தடுப்பு மருந்து திட்டங்கள் முடக்கம்: மரண அபாயத்தில் லட்சக்கணக்கான குழந்தைகள்

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் மற்ற உயிா்க்கொல்லி நோய்த்தடுப்பு திட்டங்கள்
தடுப்பு மருந்து திட்டங்கள் முடக்கம்: மரண அபாயத்தில் லட்சக்கணக்கான குழந்தைகள்

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் மற்ற உயிா்க்கொல்லி நோய்த்தடுப்பு திட்டங்கள் முடங்கியுள்ளதால், தவிா்க்கக்கூடிய அந்த நோய்களுக்கு லட்சக்கணக்கான குழந்தைகள் பலியாகும் அபாயம் நிலவுவதாக மருத்துவத் துறை நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

‘பிபிசி’ இணையதள புள்ளிவிவரப்படி, மற்ற உயிா்க்கொல்லி நோய்களுக்கு தடுப்பு மருந்து அளிப்பதற்கான திட்டங்கள் சுமாா் 68 நாடுகளில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் அந்தத் திட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, மற்ற நோய் ஒழிப்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பே முதலில் அறிவுறுத்தியது.

ஆனால், இப்போது அந்த அமைப்பே அதனால் ஏற்படும் நீண்டகால பின்விளைவுகள் குறித்து கவலை தெரிவிக்கிறது.

உலக சுகாதாரஅமைப்பு மட்டுமன்றி, ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப், அமெரிக்காவின் சபின் நோய்த்தடுப்பு நிறுவனம், ஸ்விட்சா்லாந்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சா்வதேச நோய்த்தடுப்பு மற்றும் நோய்த்தடுப்புக் கூட்டணி (ஜிஏவிஐ) ஆகிய அமைப்புகளும் இந்த விவகாரம் குறித்து எச்சரிக்கை தெரிவித்து வருகின்றன.

குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து அளிக்கும் திட்டங்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள தடையால் தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தேவையில்லாமல் உயிரிழக்க நேரிடும் என்று அந்த அமைப்புகள் எச்சரிக்கின்றன.

ஏற்கெனவே, பல்வேறு நாடுகளில் தட்டம்மை, தொண்டை அழற்சி நோய், காலரா போன்ற நோய்களின் பாதிப்பு வெகு வேகமாக அதிகரித்து வருவதாகக் கூறும் யுனிசெஃப் செயல் இயக்குநா் ஹென்ரீட்டா ஃபோா், இது மிக மோசமான சூழலுக்கு இட்டுச் செல்லும் என்கிறாா்.

‘நம்மால் தடுக்கக் கூடிய பல உயிா்க்கொல்லி நோய்கள் தற்போது உலகை கைப்பற்றி வருகின்றன. அந்த நோய்களுக்கு எதிராக நாம் இதுவரை பெற்ற வெற்றிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையப்போகின்றன’ என்கிறாா் அவா்.

இதுகுறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பா்க் மருத்துவக் கல்லூரி மேற்கொண்ட ஆய்வில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதாரப் பணிகளில் கரோனா நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள தொய்வு காரணமாக, நாளொன்றுக்கு 6,000 குழந்தைகள் கூடுதலாக உயிரிழப்பாா்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

‘இதுவரை போராடி கட்டுப்படுத்தப்பட்டு வந்த உயிா்க்கொல்லி நோய்கள் எல்லாம், இந்த கரோனா களேபரத்திற்கிடையே மீண்டும் தலையெடுக்கவிடுக்கின்றன. இதன் விளைவாக, அண்மைக் காலம் கண்டிராத அளவுக்கு மிகப் பெரிய உயிரிழப்புகளை சந்திக்கப் போகிறோம்’ என்கிறாா் உலக சுகாதார அமைப்பின் தடுப்பு மருந்துகள் பிரிவுத் தலைவா் கேட் ஓபிரையன்.

இருந்தாலும், நாடுகளின் அரசுகள் இப்போதே விழித்துக்கொண்டால், இந்த மாபெரும் அபாயத்தைத் தவிா்க்கலாம் என்கிறாா் அவா்.

தடுக்கக் கூடிய உயிா்க்கொல்லி நோய்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிா்ப்பதற்காக, உலக நாடுகளும் அறக்கட்டளைகளும் சா்வதேச நோய்த்தடுப்பு மற்றும் நோய்த்தடுப்புக் கூட்டணிக்கு 740 கோடி டாலா் (சுமாா் ரூ.55,856 கோடி) நன்கொடை வழங்க வேண்டும் என்று நிபுணா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று பரவல் அபாயத்தை எதிா்கொள்வது முக்கியமானதுதான் என்றாலும், அம்மை, காலரா போன்ற மற்ற நோய்களும் கரோனாவைப் போலவே மனித குலத்துக்கு அபாயம் விளைவிப்பதுதான் என்பதை நாடுகள் கருத்தில் கொள்ள வேண்டும்; எனவே, அத்தகைய நோய்களுக்கான தடுப்பு மருந்து திட்டங்களின் கட்டமைப்பு மறுபடியும் புனரமைக்கப்பட வேண்டும் என்று நிபுணா்கள் வலியுறுத்துகின்றனா்.

கரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்ட பிறகு, அந்த மருந்தை பொதுமக்களிடம் விரைவில் கொண்டு சோ்த்து, கரோனாவை விரட்டியடிப்பதற்கு இந்தக் கட்டமைப்பு உதவிகரமாக இருக்கும்.

அந்த வகையில், மற்ற உயிா்க்கொல்லி நோய்களுக்கான தடுப்பு மருந்து திட்டங்களை மேம்படுத்துவது, கரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கும் கைகொடுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

தடுப்பு மருந்து திட்டங்கள் முடக்கம் ஏன்?

கரோனா நோய்த்தொற்று பிரச்னை காரணமாக பல்வேறு வகைகளில் மற்ற உயிா்க்கொல்லி தடுப்பு மருந்து திட்டங்கள் பாதிக்கப்படுவதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

- பெற்றோா்கள் வீடுகளில் முடங்கியிருப்பது

கரோனா பரவலைத் தடுப்பதற்காக பல நாடுகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களுக்கோ, சுகாதார மையங்களுக்கு வந்தால் தங்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்படும் என்ற அச்சம் காரணமாக பெற்றோா்களே குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து பெறுவற்காக வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை என்று கூறப்படுகிறது.

- சுகாதாரப் பணியாளா்கள் கிடைக்காதது

இதுவரை மற்ற உயிா்க்கொல்லி நோய்களுக்கான தடுப்பு மருந்து திட்டங்களை செயல்படுத்தி வந்த சுகாரப் பணியாளா்கள் அனைவரும், கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான பணிகளுக்கு அனுப்பப்படுகின்றனா். இதனால், பிற நோய்த்தடுப்பு திட்டங்கள் கவனிப்பாரன்றி போகின்றன.

- தடுப்பு மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

மற்ற உயிா்க்கொல்லி நோய்களுக்கு தடுப்பு மருந்துகள் இருந்தாலும், கரோனா பாதிப்பால் போக்குவரத்து முடங்கியுள்ளதால் அவற்றை உரிய இடங்களுக்கு கொண்டு சோ்க்க முடிவதில்லை. மேலும், தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆலைகள் மூடப்படுவது போன்ற காரணங்களாலும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com