இவர் பிடுங்குவது எல்லாமே தேவை இல்லாத ஆணிகள்தான்: சத்தமில்லாமல் சாதித்து வரும் ஏட்டு சுபாஷ்.!

காவல் துறை உங்கள் நண்பன் என்ற வாசகம் அனைத்து காவல் நிலையங்களிலும் ஓட்டப்பட்டிருந்தாலும், பொதுமக்களுக்கும், காவல் துறைக்கும் இடையே ஓர் நிரப்ப முடியாத இடைவெளி இருப்பது கண்கூடான
இவர் பிடுங்குவது எல்லாமே தேவை இல்லாத ஆணிகள்தான்: சத்தமில்லாமல் சாதித்து வரும் ஏட்டு சுபாஷ்.!

காவல் துறை உங்கள் நண்பன் என்ற வாசகம் அனைத்து காவல் நிலையங்களிலும் ஓட்டப்பட்டிருந்தாலும், பொதுமக்களுக்கும், காவல் துறைக்கும் இடையே ஓர் நிரப்ப முடியாத இடைவெளி இருப்பது கண்கூடான உண்மை. போலீஸ் என்றாலே விரைப்பான உருவம், முறைப்பான பார்வை, முரட்டுத்தனமான செயல்பாடுகள் என மக்கள் மனதில் பதிந்துபோன பிம்பம்தான் இதற்குக் காரணம்.

ஆனால் இந்த பிம்பத்தை உடைத்தெறிந்திருக்கிறார் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காவலர் பணியிடைப் பயிற்சி மையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் சுபாஷ் சீனிவாசன். சமீபத்தில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தியாகி மக்களுக்கு இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

மரங்களில் ஆணி வைத்து அடிக்கப்படும் போஸ்டர்களை பிடுங்கி சத்தமில்லாமல் ஒரு மாற்றத்தை நிகழ்த்தி வருகிறார் ஏட்டு சுபாஷ். இவர், ராமநாதபுரம் பகுதியில் மரங்களில் உள்ள விளம்பரப் பதாகைகளை மாட்ட அடித்து வைத்துள்ள ஆணிகளைப் பிடுங்கி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக இவர் பிடிங்கியதெல்லாமே தேவையில்லாத ஆணிதான். 

மரத்தில் ஆணி அடிப்பதால் மரத்தின் ஆயுள் குறைந்து விரைவில் மரம் மரித்து விடும். மரங்களைக் காக்க இவ்வாறு மரத்தில் ஆணி அடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பசுமரத்தாணி போல ஆழமாக பதிய வைத்துவிட்டார்.

இதுகுறித்து அவர் நம்மிடம் கூறியதாவது, 1997ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தேன். எனக்கு இயல்பாகவே சமூகப் பணிகளில் மிகுந்த ஆர்வமுண்டு. காவல்துறை பணியோடு அவ்வப்போது சமுதாய நலப் பணிகளிலும் ஈடுபட்டு வருவேன். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் போக்குவரத்துக் காவலராகப் பணிபுரிந்து வந்தபோது, ஆங்காங்கே மரங்களில் விளம்பரப் பதாகைகளை ஆணிகள் மூலம் அடித்து வைத்திருப்பதை பார்க்கும்போது மிகுந்த வருத்தமாக இருக்கும்.

மரங்களும் நம்மைப் போல ஓர் உயிர்தானே. அவற்றை வதைப்பதும் தவறுதானே என எண்ணுவேன். மரங்கள் மனித குலத்துக்கு எண்ணற்ற நலன்களை வழங்கிவருகிறது. காற்று மாசு நிறைந்து வரும் இக்காலத்தில் மரங்கள் மனிதர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை அதிக அளவில் வழங்கி வருகின்றன. புதிதாக மரங்களை நட்டு பராமரிப்பது ஓர்வகையில் சமுதாயப் பணி என்றால், இருக்கும் மரங்களை காப்பற்றுவதும் ஓர் முக்கிய சமுதாயப் பணிதானே என எண்ணினேன்.

இதையடுத்து ஓர் ஏணியும், ஆணி பிடுங்கும் கருவியுமாக களத்தில் இறங்கினேன். எனது சொந்த காரை எடுத்துக் கொண்டு ஊர் முழுவதும் சுற்றி மரங்களில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை பிடுங்கத் தொடங்கினேன் என்கிறார். இவரின் இப்பணியால் தேவகோட்டை பகுதியில் உள்ள 90 சதவீத மரங்களில் உள்ள ஆணிகள் பிடுங்கப்பட்டு, அங்குள்ள மரங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. 

தற்போது ராமநாதபுரத்திலும் இவரின் இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் பகுதியில் சுமார் 70 சதவீதம் மரங்களில் உள்ள ஆணிகளை பிடுங்கி விட்டதாகத் தெரிவிக்கும், இவரிடம் இப்பணிக்கு மக்களிடம் எவ்வாறு ஆதரவு உள்ளது என நாம் கேட்டோம்.

முதலில் எனது இந்த ஆணி பிடுங்கும் வேலையை வேடிக்கையாகப் பார்த்த மக்கள், பின் இதன் பயனறிந்து எனக்கு ஆதரவளித்தனர். காவல் துறை உயர் அதிகாரிகளும் எனது பணிக்கு ஊக்கம் அளித்தனர். ஆனால் சிறுசிறு நிறுவனங்கள் தங்களின் சிறிய விளம்பர பலகைகளை மீண்டும் மீண்டும் மரங்களில் ஆணி அடித்து நிறுவி வந்தனர். நானும் விடாமுயற்சியோடு அவற்றை மீண்டும் மீண்டும் மரத்தில் இருந்து பிடுங்கி எடுத்துவிடுவேன். இறுதியில் அவர்களும் மரங்களில் ஆணி அடிக்கும் பழக்கத்தைவிட்டுவிட்டு பிட் நோட்டீஸ் மூலம் விளம்பரம் செய்யத் தொடங்கிவிட்டனர்.

இதற்கு உங்கள் குடும்பத்தினரிடம் எந்தளவுக்கு ஆதரவு உள்ளது என கேட்டதற்கு, எனது குடும்பத்தாரின் முழு ஆதரவும் எனது பணிக்கு உள்ளது. எனது இரு மகன்களையும் விடுமுறை நாள்களில் நான் ஆணி பிடுங்கபோகும்போது அழைத்துச் செல்வேன். அவர்களும் எனக்கு உதவியாக இருப்பார்கள். சில நேரங்களில் மரங்களில் உள்ள பூச்சிகள் கடித்துவிடும், மரத்துகள்கள் மற்றும் ஆணிகளில் உள்ள துரு போன்றவை கண்களில் விழுந்து விடும். அப்போது மட்டும் எனது மனைவி என்னை செல்லமாக கடிந்து கொள்வார். மற்றபடி அனைவரின் முழு ஆதரவும் எனக்கு உண்டு எனக் கூறும் இவர் அதுவரை 30 கிலோவுக்கும் மேலே பிடுங்கிய ஆணிகளை சேகரித்து வைத்துள்ளார்.

மேலும் இவர் 2013ம் ஆண்டு கிணற்றில் விழுந்த ஓர் பெண் மற்றும் சிறுமியை கிணற்றில் குதித்து காப்பற்றியதற்காக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் பாராட்டு பெற்றுள்ளார். எச்ஐவி பாதித்த 5 குழந்தைகளுக்கு ரூ. 12,500 கல்வி உதவித் தொகையாக வழங்கியுள்ளார். மேலும், புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள், தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் போன்றவற்றை விளக்கி சொந்த பணத்தில் பிட் நோட்டீஸ் அடித்து விநியோகிப்பது, கருவேல மரங்களை அகற்றுவது, ஊருணிகளை தூர்வாருவது, மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது என தனது ஓய்வு நேரத்திலும் ஓயாமல் சமுதாயப் பணியாற்றி வருகிறார்.

புகைப்பதனால் ஏற்படும் தீமைகளையும், உயிரிழப்புகளையும் தடுப்பதற்காக புகையிலை பொருள்களை அரசு தடை செய்ததுபோல, பீடி, சிகரெட் போன்ற பொருள்களையும் தடை செய்யவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தனது மனைவி பெயரில் வழக்கு தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார். (அரசுப் பணியில் இருப்பதால் இவர் வழக்கு போட இயலாது என்பதால் மனைவி பெயரில் வழக்கு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்).

இவரது பணிகளைப் பாராட்டி ஓய்வு பெற்ற டிஜிபி தேவாரம், தற்போதைய ஏடிஜிபி சைலேந்திரபாபு போன்றோர் இவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். மேலும், இவருக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், கேரள ஆளுநருமான சதாசிவம் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

நேரம் காலமின்றி உழைக்கும் போலீஸாருக்கு ஓய்வு கிடைப்பதே அரிது. அந்த கிடைக்கும் ஓய்வு நேரத்திலும் தூங்கி ஓய்வெடுக்க இயலாமல் குடும்ப பணிகளை மேற்கொள்ளும் போலீஸாருக்கு மத்தியில் காரில் ஏணியைத் தூக்கிக் கொண்டு மரங்களில் உள்ள ஆணிகளை பிடுங்கி மரங்களைக் காக்க பாடும்படும் இந்த காவலரின் பணி மிகுந்த பாராட்டுதலுக்கு உரியது மற்றுமின்றி போற்றுதலுக்கும் உரியது.

தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு வந்து விட்டோம். இனி காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலை வந்துவிடக்கூடாது. இந்நிலையில் புதிதாக மரங்கள் நடுவது ஓர்புறம் இருந்தாலும், இருக்கும் மரங்களை பாதுகாக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வரவேண்டும் என்பதே இவரின் வேண்டுகோளாக இருக்கிறது.

இவரின் இப்பணியை முன்னுதாரணமாகக் கொண்டு மரங்களில் புதிதாக ஆணி அடிப்பதை தடுப்பதும், அடிக்கப்பட்ட ஆணிகளை பிடுங்குவதும் இயற்கை அன்னையின் மழலைகளாம் மரங்களைப் பாதுகாக்கும் நல்முயற்சியாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com