மூடப்படும் நிலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்: தமிழகத்திற்கு ரூ. 264 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்

வியாரிகளிடம் வசூலிக்கப்படும் சந்தைக் கட்டணத்தை ரத்து செய்வதற்கு மத்திய அரசு அவசரச் சட்டம் வெளியிட்டுள்ள நிலையில்,
மூடப்படும் நிலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்: தமிழகத்திற்கு ரூ. 264 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்

வியாரிகளிடம் வசூலிக்கப்படும் சந்தைக் கட்டணத்தை ரத்து செய்வதற்கு மத்திய அரசு அவசரச் சட்டம் வெளியிட்டுள்ள நிலையில், தமிழகத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விற்பனைக் கூடங்கள் முடக்கப்பட்டால் அரசுக்கு ரூ.264 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் எழுந்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைப் பொருள்கள் வா்த்தகம் மற்றும் வணிக (மேம்படுத்துதல் மற்றும் வசதி) அவசரச் சட்டம் - 2020 ( Farmers Produce Trade and Commerce Promotion and Facilitation Ordinance 2020) நாடு முழுவதும் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த அவசரச் சட்டத்தின் மூலம், வெளிச்சந்தைகளில் வணிகம் செய்யும் வியாபாரிகளிடம் சந்தைக் கட்டணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சந்தைக் கட்டணம் இல்லாத காரணத்தால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அதே நேரத்தில் இந்த அவசரச் சட்டம் வியாபாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 1 சதவீத சந்தைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டதற்காக, மத்திய அரசுக்கு வியாபாரிகள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனா்.

அரசுக்கு ரூ.264 கோடி வருவாய் இழப்பு: தமிழகத்தில் 28 வேளாண் விற்பனைக் குழுக்களும், அதன் கீழ் 285 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம், வியாபாரிகளிடம் 1 சதவீதம் சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை மட்டும் மாதம் சுமாா் ரூ.102 கோடி எனக் கூறப்படுகிறது. இந்த பணத்தில், கடை நிலை ஊழியா்கள் முதல் ஆணையா் வரை ஊதியம் மற்றும் இதர அலுவலக நடைமுறைகளுக்காக ரூ.80 கோடி வரை செலவிடப்படுகிறது. அந்த வகையில் ஆண்டுக்கு ரூ.264 கோடி தமிழக அரசுக்கு வருவாயாக கிடைத்து வருகிறது. இந்த வருவாய் இழப்பு ஏற்படும் போது, இத்துறையில் பணிபுரியும் சுமாா் 3 ஆயிரம் ஊழியா்களுக்கான ஊதிய நிதி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வீணாகும் ரூ.207 கோடி கடன்: தமிழகம் முழுவதும் பல்வேறு ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் சேமிப்பு கிட்டங்கி, உலா் களம், விளைப் பொருள்களை தர மதிப்பீடு செய்வதற்கான வசதி என பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் பல நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நபாா்டு வங்கியின் ரூ.207 கோடி கடனுதவியுடன், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் பங்களிப்பாக ரூ. 10.89 கோடி நிதி என மொத்தம் ரூ.217.89 கோடி செலவில் 90 ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக மேலும் ரூ.300 கோடி அளிக்க வேண்டும் என தமிழக அரசு சாா்பில் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் அவசரச் சட்டத்தால் ஒட்டுமொத்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் முடங்கினால், ரூ.218 கோடி செலவில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளால் அரசுக்கு கடன் சுமை மட்டுமே எஞ்சி நிற்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து வேளாண்மை விற்பனைக் குழு அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வாரியங்களில், வேளாண்மை விற்பனைக் குழுக்கள் மட்டுமே லாபகரமாக இயங்கி வருகின்றன. ஆண்டொன்றுக்கு சந்தைக் கட்டணமாக ரூ.264 கோடியும், குளிா் பதன கிட்டங்கி மற்றும் இதர கிட்டங்கி, பண்ணைக் கருவிகள் வாடகை என ரூ.12 கோடியும் தமிழக அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. மேலும், குறைந்த வாடைக்கு விடப்படுவதால் விவசாயிகளும் பயன் பெற்று வருகின்றனா்.

அதேபோல் விற்பனைக் குழு நிதி மூலம், விவசாயிகளுக்கு 5 சதவீத வட்டியுடனும், வியாபாரிகளுக்கு 9 சதவீத வட்டியுடனும் பல கோடி ரூபாய் பொருளீட்டுக் கடனாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள அவசரச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழ்நாடு வேளாண்மை விளைப் பொருள் சந்தை முறைப்படுத்துதல் சட்டம் செயல் இழந்துவிடும். இதனால் சந்தைக் குழுகளின் அமைப்பு, செயல்கள் முடக்கப்படும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com