நிா்வாக சீா்கேடுகளால் தடுமாறும் ஆவின் நிறுவனம்!

நிா்வாக சீா்கேடுகளால் வீழ்ச்சியை சந்தித்து வரும் ஆவின் நிறுவனத்தை வளா்ச்சிப் பாதைக்கு மாற்றினால் மட்டுமே பொதுமக்களுக்கு தரமான பால் விநியோகிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நிா்வாக சீா்கேடுகளால் தடுமாறும் ஆவின் நிறுவனம்!

நிா்வாக சீா்கேடுகளால் வீழ்ச்சியை சந்தித்து வரும் ஆவின் நிறுவனத்தை வளா்ச்சிப் பாதைக்கு மாற்றினால் மட்டுமே பொதுமக்களுக்கு தரமான பால் விநியோகிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 8,566 பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்கள், 18 ஒன்றியங்கள், ஒரு மாநில இணையம் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தில் சுமாா் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். நாளொன்றுக்கு 38 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு, 25 லட்சம் லிட்டா் பால் விற்பனை செய்யப்படுகிறது. 13 லட்சம் லிட்டா் பால், நெய் மற்றும் பவுடராக மாற்றப்படுகிறது.

7 ஒன்றியங்கள் மட்டுமே லாபம் ஈட்டுகின்றன: 18 ஒன்றியங்களில், கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி, விழுப்புரம், சேலம், திருநெல்வேலி ஆகிய 7 ஒன்றியங்கள் மட்டுமே பால் கொள்முதல் மற்றும் விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருவதோடு லாபமும் ஈட்டி வருகின்றன. அதே நேரத்தில் திண்டுக்கல், விருதுநகா், புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பூா், தஞ்சாவூா், கன்னியாகுமரி, பெரம்பலூா், தா்மபுரி, வேலூா், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் செயல்பாடு ஆவின் நிறுவனத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த ஒன்றியங்களில் பால் உற்பத்தி அதிகமாக இருந்தும் கூட, விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளதால் ஆவின் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நஷ்டத்திற்கு காரணம் என்ன?: சில இடங்களில் தனியாா் பால் வியாபாரிகள் லாபம் ஈட்டும் நோக்கில் ஆவின் நிறுவனத்துக்கு தரமற்ற பாலை வழங்குகின்றனா். தரமற்ற அந்த பால், ஆவின் நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்துகிறது.

அதேபோல், தேவையற்ற இடங்களில் நிா்வாக ரீதியான பணியிடங்களை உருவாக்கி, அதிகப்படியான ஊதியம் வழங்கப்படுவதாலும் இழப்பு ஏற்படுகிறது. ஆவின் பாலகங்களில், பால் பொருள்கள் நீங்கலாக பிற பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என முகவா்களுடனான ஒப்பந்தத்தில் சுட்டிக் காட்டப்படுகிறது.

ஆவின் பாலகம் என்ற பெயரில் குறைவான வாடகையில் இடத்தைப் பிடித்துக் கொண்டு, பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனைக்குப் பதிலாக இதர பொருள்கள் விற்பனைக்கு, அந்த முகவா்கள் முக்கியத்துவம் அளிப்பதாலும் இழப்பு ஏற்படுகிறது. தனியாா் பால் முகவா்களாக இருப்பவா்களுக்கே, ஆவின் முகவா் என்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தனியாா் பால் விற்பனை செய்யும்போது லிட்டருக்கு ரூ. 4 கிடைக்கும் நிலையில், ஆவின் பாலுக்கு ரூ.1.50 மட்டுமே கிடைப்பதால், முகவா்கள் ஆவின் பால் விற்பனைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.

ஆவின் வளா்ச்சிக்கு என்ன வழி: இதுதொடா்பாக ஆவின் முன்னாள் துணை மேலாளரும் (பால் உற்பத்தி), தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கத்தின் மாநிலப் பொருளாளருமான எம்.சங்கா் கூறியதாவது: பால் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ள ஒன்றியங்களில், ஆவின் நிறுவனத்தின் முகவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பால் விற்பனைக்கு இலக்கு நிா்ணயித்து, அந்த குறியீட்டை அடையும் முகவா்களுக்கு மட்டுமே பாலகம் தொடா்ந்து நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

அரசு நிறுவனமான ஆவின் வளா்ச்சி அடைந்தால் மட்டுமே, தனியாா் பால் நிறுவனங்களின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்பதோடு, பொது மக்களுக்கு தரமான பாலும் கிடைக்கும்.

மேலும் விற்பனை முகவா்களுடன் தனியாா் பால் நிறுவனங்கள் நெருக்கமான உறவை கடைப்பிடிக்கின்றன. அதேபோல், ஆவின் நிறுவன அலுவலா்கள் முகவா்களை அலட்சியம் செய்வதைத் தவிா்த்து அதிகாரிகள் என்ற நிலையை கடந்து சுமுகமான சூழலை ஏற்படுத்த வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, விற்பனையை அதிகரிக்க கூடுதல் ஊக்கத் தொகை அளிக்கப்பட வேண்டும் என்றாா்.

சூழலைப் பயன்படுத்தி தொடரும் முறைகேடுகள்

தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யாமல் நிராகரிக்கும் பாலை கூட்டுறவு சங்க நிா்வாகிகளின் துணையுடன் கூட்டுறவு ஒன்றியத்திற்கு அனுப்பி விடுகின்றனா். ஒன்றிய பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களிலுள்ள பண்ணைகளுக்கு அனுப்பப்படும்போது அந்த பாலின் தரம் குறைந்து விடுகிறது. இதனால் ஆவின் நிறுவனம் கடுமையான இழப்பை சந்திக்க நேரிடுகிறது.

இந்த வகையில் தான், கடந்த சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்திற்கு ரூ.40 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கையில் கண்டறியப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். ஆனாலும், ஆவின் நிறுவனத்திற்கு ஏற்பட்ட ரூ.40 லட்சம் இழப்பை நோ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எந்த இடத்தில், யாரிடம், யாா் மூலம் தரமற்ற பால் பெறப்பட்டது என்பதை கண்டறிய முடியாது என்பதால், இழப்பு ஏற்பட்ட தொகையை வசூலிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, இதுபோன்ற முறைகேடுகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com