வழக்குகளில் விரைவு காட்டும் ஈரோடு மகளிர் நீதிமன்றம்: 6 ஆண்டுகளில்  175 வழக்குகளில் தண்டனை

ஈரோடு மகளிர் விரைவு சிறப்பு நீதிமன்றம் கடந்த 6 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் 1,000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்து.
வழக்குகளில் விரைவு காட்டும் ஈரோடு மகளிர் நீதிமன்றம்: 6 ஆண்டுகளில்  175 வழக்குகளில் தண்டனை


ஈரோடு: ஈரோடு மகளிர் விரைவு சிறப்பு நீதிமன்றம் கடந்த 6 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் 1,000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்து.  இதில் இரண்டு இரட்டை ஆயுள் தண்டனை உள்பட 175  வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் மாவட்டம் தோறும் சிறப்பு மகளிர் விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மகளிர் விரைவு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்ற திறப்பு விழாவில் பங்கேற்ற அப்போதைய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் பேசும்போது, தற்போது நீதிமன்றங்கள் அதிகமாக திறக்கப்படுகிறது. ஆனால், வழக்குகளின் மீதான தீர்ப்புகள் தாமதமாக வருவதாக பொதுமக்கள் கருதுகின்றனர்’ என்று குறிப்பிட்டார். ஈரோடு மகளிர் நீதிமன்றம் செயல்படத் துவங்கிய 6 ஆண்டுகளில் 1,000 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, 175 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி அவரின் ஆதங்கத்தை போக்கியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 37 காவல்நிலையங்களில் பதிவாகும் பெண்களுக்கு எதிரான குற்றங்களான கொலை, வரதட்சணை உள்ளிட்ட காரணங்களுக்காக பெண்ணை தற்கொலைக்கு தூண்டுதல், ஆதாயத்திற்காக பெண்களை கொலை செய்தல், சிறுமிகளை ஏமாற்றி பாலியல் தொல்லைகள் கொடுப்பது, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது போன்ற வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் விசாரித்து தீர்ப்பளிக்கப்படுகிறது.

மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கிடைக்கும் அதிகபட்ச தண்டனை என்பது எதிர்காலத்தில் அத்தகைய குற்றங்கள் நடப்பதை தடுக்கும் சக்தியாக மாறி வருவதாக கருதுகின்றனர் சமுக ஆர்வலர்கள். அந்த வகையில் இரண்டு இரட்டை ஆயுள் தண்டனை உள்பட பல்வேறு வழங்குகளில் ஈரோடு மகளிர் நீதிமன்றம் அளித்த தண்டனைகள் மகளிர் அமைப்புகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் ஜி.டி.ஆர்.சுமதியிடம் பேசியபோது, கடந்த 2012ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் அடிப்படையில் மாவட்டந்தோறும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு நீதிமன்றத்தில் இதுவரை 175 வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனர். இந்த வழக்குகளில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதுடன், குறிப்பிட்ட குழந்தையின் எதிர்கால நலன் கருதி, அரசு நிவாரணம் வழங்கவும் நீதியரசர்கள் உத்தரவிட்டு வருகின்றனர் என்றார்.

நீங்கள் வாதிட்ட வழக்குகளில் மனதை பாதித்த வழக்கு ஏதாவது ஒன்றை கூற முடியுமா’ என்று கேட்டபோது,  பர்கூர் மலைப்பகுதியில் திருமணமாகி 4 குழந்தைகளை பெற்ற ஒருவர், தனது முதல் குழந்தையின் பள்ளி தோழியை, யானையை காட்டுவதாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கில் நீதியரசர் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கியதோடு, அரசு நிதியில் இருந்து பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ 3 லட்சத்தை நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதே போல் இரட்டை ஆயுள் தண்டனையும் குறிப்பிடத்தக்க தீர்ப்பாக கருதுகிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஒவ்வொரு வழக்கிலும் தீர்ப்பு வரும்போது, ஒரு பெண்ணாக நான் மன நிறைவாக உணர்கிறேன். இந்த வழக்குகளில் வழங்கப்படும் தண்டனையை பார்த்து குற்றங்களில் ஈடுபடுவோர் தயங்கி அதனை கைவிட்டால் அதுவே தீர்ப்புகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

இதர வழக்குகளை கையாள்வது போல், குழந்தைகள் தொடர்பான வழக்குகளை கையாள்வது எளிதாக உள்ளதா’ என்று கேட்டபோது, மற்ற வழக்குகளில் இருந்து இந்த வழக்குகள் மாறுபடுகிறது. ஒரு பெண் குழந்தை யாரோ ஒருவரால் பாலியல் ரீதியான தொல்லைக்கு ஆளாகும் பட்சத்தில், முதல் தகவல் அறிக்கை இல்லாமலேயே அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம். அதன் பின் பாதிக்கப்பட்ட குழந்தையை நீதிபதி முன்பு அழைத்து சென்று அப்போதே நேரடி வாக்குமூலம் பெறப்படுகிறது. குழந்தைகள் மனநிலை மாறும் முன்பு குற்ற நிகழ்வை பதிய வைப்பது குற்றவாளிக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர உதவியாக உள்ளது. அது மட்டுமல்லாது, இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒரு ஆண்டுக்குள் தீர்ப்பு வெளியாக வேண்டும். எஸ்.ஐ. நிலையிலான காவல்துறை அதிகாரிகள்தான் வழக்கை விசாரித்து பதிவு செய்ய வேண்டும் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது என்றார்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலனவர்கள் பக்கத்து வீட்டு தாத்தா, தெரிந்த மாமா என்று நன்கு அறிமுகமானவர்களாகவே உள்ளனர். இந்த குற்றங்களில் இருந்து தங்கள் குழந்தைகளை காப்பாற்றுவதற்கு, பெண் குழந்தைகள் தங்களிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய சூழலை பெற்றோர் உருவாக்க வேண்டும். தன்னை யாராவது ஒருவர் தவறாக தொடும்போது அதுகுறித்து பெற்றோரிடம் பெண் குழந்தைகள் தெரிவிக்க வேண்டும். அதற்குரிய பயிற்சி அளிக்க வேண்டும். எந்த குற்றம் நடந்தாலும் அதனை தைரியமாக வெளிப்படுத்த வேண்டுமென்பதையே மகளிர் தின வேண்டுகோளாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் வைக்கிறேன் என்றார்.

2018 இல் திருத்தப்பட்ட சட்டம்:

மகளிர் நீதிமன்றங்களில் மகளிர் கொலை, தற்கொலை, பெண்குழந்தைகளுக்கான எதிரான குற்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. 2012 சட்டத்தின்படி குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறை, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்க முடியும். 2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட இந்த சட்டத்தில் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அதிகபட்சமாக வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க தண்டனை விதிக்க முடியும். இத்தகைய தண்டனைகள் மூலம் பெண்கள், பெண் குழந்தைகளுக்கான எதிரான குற்றங்கள் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com