சமூக ஊடகங்களில் மாயத்தோற்றம் காட்டும் 'செப்பனிடப்பட்ட' புகைப்படங்கள்

​இன்ஸ்டாகிராம், சுட்டுரைகள், முகநூல் போன்றவற்றில் வெளியிடும் புகைப்படங்களில் நாம் பார்க்கும் பிரபலங்கள் எல்லாம் நிஜமாகவே அப்படியான தோற்றத்தில்தான் இருக்கிறார்களா?
ஒப்பனையின் மாயத்தோற்றம்
ஒப்பனையின் மாயத்தோற்றம்

இன்ஸ்டாகிராம், சுட்டுரைகள், முகநூல் போன்றவற்றில் வெளியிடும் புகைப்படங்களில் நாம் பார்க்கும் பிரபலங்கள் எல்லாம் நிஜமாகவே அப்படியான தோற்றத்தில்தான் இருக்கிறார்களா?

இப்போதெல்லாம் புதிதுபுதிதாக வரும் வெள்ளித்திரை -  சின்னத்திரை நடிகைகள் தொடக்கம், நடிகர்கள், விளையாட்டுத் துறையினர், அரசியல்வாதிகள் வரை அனைவருமே சமூக ஊடகங்களில் தங்கள் படங்களைப் பிரமாதமாக வெளியிட்டு மக்கள் மத்தியில் பிம்பங்களாகப் பரவுகின்றனர்.

ஒருகாலத்தில்  இப்படியாகப்பட்ட படங்களை எடுப்பதற்காகக் கொஞ்சம் ஒப்பனைதான் செய்துகொள்வார்கள், அதுவே சில நேரங்களில் 'அடேயப்பா, ஓவர் மேக்அப்' என்ற விமர்சனங்களுக்குள்ளாவதுண்டு.

இன்றைக்கு ஒப்பனை இல்லாமல் படங்களே இல்லை என்றானதுடன், தனியோர் ஒப்பனைக் கலைஞரைத் தேட வேண்டியதில்லை, ஒவ்வொருவருமே ஒப்பனையாளர்களே என்கிற அளவுக்கு, 'நன்றாகத் தெரிய' என்னென்ன செய்துகொள்ள  வேண்டும் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள். இல்லாவிட்டாலும் கற்றுக்கொடுக்க இருக்கவே இருக்கிறது இணைய தளங்களும் யூ டியூப் வகையறாக்களும். 

சரி, காலம் மாறுகிறது, காட்சிகளும் மாறத்தானே செய்யும் என்று நினைத்துக்  (சகித்துக் - சிலருக்கு சுகித்துக்?) கொண்டிருக்கும் நிலையில், இப்போது எல்லாவிதமான ஒப்பனைகளுடன் எடுத்த படங்களையுமே ஃபோட்டோஷாப் போன்றவற்றின் உதவியுடன் "செப்பனிட்டு" வெளியிடத் தொடங்கிவிட்டார்கள்.

உண்மையான தோற்றம் எது, ஒப்பனைத் தோற்றம் எது, செப்பனிடப்பட்ட தோற்றம் எது... ஒருவரும் அறிய மாட்டார்கள். ஒருவேளை நேரில் பார்த்தால் சம்பந்தப்பட்ட வி.ஐ.பி.க்கள் அடையாளம்கூடத் தெரியாமல் போய்விடலாம்.

இத்தகைய சூழ்நிலையில்தான் புகழ்பெற்ற பிரபலங்கள், மாடல்கள் போன்றோர் தங்கள் உடல் வடிவமைப்பை 'உசத்திக்' காட்டும் வகையில் புகைப்படங்களைச் 'செப்பனிட்டு' (altering or doctoring - ஆல்டரிங் அல்லது டாக்டரிங்) வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.

இத்தகைய படங்கள் உண்மைக்கு மாறான அழகு / பேரழகுத் தோற்றத்தை முன்னிறுத்துகின்றன என்றும் பார்ப்பவர்களுக்குத்  தேவையில்லாத மன உளைச்சலைப் ஏற்படுத்துகின்றன என்றும் குறிப்பிடுகிறார் டோரி கட்சியைச் சேர்ந்த இந்த எம்.பி.  டாக்டர் லூக் இவான்ஸ்.

இதையொட்டி பிரிட்டனைச் சேர்ந்த தொலைக்காட்சி பிரபலமும் விளம்பர மாடலும் ஊடகவியாளருமான லாரன் ரோஸ் குட்கர் என்ற பெண்ணின் இரு படங்களை எடுத்து வெளியிட்டிருக்கிறது பிரிட்டனைச் சேர்ந்த இதழொன்று.

இந்தப் படத்தில் குட்கரின் பெருத்திருக்கும் முழங்காலும் முழங்காலுக்குக் கீழும் மெலிதாக்கப்பட்டிருக்கின்றன, ஃபோட்டோஷாப் உதவியுடன். 

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக, செப்பனிடப்பட்ட படம் என்றால், அதைப் பற்றியும் படத்துடனேயே இந்த நட்சத்திரங்களும் விளம்பரத் துறையினரும் குறிப்பிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார் இவான்ஸ்.

இதற்காக சட்ட முன்வரைவொன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவும் முனைந்து வருகிறார் இவான்.

இளைய சமுதாயத்தினரும், குழந்தைகளும்கூட (ஃபோட்டோஷாப் வேலைப்பாட்டுப் படங்களைப் பார்த்து) இப்படித்தான் இருக்க வேண்டும் போல, இதுதான் நல்ல அழகு போல என்று தவறாகக் கருதிக்கொண்டு, தங்களையும் மாற்ற முனைந்து வதைத்துக் கொள்கிறார்கள். பலர் வேண்டாத வம்புகளையும்கூட விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள்.

நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள்... இன்னமும் சமூக ஊடகங்களில் முகம் பிரசுரிக்கும் எண்ணற்ற புள்ளிகளை எல்லாம் தம்முடைய நம்பிக்கை நட்சத்திரங்களைப் போல கருதிக் கொள்ளும், அவர்களை அப்படியே பின்பற்றவும் முயற்சியும் செய்யும் தலைமுறையினர் வாழும் இந்தக் காலத்தில் உண்மையிலேயே இவான்ஸின் எச்சரிக்கை பெரிதும்  முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த எச்சரிக்கை எல்லா வகையிலும் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் மட்டுமல்ல, எல்லா நாடுகளுக்குமே பொருந்தும்.

இன்று ஒரே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அல்லது ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே தலைகாட்டிய நடிகைகள்கூட இன்ஸ்டாகிராமில்  வெளியிட்டுக் கொண்டிருக்கும் படங்கள் எல்லாம்  அட்ராசிடி வகையைச் சேர்ந்தவை. தாங்கவே முடியாது. பெயர்களைக் குறிப்பிட்டாலோ, படங்களை வெளியிட்டாலோ இவர்கள் கோபித்துக் கொள்வார்கள்.

விளம்பரங்களுக்காக நடிப்பது போய், இப்போது விளம்பரமாகவே நடித்து - படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்களைப் போன்றவர்கள்.

எப்படியாவது இவான்ஸ் போன்றவர்கள் இப்போது பற்ற வைக்கப்படும் சிறு நெருப்புப் பற்றி, எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் போலி பிம்பங்களுக்கு முடிவு கட்டினால் நல்லதுதான்.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்தறிவதே மெய் என்பார்கள். இப்போதெல்லாம் தீர விசாரித்தாலும்கூட எது நிஜம், எது பொய் எனத் தெரியாது போல.

எவ்வுருவம் சுட்டுரை, இன்ஸ்டாகிராம், முகநூல் எனக் காண்பினும் அவ்வுருவம் அசலானதுதானா என்பதை ஆய்ந்தறிவதே அறிவு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com