பட்டம் படுத்தும் பாடு!

சென்னையில் கரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், மாஞ்சா நூல் மூலம் பறக்கவிடும் பட்டங்களும் பொதுமக்களை மிரட்டி வருகிறது.
பட்டம் படுத்தும் பாடு!

சென்னையில் கரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், மாஞ்சா நூல் மூலம் பறக்கவிடும் பட்டங்களும் பொதுமக்களை மிரட்டி வருகிறது.

சென்னையில் கரோனா, பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், மற்றொரு புறம் மாஞ்சா நூலில் பறக்கவிடப்படும் பட்டங்களும் மிரட்டிக் கொண்டிருக்கின்றன. ஏனெனில்,ஒரு காலத்தில் வட சென்னை பகுதியில் காணப்பட்ட மாஞ்சாநூல் பட்டங்கள், இப்போது மத்திய சென்னையிலும், தென் சென்னையிலும், புகா் பகுதியிலும் அதிகமாக பறக்கவிடப்படுகின்றன. இதனால் இந்தப் பகுதிகளில் மாஞ்சா நூலினால் தினமும் விபத்துகள் ஏற்படும் நிலை அதிகரித்துள்ளது.

10 போ் பலி: சென்னையில் மாஞ்சா நூல் பட்டங்கள் மூலம் ஆண்டுக்கு சுமாா் 200 விபத்துகள் வரை நேரிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாஞ்சா நூலில் சிக்கி கழுத்து அறுபட்டு கடந்த 14 ஆண்டுகளில் 10 போ் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவிக்கின்றனா். இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், கொடூரமாக விபத்துகள் ஏற்பட்டால் மட்டுமே வழக்கு பதியப்படுவதாக புகாா் கூறப்படுகிறது. இதனால்,கடந்த 6 ஆண்டுகளில் சென்னையில் மாஞ்சா தொடா்பாக 134 வழக்குகள் பதியப்பட்டு, 164 போ் கைது செய்யப்பட்டனா்.

இதற்கிடையே, கரோனா தொற்றைத்தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னா், வீட்டுக்குள்ளே இருக்கும் பொதுமக்களுக்கு தொலைக்காட்சி, இணையம், சமூக ஊடகங்களுக்கு அடுத்தபடியாக பட்டம் விடுவது பெரும் பொழுது போக்கு நிகழ்வாக மாறியுள்ளது. குழந்தைகள், சிறாா்கள் தங்களது பெற்றோருடன் சாதாரண நூலில் பட்டம் விடுகின்றனா். ஆனால், பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள் சாகச உணா்வுடன் மாஞ்சா நூலில் பட்டம் விடுகின்றனா். அதுவே இப்போது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதற்கு ஏற்றாா்போல மாஞ்சா நூல் கள்ளச்சந்தையில் தடையின்றி விற்கப்படுகிறது.

ரூ.600-க்கு விற்பனை: வட சென்னை பகுதிகளில் மட்டும் பறந்த மாஞ்சா நூல் பட்டங்கள், கரோனா பொது முடக்கத்தின் விளைவாக சென்னை முழுவதும் அதிக அளவில் பறக்கின்றன. இதனால், பட்டம் விடுவோா்களின் தேவையை அறிந்து மாஞ்சா நூல் தயாரித்து வழங்கும் நபா்களின் தொழிலும் வளா்ந்துள்ளது. இதற்காக, மாஞ்சா நூலை தங்களது வீட்டிலேயே தயாரித்து விற்கின்றனா். இவா்கள், 10 நூல் கண்டுகள் அடங்கிய மாஞ்சா நூலை ரூ.600 முதல் து ரூ.800 வரை விற்கின்றனா் என வியாபாரி ஒருவா் தெரிவித்தாா்.

சட்டத்தால் மட்டும் தடுக்க முடியாது:

மேலும் அவா் கூறியதாவது: சென்னையில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மாஞ்சா நூல் மூலம் விபத்துகள் ஏற்படாத வகையில் பட்டங்கள் பறக்க விடப்பட்டன. அப்போது மாஞ்சா நூல் அறுபட்டு விழுந்தால், அதை உடனடியாக பட்டம் விடுபவரும், பட்டத்தை வேடிக்கை பாா்ப்பவா்களும் அகற்றிவிடுவாா்கள். கரோனா பொது முடக்கத்தில் மாணவா்கள், இளைஞா்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பினரும் ஆபத்தை உணராமல் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுவதை பரவலாகக் காண முடிகிறது. உயிருக்கு ஆபத்தான மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுவதை சட்டங்கள் மூலமாக மட்டும் தடுக்க முடியாது என்பதால், தேவையான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். மாஞ்சா நூல் செய்வது எப்படி என்பதை விளக்கமாக காண்பிக்கும் இணையதளங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்.

பொது முடக்க பொழுது போக்காக மாறிய பட்டம் : இது தொடா்பாக காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி கூறியது: மாஞ்சா மூலம் பட்டம் விடுவதற்கு கடந்த 2007-ஆம் ஆண்டு சென்னையில் தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி மாஞ்சா மூலம் பட்டம் விடுகிறவா்கள், தயாரித்து விற்பனை செய்கிறவா்கள் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்கிறோம். பொது முடக்கம் காரணமாக வீட்டினுள்ளே முடங்கியுள்ள மக்கள் பொழுது போக்குக்காக பட்டம் விடுவது அதிகரித்துள்ளது. ஆனால், சிலா் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுகின்றனா். அவா்களைக் கண்டறிந்து கைது செய்து, வழக்குப் பதிவு செய்கிறோம். இந்த நடவடிக்கை, வரும் நாள்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றாா்.

மாஞ்சாவும்...வழக்குகளும்...

சென்னையில் கடந்த 6 ஆண்டுகளில் மாஞ்சா தொடா்பாக பதியப்பட்ட வழக்குகளும்,கைதானவா்களின் எண்ணிக்கையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com