ரயில் டிக்கெட் விற்பனையை தனியார் வசம் ஒப்படைக்க திட்டம்

ரயில்வேயின் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பெருநகரங்களில் உள்ள ஒருங்கிணைந்த பயணச்சீட்டு விற்பனை முறையை தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் விற்பனையை தனியார் வசம் ஒப்படைக்க திட்டம்

ரயில்வேயின் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பெருநகரங்களில் உள்ள ஒருங்கிணைந்த பயணச்சீட்டு விற்பனை முறையை தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, மும்பையில் புறநகர் ரயில்வேயில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இதையடுத்து, சென்னை, செகந்திராபாத், கொல்கத்தா  உள்ளிட்ட பெருநகரங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 நகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டால், 8,500 ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

4 மாதங்களாக...: நாட்டிலேயே மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமாக இந்திய ரயில்வே துறை கடந்த 4 மாதங்களாக முழுமையாக செயல்படவில்லை. இதனால், ரயில்வே துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, ரயில்வேயில் பல்வேறு சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கெனவே, ரயில்கள் இயக்க தனியாருக்கு அனுமதி, வாடகை கட்டடத்தில் இயங்கும் ரயில்வே அலுவலகத்தை சொந்த இடத்துக்கு மாற்றுவது, ரயில்வேயின் நிரந்தர காலிப் பணியிடங்களை 50 சதவீதம் வரை திரும்ப ஒப்படைப்பது உள்ளிட்ட
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கடுத்த நடவடிக்கையாக, பெரு நகரங்களில் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு விற்பனை முறை என்னும் திட்டம் தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

ஒருங்கிணைந்த பயணச்சீட்டு விற்பனை: ஒருங்கிணைந்த பயணச்சீட்டு விற்பனை முறை என்பது முன்பதிவு பயணச்சீட்டு விற்பனை,  முன்பதிவில்லாத பயணச்சீட்டு விற்பனை ஆகியவை ஆகும். இந்த முறையில், பெரிய நகரங்களில்  ரயில்வே கவுன்ட்டர்கள் மூலமாக, டிக்கெட் முன்பதிவு, புறநகர் ரயில்களுக்கான டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. தற்போது, இந்த டிக்கெட் விற்பனையை பொது-தனியார் பங்களிப்பு மூலமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த டிக்கெட் விற்பனை முறையை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  முதல்கட்டமாக, மும்பை புறநகர் ரயில்வேயில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

மின்சார ரயில் சேவை: இந்திய ரயில்வேயை பொருத்தவரை, நாடு முழுவதும் 3,695 விரைவு ரயில்கள், 3,947 முன்பதிவில்லாத பயணிகள் ரயில், 5,881 மின்சார ரயில்கள் என்று மொத்தம் 13,523 ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இவற்றில் புறநகர் மின்சார ரயில் இயக்கம் முக்கிய சேவையாக பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட நகரங்களில் இந்த மின்சார சேவை மூலமாக, ரயில்வே துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. 

சென்னை, கொல்கத்தா, மும்பை, செகந்திராபாத் ஆகிய நகரங்களில் புறநகர் மின்சார ரயில் சேவையில் 2017-18-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.6,184.45 கோடி வருவாய் இழப்பும், 2018-19-ஆம் ஆண்டில் ரூ.6,753.56 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. வருவாய் இழப்புக்கு மின்சார ரயில்களில் குறைவான கட்டண நிர்ணயம் முக்கிய காரணமாக, ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், தற்போதைய சிக்கன நடவடிக்கையின்  ஒரு பகுதியாக, இந்த டிக்கெட் விற்பனை திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

பயணிகளுக்கு நன்மை இல்லை: இது குறித்து சென்னை ரயில்வே கோட்டப்  பயணிகள் ஆலோசகர் குழு முன்னாள் உறுப்பினர் பாஸ்கர் கூறியது:
இந்தத்  திட்டம் அமல்படுத்தப்பட்டால், பயணிகளுக்கு பெரிய அளவில் நன்மை கிடைக்கப்போவது இல்லை. ஏற்கெனவே,  ரயில்வே துறையில் ஜன் சாதரன் டிக்கெட் புக்கிங் சேவா( ஜெ.டி.பி.எஸ்) என்ற திட்டம் தனியார் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ரயில் பயணச்சீட்டை தனியார் முகவர்கள் விற்பனை செய்கிறார்கள். முன்பு, ஒரு பயணச்சீட்டுக்கு கட்டணம் மற்றும் ஒரு ரூபாய் கழிவுத்தொகை கூடுதலாக வசூலித்தார்கள். இப்போது, ஒரு பயணச்சீட்டுக்கு கட்டணத்தொகையுடன் இரண்டு ரூபாய் கழிவுத்தொகையாக கூடுதலாக வசூலிக்கிறார்கள். 

சீசன் டிக்கெட்டுக்கு கழிவுத்தொகையாக ரூ.5 கூடுதலாக வசூலிக்கிறார்கள். மேலும், இவர்கள் எல்லா நேரங்களிலும்  பயணச்சீட்டை  விற்பனை செய்வது கிடையாது. அவர்களுக்கு உகந்த நேரத்தில் மட்டும் பயணச்சீட்டு விற்பனை செய்வார்கள். அதேநேரத்தில், ரயில்வே கவுன்ட்டர்கள் அட்டவணைப்படி, எல்லா நாள்களிலும் எல்லா நேரங்களில் செயல்படும். எனவே, ரயில்வே மூலமாக, செயல்படும் பயணச்சீட்டு விற்பனைதான் பயணிகளுக்கு நன்மையாக இருக்கும் என்றார் அவர்.

திட்டத்தை கைவிட வேண்டும்: இது குறித்து தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்க துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் கூறியது:
ரயில்வேயில் படிப்படியாக தனியார் மயமாக்கப்படுவதை இந்தத் திட்டம் காட்டுகிறது. ஏற்கெனவே, ரயில்வே பயணச்சீட்டு நேரடி விற்பனை படிப்படியாக குறைந்து வருகிறது. 70 சதவீதம் பயணச்சீட்டு முன்பதிவு விற்பனை ஐ.ஆர்.சி.டி.சி. மூலமாக நடைபெறுகிறது. இதுதவிர, செயலி முறையில் பயணச்சீட்டு பதிவு செய்யப்படுகிறது. புறநகர் ரயில் பயணச்சீட்டு, அதனுடன் இணைந்த முன்பதிவு பயணச்சீட்டு விற்பனை தனியார் வசம் ஒப்படைப்பட்டால், ரயில்வே ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 4 நகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டால், ரயில்வேயின் வர்த்தகப்பிரிவில் 8,500 ஊழியர்கள் வேலை இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே, இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றார் அவர். 

வருவாய் இழப்பு: சென்னை, கொல்கத்தா, மும்பை, செகந்திராபாத் ஆகிய நகரங்களில் புறநகர் மின்சார ரயில் சேவையில் 2017-18-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.6,184.45 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதுபோல, 2018-19-ஆம் ஆண்டில் ரூ.6,753.56 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. வருவாய் இழப்புக்கு மின்சார ரயில்களில் குறைவான கட்டணம் நிர்ணயம் முக்கிய காரணமாக ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com