ஆயுதபூஜை பொரி எங்கிருந்து வருகிறது? தெரிந்து கொள்ளுங்கள்..!

ஆயுதபூஜையை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் பொரி தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
ஆயுதபூஜை பொரி எங்கிருந்து வருகிறது? தெரிந்து கொள்ளுங்கள்..!


ஆயுதபூஜையை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் பொரி தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. கேரளா, ஆந்திரா மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் வெளி மாவட்டங்களுக்கு 10 லட்சம் பொரி மூட்டைகள் இங்கிருந்து ஏற்றுமதியாகும் என உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜைகளில் பொரி பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து பொரி தயாரிக்கப்பட்டு, வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

நிகழாண்டில்அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ம் தேதி ஆயுதபூஜையும், 8-ம் தேதி சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்படுகிறது.

இதற்காக கிருஷ்ணகிரியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மண்டிகளில் நவீன முறையில் பொரி தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொரி, கேரளா, ஆந்திர மாநிலம் சித்தூர், குப்பம் மற்றும் தமிழகத்தில் வேலூர், சென்னை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும், நிகழாண்டில் பொரிக்கான ஆர்டர் கூடுதலாக கிடைத்திருந்தாலும், மூலபொருட்கள் விலை உயர்வால் போதிய வருவாய் கிடைப்பதில்லை என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி - சென்னை சாலையில் உள்ள அமுதா பொரி மண்டியின் உரிமையாளர் கிருஷ்ணகுமார் கூறும்போது, பொரி உற்பத்தி செய்வதற்காக ஒடிசா, பர்துவான், புவனேஸ்வர் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து பதப்படுத்தப்பட்ட அரிசியை இறக்குமதி செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் அரிசியின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அரிசி கிலோ ரூ.30-க்கு கொள்முதல் செய்தோம். தற்போது கிலோ அரிசி ரூ.35 என விலை உயர்ந்துள்ளது.

இதேபோல் பொரி தயாரிக்க தேவைப்படும் எரிபொருள் உள்ளிட்ட மூலபொருட்களின் விலையும் இருமடங்கு உயர்ந்துள்ளது. 2 மாதங்களுக்கு முன்னர் பொரி தயாரிக்கும் பணியை தொடங்கி விட்டோம். சீதோஷ்ணநிலை மாற்றம் காரணமாக ஓரிரு நாட்கள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது. உரிய நேரத்தில் ஆர்டர் எடுத்தவர்களுக்கு பொரியை தயாரித்து கொடுக்க வேண்டும் என்பதாலும், உள்ளூர் விற்பனைக்கும் பொரி தயாரிக்க வேண்டும் என்பதாலும் இருக்கின்ற ஆட்களை வைத்து இரவு பகல் பாராமல் பொரி தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். நாள்தோறும் 800 மூட்டைகள் பொரி தயாரிக்கிறோம்.

ஆயுதபூஜைக்கு முன் வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு, கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 10 லட்சம் பொரிமூட்டைகள் ஏற்றுமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50 படி கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.380 முதல் ரூ.400 வரை விற்பனையாகிறது. விழா நெருங்கும் நேரத்தில் விலை ரூ.600 வரை அதிகரிக்கும். ஆர்டர்கள் அதிகம் குவிந்தாலும் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com