ஹலோ.. இந்த நம்பருக்கு பரிசு விழுந்திருக்கு சார்..னு சொல்பவர்களிடம் என்ன சொல்ல  வேண்டும்?

ஹலோ.. சார் இந்த செல்போன் நம்பருக்கு பரிசு விழுந்திருக்கு சார் என்று சொல்லி உங்களுக்கு இதுவரை அழைப்பு வந்திருக்கிறதா?
ஹலோ.. இந்த நம்பருக்கு பரிசு விழுந்திருக்கு சார்..னு சொல்பவர்களிடம் என்ன சொல்ல  வேண்டும்?


ஹலோ.. சார் இந்த செல்போன் நம்பருக்கு பரிசு விழுந்திருக்கு சார் என்று சொல்லி உங்களுக்கு இதுவரை அழைப்பு வந்திருக்கிறதா?

வரவில்லை என்றால் மகிழ்ச்சி. அவ்வாறு வந்திருந்தால் என்ன சொல்லி அவர்களிடம் தப்பித்தீர்கள்? இல்லை மாட்டினீர்கள் என்பதை நினைவுப் பெட்டகத்தில் இருந்து எடுத்துப் பாருங்கள்.

சரி நேராக விஷயத்துக்கு வருவோம். 

  • உங்கள் செல்போன் எண்ணுக்கு பரிசு விழுந்திருக்கிறது.
  • நீங்கள் வாங்கிய பொருளுக்கு பரிசு விழுந்திருக்கிறது.
  • உங்களுக்கு மிகச் சிறப்பான மருத்துவக் காப்பீடு சலுகை விலையில் பரிசாகக் கிடைத்துள்ளது.
  • உங்களுக்கு கார் பரிசாக விழுந்துள்ளது, பைக் பரிசாகக் கிடைத்துள்ளது என விதவிதமான அழைப்புகள் வந்து கொண்டே தான் இருக்கிறது.

ஒரு சின்ன உதாரணத்தை மட்டும் பார்க்கலாம்.. 

சோப்பு விற்பதாக வீட்டு வாசலில் கூவிக் கொண்டிருந்தவரை பார்க்க பரிதாபமாக இருந்ததால் இரண்டு சோப்புகள் வாங்கியது ஒரு குத்தமாயா?

ஆம் குத்தம்தான் என்ற சொல்ல வைத்து விட்டார்கள் தற்போதைய மோசடி மன்னர்கள்.

நீங்கள் வாங்கிய சோப்புக் கட்டிகளில் பரிசுக் கூப்பன் உள்ளது என்று சொல்லி விற்றிருக்கிறார்கள். பிறகு உங்கள் எண்ணுக்கு பரிசு விழுந்திருக்கிறது என்று சொல்லி வெறும் ஆயிரம் ரூபாய்க்கு டவர் ஃபேன் உள்ளிட்ட சில மின் சாதனங்களையும் கொடுத்துள்ளனர். இதனால் மனம் மகிழ்ச்சி அடைந்த குடும்பத் தலைவர், ஆயிரம் ரூபாய்க்கு இத்தனை பொருட்களா என்று தனது அதிர்ஷ்டத்தை நினைத்து பெருமிதம் கொண்டார்.

அடுத்த நாள் அதே அழைப்பு.. இந்த முறை, உங்களுக்கு இரண்டாம் கட்ட குலுக்கலில் ஸ்கூட்டி கிடைத்திருக்கிறது. ஜிஎஸ்டியாக வெறும் ரூ.5 ஆயிரத்தை செலுத்தினால் வண்டியை வீட்டு வாசலில் கொண்டு வந்து வைத்து விடுவோம் என்று கூறியிருக்கிறார்கள். 

ரூ.5 ஆயிரத்துக்கு புது ஸ்கூட்டியா என்று வாயைப் பிளந்து கொண்டு அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கில் பணத்தைக் கட்டியுள்ளார் அந்த நபர்.

வங்கியில் பணம் செலுத்தப்பட்ட அடுத்த ஒரு சில மணி நேரங்களில் மீண்டும் ஃபோன் அலறுகிறது. அதே குரல், 'சார் நீங்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலி' என்று படிக்காதவன் படத்தில் ஆர்த்தி தனுஷிடம் சொன்னது போல் சொல்ல. அதான் எனக்கேத் தெரியுமே என்கிறது ஏழையின் மனக்குரல்.

முதல் பரிசாக கார் விழுந்த நபர், தனக்கு அந்த கார் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எனவே, 2ம் பரிசு விழுந்த நபருக்கு அந்த காரைக் கொடுக்க 'கம்பேனி' முடிவு செய்துவிட்டது. எனவே காருக்கான ஜிஎஸ்டியாக ஒரு 5 இலக்கத் தொகையை வங்கியில் செலுத்திவிட்டால் கார் உங்கள் வீட்டுக்கு ஆன்திவே என்று சொல்லியிருக்கிறது. 

ரூ.5 ஆயிரம் என்றால் உடனே புரட்டலாம், தன்னால் 5 இலக்கத் தொகையை புரட்ட முடியாது என்று அந்த நபர் எவ்வளவோ சொல்லியும், சார்.. கார்ர்ர்.. சார்.. கார்ர்ர் என்று டோனை மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

உடனே அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கடனாக வாங்கி பெரிய தொகையை வங்கியில் செலுத்திவிட்டு ஆரத்தித் தட்டோடு காத்திருக்கிறார் காரை வரவேற்க.

மீண்டும் போன் அழைக்க, அதே குரல்தான். சார் வர்ற வழியில் காவல்துறையினர் பிடித்துவிட்டார்கள். குறைந்த ஜிஎஸ்டி கட்டிவிட்டு, அவருக்கு காரை விற்பனை செய்ய காவல்துறையினர் கெடுபிடி செய்கிறார்கள் என்று கூறி வேறு ஒருவரிடம் கொடுக்கிறது அந்த குரல். வேறு ஒரு குரல் காவலர் தொனியில் பேசி, மேலும் ஒரு சிறிய தொகையைக் கட்டினால்தான் கார் வீட்டுக்கு வரும் என்கிறது.

அந்த தொகையைப் புரட்ட தனது தொழிலதிபரான நண்பரைத் தேடி ஓடினார் காருக்குச் சொந்தக்காரர் ஆகும் ஆசையில் இருந்தவர். நண்பரிடம் விஷயத்தைச் சொல்லி பணம் கேட்ட போது, எங்கோ ஓரிடத்தில் தப்பு நடக்கிறது என்பதை புரிந்து கொண்ட நண்பர், அவரை அழைத்துக் கொண்டு காவல்நிலையத்துக்குச் சென்று புகார் கொடுக்க, அனைத்தும் மோசடி, காரும் இல்லை ஸ்கூட்டியும் இல்லை என்பது சம்பந்தப்பட்ட நபருக்கு புரிகிறது.

இழந்த தொகையை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் தற்போது.

எனவே, உங்கள் செல்போனுக்கு பரிசு விழுந்திருந்தாலும் சரி, நீங்கள் வாங்கிய பொருளுக்கு பரிசு விழுந்தாலும் சரி, யார் உங்களுக்கு ஃபோன் செய்து இந்த தகவலை சொல்கிறார்களோ, அவர்களுக்கு உங்களின் பரிசுத் தொகை அல்லது பரிசை தீபாவளிப் பரிசாக அல்லது பொங்கல் பரிசாக எடுத்துக் கொள்ளச் சொல்லிவிடுங்கள். 

நன்றியோ, பாராட்டோ எதிர்பார்க்க மாட்டோம் என்பதையும் தெளிவாகச் சொல்லிவிடுங்கள்.

புதுப் புது விதமாக ஏமாற்றலாம். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். சும்மா யாரென்றே தெரியாத நமக்கு ஒருவர் கூப்பிட்டு பரிசு கொடுக்கிறார் என்றால் அவர் என்ன பைத்தியமா? எனவே, ரூ.50,000 செல்போன் ரூ.5000க்கு என்று சொன்னாலும் சரி, ஃப்ரீ ஃப்ரீ என்று நண்பேன்டா பட விஜய் போல சொன்னாலும் சரி.. வேண்டாம் பாஸ்.. நீங்களே என் சார்பில் அந்த பரிசை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுங்கள்.

மீறி வற்புறுத்தினால், காவல்நிலையத்தில் கம்ப்ளைண்ட் கொடுக்கவா என்று ஒரு சீறு சீறுங்கள் போதும்.
நன்றி வணக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com