அழியும் ராமேஸ்வரம் பவளப்பாறைகள்..!

பவளப் பாறை என்பது பாறை வகைகளில் ஒன்றல்ல. சிலவகை கடல் உயிரினங்களின் வாழ்ந்து முடிந்த எச்சங்களும், வாழ்ந்து கொண்டிருக்கும்
அழியும் ராமேஸ்வரம் பவளப்பாறைகள்..!


பவளப் பாறை
பவளப் பாறை என்பது பாறை வகைகளில் ஒன்றல்ல. சிலவகை கடல் உயிரினங்களின் வாழ்ந்து முடிந்த எச்சங்களும், வாழ்ந்து கொண்டிருக்கும் சில உயிரினங்களின் சேர்க்கையுமே பவளப்பாறை திட்டுகளாகும். இது பல்வேறு கடல் உயிரினங்களின் வசிப்பிடமாகவும் விளங்குகின்றன.

சாதாரணமாக ஒரு மி.மீ முதல் 100 செ.மீ வரை வளரக் கூடியது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மட்டும் 200 வகைகள் இருக்கும். இவற்றை கடினமானவை, மிருதுவானவை என இரு பிரிவுகளாகவும் பிரிக்கலாம். உலகின் அனைத்து சமுத்திரங்களிலும் பவளப்பாறைகள் உருவாவதில்லை. இவை உருவாவதற்கு விசேட சுற்றுச்சூழல் அவசியம் ஆகும்.

அவையாவன..

  • சமுத்திர நீரின் வெப்பநிலை 20°C – 24°C இற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.
  • சமுத்திர நீரின் ஈரப்பதம் 30 சதவீதத்தில் இருந்து 35 சதவீதம் வரை இருக்க வேண்டும்.
  • சூரிய ஒளி சமுத்திரத்தின் ஆழ்பகுதி வரை நன்கு ஊடுருவ வேண்டும்.
  • கடல் அலை குறைவாக இருக்க வேண்டும்.


பல லட்சம் ஆண்டுகளின் தொடர் நிகழ்வாக பவளப்பாறைகள் உருவாகின்றன. பல லட்சம் பவளப்பாறை பாசியினங்கள் வாழ்ந்து மடிந்து, படிந்து பவளப்பாறைகளாக உருமாறுகின்றன. பவளப் பாறைகள் வண்ணமயமான கடலடி தோட்டங்களாக அமைந்திருக்கின்றன. கடல் உயிரினங்களின் மிகமுக்கிய உயிர்வாழ் ஆதார மையமாக விளங்குகின்றன.

கோரல் பாலிப் எனப்படும் கடல் நுண்ணுயிர்களே வளர்ந்து பவளப்பாறைகளாகின்றன. கோரல் பாலிப் ஜெல்லி மீன்களுடன் தொடர்புடையது. வழு வழுப்பான உடல் கொண்ட இது பொதுவாகவே பாறைமீது ஒட்டிக் கொள்ளக்கூடியது. உருளை போன்ற உடலும், ஆக்டோபஸ் கைகள் போன்ற விழுதுகளையும் கொண்டிருக்கும். விழுதுகளின் மேல்புறம் தட்டுபோன்ற அமைப்பாக இருக்கும். அது திறந்து மூடும் வாய் போன்று செயல்படும். சின்னச்சின்ன கடல் உயிரினங்கள் தன்னை கடந்து செல்லும்போது விழுதுகளால் வளைத்துப் பிடித்து விழுங்கி இரையாக்கிக் கொள்கின்றன.

கோரல் பாலிப்புகள் வளர்ச்சி அடையும்போது சிமெண்டு போன்ற பாறைத் தாதுவை உருவாக்கி பாறையுடன் இறுக ஒட்டிக் கொள்கிறது. இது சுண்ணாம்புக்கல் போன்றது. இதுவே பவளப்பாறையின் அடிப்படை கட்டமைப்பாக விளங்குகிறது. பாலிப்புகள் வளர வளர ஆயிரக்கணக்கான புதிய பாலிப்புகளாக பிரிகிறது. இந்த இளம் பாலிப்புகளும், தனது பெற்றோர் பாலிப்புகளுடன் இணைந்து பெருகி பெரிய பாறை அடுக்குபோல மாறிவிடுகிறது. இப்படியாக பல லட்சம் ஆண்டுகளாக உருவானவைதான் பவளப்பாறை திட்டுகள். அது ஒற்றை உயிரினமாகத் தெரிந்தாலும் பல லட்சம் பாலிப்புகளின் கூட்டுத் தோற்றமே.

பவளப்பாறைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர்வாழக் கூடியவையாகும். சில பவளப்பாறைகள் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தனது வாழ்க்கையை தொடங்கியிருக்கும் என்று கருதப்படுகிறது.

பகல் நேரத்தில் பவளப்பாறைகள் வெறும் சுண்ணாம்புத் திட்டாக தென்படும். பாலிப்புகள் அதன் உள்ளே ஓய்வாக இருக்கும். இரவில் அவை கடல் நுண்ணுயிர்களையும், சிறிய மீன்களையும் தனது விழுதுபோன்ற அமைப்புகளால் பிடித்து இரையாக்கிக் கொள்கின்றன. நீரில் அலையும் விழுதுகள் ஒரு தாவரம் போன்ற தோற்றத்தை உருவாக்கும். மேலும் பாறைப்படிவுகளில் பள்ளங்களும், பொந்துகளும் இருப்பதால் பல்வேறு உயிரினங்களின் வசிப்பிடமாகவும் பவளப்பாறைகள் திகழ்கின்றன. இவற்றின் உடலில் சில பூஞ்சை இனங்கள் ஒட்டி உயிர்வாழ்கின்றன. இவை பவளப் பாலிப்புகள் வெளியிடும் கழிவுகளை உணவாக உட்கொண்டு வாழ்பவையாகும். இந்த நுண்ணுயிர்கள் வெளியிடும் ஆக்சிஜன் மற்றும் சத்துக்கள் பவளப் பாலிப்புகளுக்கு அத்தியாவசியமானவையாகும்.

இந்த பூஞ்சைகள் வளர சூரிய ஒளி அவசியமாகும். இவைதான் ஒளிச்சேர்க்கை மூலம் பவளப் பாலிப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜனையும், சத்துக்களையும் உற்பத்தி செய்து கொடுக்கின்றன. எனவே பவளப்பாறைகள் ஆழமான கடல் பகுதியில் வளர்வதில்லை. ஆழம் குறைவான கடல் பகுதியிலேயே பவளப்பாறைகள் வளரும். குறிப்பாக 4.5 மீட்டர் முதல் 27 மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியில் பவளப்பாறைகளை பார்க்க முடியும். 54 மீட்டர் ஆழத்திற்கு கீழே இதுவரை பவளப் பாறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த பூஞ்சைகள் பாலிப்புகளைவிட 10 மடங்கு வேகமாக வளரக்கூடியவை. கடல் அலைகளுக்கும் தாக்குப்பிடித்து வாழக்கூடியவை.

கிரேக்க புராணத்தில் ஆண் கடல் தேவதையான குர்கான், பெண் கடல் தேவதையான மெதுசாவை கடல் நீரில் அமிழ்த்தியபின், அதன் ரத்தம் சிவப்பு பவளப்பாறையாக மாறியதை கண்டதாக கூறப்பட்டுள்ளது. எனவே அதற்கு குர்கானியா நாபிலிஸ் என்ற பெயரும் உண்டு.

அணிகலன்கள்

சிவப்பு மற்றும் இளஞ்சிப்பு பவளப்பாறைகள் அணிகலன் வடிவமைப்பில் பயன்படுகிறது. மத்திய தரைகடல் பகுதியில் பாறைகள் மீது புதர்போல சிறப்பு வகை பவளப் பாறைகள் வளர்கின்றன. கோரர் ரிவைரா எனப்படும் இவற்றை சேகரித்து, அதன் ஓட்டை நீக்கிவிட்டு, உட்பகுதியை பாலிஷ் செய்து ஜொலிக்கும் மணிகளாக தயாரிக்கிறார்கள். இதைக் கொண்டு பல்வேறு அணிகலன்கள் தயாரிக்கப்படுகிறது. இவை நல்ல விலைக்கு விற்கப்படுகிறது.

அதிசய தகவல்கள்

பவளப்பாறைகள் கடல் பரப்பில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான இடத்தையே ஆக்கிரமிக்கின்றன. ஆனால் அவை 25 சதவீத கடல் உயிரினங்களுக்கு வாழ்வாதார பகுதியாக விளங்குகின்றன.

பவளப்பாறைகள் கால்சியம் கார்பனேட் எனும் தாதுவால் ஆனது. இதை மனித எலும்புகளுக்கு மாற்றுப்பொருளாக பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு எலும்புச் சிதைவு மற்றும் பிரச்சினை களின்போது பவளப்பாறை தாதுக்களைக் கொண்டு சிகிச்சையளித்து மருத்துவம் செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் பவளப்பாறைகள்
ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையிலான 10,500 சதுர கி.மீ பரப்பளவு கடல் பகுதி, உயிர்க்கோள மண்டலமாக இருக்கிறது. இதில் சுமார் 560 சதுர கி.மீ பகுதியை, ‘மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்க்கோளக் காப்பக’மாக, கடந்த 1989-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதற்கு யுனெஸ்கோ அமைப்பும் அங்கீகாரம் அளித்தது. இங்கு 4,223 வகை கடல்வாழ் தாவரம் மற்றும் விலங்கினங்கள், அழிந்துவரும் இனமான கடல்பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வகை கடல்புற்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

பாம்பனுக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான 560 சதுர கி.மீ. பரப்பளவில்தான் பவளப்பாறைகள் அதிகம் காணப்படுகின்றன. இந்தப் பகுதியை, ‘பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா கடல்வாழ் தேசிய உயிர்ப்பூங்கா’வாக 1986-ல் தமிழக அரசு அறிவித்தது. 21 தீவுகளை உள்ளடக்கியதாக இந்தத் தேசியப் பூங்கா உருவாக்கப்பட்டது. இந்தத் தீவுகளின் பரப்பளவு, வடிவம், தன்மை குறித்து, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்தின் நிதியுதவியுடன், தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையம் ஓராண்டாக ஆய்வுசெய்து, மத்திய அரசிடம் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில்தான் பல தீவுகள் கடலில் மூழ்கிவரும் அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

‘‘இந்த 21 தீவுகளும் கடல் சூழலில் முக்கியமான அங்கமாக இருப்பதுடன், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் இயற்கைச் சீற்றங்கள் பெரியளவில் தாக்காதபடி தடுப்பு அரண்களாகவும் செயல்படுகின்றன. இதனால்தான், 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலையின்போது, இந்த இரண்டு மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் பெரியளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை. இந்தத் தீவுகளைச் சுற்றிய பகுதிகளில் மீன்வளம் அதிகம் இருப்பதால், இவை மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் அமைந்துள்ளன. இந்நிலையில் விலங்குசல்லி தீவும் பூவரசன்பட்டி தீவும் கடல் அரிப்பால் கடலில் மூழ்கிப்போனது ஆய்வின் மூலம் தெரியவந்தது.

இந்த ஆய்வில், கடந்த 50 ஆண்டுகளில் தூத்துக்குடி குழுவில் உள்ள தீவுகள் 71 சதவிகிதமும், கீழக்கரைக் குழுத் தீவுகள் 43.49 சதவிகிதமும், வேம்பார் குழுத் தீவுகள் 36.21 சதவிகிதமும், மண்டபம் குழுத் தீவுகள் 21.84 சதவிகிதமும் நிலப்பரப்பில் குறைந் திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தீவுகளின் பரப்பு குறைந்துவருவதற்கு, கடல் அரிப்பும் பவளப்பாறைகள் வெட்டி எடுக்கப்படுவதும்தான் முக்கிய காரணங்கள். இதே நிலை தொடர்ந்தால், தூத்துக்குடி குழுவில் உள்ள காசுவார் மற்றும் காரைச்சல்லித் தீவுகள், வரும் 2036-ம் ஆண்டில் முழுமையாகக் கடலில் மூழ்கிவிடும். அதேபோல, வரும் 2064 முதல் 2193-ம் ஆண்டுக்குள் வேம்பார் குழுவில் உள்ள உப்புத்தண்ணி, புலுவினிச்சல்லி மற்றும் நல்லத்தண்ணி ஆகிய தீவுகளும், 2032 முதல் 2180-ம் ஆண்டுக்குள் கீழக்கரைக் குழுவில் உள்ள ஆணையப்பர், வல்லிமுனை, அப்பா, தலையாரி, வாழை, முல்லி ஆகிய தீவுகளும், 2140 முதல் 2525-ம் ஆண்டுக்குள் மண்டபம் குழுவில் உள்ள மனோலிபுட்டி, பூமரிச்சான், புள்ளிவாசல் ஆகிய தீவுகளும் கடலில் மூழ்கும் அபாயமுள்ளது.

கடந்த 2015-ல் தூத்துக்குடி பகுதியில் உள்ள வான்தீவு கடலில் மூழ்கும் அபாயம் உருவானபோது, தீவைச் சுற்றி பவளப்பாறைகள் மற்றும் கடற்புற்கள் மறு உருவாக்கம், செயற்கை பவளப்பாறை நிறுவுதல் போன்ற மத்திய, மாநில அரசுத் திட்டங்களால் அழிவிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டது. அதேபோல, மற்ற தீவுகளைச் சுற்றிலும் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் கடலில் மூழ்காமல் தீவுகளைப் பாதுகாப்பதோடு, கடற்கரைப் பகுதிகளையும், பல்லுயிர் பெருக்கத்தையும், கடலோரப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கலாம்’’ என்கிறது ஆய்வறிக்கை.

இந்த ஆய்வறிக்கை தொடர்பாக வன உயிரினப் பாதுகாப்பகத் தரப்பில் பேசியவர்கள், ‘‘1986-ல் மன்னார் வளைகுடா பகுதியில் தேசியப் பூங்கா அறிவிக்கப்பட்டபோது, பவளப்பாறைகளின் அழிவைத் தடுக்க, சுமார் 6,000 செயற்கை பவளப்பாறைகள், பாதிப்புக்குள்ளான தீவுகளைச் சுற்றிலும் கடலில் வைக்கப்பட்டன. அதன்மீது புதிதாக பவளப் பாறைகள் வளர்ந்துவருகின்றன. இதேபோல் காசுவார் தீவைச் சுற்றி 1,200 கடற்புற்கள் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்’’ என்கின்றனர்.

கடத்தல் மற்றும் அழிவு
நாகரிக வளர்ச்சியில், வனமும், வன உயிரினங்களும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், கடல் வாழ் உயிரினங்களும், அவற்றின் வாழ்விடமுமான பவளப்பாறைகளும், சம அளவில் அழிக்கப்பட்டு வருகின்றன.

சமீபகாலமாக, உயர் ரக ஆபரணங்கள் தயாரிப்பிற்கும், வீடுகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் மீன் தொட்டிகளை அலங்கரிக்கவும், மீன்களை வளர்க்கவும், பவளப்பாறைகள் கடத்தி அழிக்கப்படுகின்றன.

பவளப்பாறைகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற தென் மண்டலத்தின் மற்ற பகுதிகளுக்கு கடத்தப்படுகின்றன.

பவளப்பாறைகளை அழிப்பது எளிது. அதை உருவாக்குவது கடினம். இவை, நகரும் பண்புடையவை அல்ல. இவை, உணவுப் பொருளும் அல்ல. உண்மையில், பவளப்பாறைகள் கடத்தலால் எவ்வித பயனும் இல்லை. கடல் வளம் தான் அழியும். பவளப்பாறைகள் கடத்தலால் மட்டுமின்றி கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தல், புவி வெப்பமயமாதல், தொழிற்சாலை கழிவுகளால், கடலில் அமிலத்தன்மை அதிகரித்தல் ஆகியவற்றாலும் அழிந்து வருகின்றன. இவை, 100 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, தற்போது, 6ல் ஒரு பங்கு என்ற வீதத்திலேயே உள்ளன.

வானிலை மாறுபாடு பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், மனித இடர்பாடுகளும் காரணியாக இருப்பதை மறுக்க முடியாது.

தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பது, பவளப் பாறைகளைப் பலரும் வெட்டி எடுப்பது, கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பது போன்ற பல காரணங்களால் இவை பெரிதும் பாதிக்கின்றன.இவை மேலும் பாதிக்கப்படாமல் இருக்கவும், கடல் வளத்தைப் பாதுகாக்கவும் விஞ்ஞானிகள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலுக்கடியில் வைத்து வருகின்றார்கள்.

இதே நிலை தொடர்ந்தால் 2030ம் ஆண்டுக்குள் 90 சதவீத பவளப்பாறைகள் அழிந்து விடும். 2050க்கு பிறகு பவளப்பாறைகள் இருந்ததற்கான சுவடு கூட இருக்காது.பவளப்பாறைகளை வாழ்வாதாரமாக கொண்டு கடலில் வாழும் ஏராளமான நுண்ணுயிர்களும் இதனால் அழிந்து விடும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றன.

இயற்கை வளங்களை பாதுகாப்பது நம்முடைய கடமையாகும். இயற்கை வளங்களின் அழிவானது எமது எதிர்கால சந்ததியினருக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

பல நுாறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பவளப்பாறைகளுக்கு, மனிதர்களால் அழிவு ஏற்பட துவங்கி உள்ளது. அரசு, வனச் சட்டத்தில் மாற்றம் செய்து, கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தீவுகள் முழுமையாக மூழ்வதற்கு முன் அவற்றைப் பாதுகாக்க, தீவிர நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டியது அவசியம். அவசரம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com