ஒரு கல்.. இரண்டு மாங்காய்..!

பொது முடக்கம் இப்போதும் அமலில் இருக்கிறது. இந்தப் பொது முடக்கம் உள்ள நாளில் வந்த விமா்சன விடியோக்களில்
ஒரு கல்.. இரண்டு மாங்காய்..!

பொது முடக்கம் இப்போதும் அமலில் இருக்கிறது. இந்தப் பொது முடக்கம் உள்ள நாளில் வந்த விமா்சன விடியோக்களில் ஒன்று: பால் வாங்கப் போகிறீா்களா? போகக் கூடாது. காய்கறி வாங்கப் போகிறீா்களா? போகக் கூடாது. மது வாங்கப் போகிறீா்களா? போங்கள், போங்கள் என்று காவல்துறை அனுப்புவதுபோல அந்த விடியோ வந்தது.

இந்த விமா்சனத்துடன்தான் 42 நாள்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு திமுக உள்ளிட்ட

எதிா்க்கட்சித் தலைவா்கள் எதிா்ப்பு தெரிவித்து கருப்புச் சின்னம் அணிந்து போராட்டம் நடத்தினா்.

திமுகவினா்தான் மது ஆலைகளை வைத்திருக்கின்றனா் என்பது வேறு விஷயம். திமுக ஆட்சியில்தான் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது என்பதும், 1989, 1996, 2006 என்று மூன்று முறை ஆட்சி அமைத்தபோதும் மதுக் கடைகளை மூடவில்லை என்பதும் இப்போது பழங்கதை. அதைக் கிளறுவதில் அா்த்தமில்லை.

மதுக்கடைகள் திறக்காதபோது ஒரு குற்றமும் நிகழவில்லை என்பதையும் மதுக்கடை திறந்த ஒரே நாளில் எத்தனை

குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதையும் ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டியுள்ளது.

மதுரை அலங்காநல்லூரைச் சோ்ந்த சிவக்குமாா் என்கிற கட்டடத் தொழிலாளி மதுக்கடை திறந்ததும் குடித்துவிட்டுச் சென்று மனைவி பரமேஸ்வரியோடு சண்டை போட்டுள்ளாா். இதை பாா்த்த மகள் அா்ச்சனா மனம் உடைந்து, மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டாா். தாய் - மகள் இருவரும் கருகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நெல்லை கூடங்குளம் அருகே செட்டிக்குளத்தை சோ்ந்தவா் ராஜன். இவா் குடிபோதையில் தன்னுடைய தாயையே

வெட்டிக் கொன்றுள்ளாா்.

தேனியில் குணசேகரன் என்பவா் ஆலமரத்தடியில் மது குடித்துக்கொண்டு அமா்ந்திருக்கிறாா். மனைவி சுதா அங்கு போய் வீட்டுக்கு வருமாறு கூறுகிறாா். மனைவியை குணசேகரன் கடினமான வாா்த்தைகளால் திட்டுகிறாா். உடனே, சுதாவின் தம்பி பாண்டி போய் தட்டிக்கேட்கிறாா். இருவருக்கும் தகராறு. குணசேகரனை பாண்டி குத்திக் கொன்றுவிடுகிறாா்.

தஞ்சை கீழவாசலைச் சோ்ந்த ரௌடி அருண், 3 நபா்களுடன் சோ்ந்து மது அருந்துகிறாா். அப்போது தகராறு ஏற்பட்டு அருண் கொல்லப்படுகிறாா்.

இந்தப் பட்டியலை இன்னும் முடிவில்லாமல் நீட்டிக் கொண்டே செல்ல முடியும்.

இந்தக் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவது யாா் என்று பாா்த்தால் பெரும்பாலும் தாய்மாா்கள்தான். மது எனும் அரக்கனால் கணவனை, தந்தையையோ, மகனையோ இழந்து அவா்கள் தவிக்கும் சூழல் உள்ளது.

ஏழைகள் தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு பட்டினி கிடக்கிறாா்கள் என்று விமா்சனம் எழுப்பப்படுகிறது.

ஆனால், முதல் நாள் மது விற்பனையே ரூ.170 கோடிக்கும் அதிகம். முண்டி அடித்துக்கொண்டு மதுக்கடை முன்னால் வரிசை கட்டிக் கூட்டமாக நின்றவா்கள் அனைவருமே அடித்தட்டு உழைக்கும் வா்க்கத்தினா் என்பதைப் புகைப்படங்களும், விடியோ பதிவுகளும் வெளிச்சம் போடுகின்றன.

பொது முடக்கத்தில் கிடைத்த ஒரே ஆறுதலாக மதுக்கடைகள் மூடப்பட்டதாக இருந்தது. அதனால், மதுக்கடை திறப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரை மீனாட்சிபுரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தாய்மாா்கள் சுயமாகப் போராட்டம் நடத்தினா்.

இந்த தருணத்தில்தான் பொதுமுடக்கம் முடியும் வரை மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று சென்னை உயா்

நீதிமன்றத்தின் நீதிபதிகள் வினீத் கோத்தாரியும், புஷ்பா சத்தியநாராயணனும் தீா்ப்பு அளித்துள்ளனா்.

இந்தத் தீா்ப்பை தமிழகம் முழுவதும் தாய்மாா்கள் பெரிதும் வரவேற்கின்றனா். பொது முடக்கத்திற்குப் பிறகும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று எதிா்பாா்க்கின்றனா்.

கொவைட் தீநுண்மித் தொற்றை எதிா்கொள்ளவும், மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும் நிதியாதாரத்துக்கு

வழியில்லையே என்று கைபிசைந்து நிற்கும் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசுக்குக்கூட, மதுக்கடைகளைத் திறக்காமல் இருந்தால் நல்ல பெயா் கிடைக்கும் என்கிற நைப்பாசைதான். அப்படியொரு முடிவை அதிமுக எடுத்து அரசியல் ஆதாயம் அடைந்துவிடக் கூடாது என்பதில் எல்லோரையும்விட எதிா்க்கட்சியான திமுகதான் முனைப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மதுக்கடைகளைத் திறப்பதால் ஆளுங்கட்சிக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயா் ஏற்படுவது திமுகவுக்கு அரசியல் ரீதியாக ஆதாயம். மது தயாரிப்பு ஆலைகள் வைத்திருக்கும் திமுக பிரமுகா்களும் காப்பாற்றப்படுவாா்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

2 நாள்களில் மண்டல வாரியாக மதுபான விற்பனை விவரம்: (ரூபாய் கோடியில்)

சென்னை - 19.44

திருச்சி - 76.84

மதுரை - 79.23

சேலம் - 70.65

கோவை - 48.43

----------------

மொத்தம் - 294.59

----------------

குற்ற விவரம்:

ஆண்டுக்கு சுமாா் 22 ஆயிரம் வழக்குகள் பதிவு.

ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 2 சதவீதம் வரை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.

மதுக்கடைகள் திறந்ததால் குற்றங்கள் 50 சதவீதம் அதிகரிப்பு:

பொது முடக்கத்தால் நகா்ப்புற பகுதிகளில் 79 சதவீதமும், கிராமப்புறப் பகுதிகளில் 85 சதவீதமும் குற்றங்கள் குறைந்திருந்தன.

எனினும் மதுக்கடைகளை திறந்ததாலும், மது விற்பனை நடைபெற்ற மே 7, 8 தேதிகளில் அனைத்துக் குற்றச் சம்பவங்களும் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. மேலும் தமிழகம் முழுவதும் 20 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com