கோவா, சிக்கிம், கர்நாடகத்தைத் தொடர்ந்து ம.பி. யிலும் படையெடுத்துள்ள பாஜக

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா, பாஜகவில் இணைந்துள்ளார்.
கோவா, சிக்கிம், கர்நாடகத்தைத் தொடர்ந்து ம.பி. யிலும் படையெடுத்துள்ள பாஜக

கோவா, சிக்கிம் மற்றும் கர்நாடக மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மத்தியப் பிரதேசத்துக்கும் படையெடுத்திருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக. இதனால், கர்நாடகத்தைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து ஆட்சி மாற்றம் நிகழும் சூழல் உருவாகியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியத் தலைவர்களுள் ஒருவருமான ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்கிழமை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இவருடன் 22 ஆதரவு எம்எல்ஏ-க்களும் ராஜிநாமா செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியா நேற்று (புதன்கிழமை) பாஜகவில் இணைந்தார்.

சிந்தியாவின் பின்னணி:

இவருடைய குடும்பமே அரசியல் பாரம்பரியம் கொண்டுள்ளது. ஜோதிராதித்ய சிந்தியாவின் பாட்டி விஜயராஜே சிந்தியா ஹிந்து மகாசபையின் மிக முக்கியத் தலைவர். அதன்பிறகு ஜன சங்கத்தில் இருந்த அவர் பாஜகவை நிறுவியவர்களுள் ஒருவராக செயல்பட்டார். பாஜகவைச் சேர்ந்த ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, ஜோதிராதித்ய சிந்தியாவின் அத்தை. மற்றொரு அத்தையான யசோதரா ராஜே சிந்தியாவும் மத்தியப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ-வாக உள்ளார்.

இவரது தந்தை மாதவராவ் சிந்தியா ஜன சங்கத்திலேயே அரசியல் வாழ்வைத் தொடங்கினார். இதன்பிறகு, 1977-இல் சுயேச்சையாகப் போட்டியிட்டு எம்பி ஆனார். இதைத் தொடர்ந்து அவர் 1980-இல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதன்பிறகு, அவர் கடைசி வரை தோல்வியையே சந்திக்காத எம்பி என்ற பெருமைக்குரியவராக இருந்தார். இடையே 1996-இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மாதவராவ் சிந்தியா, ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்று எதிர்க்கட்சியில் இணையவில்லை. அவர் மீண்டும் சுயேச்சையாகப் போட்டியிட்டே வெற்றி பெற்றார். இதன்பிறகு, அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில், மாதவராவ் சிந்தியாவின் 75-வது பிறந்தநாளான மார்ச் 10-ஆம் தேதி அவரது மகன் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இருந்து தான் மட்டும் விலகாமல் 22 ஆதரவு எம்எல்ஏ-க்களைக் கொண்டு மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளார்.

சிந்தியாவின் சமிக்ஞை:

ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதிலும், அவர் காங்கிரஸில் இருந்து வெளியேறுவதற்கான சமிக்ஞையாக சில சம்பவங்கள் வெளிப்பட்டன. 

இந்தச் சூழலில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது. மத்திய அரசின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமரிசித்து வந்த நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா தன்னுடைய சுட்டுரைப் பதிவில் ஒரு கருத்தைப் பதிவிட்டார். அதில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், இது நாட்டு நலன் சார்ந்ததாகவும் குறிப்பிட்டார். இதை அரசியலமைப்பு சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். அப்போது மோடி அரசுக்கு ஆதரவான இவருடைய கருத்து விமரிசனத்துக்குள்ளானது.

இதன்பிறகு, சுட்டுரைப் பக்கத்தில் அவருடைய சுய குறிப்பில் இருந்து காங்கிரஸ் கட்சி குறித்த பொறுப்புகள் நீக்கப்பட்டது. இதுவும் கடந்தாண்டு நவம்பர் மாதம் அவர் பாஜகவில் இணைகிறாரா என்ற சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், அவர் இதற்கான பதிலடியைத் தரும் வகையில், "சுட்டுரைப் பக்கத்தில் என்னுடைய சுய குறிப்பை ஒரு மாதத்துக்கு முன்பு மாற்றினேன். என்னுடைய சுய குறிப்பு மிகவும் பெரிதாக இருப்பதாகவும், அதை சுருக்க வேண்டும் என்றும் பலர் என்னிடம் தெரிவித்தனர். எனவே அதைச் சுற்றிய அனைத்து வதந்திகளும் ஆதாரமற்றவையாகும்" என்றார்.

இப்படிப்பட்ட சூழல்களுக்கு மத்தியில் மத்தியப் பிரதேச காங்கிரஸில் கமல்நாத் மற்றும் திக்விஜய் சிங் இருவருமே பெரிதளவில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், சிந்தியாவுக்கான முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை எனவும் பேச்சுகள் வரத் தொடங்கின. சிந்தியாவுக்கு மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் மற்றும் முதல்வர் பதவி வழங்காதது கட்சிக்குள் இருக்கும் வேறுபாடுகளை உறுதிபடுத்தின. இதன் காரணமாக, மத்தியப் பிரதேச காங்கிரஸ் வெளிப்படையாகவே இரு பிரிவுகளாக இருந்தது.

இதைத் தொடர்ந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து காங்கிரஸ் கட்சியில் இருந்தபடியே சிந்தியா கேள்வியை எழுப்பினார்.

இப்படி அடுத்தடுத்த அரசியல் சூழல்களும், சிந்தியாவின் நகர்வுகளும் அவர் காங்கிரஸில் இருந்து விலகுவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தி வந்தன. இந்த வெளிப்பாடுகள் அனைத்தையும் உறுதி செய்யும் வகையிலேயே அவருடைய தந்தைய மாதவராவ் சிந்தியாவின் 75-வது பிறந்தநாளான செவ்வாய்கிழமை அவர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

பாஜகவில் இணைந்த சிந்தியா:

காங்கிரஸ் கட்சியில் இருந்து செவ்வாய்கிழமை விலகிய சிந்தியா நேற்று தில்லியில் பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். இதற்குப் பலனாக அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த பிளவுகளையும், சிந்தியாவின் விரக்தியையும், அவரது பின்னணி குறித்தும் அறிந்த பாஜக, இந்த வாய்ப்பை சாதுரியமாக தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. இதற்குப் பலனாக மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றத்தையே நிகழ்த்தக் கூடிய அளவிலான 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பாஜக வசமாகிவிட்டது.

பாஜகவுக்கும் இது புதிதல்ல. கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை இந்தப் பக்கம் இழுப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற அமோக வெற்றியே இதற்கான அடித்தளமாக அமைந்தது. பாஜக பெரும்பான்மையான இடங்களைப் பெறாதபோதிலும் சில இடங்களில் ஆட்சியையும், சில இடங்களில் பிரதான எதிர்க்கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.

கோவா

கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 15 ஆக இருந்தது. இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதம் 15 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் 10 எம்எல்ஏ-க்கள் கூட்டாக பாஜகவில் இணைந்தனர். மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏ-க்களுக்கு மேல் கட்சி மாறியதால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயவில்லை. இதில் 3 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2017-இல் கோவாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை 14 ஆக இருந்தது. 16 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் அங்கு கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பாஜகவே ஆட்சியமைத்து வந்தது. இதையடுத்து, கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்கள் இருவர் மற்றும் காங்கிரஸில் இருந்து கட்சி மாறிய 12 எம்எல்ஏ-க்கள் மற்றும் இடைத்தேர்தல் வெற்றி என தற்போது பாஜகவின் பலம் அங்கு 14-இல் இருந்து 27 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் எண்ணிக்கை 3-இல் இருந்து இரண்டாகவும், காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை 16-இல் இருந்து 5 ஆகவும் குறைந்துள்ளது.

கர்நாடகம்

2018-இல் கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதிலும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் (மஜத) ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தன. இதன் காரணமாக வெறும் 6 நாள்கள் மட்டுமே முதல்வராக இருந்த எடியூரப்பால் ஆட்சியைத் தொடர முடியவில்லை. எனவே, தென் இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இல்லை என்ற பெயரை பாஜகவுக்கு ஏற்படுத்தித் தந்தது.

இருப்பினும் கர்நாடக ஆட்சியும் 14 மாதங்களிலேயே கவிழ்ந்தது. காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏ-க்கள் 3 பேர் உட்பட மொத்தம் 17 பேர் ராஜிநாமா செய்ய பேரவையில் பெரும்பான்மையை இழந்தது காங்கிரஸ் - மஜத கூட்டணி. இதைத் தொடர்ந்து எடியூரப்பா அங்கு மீண்டும் முதல்வரானார்.

இதன்பிறகு ராஜிநாமா செய்த எம்எல்ஏ-க்களின் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 6 இடங்களில் வெற்றி பெற்றாலே ஆட்சியைத் தக்கவைக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், 15 இடங்களில் பாஜக 12-இல் வெற்றி பெற்றது. பாஜக சார்பில் இடைத் தேர்தலில் போட்டியிட்ட 15 பேரில் காங்கிரஸ் மற்றும் மஜதவில் இருந்து கட்சி மாறியவர்கள் 13 பேர். போட்டியிட்ட இந்த 13 பேரில் வெற்றி பெற்றவர்கள் 11 பேர். வெற்றி பெற்ற இந்த 11 பேரில் 10 பேர் தற்போது கர்நாடகத்தில் அமைச்சர்களாக உள்ளனர்.

சிக்கிம்

சிக்கிமில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பேரவைத் தேர்தல் நடைபெற்று, மே மாதம் அதன் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், மொத்தமுள்ள 32 இடங்களில் பிராந்தியக் கட்சிகளான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 இடங்களிலும், சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

இதில், முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங் உட்பட சிக்கிம் ஜனநாயக முன்னணி எம்எல்ஏ-க்கள் இருவர் தலா 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் சிக்கிம் ஜனநாயக கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றிருந்த போதிலும் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆக இருந்தது. 

இந்த நிலையில், சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 13 எம்எல்ஏ-க்களில் 10 எம்எல்ஏ-க்கள் கடந்தாண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி பாஜகவில் இணைந்தனர். மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏ-க்கள் கட்சி மாறியதால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலவில்லை. இதன்மூலம், பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் ஒரு இடத்தில் கூட தேர்வு செய்யப்படாமல் 2 சதவீத வாக்குகள்கூட பெறாத பாஜக அம்மாநிலப் பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

10 எம்எல்ஏ-க்கள் பறிகொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் மேலும் இரண்டு எம்எல்ஏ-க்கள் அதற்கு அடுத்த தினமே தொகுதி நலனைக் கருத்தில் கொண்டு ஆளும் சிக்கிம் கிராந்திகாரி கட்சியில் இணைத்துக் கொண்டனர். இதன்மூலம், மக்களால் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்ட சிக்கிம் ஜனநாயக முன்னணி சார்பில் தற்போது முன்னாள் முதல்வர் பவன் குமார் மட்டுமே அம்மாநில பேரவையில் ஒற்றை எம்எல்ஏ-வாக இருக்கிறார்.

இதன்பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் 3 இடங்களில் பாஜக 2 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்பிறகே, பாஜக அங்கு தேர்தல்மூலம் தனக்கான முதல் கணக்கை முறையாகத் தொடங்கியது.

இப்படி மாநிலங்களுக்கு மாநிலம் படையெடுத்து வருவதுபோல் பாஜக தனக்கான செல்வாக்கு இல்லாதபோதிலும் செல்வாக்கு மிகுந்த எதிர்க்கட்சியினரை தன்பக்கம் இழுத்துக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றி வந்தது. இதுதவிர குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ-வான அல்பேஷ் தாகூர் உட்பட இரண்டு அதிருப்தி எம்எல்ஏ-க்கள், மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் உட்பட 3 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள், ஒரு தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மும்பை பிரிவு தலைவர் சச்சின் அஹிரு என பலர் பின்னர் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

இதன்மூலம், செல்வாக்கு இல்லாத இடங்களிலும் பாஜக தனது செல்வாக்கை நிலைநாட்டியது. தற்போது இது ஜோதிராதித்ய சிந்தியா மூலம் மத்தியப் பிரதேசம் வரை நீடித்துள்ளது.

இத்தனை முன் உதாரணங்கள் இருந்தபோதிலும், மத்தியப் பிரதேசத்தில் இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான எம்எல்ஏ-க்களின் வித்தியாசம் வெறும் 4 என்ற போதிலும் காங்கிரஸ் சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், உட்கட்சிப் பூசல்களைத் தவிர்க்காமல் இப்படி கையில் உள்ள வெற்றிகளை வரிசையாக இழந்து வருகிறது காங்கிரஸ். கர்நாடகத்தில் காங்கிரஸிடம் இருந்த 10 எம்எல்ஏ-க்கள் தற்போது பாஜகவில் உள்ளனர். கோவாவிலும் இதேபோல் 10 எம்எல்ஏ-க்களை பாஜகவிடம் பறிகொடுத்துள்ளது.

இத்தனை சமிக்ஞைகள் இருந்தபோதிலும், மத்தியப் பிரதேசத்தில் எந்நேரத்திலும் ஆட்சி கவிழ்ப்பு நிகழலாம் என்பதை அறிந்தபோதிலும், மத்தியப் பிரதேச காங்கிரஸில் நிலவி வரும் பிரச்னையை அறிந்திருந்தும் கமல்நாத், சிந்தியா இடையிலான பிளவைத் தடுக்காமல் தற்போது முக்கியத் தலைவரான சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்களை இழந்திருப்பது காங்கிரஸ்ஸின் தலைமை குறித்த கேள்வியையே எழுப்புகிறது. இந்த சமிக்ஞைகள் தற்போது சிந்தியாவுடன் இணைந்து ராஜிநாமா செய்த 22 எம்எல்ஏ-க்களிலும் தொடருவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. ராஜிநாமா செய்த 22 பேரும் வரும் நாட்களில் பாஜக சார்பில் மீண்டும் இடைத் தேர்தலில் போட்டியிட்டு பேரவைக்குத் தேர்வாகி அமைச்சர்களாகலாம்.

மக்களவையில் அடுத்தடுத்து இரண்டு படுதோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் தற்போது மாநிலங்களிலும் தனக்கான செல்வாக்கை இழந்து வருகிறது. தெலங்கானாவிலும் 18 எம்எல்ஏ-க்களில் 12 பேர் ஆட்சியில் உள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதியிலும், ஒருவர் பாஜகவிலும் இணைத்துக் கொண்டனர். இந்த உதாரணங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் நிர்பந்தம் முதலில் உட்கட்சிப் பூசலைத் தவிர்த்து மாநில அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டியது. தில்லியில் மக்களவைத் தேர்தலின்போது ஆம் ஆத்மியுடன் இணைந்து போட்டியிட கட்சி முனைந்தபோதும் தில்லி காங்கிரஸ் தரப்பில் ஆதரவு எழும்பவில்லை. இதன் விளைவாக தில்லியில் அனைத்து மக்களவைத் தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றியது. ராஜஸ்தானிலும் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வருமான சச்சின் பைலட் இடையே வெளிப்படையான கருத்து வேறுபாடுகள் இன்றைக்கும் நீடித்து  வருகிறது.

ஆட்சியில் இருக்கும் வலுவான ஒரு கட்சியை எதிர்ப்பது மிகவும் சவாலானது. இந்த சவாலான தருணத்தில் சொந்தக் கட்சியிலேயே ஏற்படும் பிளவுகள் சிறந்த எதிர்காலத்தை அளிக்காது என்பதை காங்கிரஸ் தலைமை குறைந்தபட்சம் சிந்தியா உதாரணத்தில் இருந்தாவது பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

பாஜக தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் அளித்த சமிக்ஞைகள் ஒரு பக்கம் காங்கிரஸுக்கானதாகப் பார்க்க வேண்டும் என்றிருந்தாலும், இதுபோன்ற ஜனநாயகத்தின் சாராம்சத்தையும் அது கேள்விக்குள்ளாக்குகிறது.

உதாரணத்துக்கு, சிக்கிமில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் மக்களுக்கான குரலாக ஒலிக்கும் எதிர்க்கட்சியாக உருவெடுத்திருப்பது நகைமுரணாக இருந்தாலும், தேர்தலின்போது மக்கள் அளித்த தீர்ப்புக்கான மதிப்பை இது கேள்விக்குள்ளாக்குகிறது. அப்படி இருக்கையில் இந்த தொடர் குதிரைப் பேர சம்பவங்கள் வெறும் ஒரு அரசியல் கட்சிக்கான சவாலா அல்ல ஜனநாயகத்துக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையா என்கிற சமகால அரசியல் குறித்த சந்தேகத்தைப் பதிவு செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com