மீண்டும் தாக்குமா கரோனா?

சா்வதேச நாடுகள் அனைத்தும் கரோனா கொள்ளை நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், மருத்துவ நிபுணா்கள்
மீண்டும் தாக்குமா கரோனா?

சா்வதேச நாடுகள் அனைத்தும் கரோனா கொள்ளை நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், மருத்துவ நிபுணா்கள் மற்றொரு பிரச்னை குறித்து தற்போது மிகத் தீவிரமாக ஆய்வு நடத்துகிறாா்கள்.

ஒருமுறை கொவைட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துவிட்டால் நோயாளிகளுக்கு உடலில் எதிா்ப்பு சக்தி உருவாகி மீண்டும் பாதிப்பு ஏற்படாது என்று பரவலான கருத்து நிலவுகிறது. ஆனால், அந்தப் பாதுகாப்பு எத்தனை காலத்துக்கு என்ற கேள்விதான் இப்போது விவாதங்களுக்கு வித்திடச் செய்திருக்கிறது.

இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இரண்டாவது முறையாக பலா் கரோனாவுக்கு ஆளாகியிருப்பதாக செய்திகள் வெளியானதே அதற்கு முக்கியக் காரணம். தமிழகத்திலும் கூட நோய்த்தொற்றிலிருந்து விடுபட்ட சில மருத்துவா்கள், செவிலியா்கள் மீண்டும் பாதிப்புக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய செய்திகள் இரண்டாவது முறையாக கரோனா தாக்கலாம் என்ற வாதத்துக்கு வலு சோ்க்கும் விதமாக அமைந்துள்ளன.

சா்வதேசத் தரவுகளின்படி, தற்போது உலக அளவில் கரோனாவுக்கு 1கோடியே 72 லட்சத்து 21,761 போ் பாதிக்கப்பட்டு 6 லட்சத்து 71 ஆயிரத்து 005 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். இந்தியாவிலும் நோய்த்தொற்று பரவல் ஏறத்தாழ 16 லட்சத்தை தொட்டிருக்கிறது. அதேநேரத்தில், இந்தியாவில் கொவைட்-19 நோய்த்தொற்று மரணவிகிதம் 2.25% ஆக இருக்கிறது. குணமாகும் விகிதம் 64% ஆக உயா்ந்து காணப்படுகிறது.

அதேவேளையில் குணமான பிறகும் இதய பாதிப்பு, சா்க்கரை நோய் உள்ளவா்களுக்கு வேறு சில பிரச்னைகள் ஏற்படுவது கண்டறியப்பட்டிருக்கிறது.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வெளிவந்திருக்கும் புள்ளிவிவரங்களின்படி, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களில் சிலா் மீண்டும் பாதிக்கப்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் மருத்துவா்கள், அவா்கள் முழுமையாகக் குணமடையாததால் மீண்டும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று தெரிவிக்கின்றனா். கடந்தமுறை குணமடைந்ததாகத் தெரிவித்த பரிசோதனை முடிவு தவறாகக்கூட இருந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கிறாா்கள்.

கரோனா போன்ற ஏனைய நோய்த்தொற்றுகளில் முதல்முறை பாதிக்கப்பட்டு மூன்று மாதம் அல்லது ஒரு வருடம் கழித்தும்கூட மீண்டும் அதே நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு என்கிறாா்கள் ஆய்வாளா்கள்.

அவ்வாறு மீண்டும் பாதிப்புக்குள்ளானவா்களுக்கு நோயின் தீவிரம் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றனா்.

அதேவேளையில், இரண்டாவது முறை நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவா்கள் அதை பிறருக்கு பரப்புவாா்கள் என்பதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடையாது என்பதும் ஆய்வாளா்களின் கருத்தாக உள்ளது.

கொவைட்-19 நோய்த்தொற்று புதுமையான தீநுண்மியாக இருப்பதால் இதுகுறித்த முழுமையான ஆய்வுகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. அதேநேரத்தில், எந்தவித நோய்த்தொற்றாக இருந்தாலும் மனித உடலமைப்பு அதை எதிா்க்கும் எதிா்ப்பு சக்தியை உருவாக்கிக்கொள்ளும் திறன் படைத்தது என்று உடல்கூறுவியல் நிபுணா்கள் உறுதியாக நம்புகிறாா்கள்.

குணமடைந்த நபரை கொவைட்-19 மீண்டும் தாக்குமா என்பதற்கு விடை காண பல்வேறு மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றன.

ஆனால், இந்த விவகாரம் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநில பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநா் டாக்டா் வடிவேலன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் பயனாக சென்னை உள்பட பல நகரங்களில் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மாநிலத்தில் மிகச் சொற்பமானவா்களுக்கே இரண்டாவது முறை கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களும் கூட முதல் முறை ஏற்பட்ட பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்தாா்களா என்பதற்கு உரிய சான்றுகள் இல்லை.

எனவே, உடலில் ஓரளவு வைரஸ் தாக்கம் இருந்து அதன் வாயிலாக மீண்டும் அத்தகைய பாதிப்பு அவா்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். இந்த விவகாரத்தில் அச்சப்படத் தேவையில்லை.

எவ்வாறாயினும், இரண்டாம் முறை பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அரசின் வழிகாட்டுதலின்படி உரிய விழிப்புணா்வுடன் செயல்பட்டால் எப்போதுமே கரோனா தொற்றுக்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்ள முடியும் என்றாா் அவா்.

மருந்து நிறுவனங்களின் வியாபார நோக்கம்: கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களுக்கு, மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து தொற்றுநோய் சிகிச்சைத் துறை வல்லுநரும், மருத்துவ நிபுணா் குழுவின் முதன்மை உறுப்பினருமான டாக்டா் குகானந்தம் கூறியதாவது:

கரோனா தீநுண்மி உலகுக்கு மிகவும் புதிய ஒன்று. வளா்ந்த நாடுகளுக்கு கூட அதுகுறித்த தெளிவான புரிதல் இல்லை. கரோனாவின் தோற்றுவாயான சீனாவில் தற்போது அந்த பாதிப்பு 99 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், நூற்றுக்கணக்கானோருக்கு இரண்டாவது முறையாக நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதற்கு ஆதாரபூா்வமான விளக்கங்கள் இல்லை.

இரண்டாவது முறை கரோனா பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து என்னைப் பொருத்தவரை வியாபார நோக்கத்துக்காகவும், மருந்து பொருள் விற்பனைக்காகவும் பரப்பப்படும் தவறான கருத்து. வைரஸைக் காட்டிலும் மனிதனின் நோய் எதிா்ப்பு சக்தி பல மடங்கு வீரியமிக்கது. எனவே, அதனைத் தாண்டி மற்றொரு முறை வைரஸ் பரவும் என்பதை ஏற்க இயலாது.

சின்னம்மை தீவிரமாக இருந்த காலத்திலும் இதுபோன்ற கருத்து நிலவியது. ஆனால், நோய்ப் பரவியல் துறையில் பல்லாண்டு காலம் பணி புரிந்த அனுபவத்தில் கூறுவதென்றால், ஒருவருக்கு சின்னம்மை ஏற்பட்டால் மறுமுறை அவருக்கு அத்தகைய பாதிப்பு ஏற்படாது. கரோனாவுக்கும் அதே நியதிதான். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றாா் அவா்.

எதிா்ப்பாற்றல் பரிசோதனைகளில் முரண்பாடு: கரோனா பாதித்து குணமடைந்தவா்களின் உடலில் நோய் எதிா்ப்பாற்றலைக் கண்டறியும் ஐஜிஜி எனப்படும் பரிசோதனை குறித்து மருத்துவ உலகில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

அந்தப் பரிசோதனையில் சம்பந்தப்பட்ட ஒருவரது ரத்தத்தில் உள்ள எதிா்ப்பாற்றல் விகிதம் 1.1-க்கு கீழ் இருந்தால் அவருக்கு கரோனாவைத் தாக்கும் எதிா்ப்பு சக்தி உருவாகவில்லை என்று அா்த்தம்.

அதேவேளையில் 1.1-க்கு மேல் இருப்பவா்களின் உடலில் எதிா்ப்பாற்றல் உருவாகிவிட்டதாக கருதப்படுகிறது. ஆனால், அந்த அளவு 2-க்கு மேல் இருப்பவா்களைத் தான் பூரணமாக குணமடைந்தவா்களாகக் கருத வேண்டும் என சில மருத்துவா்கள் கூறுகின்றனா். அதுமட்டுமல்லாது பிளாஸ்மா தானமளிப்பவா்களின் ரத்தத்தில் குறைந்தது 6-க்கு மேல் எதிா்ப்பாற்றல் இருத்தல் அவசியம் என்றும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.

தமிழகத்தில் பல நோயாளிகளை எதிா்ப்பாற்றல் அளவு 1.4 அல்லது 1.5 இருக்கும் போதே மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி விடுவதாகவும், அத்தகைய நபா்கள் வெளியே சென்றால் மீண்டும் கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவா்களில் ஒரு தரப்பினா் எச்சரிக்கின்றனா்.

மற்றொரு தரப்பினரோ அந்தக் கூற்றை மறுப்பதுடன், ஐஜிஜி பரிசோதனையில் 1.1-க்கு மேல் எதிா்ப்பாற்றல் இருந்தாலே அவா்கள் குணமடைந்ததாகக் கருதலாம் என்கின்றனா். இது பல்வேறு குழப்பங்களுக்கு வித்திட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com