பிள்ளைகளை வெளிநாட்டுப் பணத்தில் வளர்த்தேன்... என்னை அவர்கள் விட்டிருப்பதோ முதியோர் இல்லத்தில்!

கஷ்டம் தெரியாமல் என் பிள்ளையை வெளிநாட்டு பணத்தால் வளர்த்தேன். ஆனால், அவர்களோ என்னை பாதுகாக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார்கள் என்று வருத்தத்துடன் கூறுகிறார் சுப்பையன்.
சுப்பையன்
சுப்பையன்

கொஞ்சம்கூட கஷ்டம் தெரியாமல் என் பிள்ளையை வெளிநாட்டுப் பணத்தால் வளர்த்தேன். ஆனால், அவர்களோ என்னைப் பாதுகாக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார்கள் என்று மன வருத்தத்துடன் கூறுகிறார் சுப்பையன்.

திருக்குவளையிலுள்ள கருணாலயா முதியோர் இல்லத்தில் தற்போது வசித்து வரும் 90 வயதான சுப்பையன்.

தனது இளம் வயதிலேயே வேலை தேடி மலேசியா சென்றுள்ளார் சுப்பையன். அதன் பிறகு அங்கு உள்ள பத்திரிகை அலுவலகத்தில் பயிற்சியாளராக சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்து படிப்படியாகத் தனது தகுதியை அதிகரித்துக் கொண்டு போஸ்டர் பிரிண்டிங் செய்யும் அளவிற்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.

அத்தோடு விட்டுவிடாமல் சிங்கப்பூரிலிருந்து சீனா, சௌதி அரேபியா இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கப்பல் மூலமாகவே பயணித்த‌ நிலையில், தனது இல்லற வாழ்வையும் வெளிநாட்டிலேயே அமைத்துக் கொண்டுள்ளார்.

மலேசியாவிலேயே பத்திரிகை அச்சகத்தில் அச்சுக் கோப்பாளராகப் பணிபுரிந்தவரின்  மகளான பாப்பாத்தி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்.

இளம்பிள்ளைவாதம் காரணமாக ஐந்தாவது பிள்ளை மட்டும் உயிரிழந்த நிலையில் நான்கு பிள்ளைகளையும் தனது வெளிநாட்டு வேலை மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு நன்கு படிக்கவைத்து இரண்டு மகள்களையும் தலா 30 பவுன், ஒரு ஏக்கர் விளைநிலம் வரதட்சிணையாகக் கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளார்.

தொடர்ந்து மூப்பின் காரணமாக வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய இவர், தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவி இறந்த பிறகு மூத்த மகனின் ஆதரவில் தனது காலத்தைக் கடத்தியுள்ளார்.

மருமகள் மற்றும் மகன் இருவராலும் சரிவர பார்த்துக்கொள்ள முடியாததால் ‌வலங்கைமான் பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் இவரைக் கொண்டு போய் சேர்த்துவிட்டு இவரிடம் இருக்கும் சொத்துகளை எழுதி வாங்குவதற்கு  அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தகவலறிந்த அவர், அங்கிருந்து வெளியேறி திருக்குவளை பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் 10 மாதங்களுக்கு முன்பு தஞ்சமடைந்துள்ளார்.

சுப்பையன் கூறுகிறார்:

"இங்கே எனக்கு எந்தவிதக் குறைகளும் இல்லை. என்னைப் பெற்றெடுத்த பிள்ளைகள் என்னை கவனிக்கத் தவறினாலும் முதியோர் இல்லத்தில் நான் மகிழ்ச்சியாகதான் இருக்கிறேன். என் கடமையை நான் செய்தேன். கஷ்டம் தெரியாமல் என் பிள்ளைகளை வெளிநாட்டுப் பணத்தால் வளர்த்தேன். ஆனால், அவர்களோ என்னைப் பாதுகாக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார்கள்.

"மேலும் பிள்ளைகள் என்னை இங்கு விட்டிருந்தாலும், அவ்வப்போது வந்து என்னைப் பார்த்துச் சென்று செலவுக்குப் பணம் கொடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் அருகில் இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசையே தவிர, அவர்கள் கொடுக்கும் பணத்தின் மீது எனக்கு சிறிதும் ஆசை இல்லை.

"பிள்ளைகளுக்கு என்னென்ன பிடிக்கும் என ஒன்றைக்கூட விட்டு வைக்காமல் அனைத்தையும் வாங்கி ஊட்டி வளர்த்த எனக்கு, கடைசிக் காலத்தில் எனக்கு விருப்பமான ஒரு பொருளை நான் விரும்பிய நேரத்தில் சாப்பிடுவதற்கான வாய்ப்பு கிட்டவில்லையே என்ற வருத்தம் மனதின் ஒரு ஓரத்தில் உள்ளது.

"இருந்தாலும்கூட, எனது பிள்ளைகள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் என அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்பதை கேட்கும்பொழுது எனக்குள் ஒரு மிகப்பெரிய சந்தோஷம்  ஏற்படும். அதுவே போதுமானது என நான் கருதுகிறேன்.

"மேலும் என்னைப் போன்ற பல முதியவர்கள் முதியோர் இல்லத்தில் வசிக்கும் நிலையில் அங்கு பணிபுரியும் அனைவருமே சிறிதும் முகம் சுளிக்காமல் அவரது செய்கைகளைப் பொறுத்துக்கொள்ளும் தன்மைக்கு கோடானுகோடி புண்ணியங்களை ஆண்டவன் அள்ளிக் கொடுப்பார்.

"மேலும், பிள்ளைகள் இல்லாத ஆதரவற்ற முதியோர்களைப் பராமரிப்பதற்காகவே முதியோர் இல்லங்கள் திறக்கப்பட்டன. பிள்ளைகள் இருந்தும் அவர்களைப் பராமரிக்காமல் முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் சேர்க்க எந்தப் பிள்ளையும் இனிவரும் காலங்களில் முன்வராமல் இருக்க வேண்டும்" எனத் தன் உருகிவிட்டார் சுப்பையன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com