'வாழ நினைத்தால் வாழலாம்'

பிள்ளைகள் கைவிட்டாலும், வைராக்கியம், விடா முயற்சியை மனதில் கொண்டு தள்ளாடும் வயதிலும் தடம் மாறாமல் உழைக்கும் கைகள் பல்லாயிரம்.
செல்லம்மாள்
செல்லம்மாள்

குடும்பத்துக்காக ஓடி, ஓடி உழைத்த கால்களில், இன்னும் ஓயாமல் ஓடிக் கொண்டிருப்பது ஏராளம். பெற்ற பிள்ளைகள் கைவிட்டாலும், வைராக்கியம், விடாமுயற்சியை மனதில் கொண்டு தள்ளாடும் வயதிலும் தடம் மாறாமல் / தடுமாறாமல் உழைக்கும் கைகள் ஆயிரமாயிரம்.

முதியோர் நாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அவர்களைப் போற்றுவது அனைவரின் கடமை. நாமக்கல் மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையான 18 லட்சம் பேரில் முதுமையை எட்டியவர்கள் என்ற அறியப்படுவோர் சுமார் 4 லட்சம் பேர்.

இவர்களில் ஒருவர்தான் எர்ணாபுரம் ஊராட்சி ரங்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் (70) என்ற பெண்மணி. தள்ளாடும் வயதிலும் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள துறை சார்ந்த அலுவலகங்களை சுத்தம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்து வருகிறார்.


செல்லம்மாள் கூறுகிறார்: வயது 70–ஐ நெருங்கி விட்டது. கணவர் 15 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். செல்வகுமார் (46) என்ற ஒரு மகன் மட்டும் உண்டு. விவசாயத் தொழிலைத்தான் கணவருடன் சேர்த்து பார்த்து வந்தேன். அவர் இறப்பதற்கு முன்பாகவே தாயைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் இருந்த நிலத்தை மகன் பெயரில் எழுதி வைத்து விட்டார்.

அவனும் திருமணம் முடிந்தபின் தனியாக விட்டுவிட்டுத் தனிக்குடித்தனம் சென்றுவிட்டார். இது நடந்தது 20 ஆண்டுக்கு முன்பாக. அதன்பின் கூலி வேலைக்குச் சென்று கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு பிழைப்பு நடத்தினேன். எங்களுடைய ஊரில் இருந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 10 கிலோ மீட்டர் தொலைவு. அங்கு அலுவலகங்களை சுத்தப்படுத்த ஆள்கள் தேவைப்படுவதாகக் கூறினர்.

முதலில் மாவட்ட கருவூல அலுவலகத்தைச் சுத்தம் செய்து வந்தேன். இதற்கிடையே ஒரு கண் பார்வை மங்கிவிட்டது. அவ்வாறு இருந்தும் வேலை செய்து வந்தேன். அதன்பின் அங்குள்ளவர்கள் வேண்டாம் என கூறிவிட்டதால், தற்போது கனிமவளத் துறை அலுவலகத்தை சுத்தம் செய்வது, அங்குள்ள அலுவலர்களுக்குக் காலை, மதியம் உணவு வாங்கிக் கொடுப்பது போன்றவற்றைச் செய்து வருகிறேன்.


மாதம் ரூ. 2 ஆயிரம் கொடுக்கின்றனர். அலுவலர்கள் 10, 20 ரூபாய் தனியாகக் கொடுப்பார்கள். இதில், வீட்டு வாடகையாக ரூ. 500 போய் விடும். மருத்துவச் செலவு,  உணவுச் செலவு என அதிலும் மாதம் ரூ. 1000 செலவாகி விடும். இருப்பதைக் கொண்டு மூச்சு இருக்கும் வரை வாழ வேண்டும் என்ற முயற்சியுடனே இந்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். மகனும் சரிவர வந்து கவனிப்பதில்லை. கைகால்கள் சோர்ந்துவிட்டன. ஒவ்வோர் அறையையும் குனிந்தகொண்டே சுத்தம் செய்வதற்குள் மயக்கமே வந்து விடும். இன்னும் கொஞ்சம் காலம்... என்றார்.

இளைஞர்களோ, முதியவர்களோ எதிர்கால பயத்தைத் தூக்கிப்போடுங்கள். அன்றாடம் ஏதாவது ஒரு வேலையில் கவனம் செலுத்துங்கள். எந்த நோயும் நம்மை தீண்டாது, வாழ நினைத்தால் வாழலாம் என்பதுதான் செல்லம்மாளின் செய்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com