான வெளிநாட்டு அரசுமுறைப் பயணங்களை மேற்கொண்டு பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

அதேபோன்று அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நாடுகளில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றி உலக நாடுகளின் மத்தியில் இந்தியர்களை பெருமைகொள்ளச் செய்கிறார். இதனால் வெளிநாட்டினர் மத்தியிலும் பிரதமர் மோடிக்கு என்று தனி செல்வாக்கு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. 

இதேபோன்று, பிரதமர் மோடியின் அழைப்பினை ஏற்று உலக நாடுகளின் தலைவர்களும் இந்தியாவிற்கு வருகை தருவது வழக்கமாகியுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தரும்போது பெரும்பாலாக இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு தலைநகர் தில்லியில் நடைபெறுவது தான் முன்னதாக வழக்கத்தில் இருந்து வந்தது.

ஆனால், மோடி பதவியேற்ற பின்னர் இந்த நடைமுறையை மாற்றியுள்ளார் என்று தான் கூறவேண்டும். எங்களது நாட்டில் தாஜ் மஹால் மட்டுமல்ல'; பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ளன என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் விதமாக வெளிநாட்டுத் தலைவர்களை பல மாநிலங்களில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சந்திக்கிறார்.   

இதற்கு உதாரணமாக சிலவற்றைக் கூறலாம்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வருகை: 

2014ம் ஆண்டு முதல்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தந்தார். குஜராத்திற்கு வருகை தந்த அவரை பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் வைத்து சந்தித்தார். பிரதமர் மோடி அளித்த கதர் ஆடையை அணிந்துகொண்டு வந்தார் ஜின்பிங். பின்னர் இருவரும் ஆசிரமத்தின் வெளியே உள்ள திண்ணையில் சிறிது நேரம் அமர்ந்து பேசினர். சபர்மதி ஆற்றங்கரையில் பேசிக்கொண்டே நடந்து சென்றனர். காந்தி எழுதியாக புத்தகங்களும் அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டன. தலைநகர் அல்லாத ஒரு எளிமையான இடத்தில் நடந்த இரு நாட்டுத் தலைவர்களின் இந்த சந்திப்பு பெரிதும் பேசப்பட்டது. 

ஆஸ்திரேலிய பிரதமருடன் சந்திப்பு:

அடுத்ததாக, 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் 4 நாள் அரசு முறைப் பயணமாக தில்லி வந்தார். தில்லியில் இரு நாட்டு வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தில்லியில் உள்ள புகழ்பெற்ற அக்‌ஷர்தம் கோவிலுக்குச் சென்றனர்.

இதற்காக, மண்டி ஹவுஸ் மெட்ரோ நிலையத்தில் இருந்து அக்‌ஷர்தம் பகுதி வரை சுமார் 6.7 கிலோமீட்டர் தொலைவிற்கு இரு நாட்டுத் தலைவர்களும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். பின்னர் அக்‌ஷர்தம் கோவிலுக்குச் சென்று வழிபட்டதுடன் கோவிலின் முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.   

ஜப்பான் பிரதமர் வருகை:

இதன் தொடர்ச்சியாக அதே ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் அவரது மனைவி அகி அபேயுடன் அரசு முறைப் பயணமாக குஜராத்திற்கு வருகை தந்தார். பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமரை சந்திக்க முன்னதாகவே அகமதாபாத் வந்து அவரை கட்டியணைத்து வரவேற்றார். பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் அகமதாபாத்தில் திறந்த ஜீப்பில் நின்றபடி பயணித்தனர். அகமதாபாத் மக்கள் ஜப்பான் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, அகமதாபாத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு ஜப்பான் பிரதமரை அழைத்துச் சென்றார் மோடி. ஆசிரமத்தின் வெளியே சபர்மதி ஆற்றின் கரையில் இரு நாட்டுத் தலைவர்களும் அமர்ந்து பேசினர். அதுமட்டுமின்றி, அகமதாபாத்தில் உள்ள மிகப் பழமையான கட்டிடமான சிதி சையத் மசூதி மற்றும் 100 ஆண்டுகள் பழமையான எல்லிஸ் பாலம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ

அதேபோன்று கடந்த 2018 ஜனவரி மாதம் 16ம் தேதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ மற்றும் அவரது மனைவி சரா நேதன்யாஹூ ஆகியோர் குஜராத்திற்கு வருகை தந்தனர். முன்னதாக, டெல்லி தாஜ் மஹாலைச் சுற்றி பார்த்த அவர்கள் மறுநாள் பிரதமர் மோடியுடன் அகமதாபாத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து அகமதாபாத்தில் பல்வேறு நலத் திட்டங்களும் இரு நாட்டுத் தலைவர்களால் தொடங்கி  வைக்கப்பட்டன. 

மாமல்லபுரத்தில் மோடி- சீன அதிபர் சந்திப்பு:

இதற்கு அடுத்தபடியாக, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சென்னை மாமல்லபுரத்து வைத்து சந்தித்தார் பிரதமர் மோடி. சீனர்களுக்கும், தமிழர்களுக்கும் பண்டைய காலத்தில் இருந்தே வணிகத் தொடர்பு இருந்து வருவதால் இவ்விடத்தை சீனா தான் தேர்ந்தெடுத்தது என்று தகவல்கள் வெளியாகின. ஆனால்,சீன அதிபரை சந்திக்க மாமல்லபுரத்தைத் தேர்வு செய்தது பிரதமர் மோடி தான் என்று வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே தெளிவுபடுத்தினார். 

உலகத் தலைவர்களின் சந்திப்பு மட்டுமின்றி பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள பல சிறப்புமிக்க நகரங்களுக்குச் சென்று வருகிறார். இதன்மூலமாக நம் நாட்டில் உள்ள சிறப்புமிக்க சுற்றுலா இடங்களின் பெருமை உலக நாடுகளுக்கு நினைவுப்படுத்தப்படுவதோடு, அவ்விடங்களுக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலமாக நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் மோடி இதனைத் தொடர்ந்து பின்பற்றி மேலும் இந்தியாவின் பெருமைகளை உலகறியச் செய்ய வேண்டும் என்று மோடிக்கு நெருக்கமானவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com