Enable Javscript for better performance
Is Laws do its duty only after its death? | உயிர் பலி கொடுத்தால் தான், சட்டம் தன் கடமையைச் செய்யுமா- Dinamani

சுடச்சுட

  

  உயிர் பலி கொடுத்தால் தான், சட்டம் தன் கடமையைச் செய்யுமா?

  By C.P.சரவணன், வழக்குரைஞர்  |   Published on : 17th September 2019 11:35 AM  |   அ+அ அ-   |    |  

  post

   

  சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற மென்பொறியாளர் இறந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டது. இது முற்றிலும் உண்மை என்பதற்கு பல நிகழ்வுகள் உதாரணமாக உள்ளன. தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு மரணத்திற்கு பிறகு தான் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் விழித்துக்கொண்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த மரணங்களும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும் பின்வருமாறு: 

  1956 சங்கரலிங்கனார் மரணமும் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டலும்..

  தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 1956ஆம் ஆண்டு 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். தனது கொள்கையில் உறுதியாக இருந்து உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த சங்கரலிங்கனார் அக்டோபர் 31ல் உயிர்நீத்தார். 

  முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை  18-7-1967 அன்று சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி, அதன்பின் 1967 நவம்பர் 23 அன்று மத்திய அரசு இந்த தீர்மானத்திற்கு ஏற்பளித்தது. 

  1965 மொழிப்போர் ஈகையும், அலுவல் மொழி விதிகளில் தமிழுக்கு விதிவிலக்கும்

  ஆங்கிலம் அலுவல் மொழி என்ற நிலையிலிருந்து விடுபடாமல் இருப்பதற்கு 1963-ஆம் ஆண்டு நாடாளுமன்றம் இயற்றிய அலுவல் மொழிச் சட்டம் வழிவகுத்தது. ஆனால், 1963 அலுவல் மொழிச் சட்டம் 1965 சனவரி 26-க்குப் பிறகும் இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாக நீடிக்கலாம்  என்று இருந்தது. 

  1965 சனவரி 25இல் இந்தித் திணிப்பை எதிர்த்து சிவகங்கையைச் சேர்ந்த காவலர் ஒருவரின் மகன் மாணவன் இராசேந்திரன் மார்பில் குண்டேந்தி மடிந்தார். 26. 01. 1965 விடியற்காலை சென்னை கோடம்பாக்கம் திடலில் “உயிர் தமிழுக்கு உடல் தீக்கு”என்று எழுதி வைத்துவிட்டு, சிவலிங்கம் என்ற இளைஞர் தீக்குளித்து மடிந்தார். 27. 01. 1965 விடியற்காலை சென்னை விருகம்பாக்கத்தில் ஒரு மடல் எழுதி வைத்துவிட்டு அரங்கநாதன் என்ற இளைஞர் தீக்குளித்து மடிந்தார்.

  தமிழகத்தின் முதல் தழல் ஈகியாக 1964 சனவரி 25ஆம் நாள் விடியற்காலை திருச்சி தொடர் வண்டிச் சந்திப்பு நிலைய வாயில் எதிரில் கீழப்பழூர் சின்னச்சாமி என்ற இளைஞர் “தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!” என்று முழக்கமிட்டவாறு தீக்குளித்து மடிந்தார்.

  1965இல் அடுத்தடுத்து கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை மாணவர் சாரங்கபாணி எனப் பலரும் தீக்குளித்தும், நஞ்சுண்டும் மடிந்தனர். அதன்பின், மத்திய அரசின் அலுவல் மொழி விதிகள், 1976இல் தமிழகத்திற்கு விலக்களிக்கப்பட்டது

  1998-ல் சரிகாஷா மரணமும், ஈவ் டீசிங்கிற்கு எதிரான நடவடிக்கையும்

  சென்னை எத்திராஜ் கல்லூரியைச் சேர்ந்த சரிகாஷா மற்றும் அவரது தோழிகள் கடந்த 18.7.98 அன்று கல்லூரி சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, காங்கிரஸ் இளைஞர் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய முருகன், ஹரி, சரவணன், பன்னீர் செல்வம், ஸ்ரீதர், வினோத், சி.ஸ்ரீதர், பிரபுதாஸ், புகழேந்தி ஆகிய ஒன்பது பேரும் ஒரு ஆட்டோவில் அந்த சாலையில் வந்துகொண்டிருந்தனர்.

  அப்போது சரிகாஷா மற்றும் அவரது தோழிகள் மீது தங்கள் கைகளில் இருந்த தண்ணீர் பாக்கெட்டை பீச்சி அடித்து கேலி செய்தனர். ஆட்டோவில் இருந்த ஹரி திடீரென்று சரிகாஷா மீது விழுந்தார், இதனால் சரிகாஷா கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்தார்.

  இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்த பிறகு பொது இடங்களில் பெண்களை கேலி செய்வதை முற்றிலும் அகற்ற முடிவு செய்த தமிழக அரசு, தமிழ்நாடு பெண்கள் கேலி தடுப்பு சட்டம்,1998 ஐ இயற்றியது

  2000-ம்  ஆண்டில் 3 மாணவிகள் எரிப்பும், பேருந்து தீ வைப்பும்

  2000-ம்  ஆண்டில் தர்மபுரியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. கோகிலவாணி, கேமலதா, காயத்திரி, ஆகிய 3 மாணவிகள் இறந்ததால் நாடே கொந்தளித்தது. பொது சொத்துக்களை சேதப்படுத்தி தீங்கு செய்கிறவர்களுக்கு நீதிமன்றமும், அரசும் கடுமையான தண்டனைகளை ஏற்படுத்தின. "தமிழ்நாடு சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் 1992 நடைமுறையில் வந்தது. அதன் பிறகு தான் தமிழ்நாட்டில் பேருந்துகளை தீ வைத்து எரிப்பது குறைந்தது.

  2001-ல் ஏர்வாடி விபத்து: தனியார் மனநல காப்பகத்துக்கு கட்டுப்பாடு

  2001-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மன நோயாளிகளுக்கான தனியார் காப்பகம் தீப்பிடித்து எரிந்தது. சங்கிலியால் கட்டிப்போடப்பட்டிருந்த மனநோயாளிகள் தப்பித்து ஓட முடியவில்லை. இந்த தீ விபத்தில் 28 பேர் தீயில் கருகி இறந்தனர். இதனையடுத்து தமிழ்நாட்டில் தனியார் மனநல காப்பகங்கள் நடத்துவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டன.

  2004-ல் பள்ளி தீ விபத்து: பள்ளிகள் அனுமதி பெறுவதற்கான விதிகள் கடுமையானது

  2004-ம் ஆண்டு கும்பகோணத்தில் கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப்பள்ளி அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. வெளியேற வழி கிடைக்காமலும், புகையில் மூச்சுத் திணறியும், தீயில் கருகியும், 94 குழந்தைகள் இறந்தனர். தமிழ்நாட்டில் மிக அதிகம் பேரை பலி கொண்ட தீ விபத்து இதுவாகும். பள்ளி கட்டிடங்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற விதிகள் அதன் பிறகு உருவாக்கப்பட்டது. பள்ளிகள் அனுமதி பெறுவதற்கான விதிகளும், கடுமையானது.

  2009-ல் படகு விபத்து: உயிர்காக்கும் உடை அணிவது கட்டாயமாக்கப்பட்டது

  2009-ல் தேக்கடி பெரியார் நீர் தேக்கத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நீச்சல் தெரியாததாலும், உயிர் காக்கும் உடைகளை அணியாததாலும், 45 பேர் நீரில் மூழ்கி இறந்து விட்டனர். இதன்பிறகு தான் சுற்றுலா மையங்களில் நடைபெறும் படகு சவாரிகளின் போது உயிர் காக்கும் உடை அணிய வேண்டும் என்பது கட்டாயமானது.

  2012-ல் ஸ்ருதி மரணம்: பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்வது அமலானது

  2012-ம் ஆண்டு சென்னையில் தாம்பரம் அடுத்த சேலையூரில் தனியார் பள்ளி பேருந்தில் ஓட்டை; அதில் பயணித்த 6 வயது சிறுமி ஓட்டை வழியாக கீழே விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து தனியார் பள்ளிகளுக்கு கண்டனம் வலுத்தது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்யும் முறை அமலுக்கு வந்தது.

  2012-வினோதினி ஆசிட் வீச்சு ஆசிட் விற்பனை கட்டுப்பாடு

  காரைக்கால் ஜெயபாலின் மகள் வினோதினி. இவர் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி இருந்து சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரை ஒருதலையாக காதலித்தவன் கட்டிடத் தொழிலாளி சுரேஷ். 2013 தீபாவளிக்கு வினோதினி ஊருக்கு சென்ற போது சுரேஸ் ஆசிட் ஊற்றி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். தமிழ்நாட்டில் ஆசிட் விற்பனை மற்றும் பயன்பாட்டை முறைப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் வரைவு சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. 

  2014-ல் சசிபெருமாள்: மதுக்கடை எதிர்ப்பு வலுவடைந்தது

  2014-ல் சேலத்தை சேர்ந்த மது ஒழிப்பு போராளி சசிபெருமாள் குமரி மாவட்டத்தில் மதுக்கடை ஒன்றை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். செல்போன் கோபுரத்தில் ஏறி போராடிய சசிபெருமாளின் உயிர் அங்கேயே பிரிந்தது. சசிபெருமாள் மரணத்தால் மதுக்கடை ஒழிப்பு போராட்டங்கள் தீவிரமடைந்தன. பின்னர் நெடுஞ்சாலைகள் ஓரம் இருந்த கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவால் அகற்றப்பட்டன.

  2016-ஸ்வாதி: ரயில் நிலையங்களில் கட்டாயக் கேமரா அமலானது

  2016-ல் சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற மென்பொருள் பொறியாளர் இளைஞர் ஒருவரால் வெட்டிக்கொல்லப்பட்டார். பின்னர் அந்த இளைஞர் தப்பி ஓடும் காட்சிகள் மட்டும் சிசிடிவி கேமராக்களால் கிடைத்தன. ஆனால், ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு உரிய காட்சி கிடைக்கவில்லை. இதன் பிறகு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினால் தான் சென்னையில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயமானது.

  ஆகஸ்ட் 2017  சிவபிரகாசம் மரணமும், மாஞ்சா கயிறு தடையும்

  மதுரவாயல் பைபாஸ் ரோட்டில் கொளத்தூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான சிவபிரகாசம் தன் தந்தை சந்திரசேகரனுடன் பைக்கில் பயணித்து கொண்டிருந்த போது, திடீரென்று காற்றில் பறந்து வந்த கயிறு ஒன்று அவரது கழுத்தில் மாட்டி அறுத்தது. வலி தாங்காமல் அதை எடுக்க முயற்சித்தபோது வண்டி நிலை தடுமாறி அருகில் இருந்த இரும்பு தடுப்பில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிவபிரகாசம் உயிரிழந்தார். 

  சிவபிரகாசம் உயிரை பறித்த அந்தக் கயிறு நம் நாட்டில் பல பேருக்கு எமனின் பாசக்கயிறாக மாறியுள்ளது. 

  நம் நாட்டின் நகர காவலர் சட்டம் 71ன் கீழ் காவல் துறையினர் காத்தாடி விடுவதையும் மாஞ்சா கயிறு பயன்படுத்துவதையும் தடை செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. கடந்த  2015ம் ஆண்டு சென்னையில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் மாஞ்சா கயிறு மாட்டி இறந்த போது காத்தாடி பறக்கவிட சென்னை காவல் துறை தடை விதித்தது.

  நம் நாட்டின் நகர காவலர் சட்டம் 71ன் கீழ் காவல் துறையினர் காத்தாடி விடுவதையும் மாஞ்சா கயிறு பயன்படுத்துவதையும் தடை செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. மாஞ்சாவால் ஏற்படும் உயிரிழப்புகளை கண்டித்து விலங்குகள் நல அமைப்பு தேசிய பசுமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் அனைத்து மாநில அரசுகளும் மாஞ்சாவை தயாரிக்கவோ, விற்கவோ, சேமிக்கவோ, வாங்கவோ தடை விதிக்கும்படி உத்தரவிட்டார்.

  இந்த தீர்ப்பை தள்ளுபடி செய்யுமாறு குஜராத்தை சேர்ந்த சில வணிகர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், கடந்த ஜனவரி மாதம் நடந்த விசாரணையில் தேசிய பசுமை ஆணையம் விதித்த தீர்ப்பை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது

  2017-ல் அனிதா: நீட்டுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம்

  2017-ம் ஆண்டு மருத்துவ கனவு தகர்ந்ததால் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 12-ம் வகுப்பு தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் அவரால் மருத்துவராக முடியவில்லை.

  இதனையடுத்து தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வலுத்தது. தமிழக அரசு நீட் விலக்கு சட்டம் இயற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் 2 ஆண்டுகள் கழித்து அந்த சட்டம் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

  2018-ல் குரங்கணி தீ விபத்து: மலையேறும் பயிற்சிக்கான விதி கடுமையாக்கல்

  2018-ல் மார்ச் மாதம் தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டவர்களை காட்டுத் தீ சூழ்ந்தது. இதிலிருந்து யாராலும் தப்பித்து வர முடியவில்லை. ஆண்கள், பெண்கள் என 33 பேர் இறந்தனர். அதற்கு பிறகு தான் மலையேற்ற பயிற்சிக்கான விதிகள் கடுமையாக்கப்பட்டன.

  2018-ம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஸ்டெர்லைட் ஆலை மூடல்

  2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் அலையால் நிலத்தடி நீர் கேட்டு போகிறது என்றும், சுற்றுசூழல் மாசுபடுகிறது என்றும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். பல ஆயிரம் பேர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முழங்கினர். போராட்டத்தை அமைதியாக கட்டுப்படுத்த தவறிய போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் இறந்தனர். இதனையடுத்து அரசு பணிந்தது, ஸ்டெர்லைட் மூடப்பட்டது.

  2019-ல் சுபஸ்ரீ: பேனர் வைத்தால் ஓராண்டு சிறை

  2019-ல் சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுபஸ்ரீ அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் அறுந்து விழுந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்து, லாரி மோதி உயிரிழந்தார். இதனையடுத்து சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றம் கண்டன அம்புகளை தொடுத்தது. இனி பேனர் வைக்க மாட்டோம் என்று அரசியல் கட்சிகள் தாமாக முன்வந்து அறிவித்தனர். பேனர் வைத்தால் ஓராண்டு சிறை என்று மாநகராட்சி அறிவித்தது.

  இப்படி மக்கள் உயிரைக் குடித்தே, ஒவ்வொரு சட்ட நடவடிக்கையும் அரசு எடுத்துள்ளது. அரசு, மக்கள் விரோத நடவடிக்கைகளை கைவிட்டு அரசியல்வாதிகள் மற்றும் அரசு பணியாளர்கள் செய்யும் சட்டமீறல் நடவடிக்கைகளை கட்டுக்குள் வைத்தால் மட்டுமே தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கும்...இனியாவது அரசு உயிர்பலி ஏற்படாமல் அரசு இயந்திரத்தை கண்காணிக்க வேண்டும்.

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp