நெஞ்சு பொறுக்குதில்லையே..! தமிழ்நாட்டில் தமிழ் படும் பாடு?!

தாய்மொழியையே முறையாக கற்றுக்கொள்ளாமல் ஹிந்தி திணிப்புக்கு குரல் கொடுக்கிறோம்; பள்ளிகளில் மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்; அதற்காக போராட்டமும் நடத்துகிறோம்
நெஞ்சு பொறுக்குதில்லையே..! தமிழ்நாட்டில் தமிழ் படும் பாடு?!

இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம்; அவர்களின் கைகளில்தான் நாடு உள்ளது என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இளைஞர்களின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தினார் சுவாமி விவேகானந்தர். அன்று முதல் இன்று வரையில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் இதனை ஆமோதித்து வருகின்றனர். 

'நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது' என்பதை கிடைக்கும் இடங்களில் எல்லாம் நம் அரசியல் தலைவர்களும் முன்மொழிந்து வருகின்றனர். ஆனால், இன்றைய நிலைமை என்னவென்றால், தமிழகத்தில் உயர்கல்வி கற்கும் மாணவர்கள்கூட தாய் மொழியான தமிழைப் பிழையின்றி எழுதத் தெரியாத நிலை இருக்கிறது. அடிப்படையான தாய் மொழியையே கற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர்களின் எதிர்காலம்?

இதற்கு எடுத்துக்காட்டாக பொது இடங்களில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 

கடலூர் மாவட்டம், புவனகிரியில் காவல் நிலைய ஆய்வாளராகப் பணிபுரிபவர் அம்பேத்கர். இவர், தனது முகநூல் பக்கத்தில், அண்மையில் வெளியான ஒரு புதிய திரைப்படத்தின் பதாகையுடன் மேள, தாளத்துடன் கூச்சலிட்டபடி, அனுமதியின்றி சாலையில் ஊர்வலமாகச் சென்று, பொதுமக்களுக்கு இடையூறு செய்ததற்கு, கல்லூரி மாணவர்கள் காவல் துறைக்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் ஒன்றை ஆய்வாளர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

அந்தக் கடிதத்தில், 'நான் கீழ்புவனகிரியைச் சேர்ந்த பி.காம். மாணவர். இனிமேல் காவல் துறை அனுமதியின்றி, திரையரங்கில் பேனர் வைக்க மாட்டேன், மீறி செய்தால் சட்ட நடவடிக்கைக்குக் கட்டுப்படுகிறேன்' என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆனால், ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் எழுதியுள்ளார். 

பின்னர், மாணவர்கள் எழுதிய அந்தக் கடிதத்தில் இருந்த எழுத்துப் பிழைகளை, சிவப்பு நிற கோடிட்டுக் காட்டியுள்ளார் காவல் ஆய்வாளர். மேலும், அவரது முகநூல் பதிவில், மாணவர்களின் கல்வி நிலை இவ்வாறு போனால், யார்தான் காப்பார்கள் இவர்களையும், இவர்களின் தமிழையும்? என கேள்வி எழுப்பியதோடு, இதுபோன்ற இளைஞர்களுக்கு சரிவர தமிழைப் போதிக்காமல் விட்ட ஆசிரியர்கள் மீது கோபம் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

அவர் முகநூலில் வெளியிட்ட இந்தக் கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

இதேபோன்று பெரம்பலூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் கல்லூரி மாணவர்களுக்கு விநோத முறையில் தண்டனை அளித்து வருகிறார்.

அவர்களது கையில் ஒரு பேப்பர், பேனாவைக் கொடுத்து 10 திருக்குறள் எழுதும்படி கூறுகிறார். அதிலும் அடி மாறாமல் எழுத்துப் பிழையில்லாமல் 10 திருக்குறள் எழுத வேண்டும். அவ்வாறு பிழையில்லாமல் சரியாக எழுதிவிட்டால், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும்படி அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பிவிடுவார். 

பிழையுடன் எழுதினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தான் சந்தித்த மாணவர்களில், 99% பேருக்கு ஒன்று, இரண்டு திருக்குறள்கூட முழுமையாக எழுதத் தெரியவில்லை. அதிலும் அவ்வளவு எழுத்துப்பிழைகள் இருந்தன. பலருக்கு தமிழ் எழுத்துகளின் வித்தியாசம்கூட சரியாகத் தெரியவில்லை என்று கூறியிருந்தார். பெரம்பலூர் இன்ஸ்பெக்டரின் இந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

பள்ளிக்கூடங்களில் படித்த திருக்குறள்கூட நினைவில் இல்லை என்றால் இவர்கள் பள்ளியில் 12 ஆண்டு காலம் எப்படி தமிழ்ப் பாடத்தை படித்தார்கள்? என்ற கேள்வி இங்கு எழத்தானே செய்கிறது? திருக்குறள்கூட வேண்டாம்; முதல் சம்பவத்தில், ஒரு கடிதத்தைக்கூட பிழையில்லாமல், சரியான தமிழில் மாணவர்களால் எழுத முடியவில்லை. எல்.கே.ஜி முதல் கல்லூரி வரை தமிழ் ஒரு பாடமாக இருக்கிறது. தமிழ்வழிக் கல்வியில் படிப்பவர்கள் ஆங்கிலம் தவிர முக்கியப் பாடங்களை எல்லாம் தமிழில்தான் படிக்கின்றனர். ஆங்கில வழிக் கல்வியில் படித்தால்கூட தமிழ் கட்டாயப் பாடமாக இருக்கிறது. 

தாய் மொழி; எங்கள் தமிழ் மொழி; உலகின் தொன்மையான மொழி என்று கூறுகிறோம்; இன்று கீழடி அகழாய்வுகள் மூலமாக தமிழின் பெருமை நிலைநாட்டப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களில் பெரும்பாலாக பகிர்வது இளைஞர்கள்தான். ஆனால், நாம் தனிப்பட்ட முறையில் தமிழில் எழுதுவதிலும், பேசுவதிலும் எவ்வளவு திறம்பட இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு இளைஞரும், இளைஞியும் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். சமூக வலைத்தளங்களில் தமிழில் பதிவிடும் கருத்துகளும் எழுத்துப்பிழையுடன் இருப்பதை நாம் காண முடிகிறது அல்லவா?

அதேபோன்று தமிழக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களைத்தான் இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் வழிமொழிகிறார்கள். அவர்களது கொள்கைகளை பின்பற்றுகின்றனர். அதிலும், அரசியல் கட்சி வேலைகளில் இளைஞர்கள்தான் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தமிழ் மொழி என்று பேசும் அரசியல் தலைவர்களே பல சமயங்களில் தமிழில் பேசும்போது தவறாகப் பேசுகின்றனர். கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று கூறும் அளவுக்குத்தான் தமிழக அரசியல் தலைவர்களின் தமிழ்ப் புலமை இருக்கிறது. இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்தும் இவர்கள் ஒரு மேடையில் பேசும்போது பிழையின்றி பேச வேண்டும் என்பதை கடைப்பிடிக்கலாமே? 

பல பொது இடங்களில் வைக்கப்படும் பேனர்களில்கூட எழுத்துப் பிழைகளை நாம் காண்கிறோம். ர, ற, ன, ண, ந, ல, ள, ழ என்ற எழுத்துகளை எங்கு உபயோகிக்க வேண்டும் என்பது இன்றும் பெரும்பாலானோருக்கு குழப்பமாகத்தான் இருக்கிறது. தமிழின் சிறப்பே இந்த ஒவ்வொரு எழுத்தின் உபயோகத்திலும் தனித் தனி பொருள் கொள்ளப்படும் என்பதுதான்.

சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள பள்ளிகளில் தமிழ் இரண்டாவது மொழியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளே தமிழ் மொழியை திறம்பட கற்றுக்கொடுக்கும்போது, நாம் தமிழை முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்தானே?  

தாய்மொழியையே முறையாக கற்றுக்கொள்ளாமல் ஹிந்தி திணிப்புக்கு குரல் கொடுக்கிறோம்; பள்ளிகளில் மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்; அதற்காக போராட்டமும் நடத்துகிறோம்; ஆனால், அந்தப் போராட்டத்துக்காக வைக்கப்படும் பேனர்களில்கூட தமிழில் எழுத்துப்பிழை இருக்கிறது. 

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ் மொழியில் பிழையின்றி எழுதத் தெரியவில்லை என்பதைக் கண்டு தமிழ்த்தாயே வெட்கித் தலைகுனிவாள்; தமிழன் என்று சொல்கிறவர்கள் தாய்மொழியை முறையாக கற்றுக்கொள்ளாதது வருத்தத்துக்குரியது; கண்டனத்திற்குரியது, வெட்கப்படக்கூடியது.

இது இப்படியே தொடர்ந்தால், ‘தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை’ என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கூற்று மெய்யாகிவிடுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது. இது, தமிழுக்கு தமிழர்களாகிய நாம் செய்யும் ‘மன்னிக்கமுடியாத குற்றம்’ என்றே கூறலாம்.

குற்றவாளியாகவே இருக்கப்போகிறோமா, இல்லை தவறைத் திருத்திக்கொள்ளப்போகிறாமா..?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com