அட்டகாச சலுகை விலை என்று ஏமாற்றும் போலிகளிடம் உஷாராக இருங்கள்!

இன்றைய காலகட்டத்தில் நேரம் என்பது மிக முக்கியம். ஷாப்பிங் செய்வது என்பது அதிக நேரம் பிடிக்கும் செயல்
அட்டகாச சலுகை விலை என்று ஏமாற்றும் போலிகளிடம் உஷாராக இருங்கள்!

ஷாப்பிங் செய்வது பலருக்குப் பிடிக்கும். ஆனால் நேரமின்மை உள்ளிட்ட காரணங்களால் தேவைப்படும் பொருட்களை நேரில் சென்று வாங்க முடியாதவர்களுக்கு வரப்பிரசாதமாக முளைத்ததுதான் இணைய விற்பனை. இன்றைய தேதியில் ஹேர்க்ளிப் முதல் உள்ளாடை வரை வாங்குவதற்கு பலர் ஆன்லைனில் தஞ்சமடைந்துவிட்டனர். அதுவும் அமேஸான், ஸ்னாப் டீல், ஈபே, ஃபிளிப்கார்ட் போன்ற இணையதளங்கள் அடிக்கடி அதிரடி சலுகை விற்பனைகளை அறிவிப்பதால், பயனர்கள் குஷியாகிவிடுவார்கள். உடனே தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். சிலர் ஒரு பொருள் நமக்குத் தேவையோ இல்லையோ விலை மிகக் குறைவாகக் கிடைக்கிறது என்று வாங்கி வைப்பார்கள். ஆசை அல்லது பேராசை இல்லையில்லை நப்பாசை யாரை விட்டது? 

இத்தகைய சலுகை விலை விற்பனைகளால் மக்கள் மட்டுமல்ல, சில போலி இணையதளங்களும் களத்தில் இறங்கிப் பயனடைகின்றன. புத்தீசல்கள் போல முளைக்கும் இந்த போலி இணையங்களின் வேலை சலுகை விலை அறிவிப்பின் மூலம் உங்கள் கணினியில் அல்லது ஃபோனில் உள்ள தகவல்களை திருடுவதற்காகவும், ஸ்பேம் உள்ளிட்ட வைரஸ்களை பரப்பும் நோக்கத்துடன் என்பதை கவனத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுவும் பண்டிகை சமயம் என்றால் கேட்கவே வேண்டாம். இந்த மெய் நிகர் உலகில் நிழல் குற்றாவாளிகள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும்.

அண்மையில் வாட்ஸப்பில் பலருக்கு ஃபிளிப்கார்டிலும் அமேஸானிலும் clearance sale என்ற அறிவிப்புடன் தரமான பொருட்கள் மிக மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு வந்தது. அதுவும் ஸ்மார்ட் ஃபோன் 16 ரூபாய்க்கும், லாப்டாப் 850 ரூபாய்க்கும், சோனி ஹெட்ஃபோன் 9 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக ஒரு குறுஞ்செய்தியும், அதனடியில் ஃபிளிப்கார்ட் / அமேஸான் எனக் குறிப்பிடப்பட்ட ஒரு இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த இணையப் பக்கத்தை பார்ப்பவர்களுக்கு உடனடியாக சந்தேகம் வராது. காரணம் ஃப்ளிக்கார்ட் மற்றும் அமேஸானில் லோகோ மற்றும் கலர்களை அச்சு அசலாக காப்பி அடித்துள்ளனர். எனவே நிச்சயமாக அது ஃபிளிப்கார்டின் பக்கம்தான் என நம்பிவிடுவோம்.

அவர்களது இணையதள முகவரி http://flipkart.oursfeed.com என்று இருக்கும். முதல் பார்வையில் நமக்கு இது சரியான இணைய முகவரி போலத்தான் தென்படும். ஆனால் அது போலியான ஒரு இணையதளம் என்பதை மீண்டும் ஒரு முறை பார்த்தபின்போ, அல்லது அது நமக்கு கொடுக்கும் ‘டாஸ்க்குகளை’ வைத்தோதான் அது போலி என்று கண்டறிய முடியும். அதென்ன டாஸ்ட் என்று கேட்கிறீர்களா? பத்து பேருக்கு இந்த குறுஞ்செய்தியை அனுப்புங்கள், எல்லா சலுகையும் உங்களுக்கே என்ற பசப்பு வசனம்தான் அது.

நீங்கள் ஒவ்வொருவருக்கு அந்த குறுஞ்செய்தியை ஃபார்வேர்ட் செய்ய செய்ய, சிவனின் பாதத்தை தேடிச் சென்ற பிரம்மனின் நிலைதான் உங்களுக்கு ஏற்படும். காரணம் அது முடிவிலி. அதாவது ஏமாற்றும் அந்த போலி இணையதளங்கள் உங்கள் வாட்ஸப், இமெயில் மூலமாக அதுவும் உங்கள் contact list-ல் உள்ளவர்களின் குறுஞ்செய்தி மூலமாகத்தான் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். நம்ப முடியாத அளவு அந்தச் சலுகைகள் இருப்பதால், ஒரு கணம் மதிமயங்கி நீங்களும் அவர்கள் ஃபார்வேர்ட் செய்யச் சொன்ன பத்து பேருக்கு இந்த அறிவிப்பை வேலை மெனக்கிட்டு அனுப்பி வைப்பீர்கள். அதன் பின்னர் தான் க்ளைமாக்ஸ். அந்தப் போலி இணையம் உங்களுடைய மொபைல் எண், மற்றும் இணைய url முகவரியைப் பெற்று விடுவார்கள். 

போலவே flipkart.dhamaka-offers.com, flipkart-bigbillion-sale.com என பல இணையதளங்களும் போலி சலுகை அறிவிப்புக்களுடன் உலா வருகின்றன. முன்பு மின்னஞ்சலில் வந்து கொண்டிருந்தவை, இன்று நேரடியாக வாட்ஸப்பில் குவிந்து வருகின்றன. ஏமாறுவோர் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கு குஷிதானே? எனவே உஷாராக இருங்கள். சலுகை விலைக்கு ஆசைப்படலாம். தவறு இல்லை. கிட்டத்தட்ட இலவசமாகவே ஒரு பொருளை வாங்க நினைக்கலாமா? இந்தப் புள்ளியில்தான் அவர்கள் உங்களை வீழ்த்துகிறார்கள்.

இது போன்ற ஏமாற்று இணையதளங்களிலிருந்து உங்களைப் பாதுகாத்து கொள்ள பின்வரும் விஷயங்களில் கவனமாக இருக்கவும்.

இணையதள ஜாம்பவன்களான அமேஸான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஒருபோதும் எந்த வாடிக்கையாளர்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் சலுகை பற்றிய அறிவிப்பை தரமாட்டார்கள். உங்கள் வாட்ஸப்பில்  குறுஞ்செய்திகளின் வாயிலாக அப்படி ஒரு இணையதள முகவரி வந்துவிட்டால், உடனடியாக அதனை நம்பக் கூடாது. அமேஸான் மற்றும் ஃபிளிப்கார்ட் தங்களின் எல்லா சலுகை விற்பனை பற்றிய விபரங்களை அவர்கள் மொபைல் செயலியின் மூலம் அல்லது அவர்களின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் மட்டுமே அறிவிப்பார்கள்.

மிகப் பெரிய அளவில் சலுகை அறிவிப்புக்கள் வரும்போதே உஷாராகிவிட வேண்டும். அதையும் மீறி சந்தேகம் இருந்தால் உடனடியாக அது உண்மையா இல்லையா என்று இணைய எக்ஸ்பர்ட்டாக இருக்கும் உங்கள் நண்பர்கள் யாரிடமாவது கேட்கலாம். அல்லது சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் கஸ்டமர் கேர் எண்ணைத் தொடர்பு கொண்டு நேரடியாகவே உறுதிப்படுத்தி கொள்ளலாம்.

இதுபோன்ற போலி அறிவிப்புக்களை நம்பி மொபைல் எண், வங்கி எண், வீட்டு முகவரி உள்ளிட்ட சுய விபரங்களை யாரிடமும் கொடுக்காதீர்கள். உங்களைப் பற்றிய தகவல்களைத் திருடி வேறு சிலரிடம் அதை விற்று பணம் சம்பாதிக்கும் சைபர் குற்றவாளிகள் நிழலாக நடமாடுகிறார்கள். இவர்கள் உங்களுடைய நிதி சார்ந்த தகவல்கள் திருடுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

உங்களுக்குத் தெரியாத நபர்களிடமிருந்து அழைப்பு வந்தாலோ, அல்லது அடையாளம் தெரியாத நம்பரிலிருந்து ஃபோன் கால்கள் வந்தாலோ அதை தவிர்த்துவிடுங்கள். திடீரென்று உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வரலாம். ஒரு லாட்டரியில் அல்லது ஆஃபரில் நீங்கள் வென்றுள்ளீர்கள். இலவசமாக ஸ்மார்ட்போன் அல்லது டிவி தரப்போகிறோம் என்று அவர்கள் கூறுவார்கள். இப்படி உங்களை எளிதாக அணுகியவர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் உங்களது சுய விவரங்களைத் தராதீர்கள். இது போன்ற அழைப்புகள் அடிக்கடி வருமானால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் அல்லது சைபர் கிரைமில் புகார் செய்துவிடுங்கள். 

அமேஸான் இணையதளத்தின் கஸ்டமர் கேர் எண் - 1800 3000 9009

ஃபிளிப்கார்ட் இணையத்தின் கஸ்டமர் கேர் நம்பர் - 1800 208 9898 

சைபர் க்ரைமின் இணைய முகவரி :  https://cybercrime.gov.in/cybercitizen/home.htm  

திருடனாகப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. ஆனால் அதுவரை நம்மால் காத்திருக்க முடியாது. எனவே கூடுமானவரையில் ஜாக்கிரதையாக செயல்பட்டு உங்கள் பர்ஸை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com