Enable Javscript for better performance
கமலா ஹாரிஸ் சொல்லும் பாடம்- Dinamani

சுடச்சுட

  

  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - கமலா ஹாரிஸ் சொல்லும் பாடம்

  By டாக்டர் வெ.ஜீவானந்தம்  |   Published on : 13th November 2020 06:59 PM  |   அ+அ அ-   |    |  

  harris-biden_pti

  அதிகாரத்தின் உச்சியில்...

  "கருப்பினப் பெண்ணான என்னை இந்தப் பொறுப்பிற்குத் தேர்வு செய்துள்ள அமெரிக்க மக்கள் அனைவருக்கும் நன்றி” என்கிறார் கமலா ஹாரிஸ்.

  “ஆப்பிரிக்க, ஆசிய -  அமெரிக்கப் பெண்ணொருவர் முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டார்” என்கிறது ஊடகங்கள்.

  இந்தியப் பெண்மணியொருவர் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதில் இந்தியா மகிழ்கிறது. தமிழ்ப்பெண் தேர்வு எனத் தமிழகம் கொண்டாடுகிறது. 

  இனவெறி ஆணவத்தின் இரு முகங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்ட டிரம்பின் தோல்வியில் மனம் சோர்ந்தபோதும், வாஷிங்டனிலும் கமலம் மலர்ந்துவிட்டது எனக் காவியர்கள் மனதுக்குள் மகிழலாம்.

  ஆனால், கமலா ஹாரிஸின் வெற்றியை இவற்றில் எதுவொன்றாகப் பார்ப்பதும் யானை பார்த்த பார்வையற்றவர்களின் கதைதான். இவை அத்தனையும் கலந்த கலவையின் வெற்றிதான் கமலா ஹாரிஸ்.

  கமலாவின் வெற்றி, உலகத்தை ஒற்றைக் கண்ணுடன் கருப்பு வெள்ளையாகப் பார்க்காதே என எச்சரிக்கிறது. ஓர் இனம், ஒரு மொழி, ஒரு பண்பாடு, ஒரு மதம் எனும் அனைத்து ஒருமைவாதத்தின் மீதான வெற்றியே கமலா  ஹாரிஸ்.

  பல்வேறு இன மக்கள் வாழும் நாட்டில், அதிலும் வெள்ளைக் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மை கொண்ட நாட்டில் ஒரு கருப்பர் அதிபராகவும், கருப்பினப் பெண் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தியாவுக்கு ஒரு பாடம். இந்த இளக்கத்தை இந்தியா இழந்தால் உடைந்து சிதறும் ஆபத்து தவிர்க்க முடியாததாகி விடும்.

  அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்க அடர்வனத்தின் கருப்பினத் தாயின் மக்களே நாம்.  20 லட்சம் ஆண்டுகள் முன்  புலம் பெயர்ந்து வாழ்வு தேடி திசையெங்கும் பரவிய மக்கள், நிலம், வெப்பம், சூழலுக்குகேற்ப நிறம் மாறி வாழ்கின்றனர் என்பதே உண்மை என்கிறது மானுடவியல்.

  எவனும் தலையில் பிறக்கவில்லை, காலிலும் பிறக்கவில்லை, எல்லாம் அவனவன் தாய்க்கும், தந்தைக்கும் பிறந்தவர்களே. இந்த யூத உயிரினவாதமே கோடிக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது.

  இந்த மூட இருளிலிருந்து விடுவிக்கும் ஒளியாக இனியேனும் கமலா ஹாரிஸை ஏற்றுக்கொண்டால் மட்டுமே மானுடம் மட்டுமல்ல, இந்தப் புவிப் பந்தே இனி வாழ முடியும்.

  அமெரிக்கா புலம் பெயர்ந்தோரின் ஒரு நாடே. ஐரோப்பாவிலிருந்து வாழ்வு தேடி ஓடியவர்கள் மண்ணின் மைந்தர்களைக் கொன்று அழித்து உருவானதே அமெரிக்கா. தொடர்ந்து, அடக்கியாண்டு, சுரண்டிய பிரிட்டனின் மேலாதிக்கத்தை எதிர்த்து எழுந்த விடுதலைப் போரின் பின் உருவானது புதிய அமெரிக்கா.

  உடைமைகள் குவிந்தபின் எவனும் சமத்துவம் பார்ப்பதில்லை.  ஆயிரக்கணக்கான ஏக்கர் கன்னி நிலத்தைப் பிடித்தவர்கள், உழைக்க ஆள் தேடினர். ஆப்பிரிக்க மக்களைச் சந்தை மாடுகள் போல விலங்கிட்டு ஓட்டி வந்து அடிமை வணிகம் செய்தனர்.

  "கருப்பு அடிமைகளின் வியர்வையிலும், ரத்தத்திலும், வெள்ளை மாளிகை உருவானது, எமது முன்னோர் உருவாக்கிய அந்த வெள்ளை மாளிகையில் நாங்கள் குடியேறுகிறோம்” அன்று மிட்ஷெல் ஒபாமாவின் சொற்களில் மகிழ்ச்சி மட்டுமல்ல, நூறாண்டு கால வேதனையும் இணைந்தே ஒலித்தது.

  அடிமை யுகத்திலிருந்து விடுதலை யுகம், ஜனநாயக யுகம் பிறந்ததன் அறிவிப்பே ஒபாமா, கமலா ஹாரிஸ்களின் நுழைவு. மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்பதை மாற்றங்கள் உணர்த்துகின்றன. கண்களைத் திறந்து புதிய வெளிச்சத்தைக் காண  நாம் தவறிவிடக் கூடாது.

  உடைக்கப்பட்ட சனாதனத் தடைகள்

  மன்னார்குடி கோபாலன் ஐயர் ஐ.சி.எஸ்., கமலாவின் தாத்தா. அவரது மகள் ஷியாமளா அமெரிக்காவுக்கு படிக்கச் செல்கிறார். ஜமைக்கா இளைஞர் டொனால்ட் ஹாரிசைக் காதலித்து மணக்கிறார். கமலா, மாயா என இரு பெண்கள். ஷியாமளா, கணவர் ஹாரிஸிடமிருந்து 1971-ல் மணவிலக்குப் பெறுகிறார். தனித் தாயாக இரண்டு பெண்களையும் வளர்க்கிறார். கமலாவின் சகோதரி மாயா மாணவியாக இருந்தபோதே தாயாகிறார். பிறந்த குழந்தைக்கு மீனா ஹாரிஸ் என பெயர் சூட்டி வளர்க்கிறார்கள். பின் மாயா டோனி எனும் கருப்பினத்தவரை மணக்கிறார். மாயா புகழ்பெற்ற வழக்கறிஞராகி, மகள் மீனாவையும் வழக்கறிஞராக்குகிறார். மீனா,  நிகோலஸ் எனும் நைஜீரிய நாட்டு இளைஞனை மணக்கிறார். கமலா  ஹாரிஸோ யூத மரபு சார்ந்த டக்ளஸ் இம்ஹோப்பை 2014-ம் ஆண்டு மணம் புரிகிறார்.

  அம்மா ஷியாமளாவின் சகோதரர் பாலச்சந்திரன், மெக்சிகன் பெண்ணை மணக்கிறார். ஷியாமளாவின்  ஒரு சகோதரி சரளா, மணம் செய்துகொள்ளாமல் சென்னையில் மருத்துவப் பணி செய்கிறார். மற்றொரு சகோதரி கனடாவில் வாழ்கிறார்.

  கமலாவும் அவரது குடும்பம் முழுவதும் ஜாதி, சம்பிரதாயம், அனுஷ்டானம், மரபு, ஹிந்து தர்மம், ஜாதி, வர்ணம், இனம், மொழி என தனக்குத்தானே போட்டுக் கொண்ட விலங்குகளையெல்லாம் உடைத்தபடி இன்று உயரப் பறந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

  இவர்கள் ஹிந்து இல்லை, பிராமணர் இல்லை, தமிழர் இல்லை, உலக மனிதர்களாகச் சிறகடிக்கிறார்கள். எந்தக் குறுகிய இன வாதமும் இனி இவர்களை வெல்ல முடியாது, மானுடம் ஒன்று என்பதன் முன்னோடிகளாகக் கருதப்பட வேண்டியவர்கள் இவர்கள். இவர்களைப் போன்றோரைத்தான் இளைய தலைமுறை முன்மாதிரியாக ஏற்க வேண்டும்.

  சமத்துவப் போராளி கமலா ஹாரிஸ்

  56 வயது கமலா ஹாரிஸ், திடீரென ஒருநாள் ஜோ பைடனால் அந்தப் பெரும் பொறுப்புக்குப் பிடித்து நிறுத்திவைக்கப்பட்டவரல்ல. அமெரிக்க ஜனநாயகத்தின் பல படிகளைப் பல ஆண்டுகளாகப் போராடிக் கடந்தவர். சட்டம் படித்து அட்டர்னியானவர். இந்தியத் தமிழ் மரபும், ஆப்பிரிக்க, ஜமைக்கா மரபும் கலந்த முதல் பெண் துணை அதிபர். கலிபோர்னியா மாநில அவையில் 2014 முதல் செனட்டராக இடம் பெற்றவர்.  2016-ல் அமெரிக்க செனட்டில் இடம் பிடித்த தெற்காசிய அமெரிக்கப் பெண் எனும் பெருமை பெற்றவர்.

  நிறவெறிக்கு எதிராகவும், பாலின சமத்துவத்திற்காகவும், கருப்பினப் பெண்கள் உரிமைக்காகவும், சிவில் உரிமைக்காகவும் தொடர்ந்து போராடியவர் கமலா. செனட்டராக ஒபாமாவின் மருத்துவத் திட்டத்திற்கு வாதாடியவர்.

  தவறான வழியில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக டிரம்ப் நியமித்ததை செனட் அவையில் எதிர்த்தவர். ஒபாமாவின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகளுக்குத் துணை நின்ற அவரைப் "பெண் ஒபாமா” என்றும் அழைத்தனர், அழைக்கின்றனர்.

  ஒரு செனட்டராக டிரம்பின் பருவநிலை மாற்றச் செயல்பாடு, கோவிட் குறித்த பொறுப்பற்ற போக்கு, அகதிகள் புலம்பெயர்ந்தோர் குறித்த ஆணவ அணுகுமுறை, ஏழைகளுக்கான மருத்துவப் பாதுகாப்புத் திட்டப் புறக்கணிப்பு போன்றவற்றைக் கடுமையாக எதிர்த்தார் கமலா ஹாரிஸ்.

  அதுபோல “இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான சி.ஏ.ஏ., காஷ்மீர், குடியுரிமைப் பறிப்பு, மனித உரிமைப் போராளிகள் கொலை, பெண்கள்,  சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்” என்கிறார் தில்லியில் உள்ள அவரது மாமா பாலகிருஷ்ணன். மூன்றாம் பாலினம், ஓரினச்சேர்க்கை, பெண்களின் கருத்தரிப்பு உரிமை ஆகியவற்றை நாம் அங்கீகரிக்கத் தயங்கும்போது அதற்கான தனது ஆதரவை உரக்கக் கூறி அதிர்ச்சியூட்டுகிறார் கமலா ஹாரிஸ்.

  தன் வழியிலும், கணவர் வழியிலும் புலம் பெயர்ந்து வந்தவரான கமலா புலம் பெயர்ந்தோர் குடியுரிமைக்காகவும் வாதிட்டார். கமலா ஹாரிஸின் உயர்வுக்காகப் பெருமிதம் கொள்வோர், தான் இந்தியரை மணந்து, இந்தியரான சோனியாவை கிறிஸ்துவர், இத்தாலியர் என்று ஏற்க மறுத்ததைக் கண்டோம்.

  உலக நாடுகள் அவையில் வளர்ச்சி குறித்த அறிக்கையும், 2004, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற எல்பிரைட் ஜெலினெக் அறிக்கையும் “இந்தியா தனது குறுகிய ஜாதியச் சுவர்களை உடைத்து விடுதலை பெறாத வரை, அது எத்தகைய அறிவியல் தொழில்நுட்ப சாதனைகளைச் செய்த போதும் நவீன நாகரிக நாடாக முடியாது” என்கின்றன.

  கமலா தன் உரையில், “ நாம் கருப்பினப் பெண்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளோம்”  என்கிறபோதெல்லாம் பெரும் கரவொலி எழுந்தது. “அமெரிக்காவில் ஒரு புலம் பெயர்ந்த கருப்பினப் பெண் இந்த உச்சத்தைத் தொடும் வாய்ப்பு சாத்தியமாகியுள்ளது. இது துவக்கமே, இது தொடரும்” என்றும் அவர் நம்பிக்கையூட்டினார்.

  பைடன் - ஹாரிஸ் வெற்றியால் அமெரிக்கா வழங்கியுள்ள பாடம்

  • பொதுவாக இனவாத, வலதுசாரி அரசியல் ஆகியவை உலகம் முழுவதும் கடந்த ஒரு பத்தாண்டுகளாகவே எழுச்சி பெற்று வளர்ந்த போக்கு, ஒரு தேக்க நிலையை எட்டியுள்ளது.

  • ஓர் இனம், மதம், மொழி, பண்பாடு என்ற ஒற்றைத்தன்மை அரசியலின் இறங்குமுகம் துவங்கியுள்ளது. கிறிஸ்துவ மேலாதிக்க அரசுக்கு மாற்றாக அமெரிக்காவின் பன்முகத்தன்மை, கருப்பின மக்களின் குரல் வலிமை பெற்றுள்ளதை பைடன் – ஹாரிஸ் வெற்றி காட்டுகிறது.

  • மக்களின் தினசரி வாழ்வின் மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, நிறவெறி, உணவுச் சுதந்திரம் போன்ற அடிப்படைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் காட்டுவதையும், மாற்று செயல்பாடு தேவை என்பதையும் உணர்த்துகிறது.

  • வெறுப்பு, பகை, மோதல் என்ற அமைதியற்ற சூழலை மேலும் வளர்க்க விரும்பவில்லை. பன்முகத் தன்மையை ஏற்க இணக்கமான அமைதியான வளர்ச்சிப் பாதையே நாட்டு நலனுக்கு உகந்தது.

  • போரும் புலம்பெயர்வும் இயல்பாகிவிட்ட காலத்தில் இனத்தூய்மை காப்பதென்பது, ஆசைமிக்க கற்பனையாக மட்டுமே இருக்க முடியும். கோபாலன் அய்யரின் குடும்ப நிகழ்வுகள் சிறந்த சான்று. ஐந்து தலைமுறைகள் முன் பார்த்தால் சேவகனும் சிற்றப்பனே என்பது எவ்வளவு சரியானது.
  • வாழ்க்கையை வருவது போல ஏற்றுக் கொள், வருவதை வாழ்வின் படிகளாக்கு என்பதே நாம் கற்க வேண்டிய பாடம். இணைந்தால் உயர்வோம். பிரிந்தால் சரிவோம் என்பதை கமலா முதல் செலினா ராஜ் கவுண்டர் வரை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.
  • உலகின் பல நாடுகளிலும் இந்தியர்கள், குறிப்பாகத் தென்னிந்தியர்கள் தமிழர்கள் சிறப்பான ஆட்சிப் பொறுப்பைப் பெற்றிருந்தபோதும் உலகின் முதன்மை நாடான அமெரிக்காவில் ஒரு தமிழ்ப் பெண் இரண்டாம் சிறப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளார் என்பதை தமிழர், பிராமணர் என்ற பிரிவின்றி ஏற்க வேண்டும்.
  • ஷியாமளா ஹாரிஸ் குடும்பத்தில் நிகழ்ந்துள்ள பல நிகழ்வுகள் பெரியார் போன்ற சீர்த்திருத்த, பகுத்தறிவுவாதிகளின் சிந்தனைகளுக்கு வலுவூட்டுவதாகவும், சனாதனம், மனுநீதி, வர்ணாசிரமம் எனும் பழமைவாதங்களுக்கு குழி வெட்டுவதாகவும் உள்ளதை விரிவாகப் பிரச்சாரம் செய்வதும் வளர்த்தெடுப்பதும் முற்போக்காளர்களின் கடமை.
  • பிராமணர்களிடம் உள்ள இந்த இளக்கமான சீர்த்திருத்தப் போக்கைப் பிற இடைநிலைச் சாதியினரும், தாழ்த்தப்பட்டோரும் மேற்கொள்வதற்கான சீர்திருத்த உணர்வு, கல்வி, சமூக  பாதுகாப்பு வழங்குவதற்கான  முயற்சிகள் உத்வேகத்துடன் தொடர வேண்டுமென்பதே கமலா ஹாரிஸின் வெற்றியின் சாரமான செய்தி.

  இதன் தொடர் விளைவாக மதம், ஜாதி, மொழி, இனம், நிறம், இன்னும் கற்பிதமான ஏற்றத்தாழ்வுகளைத் தகர்த்து, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற வள்ளுவப் பெருந்தகையின் வழியில், மானுட ஜாதி ஒன்றென்று வாழும் புதிய உலகிற்கு கமலா ஹாரிஸின் தொடர் வெற்றிகள் அமையப் பெற வேண்டும்.

  அன்பென்று கொட்டு முரசே!

  மக்கள் அத்தனை பேரும் நிகராம்!!

  [கட்டுரையாளர்- 

  தமிழக பசுமை இயக்கத் தலைவர், ஈரோடு]

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp