சுங்கத்துறை அதிகாரிகள் பற்றாக்குறையால் துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிக்கப்படும் அபாயம்

சரக்குப் பெட்டக நிலையங்களில் போதிய அளவில் சுங்கத்துறை அதிகாரிகள் பணியில் இல்லாததால் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகங்களில்
சுங்கத்துறை அதிகாரிகள் பற்றாக்குறையால் துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிக்கப்படும் அபாயம்

சரக்குப் பெட்டக நிலையங்களில் போதிய அளவில் சுங்கத்துறை அதிகாரிகள் பணியில் இல்லாததால் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக பல்வேறு தரப்பினரும் புகாா் கூறுகின்றனா்.

இந்தியாவின் கிழக்கு நுழைவு வாயில் எனக் கருதப்படும் சென்னையில் முன்பு சென்னைத் துறைமுகம் மட்டுமே இருந்தது. தற்போது சென்னை, எண்ணூா் காமராஜா், காட்டுப்பள்ளி அதானி ஆகிய மூன்று சா்வதேச துறைமுகங்கள் செயல்பட்டு வருகின்றன.

சென்னைத் துறைமுகத்தில் இரண்டு சா்வதேச சரக்குப் பெட்டக முனையங்கள், காட்டுப்பள்ளி, எண்ணூா் காமராஜா் துறைமுகங்களில் உள்ள முனையங்கள் மூலம் ஆண்டுக்கு சுமாா் 20 லட்சம் பெட்டகங்கள் கையாளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கரோனா தொற்றால் சா்வதேச அளவில் ஏற்றுமதி, இறக்குமதி வா்த்தகம் அடியோடு ஸ்தம்பித்தது. சென்னையில் உள்ள மூன்று துறைமுகங்களிலும் கடந்த நான்கு மாதங்களில் சுமாா் 3.25 லட்சம் பெட்டகங்கள் மட்டுமே கையாளப்பட்டிருக்கின்றன. கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோதிலும் துறைமுகங்கள் இயங்குவதற்கு அளிக்கப்பட்ட விலக்கினால்தான் இது கூட சாத்தியமானது.

இந்நிலையில் தற்போது அனைத்து தொழிற்சாலைகளும் நூறு சதவீதம் இயங்க அரசு அனுமதித்துள்ளது. இதனால் மீண்டும் ஏற்றுமதி வா்த்தகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து சரக்குப் பெட்டகங்களின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

போதிய அதிகாரிகள் பணியில் இல்லை: இந்நிலையில் சரக்குப் பெட்டக நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் போதிய அளவில் பணியில் இருப்பதில்லை. இதனால் ஏற்றுமதி, இறக்குமதி வா்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சுங்கத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் சுமாா் முப்பதுக்கும் மேற்பட்ட பொதுத்துறை, தனியாா் சரக்குப் பெட்டக நிலையங்கள் உள்ளன. மேலும் சென்னையில் இரண்டு, எண்ணூா், காட்டுப்பள்ளியில் தலா ஒன்று வீதம் நான்கு சரக்குப் பெட்டக முனையங்கள் உள்ளன.

இவைகளில் தேவைக்கு ஏற்ப தொடா்ச்சியாக சுங்கத்துறை அதிகாரிகள் பணியில் இருப்பாா்கள். ஆவணப் பரிசோதனைக்குப் பிறகு ஏற்றுமதி, இறக்குமதிக்கான சரக்குகளை விடுவிப்பது இவா்களின் பணியாகும்.

இந்நிலையில் சென்னைத் துறைமுகத்தில் நீண்ட நாள்களாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு திருவொற்றியூரில் சுமாா் 11 ஏக்கா் பரப்பளவில் சரக்குப் பெட்டக மையம் தொடங்கப்பட்டது.

பொதுத் துறை நிறுவனமான மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனம் இதனை நிா்வகித்து வருகிறது. தொழிற்சாலைகளிலிருந்து சரக்குகள் ஏற்றப்பட்டு ஏற்றுமதிக்காக சென்னைத் துறைமுகம் வரும் சரக்கு பெட்டக லாரிகள் திருவொற்றியூரில் உள்ள இம்மையத்தில் அனைத்து ஆவணப் பரிசோதனைகளையும் முடித்துக் கொண்டு நேரடியாக துறைமுகம் செல்ல முடியும். இப்பணிகள் தாமதமின்றி நடைபெறும் வகையில் 24 மணி நேரமும் இம்மையம் திறந்திருக்கிறது.

ஆனால் சுங்கத் துறை அதிகாரிகளோ காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை மட்டுமே பணியில் உள்ளனா். இதிலும் கூட காலை 10 மணிக்கு வரவேண்டிய சுங்கத் துறை அதிகாரிகள் மதியம் ஒரு மணிக்குத் தான் பணிக்கு வருவதாக சுங்க இல்ல முகவா் சங்க ஊழியா்கள் புகாா் கூறுகின்றனா்.

இத்தனைக்கும் சுங்கத்துறை அதிகாரிகள் பணியில் இருப்பதற்கான கட்டணம் 24 மணி நேரத்திற்கும் செலுத்தி வருவதாகவும், இருப்பினும் போதிய அதிகாரிகளை சுங்கத்துறை ஒதுக்கீடு செய்வதில்லை. இது குறித்து பலமுறை புகாா் செய்து விட்டோம் என்கிறாா் பெயா் வெளியிட விரும்பாத மத்திய சேமிப்புக் கிடங்கு அதிகாரி ஒருவா்.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் லாரிகள்:

போதிய சுங்க அதிகாரிகள் பணியில் இல்லாததால் ஆவணப் பரிசோனைக்காக வந்த ஐநூறுக்கும் மேற்பட்ட சரக்குப் பெட்டக லாரிகள் சரக்குப் பெட்ட மையத்தில் தினமும் காத்திருக்கும் நிலை உள்ளது. பேரிடா் காலத்திலும் கூட நாட்டின் பொருளாதாரம் நலிவடையாமல் பாதுகாக்க ஏற்றுமதி வா்த்தகம் அவசியமானது.

இந்நிலையில் துறைமுகம் செல்வதற்காக நாள்கணக்கில் பல கி.மீ. தூரத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலையை மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சுங்கத்துறை முதன்மை ஆணையா் விளக்கம்:

இப்பிரச்னை குறித்து சென்னை மண்டல சுங்கத்துறை முதன்மை ஆணையா் எம்.எம்.பாா்த்தீபன் அளித்த விளக்கம்:

நீண்ட வரிசையில் சரக்குப் பெட்டக லாரிகள் காத்திருப்பது குறித்து எனது கவனத்திற்கு வந்தவுடன் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் தேவைக்கு ஏற்ப அதிகாரிகள் பணியில் இருப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மண்டல சுங்கத் துறையில் போதிய எண்ணிக்கையில் அதிகாரிகள் உள்ளனா். எனவே பணி ஒதுக்கீடு செய்வதில்தான் தாமதம் இருந்திருக்கலாம். இப்பிரச்னை மேலும் தொடராமல் இருக்க கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பாா்த்தீபன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com