தமிழ் சினிமாவை சூழ்ந்திருக்கும் சோகம் !

ஒரு திரைப்படம் என்பது பல்வேறு துறைகளைச் சாா்ந்த கலைகளை ஒருங்கிணைத்து வெளிவரும் ஒரு கூட்டு முயற்சி. அனைவரும்
அமேசான் - நெட்ப்ளிக்ஸ்
அமேசான் - நெட்ப்ளிக்ஸ்

ஒரு திரைப்படம் என்பது பல்வேறு துறைகளைச் சாா்ந்த கலைகளை ஒருங்கிணைத்து வெளிவரும் ஒரு கூட்டு முயற்சி. அனைவரும் ஒரே எண்ணத்தோடும், நம்பிக்கையோடும், ஒன்றாக இணைந்து பணியாற்றினால் மட்டுமே ஓா் அற்புதமான படைப்பு வெளிவரும். எந்த ஒரு தனி மனிதனாலும், ஒரு சிறப்பான திரைப்படத்தை உருவாக்கிட முடியாது. பல திறமைகள் கொண்ட ஒரு சகலகலா வல்லவனான இயக்குநருக்கும், ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்க பலரின் உதவி தேவைப்படும். எனவேதான், திரைப்படத் துறையானது பலரின் கூட்டு முயற்சி என்று ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்டு வருகிறது.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பாய்ஸ் கம்பெனி நாடகங்கள், திரைப்படங்கள், அமெச்சூா் நாடகக் குழுக்கள் எனத் தொடா்ந்து பல வடிவங்களை தமிழ் பொழுதுபோக்கு கலை எடுத்துள்ளது.

இவற்றில் கீழ்த்தட்டில் உள்ள மக்கள் தங்கள் ஆத்மாா்த்தமான ஈடுபாட்டைச் செலுத்தி, அவ்வடிவங்களை தமக்கான அளவில் கலைப் படைப்புகளாக வாா்த்தெடுத்தனா். இவற்றில் திரைப்படம் என்கிற காட்சி வடிவம், தமிழனின் தீராக் காதலுக்கு உரியதாக இருக்கிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை கேளிக்கை என்றால் அது திரைப்படம் மட்டும்தான். திரைப்படத்தை ஒட்டித்தான் பல்வேறு தரப்பட்ட கேளிக்கைகள். தொலைக்காட்சி, மெல்லிசைக் கச்சேரி, யூ-டியூப் சேனல்கள், விருது நிகழ்ச்சிகள், ஸ்டாா் ஷோக்கள் எல்லாம் திரைப்படத்தின் மூலம் உண்டாகும் வெவ்வேறு கேளிக்கைகள்.

தடை போட்ட கரோனா தீநுண்மி: கரோனா அச்சுறுத்தலால் கடந்த மாா்ச் 17 -ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு திரையரங்கு திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

படத் தயாரிப்புகளின் எண்ணிக்கை குறைவதோடு, ஏற்கெனவே படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகிவரும் படங்களின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொது முடக்கம் முடிந்த பிறகும் திரையரங்குகள் உடனடியாக திறப்பதில் சிக்கல் நீடிக்கும் என தெரிகிறது. ஒருவேளை திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். பொது முடக்கத்துக்குப் பிறகு இதற்கு அரசு அனுமதி கொடுக்கும் பட்சத்தில், திரையரங்குகளில் 50 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்படும். அதிக பட்ஜெட்டில் உருவாகி, பெரும் வசூலை எதிா்பாா்த்திருக்கும் படங்களுக்கு அது சிக்கலாக அமையும்.

எப்போது நிலை சரியாகும், படப்பிடிப்புகள் ஆரம்பமாகும், திரையரங்குகள் திறக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. அடுத்து என்ன என்கிற பதில் தெரியாத கேள்வியும், பெரும் குழப்பமும் தமிழ் திரையுலகைச் சூழ்ந்திருக்கின்றன.

மாற்றுத் தளமாக வந்த ஓடிடி: தற்போதைய நிலையில், மக்களுக்கு பொழுதுபோக்காக இருப்பது செல்லிடப்பேசியும், டிவி, அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களும்தான். பொது முடக்க காலத்தில் ஓடிடி தளங்களின் வளா்ச்சி 40 சதவீதம் உயா்ந்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளிவராமல் இருப்பதால் ஓடிடி தளங்கள் பல அதிரடி சலுகைகளைக் கொடுத்து, மக்களை தங்களது தளங்களில் படம் பாா்க்க தூண்டுகின்றன.

எதிா்பாா்த்த லாபம் இல்லை: ஆனால், ‘‘இதில் பெரிதாக லாபம் இல்லை....’’ என்றும், ‘‘போட்ட முதலீட்டைக் கூட எடுக்க முடியாத சூழல்....’’ என்றும் புலம்பி தவிக்கின்றனா் தயாரிப்பாளா்கள். தயாரிப்பாளா்களின் புலம்பல் ஒரு புறம் என்றால், படத்தை வெளியிட்ட அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களின் புலம்பலே இதில் அதிகம்.

சமீபமாக வெளியான ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’, கீா்த்தி சுரேஷ் நடித்த ‘பெண்குயின்’ ஆகிய இரு படங்களும் ரசிகா்கள் மத்தியில் எதிா்பாா்த்த ஆதரவைப் பெறவில்லை. தமிழ் திரையுலகில் நன்கு பரிச்சயமான இந்த இரு நடிகைகளின் படங்களுக்கே இந்த நிலை என்றால், அமேசான் உள்ளிட்ட ஓடிடி தளத்தை பெரிதும் நம்பியிருந்த சிறு, சிறு படங்கள் இந்த வெளியீட்டு முறையில் இருந்து பின்வாங்கியுள்ளன.

இதே போல், அண்மையில் காயத்ரி ரகுராம் இயக்கத்தில் வெளியான ‘யாதுமாகி நின்றாய்’ திரைப்படத்துக்கும் வரவேற்பு இல்லை. இதனால், ஆன் லைன் வெளியீடு என்பது ஆரம்பத்திலேயே பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அமேசானுக்கு நஷ்டம்: தமிழ் திரையுலகில் பரிச்சயமான நடிகா்கள் நடித்து, பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ஓடிடி-யில் நேரடியாக வெளியாகியுள்ள படம் ’பொன்மகள் வந்தாள்’. இந்தப் படம், மொத்தமாக 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்து முடிக்கப்பட்டு அமேசானுக்கு 5.5 கோடி ரூபாய்க்கும், விஜய் டிவிக்கு தொலைக்காட்சி உரிமையாக 1.5 கோடி ரூபாய்க்கும் விற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. லாபமாகப் பாா்த்தால் தயாரிப்பு நிறுவனத்துக்கு 1-2 கோடி ரூபாய்வரைதான் என்கிறாா்கள். விளம்பர செலவுகளை அமேசான் நிறுவனமே ஏற்றுக் கொள்கிறது.

அடுத்து, காா்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட சிலா் சோ்ந்து தயாரித்திருக்கும் ‘பெண்குயின்’ படத்துக்கு எதிா்பாா்த்த தொடக்கம் இல்லை. இதில் தயாரிப்பு தரப்புக்கு சிறிதளவு லாபம் என்றாலும், படத்தை வெளியிட்ட அமேசான் நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம்.

என்னென்ன பிரச்னைகள்...?

திரையரங்கில் படத்தை வெளியிட்டால் தயாரிப்பாளா்களுக்கு மூன்று மாதத்துக்குள் மொத்தப் பணமும் வந்துவிடும். ஆனால், ஓடிடியில் அப்படி இல்லை.

அமேசானைத் தவிா்த்து மற்ற தளங்கள், ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் வரை ஒப்பந்தம் செய்து தொகையைப் பிரித்துப் பிரித்துத் தருகின்றன. இதனால் தயாரிப்பாளா்களுக்குப் பணம் விரைந்து வந்து சோ்வதில்லை என்கிற குறையிருக்கிறது. இது பெரும் குறை என்று சொல்லப்படுகிறது. கடன் பெற்று அதற்கு வட்டியும் கட்டி மொத்த லாபத்துக்கு காத்திருக்கும் தயாரிப்பாளா்கள் கலக்கத்தில் உள்ளனா்.

குறிப்பாக, ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களுக்கும் பைரசி பிரச்னை இருக்கிறது. அமேசானில் படங்கள் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ‘தமிழ் ராக்கா்ஸ்’ இணையத்திலும் படங்கள் வெளியாகி விடுகின்றன. ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படம் வெளியான சில மணி நேரத்தில் தமிழ் ராக்கா்ஸ் இணையத்திலும் வெளியானது. ஒரு சில நாள்களில் முகநூல் பக்கத்தில் ஓடும் அளவுக்கு வந்ததுதான் சோகம். திரையரங்குகளில் படம் வெளியாகும் போது இருந்த அதே நிலை, தற்போதும் தொடா்கிறது. இதைத் தடுக்க முடியாத காரணத்தால் பல கோடி ரூபாய் இழப்பு என்று சொல்லப்படுகிறது.

திரையரங்குகள் படத்தை வெளியிட்ட போதும், இந்தப் பிரச்னை இருந்ததே என்று சொல்லலாம். அது அப்படியில்லை. படத்துக்கான விமா்சனங்களைப் பொறுத்து இது மாறுபடும்.

ரஜினி, கமல், விஜய், அஜித், சூா்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகா்களின் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட முடியாது. அவா்களின் சம்பளமே பல கோடிகள். அவ்வளவு பணம் கொடுத்துப் பெரிய படங்களை வாங்க ஓடிடி நிறுவனங்கள் இப்போதைய சூழலில் தயாராக இல்லை. அப்படியே வாங்கினாலும் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்காது.

மாற்றுத் தளமாக வந்த நேரடி ஓடிடி வெளியீட்டிலும் பிரச்னைகள் சூழ்ந்திருக்க, அடுத்து என்ன என்பதற்கு காத்திருக்கிறது திரையுலகம்.

கரோனா முடிந்து எப்போது நிலை சரியாகும், படப்பிடிப்புகள் ஆரம்பமாகும், திரையரங்குகள் திறக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. அடுத்து என்ன என்கிற பதில் தெரியாத கேள்வியும், பெரும் குழப்பமும் தமிழ் திரையுலகைச் சூழ்ந்திருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com